கனிமொழி எழுதிய கவிதை…

கனிமொழி என்கிற ஒரு மென்மையான மனுஷி…  
இந்தஅளவிற்குக் கடுமையான விளைவுகளை ஏற்படுத்திவிட்டுப்போவார் என்று- 
கலைஞர் முதல் கடைசித் தொண்டன் வரை யாருமே 
கனவிலும் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.

ஐம்பது ஆண்டுகள் ஊழல் செய்தும்கூட மாட்டிக்கொள்ளாத
இந்திய  அரசியல்வாதிகளுக்கு மத்தியில்–
வெறும் ஐய்ந்து ஆண்டுகளிலேயே திஹார் வரை சென்றுவிட்ட 
கனிமொழியை நினைத்தால் பாவமாகத்தான் இருக்கிறது.

அதைவிடக் கொடுமை… தனது அன்பு மகளை நினைத்து நினைத்துத் 
தன்னிலை இழந்து தவிக்கும் கலைஞரின் நிலைமை.

“சில நாட்களாகவே சி.ஐ.டி காலனி இல்லத்திற்குப் போகவில்லை.  தாயும் மகளும் படுகிற வேதனையைக் காணச் சகிக்கவில்லை”   என்று உயர்மட்டக் குழுக்கூட்டத்திலேயே தனது கவலைகளை  வெளிக்காட்ட ஆரம்பித்தார்.

“கனிமொழி கைதானது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்று  நிருபர்கள் கேட்டபோது
“உங்கள் வீட்டில் உங்கள் பெண் ஒரு குற்றமும்  செய்யாமல் சிறைக்கு அனுப்பப்பட்டால் என்ன மனநிலையில் நீங்கள் இருப்பீர்களோ அதே மனநிலையில்தான் நான் இருக்கிறேன்”  என்று பதிலளிக்கிறார்.

பிறகு டெல்லி திஹார் சிறையில் கனிமொழியைச் சந்தித்துவிட்டு  சென்னை திரும்பியதும் செய்தியாளர்களுக்குப் பேட்டியளிக்கும்போது, “பறித்து வைத்த அன்றைய புதுமலர்களைக்கூட பத்து நிமிடத்தில்  கருக்கிவிடக் கூடிய திஹார் சிறையின் கடும் வெப்பத்தில்-  மனிதத் தன்மையற்ற இடத்தில் அடைக்கப்பட்டிருக்கிற கனிமொழி கைகளில் கொப்புளங்களுடன் கஷ்டப்படுவதாகவும், பத்திரிகைகளில் வெளியான தவறான செய்திகளின் அடிப்படையில் கனிமொழி மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகவும், சி.பி.ஐ யும் அந்தப் பொய்யான குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும்  முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும்” தெரிவித்துள்ளார்.

கனிமொழி விவகாரத்திற்குப் பிறகு கலைஞரின் சாணக்கியத்தனம் எந்த அளவிற்குச் சரிந்து போய்விட்டது என்பதற்கு இந்தப் பேட்டிகளைவிட வேறு உதாரணங்கள் தேவையில்லை.

கனிமொழியின் சிறைவாசத்துக்குக் கனிமொழி மட்டுமே காரணமல்ல.  கலைஞர் நான்குமுறை முதல்வராக இருந்தபோதும் தன்னை  முன்னிலைப்படுத்திக் கொள்ளத் துணியாத கனிமொழி-  இந்தமுறை முன்வரிசைக்கு இழுத்துவரப்பட்டதற்குக் காரணம்… இருவர் மட்டுமே!

‘தயாளுவின் மகன்கள் மட்டும் வளர்ந்தால் போதுமா?  தனது மகளும் அதிகார மையத்தில் ப்ங்கெடுக்க வேண்டாமா?” என்கிற பேராசையின் விளைவுதான் கனிமொழியின் அரசியல்திணிப்பு.

 கவிதை,இலக்கியம் என்று பயணித்துக்கொண்டிருந்த கனிமொழியின் பாதை-  அதற்குப்பிறகுதான் அரசியல், அதிகாரம், ஆண்டிமுத்துராசா,   திஹார் என திசைமாறிப் போய்விட்டது.

ஆட்டோவில் கூடப் பயணிக்கிற அளவிற்கு எளிமையானவர் என்கிற அவரது அடையாளம் அரசியல்வாதி ஆனபிறகு சிதைந்து போனது.

“ஜாதி நிறத்தை” அவர் தன்மேல் அப்பட்டமாக அப்பிக்கொண்டது  அவரை இன்னும் மோசமான சூழ்நிலைக்கு முன்னெடுத்துச் சென்றது.

சென்னை சங்கமம், செம்மொழி வளர்ச்சி, வேலைவாய்ப்பு முகாம்கள், கவிதைகள் என்கிற கனிமொழியின் முத்திரைகள் அனைத்தும்… “ஸ்பெக்ட்ரம்” என்கிற பெரும்சூறாவளியில் சிக்கி இருக்குமிடம்  தெரியாமல் சின்னாபின்னமாகிப்போனது.

1924 ல் பிரந்த கலைஞர் 1967 ல் தனது 43 வது வயதில் முதன்முதலாக  அமைச்சராகப் பதவியேற்றார். 1968 ல் பிறந்த கனிமொழி 2011 ல்  தனது 43 வது வயதில் முதன்முதலாக சிறைக்குச் செல்கிறார். இருவருக்குமே 43 தான் திருப்புமுனை.

கிராமப்புறங்களில் பிறந்த குழ்ந்தையை வாழ்த்திக் கொஞ்சும்போது “ராசாத்தி மாதிரி வாழனும்” என்று வாழ்த்துவார்கள்.இனிமேல் அப்படி வாழ்த்துவதற்குக்கூட வாய்வருமா தெரியவில்லை.

எது எப்படியோ…. 1991 ல் அ.தி.மு.க வுக்கு ஒரு சசிகலா. 2011 ல் தி.மு.க.வுக்கு ஒரு கனிமொழி என்று உடன்பிறப்புகளே  பேசுமளவிற்கு நிலைமை மோசமாகிவிட்டது என்பது மட்டும் நிகழ்கால கசப்பான உண்மை.

ஒரு பிளாஸ்பேக்… 2009 நாடாளுமன்ற மேலவைத் தேர்தலின்போது, தேர்தல் அதிகாரியிடம் கனிமொழி சமர்ப்பித்த சொத்து விபரம்- “அசையும் ம்ற்றும் அசையாச்சொத்துக்களின் மதிப்பு ரூபாய் 8,56,02,536” (எட்டு கோடியே ஐம்பத்து ஆறு லட்சத்து இரண்டாயிரத்து  ஐநூற்றி முப்பத்தாறு ரூபாய்).

ஆனால் இப்போது ?…

சுப்ரீம் கோர்ட்டுக்கும் சுப்பிரமணிய சாமிக்குமே வெளிச்சம்.