“தப்பு செய்யுங்கள், தண்டணை இல்லை….. வழிகாட்டும் நீதித்துறை!”

நீதித்துறையின் கண்ணியத்திற்கு மீண்டும் ஒரு களங்கம் நேர்ந்திருக்கிறது.

அவர்களை அடையாளப்படுத்திக் காட்டுகிற கோட்டும் கவுனும்– கறை படிந்து கறை படிந்தே கறுப்பு நிறமாக மாறியதோ என்று நினைக்கத் தோன்றுகிற அளவுக்கு… நிகழ்வுகள் கசப்பானவைகளாக இருக்கின்றன.

அரசியல்வாதிகள் மீதும் அருவெறுப்பு வந்துவிட்ட நிலையில், நாட்டு மக்களின் நம்பிக்கைக்கு உரிய ஒரே இடமாக மிச்சமிருப்பது நான்காம் தூண் எனப்படும் நீதிமன்றம் மட்டுமே.

ஆனால்…. குற்றச்சாட்டுக்களைத் தங்கள் மீது அள்ளிக் குவித்துக் கொள்வதில், அரசியல்வாதிகளுக்குப் போட்டியாக அடுத்த இடத்தில் ஓடிவந்து கொண்டிருக்கிற ஒருசில நீதிபதிகளைப் பார்க்கிற பொழுது…. கடைசி நம்பிக்கையும் காணாமல் போய்விடும்போல் இருக்கிறது.

தற்பொழுது…. கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி சௌமித்ரா சென் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

எதற்காக ராஜினாமா செய்திருக்கிறார்? வயது ஆகிவிட்டது என்பதற்காகவா? அல்லது தனது பணிக்காலத்தில் நீதித்துறைக்குத் தேவையான அளவுக்குத் திறம்படப் பணியாற்றிவிட்டோம் என்கிற திருப்தி காரணமாகவா? என்ன காரணம்?

கடுமையான நிதிமோசடிக் குற்றச்சாட்டில் கண்டணத் தீர்மானம்வரை வந்து, பாராளுமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டு… “என்மீதான கண்டணத் தீர்மானம் நிறைவேற்றப் பட்டால் நான் கூரை மீது ஏறி நின்றுகொண்டு சத்தம் போட்டுக் கத்துவதைத்தவிர வேறு வழியில்லை” என்று கத்திவிட்டு வந்து….. இனித் தப்பிக்கவே முடியாது என்கிற நிலையில் ராஜினாமா செய்திருக்கிறார்.

இந்த அப்பாவியின் வாதங்களை மாநிலங்களவை ஏற்கவில்லை என்பதையும், ஏற்கெனவே தலைமை நீதிபதி நியமித்த குழு இவர் மீதான குற்றங்கள் உண்மை என்று உறுதிப்படுத்தியதையும் நீதிபதி சௌமித்ரா சென் மிகவும் சௌகரியமாக மறைக்க முயல்கிறார்.

அவரது பதவி விலகல் நீதித்துறைக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கண்டனத் தீர்மானம் கொண்டுவரப்பட்டுத் தண்டிக்கப்பட்ட முதல் நீதிபதி என்கிற அவப்பெயரை உருவாக்காமல், அவராகவே பதவி விலகியது நல்லதுதான் என்கிறார்கள். ஆனால் இது நியாயமானதுதானா?

குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்துவிடுவதால் மட்டும் அவர் புனிதராகி விடுகிறாரா? ஓர் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருக்கிறவரைத் தண்டனைக்கு உட்படுத்தாமல் வெகு எளிதாகப் பதவி விலகிச் செல்ல சட்டமும் நீதித்துறையும் எப்படி அனுமதிக்கிறது? இந்தியாவில் மட்டும் நீதிபதிகளுக்கு என்று ஏதாவது தனிச்சட்டம் இருக்கிறதா?

1993-ம் ஆண்டு நீதியரசர் வி.இராமசாமிக்கு எதிராகவும் இதேமாதிரிதான் பாராளுமன்றத்தில் ஒரு கண்டணத் தீர்மானம் (முறைகேடுகளுக்கான குற்றச்சாட்டின் கீழ்) கொண்டு வரப்பட்டு அவர் ஆஜரானார். ஆனால், ஓட்டெடுப்பில் காங்கிரஸ் எம்.பி.க்கள் கலந்து கொள்ளாததால் அவ்ர் மீதான கண்டணத் தீர்மானத்தை நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது. இதன் மூலமாக அவ்ர் தண்டணையிலிருந்து தப்பிக்க வழி ஏற்படுத்தப்பட்டது.

இதேபோன்றுதான், நில அபகரிப்பு மற்றும் பல முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு ஆளான நீதிபதி தினகரன், சிக்கிம் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி பதவியிலிருந்து விலகிக்கொண்டார். அவர் விலகிக்கொண்டதும் அவர் குற்றமற்றவராகிவிட்டார்!

முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்தவர் கே.ஜி பாலகிருஷ்ணன். அவர் தனது பதவியை முறைகேடாகப் பயன்படுத்தித் தனது மருமகனுக்காக கேரள மாநிலத்தில் நிறைய சொத்துகள் சேர்த்துக் கொடுத்துள்ளார் என்று புகார் எழுந்தது. அதை விசாரிக்கத் தோண்டியபோது…. அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுக்கு அவர் ஆளானார். நீதித்துறையே ஆட்டம் கண்டது.

அதேபோல….. தமிழக நீதிபதி ஒருவர் தான் பிறந்தது 1947 அல்ல, 1950 என்று கூறிப் பதவியில் நீடிக்க எடுத்த முயற்சி சுப்ரீம் கோர்ட்டால் முறியடிக்கப் பட்டிருக்கிறது. தான் பிறந்ததும் தனது தந்தை எழுதிய ஜாதகம் என்று ஒரு நோட்புக்கை ஆதாரமாகச் சமர்ப்பித்து இருந்தார் நீதிபதி. (சர்டிபிகேட் எல்லாம் என்ன ஆச்சு சார்?) நோட்புக்கை அச்சிட்ட திருச்சிக் கம்பெனியின் முகவரி அதில் இருந்தது. முகவரியின் கீழே பின்கோடு நம்பரும் இருந்தது. இந்தியாவில் பின்கோடு அமலுக்கு வந்ததே 1972ல். அதன் பிறகு அச்சிட்ட நோட்டில் எப்படி 1947ல் ஜாதகம் எழுதியிருக்க முடியும் என்று கேட்டு நீதிபதியின் அப்பீலை டிஸ்மிஸ் செய்தது சுப்ரீம் கோர்ட். இப்படியும் சில நீதிபதிகள்!

ஒரு அரசு ஊழியர் என்ன வேண்டுமானாலும் தவறு செய்து கொள்ளட்டும். கலையில்லை. ஆனால்,  மாட்டிக் கொள்ளும் பட்சத்தில், அவர் தண்டணையிலிருந்து தப்பிப்பதற்கு…. தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டால் மட்டும் போதும், அவர் மீது மேல்நடவடிக்கை எதுவும் தேவையில்லை என்று வழிகாட்டுகிறதா நீதித்துறை?

ஊருக்கெல்லாம் நியாயம் சொல்லும் நீதித்துறை தனக்கு மட்டும் வேறு நியாயத்தைக் கடைப்பிடிப்பது என்ன நியாயம்? நீதி வழங்குபவர்கள் அல்லவா நேர்மைக்கும் நியாயத்துக்கும் வழிகாட்டிகளாக இருக்க வேண்டும்! நீதிபதிகளே குற்றவாளிகளாக இருக்கும்போது, அவர்களுக்கு யார் தண்டனை வழங்குவது?

அரசியல் சட்டத்தின் மூலம் நீதிபதிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிற அதிகாரம், அந்தஸ்து எல்லாமே கடவுளுக்கு நிகரானது. ஆனால், அதற்கு ஏற்றாற்போல எத்தனை நீதிபதிகள் இங்கு நடந்துகொள்கிறார்கள்? சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர்களாக எத்தனை நீதிபதிகள் இங்கு இருக்கிறார்கள்?

காசு வாங்கிகொண்டு ஜனாதிபதிக்கே கைது வாரண்ட் பிறப்பித்த நீதிபதியின் கூத்து, இன்னும் நிழலாடிக்கொண்டுதானே இருக்கிறது…. மறக்கமுடியுமா?

நீதித்துறையில் புரையோடிப் போயிருக்கிற ஊழலைப்பற்றி உச்சநீதிமன்றமே வெளிப்படையாக வேதனைப்படவில்லையா? வழங்கப்பட்ட தீர்ப்புகளல்ல, வாங்கப்பட்ட தீர்ப்புகள் என்று எத்தனை விமர்சனங்கள் நெருப்புத் துண்டுகளாக நீதிதுறையின் மீது விழுந்திருக்கின்றன?

சுதந்திரம் அடைந்து 64 ஆண்டுகள் கடந்தபிறகும்கூட….. பல்லாயிரம் கோடி ரூபாய்களை ஆண்டுதோறும் சம்பளமாக விழுங்கும் நிர்வாக இயந்திரமும், நீதித்துறையும் மாற வேண்டும் அல்லது மாற்றப்பட வேண்டும்

“சட்டத்தில் ஓட்டையா?…. ஓட்டைக்குள் சட்டமா?”

ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய இரண்டு செய்திகள் இன்றைய விவாதக் களத்தில் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கின்றன.

ஒன்று– தமிழக சட்டசபையில் ராஜிவ் கொலையாளிகள் குறித்து இயற்றப்பட்டுள்ள தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தாது என மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் (அப்படி ஒரு அமைச்சர் இருக்கிறாரா?) தெரிவித்துள்ள செய்தி.

இன்னொன்று– மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கருணை மனுக்களைப் பரிசீலிக்க ஜனாதிபதிக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் எந்தக் காலக்கெடுவையும் நிர்ணயிக்கவில்லை என மத்திய உள்துறை அமைச்சகம் சென்னை ஐகோர்ட்டுக்குப் பதிலளிக்கவுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி.

தீர்மானம் யாரையும் கட்டுபடுத்துவதற்காகப் போடப்பட்டது அல்ல சல்மான் குர்ஷித் அவர்களே…. நீதி, நேர்மை, தர்மம், மனிதாபிமானத்தின் அடிப்படையில் உலகத் தமிழ் மக்களின் ஒட்டுமொத்த உணர்வுகளைப் பிரதிபலிக்கும் பொருட்டு தமிழக முதல்வரால் நிறைவேற்றப்பட்டது! அதை நீங்கள் ஒன்றும் பார்க்கவேண்டாம். யார் பார்க்கவேண்டும்? எப்போது பார்க்கவேண்டும்? எப்படிப் பார்க்கவேண்டும்? எப்படிப் பார்க்கவைக்க வேண்டும் என்பதெல்லாம் எங்களுக்குத் தெரியும்.

தமிழக சட்டமன்றத் தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தாது என்று சொல்ல உங்களுக்கு என்ன உரிமை உள்ளது?

இப்படித்தான் அன்னா ஹசாரே என்கிற தனி மனிதனின் கோரிக்கைக்கு எல்லாம் ஓர் நாடாளுமன்றம் சட்டம் இயற்ற முடியாது என்று சொன்னீர்கள்…. இறுதியில் என்ன நடந்தது? எங்கே போனது உங்களின் சட்டம்? ராம்லீலா மைதானத்தில் எல்லாம் சட்டம் இயற்ற முடியாது என்று பீலா விட்டாரே சிதம்பரத்தார்….. கடைசியில் எங்கே போய் வைத்துக்கொண்டீர்கள் உங்கள் முகத்தை?

அப்படித்தான் இந்த சட்டமன்றத் தீர்மானமும்! ஏழு கோடி மக்களின் பிரதிநிதிதான் இந்த சட்ட மன்றம் ! தவிர்க்கவோ அல்லது மறுக்கவோ முயற்சித்துப் பாருங்கள்…. அப்போதுதான் தெரியும் அதன் அருமை.

அண்ணா ஹசாரேவின் உண்ணாவிரதமே மத்தியஅரசைக் கட்டுப்படுத்தும் போது…. சட்டசபைத் தீர்மானம் ஏன் கட்டுப்படுத்தாது? என்கிற நியாயமான கேள்விக்கு என்ன பதில் உங்கள் கைவசம் இருக்கிறது?

அதெல்லாம் சரி… வெளியில் மட்டும் சிங்கமாகச் சீரும் காங்கிரசார் சட்டசபையில் தீர்மானத்திற்கு எதிராக ஒன்றும் பேசாமல் ஏன் வாய்மூடி மௌனிகளாக இருந்தார்களாம்?
முதலில் உங்க கட்சியே உங்க கட்டுப்பாட்டில இல்லை….. இத்தாலி கட்டுப்பாட்டில இருக்குது. பெருசாப் பேச வந்துட்டாரு கட்டுபடுத்தறதப் பத்தி.

இதைவிட வெட்கக்கேடு…. அந்த இரண்டாவது விஷயம்…..

ஒட்டு மொத்த உலகமும் உற்றுநோக்கும் இந்த வழக்கில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் பதில் என்னவாக இருக்கும் என்று அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கருணை மனுக்களைப் பரிசீலிக்க இந்திய அரசியலமைப்புச் சட்டம், ஜனாதிபதிக்கு எந்தவிதமான காலக்கெடுவையும் நிர்ணயிக்கவில்லை என மத்திய உள்துறை அமைச்சகம், சென்னை ஐகோர்ட்டுக்குப் பதிலளிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலக அரங்கில் இந்தியாவைத் தலைகுனிய வைக்க இதைவிட வேறு எந்தப்பதிலும் தேவையில்லை.

ஒன்று மட்டும் நன்றாகத் தெரிகிறது இந்திய ஜனாதிபதியின் பணிகளுக்குக் காலவரம்பு என்று எதுவும் கிடையாது. அரசியல்வாதிகளால் அவசரப் படுத்தப்பட்டால் மட்டுமே சில் பணிகளை அவசர அவசரமாகச் செய்யவேண்டும். பக்காவான ரப்பர் ஸ்டாம்பு என்பதைப் பகிரங்கப்படுத்துகிறார்கள். இவ்வளவு வேகமான உலகத்தில், 21 வருஷத்திற்குப் பிறகு தண்டனை கொடுக்கும் நமது சட்ட அமைப்பைப் பாரட்ட இதை ஒரு நல்ல வாய்ப்பாக எடுத்துக் கொள்ளவேண்டும்.

கருனைமனுக்களைப் பரிசீலிக்க சட்டத்தில் காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கவில்லை என்கிற மத்திய அரசின் பதில் கேலிக்கு உரியது. சாதுர்யமாகச் செயல்படுவதாக எண்ணி சறுக்கிவிழத் துடிக்கிறார்கள். எவ்வளவு கேவலமான பதில் இது என்பதை உணர்ந்துதான் செய்கிறார்களா என்பதே சந்தேகமாக இருக்கிறது.

இந்தியாவிற்குக் கிடைத்த சுதந்திரம் வீணாகப் போய்விட்டதோ என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. 65 ஆண்டுகளாகியும் கூட நம்மை நாமே (தெளிவான சட்ட திட்டங்களுடன், குழப்பமற்ற நடைமுறைகளுடன்) ஆண்டுகொள்ளத் தெரியாதவர்களாகத்தான் இருக்கிறோம்.

இப்போது நடக்கும் அரசியல் கூத்துக்களுக்கும், சட்டச் சிக்கல்களுக்கும் மத்திய அரசுகளே காரணம்… 11 ஆண்டுகளாகக் கருணை மனுக்களைக் கிடப்பில் போடுவது முட்டாள் தனத்திலும் கேடு கெட்ட முட்டாள்தனம்… ஒரு கருணை மனுவைப் பரிசீலித்து முடிவெடுக்கவே 11 வருடங்கள் என்றால்…. இவர்கள் வேறு எதைத்தான் எளிதாகாக் கிழித்துவிடப் போகிறார்கள்?. பிற நாட்டுக்காரன் இதையெல்லாம் கேள்விப்பட்டுவிட்டுப் பின்பக்கமாகச் சிரிப்பான்.

உச்ச நீதிமன்றம் இந்த விஷயத்தில் தனிக்கவனம் செலுத்தித் தலையிட்டு…. மத்திய அரசையும், உள்துறை அமைச்சகத்தையும் கேள்வி கேட்க வேண்டும். இதெல்லாம் கூடக் கவனிக்காமல் என்ன வெங்காயத்திற்கு ஒரு சட்ட அமைச்சர்? ஒரு உள்துறை அமைச்சர்? ஒரு வீணாய்ப்போன அமைச்சரவை?

சட்டத்தில் ஓட்டை இருக்கிறதா? அல்லது ஓட்டையில்தான் சட்டம் இருக்கிறதா? என்பதை….. இனிமேலாவது தெரிந்து கொள்ள முயற்சிப்பது நல்லது.

இந்த வழக்கின் மூலமாவது ஒரு விடிவு காலம் பிறக்கட்டும்!.

இரண்டு வெற்றிகள்….ஒரே நேரத்தில்!

இரண்டு சந்தோஷச் செய்திகள் ஒரே நேரத்தில்….

சென்னை உயர் நீதிமன்றம் தூக்குத் தண்டனைக்கு எட்டு வாரங்கள் இடைக் காலத்தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இது சட்டப் போராட்டத்திற்குக் கிடைத்த முதல் வெற்றி. ஆயிரம் ஓட்டை உடைசல்களுடன் பஞ்சராகிக் கிடக்கும் இந்த வழக்கின் கதி போகப் போகத் தெரியும்

அடுத்தது…. தூக்குத் தண்டனையைக் குறைக்கக் கோரும் தீர்மானம் முதல்வரால் கொண்டுவரப்பட்டு சட்டசபையில் ஏகமனதாக நிறைவேற்றப் பட்டுள்ளது. இது உணர்வு பூர்வமான போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி.

எல்லாச் சந்தோஷங்களும் இனிமேல் தொடரும் என்கிற நம்பிக்கை வருகிற இந்த நல்ல நேரத்தில்…. இதையெல்லாம் கண்டு சந்தோஷப்பட முடியாமல் அவசரப் பட்டுவிட்ட செங்கொடியையும் நினைக்காமல் இருக்க முடியவில்லை.

இந்தச் சந்தோஷங்களுக்கெல்லாம் பின்னால்…. ஒரு முன்னாள் பிரதமருடைய வழக்கையே ஒழுங்காக நடத்தி முடிக்க முடியாத நிலையில், இருபது வருடங்களுக்குப் பிறகும் இன்னும் விடை தெரியாத கேள்விகளை வைத்துக்கொண்டு இருப்பது என்பது….. நமது நீதிமன்ற அமைப்புமுறை, காவல்துறை விசாரணை முறை எல்லாவற்றிலுமே நமக்கு ஒரு வெறுப்பை உண்டாக்கும் விஷயம் என்பதையும் நிர்வாகத்தில் உள்ளவர்கள் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்.

ஒரு பேட்டரி வாங்கிக் கொடுத்ததற்குக் தூக்கு என்பது வேடிக்கையாக இல்லையா? அதுவும் இருபது நாட்கள் கழித்து அந்த பேட்டரி வாங்கிய பில்லைக் கைப்பற்றியதாகச் சொல்வது இன்னும் வேடிக்கையாக இல்லையா? ஒரு பேட்டரிக்கு எந்தப் பெட்டிகடைக் காரனாவது பில் போட்டுக்கொடுத்துப் பார்த்திருக்கிறீர்களா? அப்படியே கொடுத்தாலும், அந்தப் பில்லைக் கொண்டுபோய் அப்படியே வீட்டில் இருபது நாட்களுக்கு யாராவது பத்திரமாக வைத்திருப்போமா? கதைவிடுவதற்குக் கூட ஒரு அளவு வேண்டாமா? என்ன விசாரணையோ? என்ன வெங்காயமோ?

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது! எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது! எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்!  

+++++++++++#########+++++++++++                                                                                                                                                  

பின்னூட்டங்களில் பிடித்தது…. 

தோண்டத் தோண்ட பூதம் வரும். பூதம் வந்தால் பல பெருச்சாளிகளின் முகத்திரை கிழியும். அதன் பயமே இந்த மூவருக்கான தண்டணை. அரிவாளால் ஒருவன் வெட்டிக் கொல்லப்பட்டான் என்றால், கொல்லன் முதல் அந்த இரும்பைத் தயாரித்த நிறுவனம் வரையிலும் தண்டணை தருவது என்பது எந்த அரசியல் சட்டத்தில் உள்ளது என்பது தெரியவில்லை.
“தேரா மன்னா செப்புவதுடையோ” என்று கூற தமிழ்நாட்டில் ஏராளமான கண்ணகிகள் இருக்கிறார்கள். ஆனால் “தென்முறை நீதி என்முதல் பிழைத்தது, யானோ அரசன் யானே கள்வன்” என்று கூறி உயிர்விட எந்த மன்னனும் இங்கில்லை.
வட்டச் செயளாலர் வந்தாலே வட்டமிட்டு வலம் வரும் கட்சிக்காரர்கள் மத்தியில்…  ராஜீவ் ஏன் தனித்து விடப்பட்டார்? என்ற கேள்விக்கு யார் விடைதருவார்?

வீ.கௌதமன்.     

கல்லை வீசும் முன் கவனித்து வீசுங்கள்…..

இராஜிவ்காந்தி….

இப்போது மௌன சாமியார்களாக இருக்கிற மண்ணாங்கட்டித் தலைவர்களைவிட, அப்போதிருந்த இராஜிவ்காந்தி திறமையானவர்தான் என்ப்தில் இருவேறு கருத்துக்களுக்கு இடமில்லை. அப்படிப்பட்ட தலைவர்தான்…..

1991 மே 21ம் தேதி, ஸ்ரீபெரும்புதூரில் விடுதலைப் புலிகள் நடத்திய மனிதவெடிகுண்டுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார்.

அவரது படுகொலை கொடூரமானதா?….. அல்லது அவரால் இலங்கைக்கு அனுப்பப்பட்ட இந்திய அமைதிப் படை, 12000 அப்பாவித் தமிழர்களின் உயிரையும், 6000 தமிழ்ப் பெண்களின் கற்பையும் சூறையாடிக் கொண்டாட்டம் போட்டதே….. அது கொடூரமானதா? என்கிற விவாதங்கள் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

அந்தக் கதையின் அடுத்த கட்டம் இப்போது ஆரம்பித்திருக்கிறது.

இராஜிவ்காந்தியின் கொலைவழக்கில் குற்றவாளிகளாகத் தீர்மானிக்கப்பட்டவர்கள் — ஆயுள் தண்டணைக் காலத்தை விட அதிகமாக, ஏறத்தாழ 20 வருடங்களைச் சிறைச்சாலையில் கழித்துவிட்ட நிலையில்…. இறப்புக்கு நாள்குறிக்க பிரதிபாபட்டில் என்கிற பெருமாட்டி பேனாவை எடுத்திருக்கிறார்.

எப்போதோ கொடுக்கப்பட்ட தீர்ப்புக்கு இப்போதுதான் வர்ணம் பூச ஆரம்பித்திருக்கிறார்கள். உச்சநீதிமன்றத்தின் உறுதிப்படுத்தப்பட்ட தீர்ப்பு 1999ம் ஆண்டு மே 11ம் தேதியே உச்சரிக்கப்பட்டு, இவ்வளவு நாட்களாக, மாதங்களாக, வருடங்களாக….. கிணற்றில் போட்ட கல்லாகக் கவனிப்பாரின்றிக் கிடந்தது.

ஒரு கருணை மனுவைப் பரிசீலித்து உருப்படியான ஒரு முடிவை எடுப்பதற்கு– மூன்று ஜனாதிபதிகள், ஒரு உள்துறை அமைச்சகம், 11 ஆண்டுகள்…. என இவ்வளவும் தேவைப்பட்டிருக்கிறது. விவரங்கெட்டவர்கள் என்பதைத்தவிர வேறு என்ன சொல்லி இவர்களை அழைப்பது? அடேங்கப்பா… நமது நாட்டில் நீதிமன்றத் தீர்ப்புக்குத்தான் எவ்வளவு பெரிய மரியாதை? மத்தியஅரசே இப்படி நீதிமன்றத் தீர்ப்புகளைக் கேலிசெய்தால்…. பிறகு மற்றவர்கள் எப்படி மதிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியும்?

இப்போது மரணதண்டனை என்பதே மனித குலத்திற்கு எதிரானது என்கிற கருத்து உலகெங்கும் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான நாடுகளில் மரணதண்டனை என்பதே முற்றிலும் நீக்கப்பட்டுவிட்ட நிலையில், ஐக்கியநாடுகள் சபையும் பலமுறை தனது தீர்மானங்களின் மூலமாக மரணதண்டனையை சட்ட ஏடுகளிலிருந்து நீக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது. 1945-ல் ஐக்கியநாடுகள் சபை துவக்கப்பட்டபோது ஏழு நாடுகள்தான் மரணதண்டனை இல்லாத நாடுகளாக இருந்தன. ஆனால் இப்போது ஐக்கிய நாடுகள் சபையில் 192 நாடுகள் உள்ளன. அதில் 142 நாடுகளில் மரணதண்டனை நீக்கப்பட்டுவிட்டது.

கண்ணுக்குக் கண் என்பதையும்..பல்லுக்குப் பல் எனபதையும்…. காட்டுமிராண்டித்தனம் என்கின்றோம். ஆனால், அதையே நமது நீதிமன்றங்கள் செய்கிறபோது சட்டம் என்கிறோம். சட்டப்புத்தகங்களை மட்டுமே படித்துத் தீர்ப்புகள் வழங்குவதைத்தவிர்த்து, சட்டத்திற்கும் மேலான மனித நாகரீகத்தையும் நீதி மன்றங்கள் ஆராயவேண்டும்.

இதுவும் ஒருவகையில் கொலைதான்–“அரசுக் கொலை”.

உணர்ச்சி வசப்படுதல் மனிதஇயுல்பு, மனிதத்தவறு. அப்படி உணர்ச்சி வசப்பட்டோர் செய்துவிட்ட ஒரு தவறுக்கு, நீதிஅரசர்கள் முன்கூட்டியே மரணதேதியை நிர்ணயிக்கும்போது, அதுவே ஒருவகையில் மனிதத்தவற்றில் பெரும்தவறாகிப் போய்விடக்கூடிய வாய்ப்பு இங்கு அதிகமாகவே இருக்கிறது என்பதைப் பல வழக்குகளில் பார்த்திருக்கிறோம்.

இங்கு எத்தனை தீர்ப்புகள் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கின்றன? எத்தனை நீதிபதிகள் அவர்களுடைய தவறுகளுக்காகப் பதவியிலிருந்து தூக்கி வீசப்பட்டிருக்கிறார்கள்? துலாக்கோல் சாயாமல்தான் இங்கு நீதி வழங்கப்படுகிறதா? மேல்முறையீடு மேல்முறையீடு என்று போகிறபொழுது ஒவ்வொரு நீதிமன்றமும் ஒவ்வொரு தீர்ப்பை இஷ்டப்படி வழங்குகிறதே? எந்தத் தீர்ப்பைச் சரியென ஏற்பது? தவறான தீர்ப்புக்களால் இங்கு எத்தனை பேர் தண்டனைக்கு உள்ளாகியிருக்கிறார்கள் தெரியுமா? இதுவரை அவர்களுக்கு என்ன இழப்பீட்டை இந்த நீதிமன்றங்கள் வழங்கியிருக்கின்றன?

இப்படியெல்லாம் கேள்விகளை எழுப்புவதால்…. அவர்கள் மூவரையும் நான் ஆதரிக்கிறேன் என்று அர்த்தமல்ல. அரசும் நீதிமன்றமும் தவறாமல் கடைப்பிடித்துவருகிற அலட்சியத்தைச் சுட்டிக்காட்டவேண்டும் என்பத்ற்காகத்தான். 91-ல் நடந்த சம்பவத்துக்கு நீதிமன்றத் தீர்வு 99-ல்! அரசுத் தீர்வு 2011-ல்! எப்படி விமர்சிக்காமல் இருக்க முடியும்?

இதுவரை சுதந்திர இந்தியாவில் மட்டும் தூக்கிலிடப்பட்டவர்களின் எண்ணிக்கை 4500-க்கு மேல் இருக்கும் என்று மனித உரிமை அமைப்புகள் கணக்கிட்டிருக்கின்றன. தமிழகத்தில் இதுவரை 292 குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டுள்ளனர். பாவம்…இதில் எத்தனை அப்பாவிகள் பலிகடா ஆக்கப்பட்டார்களோ? ( இந்தியாவில் கடைசி மரணதண்டனை 2004-ம் வருடம் மேற்குவங்கத்தில் ஒரு சிறுமியை கற்பழித்துக் கொன்ற குற்றத்திற்காக தனஞ்சய சாட்டர்ஜி என்பவனுக்குக் கொல்கத்தா சிறையில் நிறைவேற்றப்பட்டது ).

“நூறு குற்றவாளிகள் தப்பினாலும் பரவாயில்லை, ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டு விடக்கூடாது” என்பது சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடு. ஆனால்….

எதற்காக என்பதே தெரியாமல், சதி என்றால் என்வென்றே அறியாமல், மளிகைக் கடையில் சாதாரணமாகக் கிடைக்கும் வெறும் 8 வோல்ட் பேட்டரி செல்லை சிவராசனுக்கு வாங்கிக்கொடுத்ததற்காகப் பேரறிவாளனுக்குத் தூக்குதண்டனை. எவ்வளவு ஓட்டை உடைசலான வழக்கு இது?

வாழப்பாடி ராமமூர்த்தி, ஜெயந்தி நடராஜன், மரகதம் சந்திரசேகர், மூப்பனார் போன்றவர்கள்…. எல்லா சமயத்திலுமே ராஜீவுடன் இருந்தவர்கள் குண்டு வெடிக்கும்போது மட்டும் எப்படி ராஜீவ் தனிமைப்படுத்தப்பட்டார்? அன்றைய குண்டு வெடிப்பில் இறந்த ஒரே காங்கிரஸ்காரர் ராஜீவ் மட்டுமே. மற்ற எல்லோருமே பாதுகாப்பிற்காக வந்த காவல்துறையினர்தான். அது எப்படி?

பல்லாயிரக்கணக்கான அப்பாவிகளைக் கொடூரமாகக் கொலைசெய்யக் காரணமான போர்க்குற்றவாளிகள் பக்கத்து நாட்டில் ஜனாதிபதி என்றும் பாதுகாப்பு செயலர் என்றும் கோலோச்சிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு என்ன தண்டணை?

அந்த ராஜபக்சேவுக்கு ராடார் மற்றும் ஆயுதங்கள் கொடுத்து லட்சம் தமிழர்களைக் கொன்று குவிக்க உதவிய சோனியா & கோ வுக்கு என்ன தண்டனை?

இறுதியாக இரண்டு விஷயங்கள்….

ஒன்று– ராஜீவைப் பழி வாங்குவதற்கு நியாயமான காரணங்கள் நிறையவே புலிகளிடம் இருந்திருக்கலாம். ஆனால், அதைச் செயல்படுத்தும் இடமாகத் தமிழகத்தைத் தேர்ந்தெடுத்தது மிகப்பெரிய தவறு.

இரண்டு– இந்தக் கருணை மனுவின்மீதான மிகத்தாமதமான முடிவேகூட…. மரணதண்டணைத் தீர்ப்பில் மாற்றம் வருவதற்கான ஒரு வாய்ப்பாகவும் மாறுவதற்கு சட்டத்தில் இடமிருக்கிறது.

“வரங்களே சாபங்கள் என்றால், தவங்கள் எதற்காக ?”

 

கடந்த 16-12-2010 –ம் தேதியன்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிகளில் 8  பேர் லஞ்சப் பேர்வழிகள்என்கிற குற்றச்சாட்டைமுன்னாள் மத்திய சட்ட அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான சாந்திபூஷண் முன்வைத்தபோது, நாடே அதிர்ந்தது. இது நீதிமன்ற அவமதிப்பாகாதா என்று சாதாரணப் பொதுஜனம்கூட வியந்தனர். வேறு யாராவது இப்படி ஒரு குற்றச்சாட்டைக் கூறியிருந்தால், நீதிபதிகள் கொதித்தெழுந்திருப்பார்கள். நீதிமன்ற அவமதிப்புக்காக அவர் கூண்டில் நிறுத்தப்பட்டு, தண்டனையும் வழங்கப்பட்டிருக்கும்.  
 
 குற்றம் சுமத்தியவர் விவரமில்லாதவர் அல்ல. அவரைக் கூண்டில் ஏற்றினால், என்னென்ன பூதங்கள் கிளம்புமோ? உச்ச நீதிமன்றம் மௌனம் சாதித்தது.  
இப்போது நீதித்துறையைக் களங்கப்படுத்தும் இன்னொரு விஷயம் வெளிவந்திருக்கிறது. முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியும் இப்போது தேசிய மனித உரிமைக் கமிஷனின் தலைவருமான கே.ஜி. பாலகிருஷ்ணனின் உறவினர்கள் வாங்கிக் குவித்திருக்கும் சொத்துகள்தான் இதற்கெல்லாம் காரணம்.   
நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணனின் சகோதரர் கே.ஜி. பாஸ்கரன், இவர், கே.ஜி. பாலகிருஷ்ணன் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்த மூன்றரை ஆண்டு காலத்தில் தமிழகத்திலும், கேரளத்திலும் வாங்கிக்குவித்த அசையாச் சொத்துகள் பற்றிய விவரம் சமீபத்தில் வெளிவந்திருக்கிறது.  பிரச்னை இதோடு முடிந்துவிடவில்லை. நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணனின் மூத்த மருமகன் பி.வி.ஸ்ரீநிஜன். . இவர் மீதும் கடந்த 5 ஆண்டுகளில் வருவாய்க்குப் பொருத்தமின்றி சொத்து சேர்த்த குற்றச்சாட்டு பத்திரிகைகளில் வெளியாகியது. திடீர் கோடீஸ்வரரானது இவர் மட்டுமல்ல, முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணனின் இளைய மகளின் கணவரான பின்னியும்தான்.
  
 
தகவல்பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் நீதிபதிகளைப் பற்றிய, குறிப்பாக உச்ச நீதிமன்ற நீதிபதிகளைப் பற்றிய விவரங்களைத் தரவேண்டிய அவசியம் இல்லை என்று வாதிட்டவர் அன்றைய தலைமை நீதிபதியான கே.ஜி. பாலகிருஷ்ணன். நீதிபதிகள் தங்கள் சொத்துக் கணக்கை மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றுகூறி நிராகரித்தவர் நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன். இப்போதல்லவா தெரிகிறது, அதன் பின்னணியும் காரணமும்!
  
சாந்திபூஷண் குறிப்பிட்ட 8 ஊழல் தலைமை நீதிபதிகளில் ஒருவர் யார் என்பது தெரிந்துவிட்டது. மீதி 7 பேர் யார்யார் என்பதும் வெளியாகக்கூடும். அதுவல்ல முக்கியம். நீதித்துறை களங்கப்படுகிறது. அதன் மீதான நம்பிக்கை தகர்கிறது. இது தேசத்துக்கு நல்லதல்ல.
 
 திரு. .வி. வி. கிரி அவர்கள் ஜனாதிபதியாய் இருந்தபோது பம்பாய் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் அனைவரும் டெல்லிக்கு வந்து ஒரு மனு ஜனாதிபதியிடம் கொடுத்தார்கள். அதாவது அந்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் அனைவரும் அங்குள்ள பெரிய நிறுவனங்களுக்கு ஆதரவாக பணம் பெற்றுக்கொண்டு தீர்ப்பு கூறுகின்றார்கள் என்று சமர்ப்பித்த மனுவை பார்த்து ஜனாதிபதி தலையில் அடித்து கொண்டதாக கூறுவார்கள்.
 
 நீரா ராடியா பதிவுகளில் திரு ஜெயின் என்கிற உச்ச நீதி மன்ற நீதிபதிக்கு 9 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்து சாதகமான தீர்ப்பு பெற்ற விவரம் அலசப் படுகிறது.  நாட்டின் தலையாய நீதிமன்ற நீதிபதிகளின் லட்சணம் இப்படியுள்ளது பாலகிருஷ்ணன் விவகாரம் ஊர் சிரிக்கிறது. .நாட்டில் நீதித் துறை ஒன்றுதான் மக்களின் கடைசி ஆயுதம். அதில் ஊழல் கறை படிய விட்டால் ஜனநாயகம் மரணத்தை சந்திக்கும். சமுதாய அமைதியும் அப்போது கேள்விக்குறியாகிவிடும்
 
“வரங்களே சாபங்கள் என்றால்., தவங்கள் எதற்காக ?” – என்கிற கவிக்கோ அப்துல் ரஹ்மானின் வார்த்தைகள்தான் நினைவிற்கு வருகிறது.
 எனது மருமகன்கள் எப்படிச் சொத்து சேர்த்தார்கள் என்பதை அவர்கள்தான் தெரிவிக்க வேண்டும் என்றும், தனக்கு அதில் தொடர்பே இல்லை என்பது போலவும் அறிக்கை வெளியிட்டுத் தப்பித்துக் கொள்ள முயல்கிறார் நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன். சட்டப்படி, அவரது கூற்றில் நியாயமிருக்கலாம். ஆனால், மனசாட்சிப்படி அவர் தனக்கு இதைப்பற்றி எதுவுமே தெரியாது என்று கூறுவாரேயானால், உச்ச நீதிமன்றத்தின் தலைமைப் பொறுப்பில் நாம் ஒரு பொய்யரை அமர்த்தி அழகு பார்த்திருக்கிறோம் என்று தலைகுனிந்து வருத்தப்படுவதைத் தவிர வேறு வழியில்லை.  

ஜனவரி…..பிப்ரவரி…. வருமானவரி !

அரசு வேலையோ, தனியார் வேலையோமாதச் சம்பளத்தை நம்பிப் பட்ஜெட் போடும் குடும்பதாரர்களுக்கு, இந்த மாதங்கள் என்றாலே கொஞ்சம் அலர்ஜிதான். காரணம், இழுத்துக்கோ பிடிச்சுக்கோ என்று வருகிற சம்பளத்திலும் ஒரு குறிப்பிட்ட தொகையை வருமான வரிக்காகக் காவு கொடுக்க வேண்டியிருக்குமே என்பதால் !   
 
                  அதுசரிஅவர்கள் பிடித்தம் செய்தால் நாங்கள் விட்டுவிடுவோமா என்ன?. அத்ற்கென சில சந்து பொந்துகள் இல்லாமலா இருக்கும்?
 வருமான வரியிலிருந்து விலக்குப் பெறும் சட்டம் 80 சியின் கீழ் பலவிதமான சேமிப்புகள் மற்றும் செலவினங்களுக்கு விலக்குக் கிடைக்கிறது. அதன்படி  வரியின்றித் தப்பிக்கத் தெரிந்துகொள்ள வேண்டிய சில வழிமுறைகள்…..
 

  # தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் சேமிக்கப்படும் தொகைக்கும், அதனுடன் சேர்ந்து வழங்கப்படும் பென்ஷனுக்கும்

# பொதுத்துறை மற்றும் போஸ்ட் ஆபீசில் தொடங்கப்படும் பொது பிராவிடண்ட் பண்டுகளுக்கும் 
 
# தேசிய சேமிப்புப் பத்திர முதலீடு மற்றும் பங்குச்சந்தை சார்ந்த மியூச்சுவல் பண்ட் முதலீடு மற்றும் அனத்துவகையான இன்சூரன்சுகளுக்கும் செலுத்தப்படும் பிரீமியம்— (ஒருவர் எத்தனை ஆயுள் இன்சூரன்ஸ் வைத்திருந்தாலும்).

 

# வீட்டுக்கடனுக்காகச் செலுத்தப்படும் தவணைத்தொகை, (அதிக அளவில் அனைவராலும் து பயன்படுத்தப்படுகிறது) பத்திரப்பதிவு செலவு, பதிவுக்கட்டணம் உட்பட எல்லாமே 

# குழந்தைகளின் படிப்புச் செலவிற்காக பள்ளி மற்றும் கல்லூரிகளில் கட்டப்படும் கட்டணத்திற்கு 
 
 # வங்கியில் 3 ஆண்டுகளுக்கு மேற்பட்டு செய்யப்படும் நிரந்தர வைப்பு நிதிகளுக்குஇப்படி எத்தனையோ வழிகள் ஏமாற்றுவதற்கு.  
 
   சம்பளத்துக்கு மட்டும்தான் இது.– மறைமுகமாகக் கை நீட்டி வாங்கும் கிம்பளத்துக்கெல்லாம் இது எதுவும் இல்லை.

அரசு ஊழியர்களுக்கு மட்டும்தான் இது.– ஆயிரம் கோடி என அடிக்கும் அரசியல்வாதிகளுக்கும் இது எதுவும் இல்லை.

  அது சரிஉங்களுக்கெல்லாம் வருமானவரிதான் பிரச்னை. 
 
  எங்களுக்கோ ?…… வருமானமே பிரச்னை !

 நடத்துங்க சார் !!!  

 
 
 
 
 

 

சட்டமா? நம்ம நாட்டிலா? அடப் போங்கய்யா !….

சினிமா என்கிற மாதிரி செக்ஸ் என்பதும் — அன்றாடச் செய்திகளில் ஒன்றாக மாறிவிட்டது.

ஆன்மீகப் போர்வையில் பெண்களைக் காம வேட்டையாடிய பிரேமானந்தா சாமியாரில் ஆரம்பித்து காஞ்சி ஜெயேந்திரர், சென்னை மடாதிபதி சதுர்வேதி…செக்ஸ் சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமார், காஞ்சிபுரம் கோவிலின் கர்ப்பகிரகத்தைக் “கர்ப்ப’ கிரகமாக்கிய தேவநாதன், “ரஞ்சிதா புகழ்’ நித்யானந்தா…

அவர்களுக்குச் சற்றும் சளைக்காத சிவகாசி ஜெயலட்சுமி, ஜ்டியல் சுப்பரமணியம், கஞ்சா செரினா, ஜீவஜோதி, செக்ஸ் டாக்டர் பிரகாஷ், டி.ஜி.பி.ரத்தோர், என்.டி.திவாரி….

இவர்களெல்லாம் இளைப்பாறுகிற நேரங்களில் திரிஷா குளியல் வீடியோ, நமீதா கேரவனில் உடைமாற்றும் படம், குஷ்பு ஆபாச சிடி வெளியீடு, பண்ணை வீடுகளில் ஆபாச நடனம், மாணவிகளைத் தின்னும் ஆசிரியர்கள் என… சர்வமும் செக்ஸ் மயம்!

செய்தித்தாள், தொலைக்காட்சி என எதைப்படித்தாலும் எதைப்பார்த்தாலும், எல்லாம் சிவமயம் என்கிற மாதிரி எல்லாம் செக்ஸ் மயம்!

கல்கி பகவான் ஆசிரமம் அடுத்த கலக்கலுக்கு ரெடியாகிக் கொண்டிருக்கும் போலத்தெரிகிறது.

இந்தப் பரபரப்புகள் ஒரு புறம் இருக்க, இந்த மாதிரியான பிரச்னைகளில் சட்டத்தின் நிலைப்பாடு என்ன? என்பது ஒரு புதிராகவே இருக்கிறது.

சட்டமா? நம்ம நாட்டிலா? அடப் போங்கய்யா நீங்களும் உங்க சட்டமும் என்கிற சலிப்புக்குரலும் காதில் விழத்தான் செய்கிறது.

தேவநாதன் (36), திருமணமாகி, இரண்டு குழந்தைகளுக்குத் தகப்பன். இவர் மீது, இந்திய தண்டனைச் சட்டம் 295 (ஏ) மதத்தை களங்கப்படுத்துதல், 153 (ஏ) சமூக அமைதியைக் குலைத்தல், 506 (2) மிரட்டல், 376 கற்பழிப்பு ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நித்யானந்தர் (32) “கட்டை’ பிரம்மச்சாரி. இவர் மீதும் கிட்டத்தட்ட இதே போல, 295 (ஏ), 420 மோசடி, 376, 377 இயற்கைக்கு முரணான புணர்ச்சி, 506 (1) மற்றும் 120 (பி) சதித் திட்டம் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டப் பிரிவெல்லாம் சரிதான். இவற்றை நிரூபிக்க முடியுமா? என்றால், அங்கு தான் இருக்கிறது சிக்கல்.

இவர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளில் கடுமையானது கற்பழிப்பு புகார். நிரூபிக்கக் கடினமானதும் அதுவே. இரண்டு வழக்குகளுமே, பொதுமக்களால் வீடியோவில் திருப்தியாகப் பார்க்கப்பட்ட பிறகு பதிவு செய்யப்பட்டவை.

தேவநாதன் மீது புகார் கொடுத்த பெண், தான் மிகுந்த ஈடுபாட்டோடு செயல்பட்டதை, வீடியோவை பார்த்தவர்கள் உணர முடியும். எனவே, “தேவநாதன் தனக்கு மயக்க மருந்து கொடுத்ததால், என்ன நடந்தது எனத் தெரியவில்லை’ என அவர் சொன்னால், அது கோர்ட்டால் ஏற்றுக்கொள்ளப்படுமா என்பது கேள்விக்குறியே.

ரஞ்சிதா எப்படியும் நித்யானந்தர் மீது கற்பழிப்பு புகார் கொடுக்கப்போவதில்லை. கொடுக்கவும் முடியாது.

அப்புறம், இந்த வழக்குகளின் கதி என்ன ஆகும்?

சம்பந்தப்பட்ட பெண்ணின் சம்மதமும் ஒத்துழைப்பும் இருந்தால், அது கற்பழிப்பு என்கிற கணக்கிலேயே சேராது என்பது குறித்து முன்னரே நான் “எது விபச்சாரம்?” என்கிற பதிவில் எழுதியிருக்கிறேன். யாரோ ஒரு மனிதர், எவளோ ஒரு பெண்ணைக் கற்பழித்து விட்டதாக மூன்றாவது மனிதர் ஒருவர் கொடுக்கும் புகார் சட்டப்படி செல்லாது; பாதிக்கப்பட்ட பெண் தான் கொடுக்க வேண்டும். இந்த இரண்டு நிகழ்வுகளிலும், சம்பந்தப்பட்ட இருவருமே இஷ்டப்பட்டுத்தான் ஆயகலைகளில் லயித்துக் கிடக்கிறார்கள்.

காவியின் பெயராலேயே கடவுளைக் களங்கப்படுத்துகிறார்கள், மக்களை மடையர்களாக்குகிறார்கள் என்பதுதான் இவர்கள் செய்த தவறு.

பொதுமக்களிடையே ஆர்வம் அதிகமாக இருப்பதால், இத்தகைய வழக்குகள் பெரிய அளவில் பிரபலமடைந்து விடுகின்றனவே தவிர, வேறொன்றுமில்லை. நாடு முழுவதும் பதிவு செய்யப்படும் இந்த மாதிரியான வழக்குகளில், வெறும் ஆறு சதவீதம் வழக்குகள் மட்டுமே நிரூபிக்கப்படுகின்றன என்பது கவலை தரக்கூடிய விஷயமாகும்.

விசாரணை நடைமுறைகளில் உள்ள குறைபாடுகள் களையப்பட்டு; சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது நிஜமானால் மட்டுமே, இந்த மாதிரியான வழக்குகள், நிரூபணங்களை நோக்கிச் செல்ல முடியும். அதுவரை, சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி, தொழில்நுட்பக் குறைபாடுகளைச் சுட்டிக் காட்டி, குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுதலையாவதும், மீண்டும் விளையாடுவதும் தொடரத்தான் செய்யும்..

வேடிக்கை பார்ப்பதில் நமக்கும் நல்லாப் பொழுது போகும்!

++++++++++++++++++++++++++++++++++++