“அண்ணா தி.மு.க.வா? அனிமல் தி.மு.க.வா?”


அம்மா அறிவிச்சிருக்காங்க…

அண்னா பிறந்த நாளன்னைக்கு 60,000 கறவை மாடுகள இலவசமா வழங்கப் போறாங்களாம்.

அதுக்குப் பின்னாடி அப்படியே கொஞ்சம் கொஞ்சமா அடித்தட்டுக் குடும்பங்களுக்கு 4 ஆடுகள் வேற இலவசமா கிடைக்கப்போகுதாம்.

இந்த நாடு உருப்பட்டாப் போலத்தான்…. நெனச்சாலே பயமா இருக்கு.

அரிசி இருபது கிலோ இலவசம். ஆடுகள், மாடுகள் இலவசம்.

விவசாய மின்சாரம் இலவசம். சமையல் எரிவாயு இலவசம்.

புத்தகம், சீருடை இலவசம். சத்துணவு, முட்டை இலவசம்.

லேப்டாப், சைக்கிள் இலவசம். டி.வி. பெட்டியும் இலவசம்.

வேட்டி, சேலை இலவசம். மிக்சி, கிரைண்டர் இலவசம்.

திருமண உதவி இலவசம். தாலிக்குத் த்ங்கம் இலவசம்.

இன்னும் ஏதாச்சும் விட்டுப் போச்சுங்களா?. ஒண்ணு ரெண்டுன்னா ஞாபகப்படுத்தி எழுதலாம். எத்தனையத்தான் நெனச்சு நெனச்சு எழுதறது?

இலவசம் இலவசம்னு சொல்றாங்களே, எது இலவசம்?. யாரு வீட்டுக் காசும்மா அது?. ஜெயலலிதாவோ, கலைஞரோ அவங்களோட சொந்தப் பணத்தில இருந்து எடுத்துக் கொடுத்தா அது இலவசம். அத விட்டுட்டு மக்களோட வரிப்பணத்தை எடுத்து வாரி எறச்சிட்டுப் போறதுக்குப் பேரு இலவசமா? அதுக்காகவா மக்கள் வரி செலுத்தறாங்க?. நாட்டு வளர்ச்சிக்கு நல்ல நல்ல திட்டங்களப் போடச்சொல்லி வரியக் கட்டுனா… அத வச்சுப் போகிப்பண்டிகை கொண்டாடறீங்களே பொழப்பத்த அரசியல்வாதிகளே…. ஞாயமா இது?

இதுல இன்னொரு கூத்து என்னன்னா… பக்கத்து மாநிலத்துல போயி வேணும்னாலும் மாடு வாங்கிக்கிட்டு வரலாமாம். பயனாளிகள (மாட்டுக்கார வேலன்கள) அந்தந்தக் கிராமசபைகள்தான் தேர்வு செய்யுமாம். எல்லாமே அ.தி.மு.க மயமாத்தான் ஆகப்போகுது. எப்படியோ மாடு வாங்கப்போன செலவு, வாங்கிட்டு திரும்பி வரும்போது ஆன செலவுன்னு அதிமுக நிர்வாகிகளோ, அதிகாரிகளோ கொள்ளை அடிக்க ஒரு வழிபண்ணிக் கொடுத்தாச்சு..

ஒரு வசதி என்னன்னா… ரேஷன் கடை அரிசிப் பையில “அம்மா” படம் போடறமாதிரி, மாடுகளின் மேல அம்மா முத்திரை போடத் தேவையில்லை. அதுவே அம்மா அம்மான்னுதானே கத்தப்போவுது!.

சாதாரண மக்களுக்கு அரசுதரும் இலவசங்கள் இலவசங்களே அல்ல. மாடு மேய்க்கிற சிறுவர்கள் எல்லாம் பள்ளிக்கூடம் போய்ப் படிக்கவேண்டும் என்று காமராஜர் நினைத்து மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்தார். ஆனா இப்பத்தான் பாடப்புத்தகம் இல்லாமதானே பள்ளிக்கூடமே ந்டக்குது. படிச்சுத்தான் என்னத்தக் கிழிச்சுடப்போறோம்னு பேசாம ஆடு மாடு மேய்க்கக்கூடப் போகலாம்.

ஆனால் இன்னொரு அம்சத்தையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும். இந்தத் திட்டத்தால் பால் மற்றும் இறைச்சி உற்பத்தி பெருகுவதோடு ம்ட்டும் இல்லாமல், விவசாய நிலம் இல்லாமல் தினக் கூலி செய்து போராடும் கிராமத்து மக்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் மாதிரிதான். இதைக் கொஞ்சம் மாற்றி இலவசமாகக் கொடுக்காமல், 5 வருடங்களுக்குள் அந்த ஆடு, மாடுகளுக்கு உரிய பணத்தை அவர்களது வருவாயில் இருந்து திரும்பச் செலுத்துமாறு சொல்லியிருந்தால் பாராட்டியிருக்கலாம்.

அம்மா… ஒரு சின்ன யோசனை. ஆடு மாடு கொடுக்கும்போது பாத்துக் கவனமாக் கொடுங்க. சாகும் வரைக்கும் அதுகளைப் பத்திரமாப் பராமரிக்க வேணும்னு ஸ்டாம்ப் பேப்பர்ல கையெழுத்து வாங்கிக்கிட்டுக் கொடுங்க. இல்லேன்னு வையுங்க…. ஒண்ணு வித்துத் தின்னுடுவாங்க, அல்லது கேரளாவுக்கு அடிமாடா ஏத்தி அனுப்பிட்டு, ஆட்டக் காணாம் மாட்டக் காணாம்னு போலீஸ் ஸ்டேஷன்ல போய் உக்காந்துக்குவாங்க.

அதுசரி… ஆடு மாடு மிக்சி கிரைண்டர் ஃபேன் லேப்டாப் எல்லாத்துக்கும் “டாஸ்மாக்” வருமானமே போதுமா மேடம்? வேற என்ன மாதிரி வருமானத்துக்கு வழி பண்ணி வச்சிருக்கீங்க? மணல் வருமானத்துக்கு மறுபடியும் வழி பண்ணிட்டீங்க. வேற??. ..

.உங்களுக்குத் தெரியாத ரூட்டா மேடம் ?. நாங்களும் பாப்போம்ல.!….