இதுக்குப் பயந்துக்கிட்டுத்தாண்டா….

இதுக்குப் பயந்துக்கிட்டுத்தாண்டா….

நாங்க இந்தப் பொண்ணுங்களை நம்பி-

காதலும் பண்ணறதில்லை….. 

கேர்ள் ஃபிரண்டும் வச்சுக்கிறதில்லை!

 

 

“பிங்க் கலர் ஜட்டியும், பெண்களின் உரிமையும்”.

மங்களுர் அம்னீஷியா பப்பில் நடத்தப்பட்ட பெண்கள் மீதான ஸ்ரீராமசேனாவின் தாக்குதலுக்குப் பிறகுதான் “பப்” என்கிற வார்த்தை பரவலாக பொதுஜனங்ககளுக்கு பழக்கப்பட்ட வார்த்தையாக அறிமுகமாகியிருக்கிறது.

பப் தாக்குதலை முன்னின்று நடத்திய ராமசேனையின் தலைவர் முத்தாலிக், “இந்திய நாட்டின் பாரம்பரியமிக்க கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் சீரழிக்கிற விதமாக, பெண்கள் மது அருந்திவிட்டு அரைகுறை ஆடையுடன் ஆபாசநடனம் ஆடிக்கொண்டிருப்பதைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது” என்று விளக்கமளித்திருக்கிறார். இந்தச் சம்பவம் இந்தியா முழுவதும் ஒரு பரபரப்பு நெருப்பைப் பற்றவைத்துவிட்டது.

கலாச்சாரசீரழிவு என்கிற பெயரால் பெண்ணினத்தின் மீது நடத்தப்படுகிற தாக்குதல் இந்த மண்ணுக்குப் புதிதல்ல.

“திருமணத்துக்கு முன்பாக பெண்கள் உறவு கொள்வதில் தவறில்லை, ஆனால் அந்த உறவு பாதுகாப்பானதாக இருக்கவேண்டும்” என்று கருத்து   சித்தரிக்கப்பட்டு வழக்குகள் பாய்ந்தன.

உலகப்புகழ் பெற்ற டென்னிஸ் வீராங்கனை “சானிய மிர்சா” மைதானத்தில் விளையாடுகிறபோது உள்ளாடை தெரிய அணிகிற குட்டைப்பாவாடை, தங்களது இனத்தின் கலாச்சார சீரழிவிற்கு அடிகோள் என்று மிரட்டிப் பணியவைக்கப்பட்டு டிரவுசர் அணிந்து ஆடுகிற நிலைக்குத் தள்ளப்பட்டார்.

“பெண்பிள்ளைகள் பள்ளிக்குச் செல்வதை உடனடியாக நிறுத்திக் கொள்ளாவிட்டால், அவர்கள் பயில்கிற பள்ளிகளை குண்டு வைத்துத் தகர்ப்போம்” என்று தாலிபான் பகுதிகளிலும், “எந்த மதர்ஷாவிலும் ஆண்களும் பெண்களும் இணைந்து படிக்கூடாது” என்று உத்தரப்பிரதேசத்திலும், கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட கலாச்சாரம்தான் காரணமாக சொல்லப்பட்டது.

என்ன கலாவோ என்ன சாரமா ஒன்றும் புரியவில்லை.

பப் தாக்குதலில் தவறில்லை என்று நியாயப்படுத்தும் முத்தாலிக் “பார்கள் மற்றும் பப்கள்” இரண்டுமே இந்தியக் கலாச்சாரத்திற்கு எதிரானவை என்று கூறுகிறாரா? அல்லது சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டு நடத்தப்படுகிற அவற்றுள் பெண்கள் நுழைவதும் குடிப்பதும் கூத்தாடுவதும்தான்  தவறு என்கிறாரா? அப்படியானால் பப்களுக்கு அனுமதி வழங்கும்போது “பெண்களுக்கு அனுமதியில்லை” என்று உத்தரவிடச் சொல்லி அரசாங்கத்திடம்தான் அவர் சண்டை போடவேண்டுமே தவிர, அதை விட்டுவிட்டு…. பெண்களின் தலைமுடியைப் பிடித்து தரதரவென இழுத்துவந்து அடிப்பதைமட்டும் இந்தியக் கலாச்சாரம் கௌரவமாக ஏற்றுக்கொள்ளுமா என்பதையும் அவர்தான் விளக்க வேண்டும்.

என்னதான் நவநாகரிக காலமாக இருந்தாலும், போதை தலைக்கேறிய நிலையில் போவோர் வருவோருடனெல்லாம் அரைகுறை ஆடையுடன் தனது பெண் ஆடுவதை எந்தப் பெற்றோரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால் அதற்காக முத்தாலிக் பாணியில் முயற்சிப்பது சரியல்ல.

இப்படிப்பட்ட சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமலிருக்க என்ன வழி என்று ஆராய்ந்து தீர்வு காண முயற்ச்சிக்க வேண்டுமே தவிர… அதை விடுத்து, “பெண்களைத் தாக்கியவர்களுக்கு பாடம்புகட்டும் வகையில், பெண்கள் அணியும் ஜட்டிகளை… அதிலும் குறிப்பாக பிங்க் கலர் ஜட்டிகளை, அந்த அமைப்பின் தலைவருக்கு காதலர் தினத்தன்று பரிசாக அனுப்பிவைப்போம்” என பெண்கள் அமைப்பின் தலைவி நிஷா சுஷானி எடுத்த முடிவு எந்த வகையில் சேர்த்தி எனத்தெரியவில்லை.

இரு தரப்புக்குமே எதிர்ப்பைக்காட்ட எத்தனையோ விதமான நியாயமான வழிமுறைகள் இருக்கும்போது, அடிப்பேன் உதைப்பேன் என்பதும்…அடிக்கிற மடையர்களுக்கு நான் அணியும் ஜட்டியை அனுப்புவேன் என்பதும்… இரண்டுமே முட்டாள்தனத்தின் உச்சகட்டம்.

ஜட்டிகளை அனுப்பச்சொல்லும் முடிவை எத்தனை குடும்ப்பப்பெண்கள் இன்முகத்தோடு வரவேற்பார்கள் என்பது தெரியவில்லை. பார்வையில் படும்படி உள்ளாடை வெளியே கொடியில் காய்வதைக்கூட விரும்பாத பெண்களா… பப்ளிக்காக நான் போட்டிருக்கிற ஜட்டியை அவிழ்த்துத்தருவேன் என்பதை ஒப்புக்கொள்வார்கள்? என்ன மடத்தனம்?

அப்படி அனுப்பி வைக்கப்படுகிற ஜட்டிகளில் ஒன்றைக் கையிலெடுத்து, அடடா… இதுதான் நிஷாஅணிந்திருந்த ஜட்டியா? சைஸ் என்ன? நல்லா வாசமாத்தான் இருக்கு என்று யாராவது ஒருவன் போட்டோவுக்கு போஸ் கொடுத்தால்…. அது எவ்வளவு அவமானம் என்பதை அவர்கள் உணராமல் போனது அதிசயம்தான்.

“பிங்க் கலர் ஜட்டிகளை” அவர்கள் தேர்வு செய்யக்காரணம் , பிங்க் கலர் என்பது முட்டாள்தனத்தைக் குறிக்கும் என்பதால். யாருடைய முட்டாள்தனத்தை என்பதுதான் கேள்வி.  இன்று ஜட்டியை அனுப்பத் துணிந்தவர்கள் நாளை நாப்கினையும் அனுப்பத் துணிந்துவிடக் கூடாதே என்பதுதான் நமது பயமெல்லாம்.

(“இந்தியன் ரிப்போர்ட்டர்” மார்ச் 2009 இதழில் வெளிவந்த எனது கட்டுரை)

*****************************************************

வேண்டாம் இந்த விழிகள்….

எழுதிப் பதிந்தவர் —மாதவி. நன்றி:- மோகமுள் பிளாக்ஸ்பாட்.

“முலைகள்” என்ற தலைப்பில் ஜெகதீஸ்வரன் என்பவர் எழுதியிருந்த கவிதையைப் படிக்கும் வாய்ப்புக்கிட்டியது நீங்களும் படித்துப்பாருங்கள்.. நான் எழுத வேண்டியதை ஒரு ஆண் எழுதிவிட்டாரே என்கிற சந்தோஷம் ஒருபுறம். எல்லா ஆண்களுமே இப்படித்தானோ என்கிற வருத்தம் மறுபுறம்.

கோலம் போட குனிகையில்

கொலை வெறியுடன் பார்க்கின்றன!

அவசரம் கருதி ஓடுகையில்

தவறான இடங்களை தடவுகின்றன!

பார்வையில் இருக்கும் கொடூரம்

சுருக்கென குத்தும் வலிகளால்

துடித்துப் போகின்றேன் நான்!

அடுத்த ஜென்மமும் எனக்கு

பெண்ணாக பிறக்க பாக்கியம் இருந்தாலும்

வேண்டாமிந்த முலைகள்!….


ஆனால், நினைத்துப்பார்த்தால்…. முலைகள் இல்லையேல்?… எதுவுமே இல்லை என்பதும் நிதர்சனம்.

ஆண்களின் பார்வைக் கோளாறுகளுக்காக பெண்கள் எல்லாவற்றையும் அறுத்து வீசி எறிந்துவிட்டுப் போக முடியாது.

வேண்டாம் இந்த முலைகள் என்று எங்களுக்காக நீங்கள் ஆதங்கப்படுவதைத் தவிர்த்துவிட்டு, வேண்டாம் இந்த விழிகள் என்று உங்களை நீங்கள் சுத்தப் படுத்திக்கொள்ள முயற்சி செய்திருந்தால்…. வரவேற்றிருக்கலாம். ஆனால்?…..

நான் எப்போதுமே ஆண்களைக் கீழ்ப்படிபவர்களாக மட்டுமே பார்த்திருக்கிறேன். பெண்மையை மீறித் தன்னைக் கட்டுப்படுத்தி அடக்கி ஆளுமை கொள்கிற ஆண்மகனை இதுவரை நான் பார்த்ததாக நினைவிலில்லை. அலைபவர்களாக மட்டுமே அவர்கள் படைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதே சரி.

மாற்றுக்கருத்து இருந்தால்.. எழுதலாம்.



“அடிங் ஙொய்யாலே…விளம்பரத்தப் பாரு”

=> அடிக்கடி டி.வி.ல பாத்திருப்பீங்களே..ஒரு சோப்பு விளம்பரம். அம்மா த‌ன்னோட மகளக் கூப்பிட்டு சோப்பு வாங்கியாரச் சொல்லுவா. மகளும் போறா. கொஞ்ச நேரத்துல‌ திடீர்னு அம்மாக்காரி பதட்டமாயிடுவா. பயங்கர டென்ஷ்ன். என்ன சோப்பு வாங்கனும்னு சொல்லி உடலியாம்.

தெருவெல்லாம் தேடி அலைஞ்சு வீட்டுக்குத் திரும்பி வந்து பாத்தா, பொண்ணு பாத்ரூம்ல குளிச்சிக்கிட்டிருப்பா. “பவித்திரா” ன்னு சத்தமா கூப்புடுவா. ஹமாம் சோப்போட பவித்திராவோட கையும் முகமும் மட்டும் பாத்ரூம் கதவுக்கு வெளிய தெரியுது. அப்பத்தான் அம்மாகாரி வயித்தில பால் வார்த்த மாதிரி இருக்குது. வேற சோப்பு யூஸ் பண்ணினா பொண்ணோட எதிகாலமே போயிடுமாம்.

அந்த அம்மாகாரிய நான் பாக்கனும், ஒரு முக்கியமான விஷயம் கேக்கனும். “அடிங் கொய்யாலே, அந்தப் பவித்திரா கிட்ட குளிக்கிற சோப்பா தொவைக்கிற சோப்பான்னு மொதல்ல சொல்லி உட்டியா? அதையே சொல்லாம, உனக்கு எதுக்குடி இந்த பில்டப்பு? அலம்பல்? இனிமேலாவது பவித்திராவுக்கு என்னென்ன யூஸ் பண்ணனும், எப்படி எப்படிப் பண்ணனும்னு ஒழுங்கா சொல்லிக்கொடு. பாவம் அந்தப் புள்ள.

********************************************************

=> ஒரு fairness cream விளம்பரம் (Ponds?)

ஒரு கல்லூரி மாணவிக்கு ஒரு மாணவன் கைரேகையைப் பார்த்து “நீ அக்கவுண்ட்ஸ் பரீட்சையில் கோட்டை விட்டுவிடுவாய்” என்கிறான். “நோ டென்ஷன்” என்கிறாள் அந்தப் பெண்.

அடுத்து அவன், “உன் சருமத்திற்கு ஏதாவது ஆபத்து வந்துவிடும்” என்கிறான். உடனே அவள் பயந்து போய் “ஐயோ! என் சருமத்திற்கு என்ன ஆகிவிடும்?”  என்று பதறிப்போகிறாள்.

இங்கே ஒரு பெண்ணுக்கு படிப்பை விட அழகுதான் முக்கியம் என்கிற செய்தி வலியுறுத்தப் படுவதை உங்களால் உணர முடிகிறதா? ஹமாம் சோப்பு அல்லாத வேறு சோப்பை உபயோகித்துவிட்டால் தன் பெண்ணுக்குத் திருமணமே நடக்காதே என்று பயப்படும் தாய்.Fairness cream உபயோகித்து விமானப் பணிப் பெண்ணாகவெண்டும் என்ற தன் கனவை நிறைவேற்றிக் கொள்ளும் பெண் –

இப்படி எதற்கெடுத்தாலும் அழகு…அழகு…அழகுதானா? ஒரு பெண்ணிடமிருந்து எதிர்ப்பார்க்க வேறு எதுவுமே இல்லையா?

********************************************************

=> Mint-O-Fresh விளம்பரம்.

சிரிப்பே அறியாத ஒரு வயதான சிடுமூஞ்சிக்கு வாழ்க்கைப் பட்டு, வாழ்க்கையே வெறுத்துப் போய் இருக்கிறாள் ஒரு அழகான இளம் பெண். Minto-O-Fresh ஒன்றை வாயில் போட்டுக் கொண்டு அந்தப் பக்கம் வரும் ஒரு இளைஞனைப் பார்த்து அவனுடன் ஓடிப் போய்விடுகிறாள்.

கேவலம் ஒரு Minto-O-Fresh க்காக ஒருவனுடன் ஓடிப் போகும் அளவு பெண்கள் தரம் தாழ்ந்து போய்விட்டார்களா?

அதேபோல இன்னொரு ஷேவிங் க்ரீம் விளம்பரம். ஒரு அழகான இளம் பெண் ஒரு அழகான இளைஞனுடன் நடனம் ஆடிக்கொண்டிருக்கிறாள். அவனுடைய தாடை சரியாக ஷேவ் செய்யப் படாமல் சொர சொரப்பாக இருப்பதை கவனித்தவுடன் அவள் முகம் வாடுகிறது. அந்த சமயத்தில் சுத்தமாக ஷேவ் செய்யப்பட்டு மழ மழப்பான தாடையுடன் ஒரு இளைஞன் அந்த அறையில் நுழைகிறான்.

அந்த இளம் பெண் உடனே சொர சொர இளைஞ்சனைப் புறக்கனித்துவிட்டு மழ மழ இளைஞ்சனுடன் நடனமாடப் போய்விடுகிறாள்! கேவ‌லம் ஒரு ஷேவிங் க்ரீமுக்காகவா???

அடப்பாவிகளா…இப்படியுமா?

********************************************************

=> ஆண்களின் உள்ளாடைகளுக்கான விளம்பரம் ஒன்று.

ஒரு கட்டுடல் வாலிபன் குளித்துவிட்டு வெறும் உள்ளாடையோடு வெளியே வருகிறான். அவன் வரும் அதே நேரத்தில் அதே அறைக்குள் அவனது பெண் நண்பி நுழைகிறாள். அவன் கட்டுடலைப் பார்த்து மயங்கினாளோ இல்லையோ, அவனது உள்ளாடையை கண்டு மயங்கி கண்களில் காமத்தை காட்டுகிறாள். அறைக்கதவு மூடப்படுகிறது.

சமீபத்தில் மேலும் ஒரு விளம்பரம். ஆண்களின் ஆடைக்கானது என்பதை நம்பவே முடியாதபடி பெண் ஒருத்தி உள்ளாடையுடன் இருக்கும் கவர்ச்சிப் படத்துடன் சென்னை நகரை ஆக்கிரமித்திருந்தது.

தெரியாமல்தான் கேட்கிறேன்…

பெண்களின் சாதனையே ஆண்களை வசீகரிப்பதில்தான் உள்ளது என்பதாக விளம்பரங்கள் சித்தரிக்கின்றன. குறிப்பிட்ட ஷேவிங் கிரீம், ஜட்டி, வாசனை திரவியங்கள், பற்பசை போன்றவற்றைப் பயன்படுத்தும் ஆடவர்களைப் பெண்கள் மொய்த்துக் கொள்வார்கள், விரும்புவார்கள், உடன்படுவார்கள் என்பதாக விளம்பரங்கள் சொல்கின்றன.

நமது விளம்பரங்களில் பெண்கள் எப்போதும் துணிதுவைத்து, சமைத்து, குழந்தைகளைப் பராமரித்து, நாப்கின் தேர்ந்தெடுத்து, அலங்கரித்துக் கொண்டு, கணவன் மெச்ச வாழ்கிறவர்களாகவே சித்தரிக்கப்படுகிறார்கள். ஆணாதிக்கச் சமூகத்தின் பார்வையில் பெண் ஒரு அழகுப்பதுமை, சுகம் தரும் கவர்ச்சிப் பொருள், மற்றொரு கோணத்தில் சேவை செய்யும் அடிமை, பணிப்பெண் என்பதாகவே கட்டமைக்கப்பட்டுள்ளது.

ஒரு பெண்ணுக்குத் தேவையான பொருளுக்கான விளம்பரம்னா சரி, ஒரு பெண் வருவது நியாயம்னு சொல்லலாம். இரு பாலரும் உபயோகிக்கும் பொருளான குளிர் பானம், உணவுன்னு ஏதாவதென்றாலும் கூட ஒத்துக்கலாம். ஆனா ஆண்களின் உள்ளாடை சமாச்சாரங்கள் தொடங்கி, சவரம் செய்யும் உருப்படிகளிலிருந்து, ஓட்டும் பைக் வரை எல்லா விளம்பரங்களிலும் சம்பந்தமே இல்லாமல் ஒரு பெண் இருந்தாக வேண்டும்னா என்னாங்கடா அர்த்தம்?

********************************************************

=> இன்னொரு விளம்பரம். எதிலோ படித்த நினைவு.

சில ஆண்டுகளுக்கு முன்பாக பாரிஸ் நகரின் நெரிசல் மிகுந்த போக்குவரத்து சிக்னல் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த பெரிய விள‌ம்பர போர்டு பலரின் கவனத்தையும் கவர்ந்தது.
அதில் ஒரு பெண் நிற்கிறாள், அவளை பின்புறமாகப் படமெடுத்திருக்கிறார்கள். அவள் மேல்கச்சையும், கீழே ஒரு உள்ளாடையும் மட்டுமே அணிந்திருக்கிறாள். “அடுத்த வாரம் வந்து இதே இடத்தை பாருங்கள். நான் இந்த ஆடைகளையும் கூட துறந்திருப்பேன்” என்றொரு வாசகம் அச்சிடப்பட்டிருக்கிறது.
அவ்விளம்பரத்தை கண்ட பலர் ஒருவாரம் காத்திருந்து, அடுத்த வாரம் அதே விளம்பரத்தைக் காண ஓடிவருகிறார்கள் சொன்னபடியே அந்த பெண் ஆடையில்லாமல் இருக்கிறாள். ஆனால் பின்புற அழகு மட்டுமே தெரிகிறது.மீண்டும் ஒரு வாசகம் “அடுத்த வாரம் வந்து பார்த்தீர்களென்றால் நான் திரும்பி நிற்பேன்”.
பின்புறத்தைப் பார்த்தே சூடானவர்கள் சும்மா இருப்பார்களா? முன்புறத்தைக் காண கொலைவெறியோடு ஒருவாரம் காத்திருந்து ஓடிவந்தார்கள்.
அவர்கள் எதிர்பார்த்தபடியே விளம்பரம் மாற்றப்பட்டு, அந்தப் பெண் ஆடையில்லாமல் இருப்பது போன்ற படம் அச்சிடப்பட்டு‍‍‍, கீழ்கண்டவாறு வாசகம் எழுதப்பட்டிருந்தது. “நாங்கள் உங்களுக்குக் கொடுக்கும் வாக்குறுதிகளை எப்போதும் எதிலுமே மீறுவதில்லை”. வாசகத்துக்கு கீழே சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பெயர் இடம்பெற்றிருந்தது.
எவ்வளவு எளிதாக இடம் பிடித்துவிட்டார்கள்?
********************************************************





அவர்கள் பார்வையில்…

எனக்கு-
முகம் இல்லை
இதயம் இல்லை
ஆத்மாவும் இல்லை
அவர்களின் பார்வையில்-
இரண்டு மார்புகள்
நீண்ட கூந்தல்
சிறிய இடை
பருத்த தொடை
இவைகளே உள்ளன
சமையல் செய்தல்
படுக்கையை விரித்தல்
குழந்தை பெறுதல்
பணிந்து நடத்தல்
இவையே எனது கடமைக்ள் ஆகும்
-கற்பு பற்றியும்
மழை பெய்யெனப் பெய்வது பற்றியும்
கதைக்கும்
அவர்கள்
எப்போதும் எனது உடலையே
நோக்குவர்
கணவன் தொடக்கம்
கடக்காரன் வரைக்கும்
இதுவே வழக்கம்.
-அ.சங்கரி

எரிந்தும் நூராத தணலாய்…

போரிட்டு மடிந்த பெண்ணுடலை
யுத்த நிலங்களில்
தழுவிப் புணர இழுத்துவருகிறான்
இராணுவ வீரன்
அவனுடைய
ஆண்குறி
19.99 கிலோ வெடிமருந்து
நிரம்பிய குண்டின்
வேகத்தை ஒத்ததாயிருந்தது
பெண்ணுடலில்
மீதமிருந்த ஆடைகளுமில்லை….
அடி….. கொல்லு…… என்ற சத்தம்
மட்டுமே அச்சமூட்டியது
அடுத்த கணமொன்றில்
யோனி தின்று நாக்குத்தொங்க
நகைப்புக் காட்டுகிறான்
இராணுவ வீரன்
அரையும் குறையுமென
ஒரு வீடியோ காட்சி
இணையங்களில் புகைப்படங்கள் என
நீள்கிறது
பெண்ணுடல் மீதான
ஆணாதிக்க கொடுமைகள்.
எமது கண்கள் முன்னே
இரத்தம் கசிய சிதைத்த
மனம்பேரியையும்
கோணேஸ்வரியையும்
சாரதாம்பாளையும்
கிருசாந்தியையும் கடந்து
பேரினவாத யுத்தத்தில்
எத்தனை பெண்போராளிகளை
வெடிமருந்து நிரம்பிய
ஆண்குறிகள்
தின்று தீத்திருக்கும்?
அதை நம்பமறுக்கும்
ஆணாதிக்க அரசியல்
இணையங்களில் கேவலமாய்
நம்பரும் வட்டமும் வரைந்து
பெண்ணுடலை
ஆய்வு செய்யும் கொடுமைகள்
ஆணாதிக்க பிசாசுகளே
நீங்கள் யாராக இருந்தாலும்
எரிந்தும் நூராத தணலாய்
இன்னும் ஏன் இருக்கிறீர்கள்
தூஊ நூர்ந்து போங்கள்.

—-தில்லை.

இரண்டாம் ஜாமத்துக் கதை !

குழந்தைகளைப் பெற்றதற்குப் பிந்தைய
இரவுகளில்
பழகிய நிர்வாணத்திற்கிடையில்
அதிருப்பதியுற்றுத் தேடுகிறாய்
என் அழகின் களங்கமின்மையை
பெருத்த உடலும்
பிரசவக் கோடுகள் நிரம்பிய வயிறும்
ரொம்பவும்தான் அருவெறுப்பூட்டுவதாய்ச்
சொல்கிறாய்
இன்றும் இனியும்
எப்போதும் மாறுவதில்லை எனது உடலென்றும்
நிசப்தத்தின் பள்ளத்தாக்கில்
புதையுண்டிருக்கும் என் குரல்
தனக்குள்ளாகவே முனகிக்கொண்டிருக்கும்
உண்மைதான்
என் உடலைப் போலல்ல
உன்னுடையது
பறைசாற்றிக்கொள்வதில்
வெளிப்படையாக இருப்பதில்
இதற்கு முன்னும்கூட
உன் குழந்தைகள் வேறு எங்கோ
யார் யாருக்கோ பிறந்திருக்கலாம்
உன்னிடம் தடயங்களில்லை என்பதால்
நீ பெருமை கொள்ளலாம்
நான் என்ன செய்ய?
என் நசிவைப் போலத்தான்
இந்தப் பிரசவக் கோடுகளும்
எளிதில் செப்பனிட முடிவதில்லை
வெட்டி ஒட்டிவிட இவ்வுடல் காகிதமில்லை
உன்னைக் காட்டிலும்
மோசமான துரோகத்தினைப் புரிந்திருக்கிறது
இயற்கை எனக்கு
உன்னிலிருந்துதானே தொடங்கிற்று
எனது தோல்வியின் முதலாவது நிலை
முதல் ஜாமத்தைக் காட்டிலும்
விபரீதமானது
கனவுகள் பெருகும் இரண்டாம் ஜாமம்
சுவரோவியத்தில் அமைதியாக
அமர்ந்திருந்த புலி
இவ்விரண்டாம் ஜாமத்தில்தான்
என் தலைமாட்டிலமர்ந்து
உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறது.
நன்றி:- கவிஞர் சல்மா.