சுவிஸ் வங்கியும், சோமாலியா கொள்ளைக்காரர்களும்….

சிலேட்டில் எழுதிப் பழகுகிற சின்ன வயதில் கற்றுக்கொடுத்த பாரதியார் கவிதை, அப்படியே மனதுக்குள் இன்னும் அழியாமல் இருக்கிறது.

“தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில், இந்த ஜகத்தினை அழித்திடுவோம்”…….

பட்டினி கோலோச்சிக் கொண்டிருந்த பாரதத்தாயின் மடியில் தவழ்ந்த பாரதியாரும், வறுமையின் கொடுமையில் வாழ்ந்தவர்தான்.

சுதந்திரத்திற்காகப் போராடிய காலத்தில்கூட, சுதந்திரக் கனவும் சோற்றுக் கனவும் இரண்டறக் கலந்துதான் இருந்திருக்கிறது.

“வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும்– இங்கு வாழும் மனிதருக்கு எல்லாம்” என்பது….. கவிதைக்கு வேண்டுமானால் அழகாக இருக்கலாம். கதைக்கு உதவாது.

பல ஆண்டுகளாகப் பட்டினிப் பஞ்சம் தலைவிரித்தாடும் ஆப்பிரிக்க நாடான சோமாலியாவை, ஐ.நா.சபை “பஞ்சத்துக்கு இலக்கான பகுதி” என அறிவித்துள்ளது.

இதைப் படிக்கும்போதே நெஞ்சம் பதைபதைக்கிறது. இதயம் வெடித்து விடும்போல் இருக்கிறது.

இங்கு ஒவ்வொரு ஆறு நிமிடத்துக்கும் ஒரு குழந்தை என…. ஒவ்வொரு நாளும் 250 குழந்தைகள் பட்டினிச்சாவுக்குப் பலியாகின்றனவாம்.

சோமாலியா மட்டுமல்லாமல், இப்பகுதியில் உள்ள எத்தியோப்பியா, கென்யா, உகாண்டா போன்ற நாடுகளில் வாழும் மக்களும் நீண்ட காலமாக வறுமையின் பிடியில் சிக்கி சின்னாபின்னமாகச் சிதைந்து கொண்டிருக்கிறார்கள்.

இங்கு உணவுப் பொருட்களுக்கான விலைவாசி கடுமையாக உயர்ந்துவிட்டது. அன்றாட உணவுக்கே குழந்தைகள் கஷ்டப்படும்போது, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட மற்ற அடிப்படை வசதிகள் எந்த அளவுக்கு மோசமாக இருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

வ்றுமையின் கொடுமை அதிகமாகும்போது அதுவே வன்முறைக்கும் ஒழுங்கின்மைக்கும் வழியமைத்துக் கொடுத்துவிடுகிறது. எனவே, பட்டினியால் மட்டுமல்ல…. பலாத்காரத்தாலும் உயிருக்கு உத்தரவாதமில்லாத நிலைதான் அங்கு நீடிக்கிறது.

ஒரு கோடியே 13 லட்சம் பேர் பட்டினி கிடப்பதாக ஐ.நாசபை தகவல் தெரிவித்துள்ளது.

நாட்டின் பெரும் பகுதியை தீவிரவாத அமைப்புகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. அவர்கள் வெளிநாட்டு உதவிகளை ஏற்க மறுக்கிறார்கள். அதையும் மீறி தொண்டு நிறுவனங்கள் உணவு போன்றவற்றைக் கொடுத்து உதவி செய்தால், தொண்டு நிறுவன ஊழியர்களைச் சுட்டுக் கொல்கிறார்கள். எனவே, ஐ.நாசபை உள்ளிட்ட எந்தத் தொண்டு நிறுவனங்களும் அவர்களுக்கு உணவு வழங்க முடியவில்லை.

ஆயுதங்களுடன் பத்துப் பேர் சேர்ந்தால், அவர்கள் ஒரு தனிப்பிரிவாக மாறி நாட்டாமை செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள். அரசு இல்லை, சட்டம் இல்லை, ஒழுங்கு இல்லை, எதுவுமே இல்லாத நிலையில் சோமாலியா உருக்குலைந்து போய்க் கிடக்கிறது.

கைகளில் துப்பாக்கியுடன் கடல் பகுதியைச் சுற்றி வரும் சோமாலியக் கொள்ளையர்களால், உலக நாடுகள் அனைத்தும் பெரும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றன.

உலகநாடுகள் ஒன்றிணைந்து, உடனடியாக 2,500 கோடி உதவி செய்தாலன்றி…. சோமாலியா பிழைக்க வழியில்லை என்கிறார்கள்.

வெட்டி நியாயமும் வீராப்பும் பேசிக் கொண்டு, அணுஆயுதம், போர் தளவாடம் என அநியாயமாகச் செலவிட்டு வரும் பணக்கார நாடுகள் நினைத்தால்…. ஒரே நாளில் சோமாலியாவை பசித் துயரத்திலிருந்து மீட்க முடியும். செய்ய நினைப்பார்களா அவர்கள்?

சோமாலியக் கொள்ளையர்களுக்கு ஒரு யோசனை…. உலகநாடுகளின் கப்பல்களைக் கடத்துவதை ஒரு நாள் மட்டும் ஒதுக்கிவைத்துவிட்டு, உங்களுடைய பார்வையைக் கொஞ்சம் சுவிஸ் வங்கிப்பக்கம் திருப்புங்களேன். பலஆயிரம் கோடிரூபாய் கறுப்புப்பணம் சுவிஸ் வங்கியில்தான் பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள்…. அதைக் கைப்பற்றுங்கள். சோமாலியாவை சொர்க்கபூமி ஆக்கிவிடலாம்.

நாமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரமிது. இன்னொரு சோமாலியாவாக….. இந்தியாவும் மாறிவிடக்கூடிய சூழ்நிலையை இங்குள்ள அரசியல்வாதிகள் ஏற்படுத்தினாலும் ஏற்படுத்திவிடுவார்கள்.

சமீபத்தில், உச்சநீதிமன்றம் கொடுத்த சவுக்கடிதான் நினைவுக்கு வருகிறது.

“இந்தியா சக்தி வாய்ந்த நாடு என்கிறீர்கள். அதே நேரத்தில் நாட்டின் பல பகுதிகளில் பட்டினிச் சாவுகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால், நீங்களோ நாட்டில் போதுமான அளவுக்கு உணவு தானியம் இருப்பு வைக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறீர்கள். மக்களுக்குப் பயன்படாமல், குடோன்களில் அவை நிரம்பி வழிவதால் என்ன பயன்? பணக்காரர்களுக்கு ஒரு இந்தியா, ஏழைகளுக்கு ஒரு இந்தியா என இரண்டு இந்தியா இருக்க முடியாது. இருக்கவும் கூடாது”.