ஜிங்குன மணி….

‘ஜிங்குன மணி ஜிங்குன மணி
சிரிச்சுப்புட்டா நெஞ்சுல ஆணி…..!”

குடியரசு தின விழா மேடையில
குமுறி எடுக்கிறாங்க இங்க.

இந்தப் பாட்டுக்கு என்ன அர்த்தம் அங்கிள்னு
எதிர் வீட்டுப் பாப்பா கேட்குது.

என்னன்னு சொல்ல?

மேலே இருப்பவனே, மெய்ப்பொருளே….
மெல்லத் தமிழைக் காப்பாற்று!

L

வேணாம் வேனாம்….

குடியரசு தினத்தையும் சுதந்திர தினத்தையும்
ஒரே நாள்ல வச்சிருக்கலாம்….
நமக்கும் குழப்பமில்லாமல் போயிருக்கும்.

ஆனால்….

லீவ் நாள்ல ஒண்ணு குறைஞ்சிடுமேன்னு
நினைக்கிறப்போ….. வேணாம் வேனாம்
அது இரண்டாகவே இருந்துட்டுப் போகட்டும்னு
அடிமனசு அலறுது.

அண்ணல் காந்தியும்- அந்த 55 கோடியும்!

mg-1

காந்தியைக் கொன்றது யார்? நாதுராம் கோட்சே.

ஏழாம் வகுப்பு வரலாறில் படித்தது. அதுவும் கூட ஒரு மார்க் கேள்வியில் வரும் என்று ஆசிரியர் சொன்னதற்காக.

யார் இந்தக் கோட்சே? காந்தியைக் கொல்ல வேண்டும் என்று அதிகாரத் திமிரில் இருந்த பிரிட்டிஷ் அரசாங்கமே ஆசைப்படாத போது- கோட்சே மட்டும் எதற்காகக் கொல்லத் துணிந்தார்? அப்படியென்ன அவருக்குக் காந்தி மேல் கோபம்? தனியாளாகத்தான் முயற்சித்தாரா? கூட்டுச் சதியா? அப்படி என்னதான் நடந்தது அந்தக் காலகட்டத்தில்?

இதற்கெல்லாம் விடை சொல்கிறது- திரு.என்.சொக்கன் அவர்களின் மகாத்மா காந்தி கொலை வழக்கு என்கிற புத்தகம்.

காந்தி கொலைக்கு முக்கியக் காரணமாக இன்றும் பலர் சொல்வது “55 கோடி”. அதென்ன 55 கோடி?

இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் தனி நாடாகப் பிரிந்த பின்னர், புதிய நாட்டின் கட்டமைப்புக்கு என்று 75 கோடி தருவதாக ஒப்பந்தம் ஏற்பட்டது.. இதில் முதல் தவணையாக 20 கோடி பாகிஸ்தானுக்குத் தரப்பட்டுவிட்டது..

அப்போது காஷ்மீரை ஹரி சிங் என்ற அரசர் ஆண்டு வந்தார். காஷ்மீரில் வசிப்பவர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம் இனத்தவர். ஆனால் ஆள்பவரோ இந்து அரசர். எனவே இந்தியாவும், பாகிஸ்தானும் காஷ்மீரைச் சொந்தம் கொண்டாட ஆரம்பித்தன. பின் வழியாக வந்து தாக்குவதைக் கார்கிலுக்கு முன்பு அப்போதே பாகிஸ்தான் ஆரம்பித்திருக்கிறது.

அலறியடித்துக்கொண்டு இந்தியாவிடம் உதவி கேட்டிருக்கிறார் காஷ்மீர் அரசர். கிடைத்த வாய்ப்பை இந்தியாவும் நழுவ விடவில்லை.
இதற்கிடையில், பாகிஸ்தான் ஆட்சியாளர்களோ, எங்களுக்கும் தாக்குதலுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று இப்போது கூறுகிற பதிலையே அப்போதும் சொல்லிவிட்டு- எங்களுக்கு வரவேண்டிய மீதி 55 கோடியை அனுப்புங்கள் என்று இந்திய அரசிடம் கேட்டிருக்கிறார்கள்.

இவர்கள் இப்போதே இப்படியிருக்கிறார்கள், இன்னும் 55 கோடியையும் கொடுத்துவிட்டால் என்னவெல்லாம் செய்வார்களோ என்றெண்ணிய இந்திய அரசு அதை அப்படியே நிறுத்திவைத்தது.

போதாத காலம், இதே சமயத்தில்தான், இந்து முஸ்லிம் கலவரம் டெல்லியில் பற்றி எரிய ஆரம்பித்தது.. இரு மதத்தினரும் ஒற்றுமையாக இருக்க வேண்டி காந்தி ஜனவரி 13, 1948 காலை 11:55க்கு உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்.. பதறிப் போன இந்திய அரசு, தனது கேபினட் கூட்டத்தை காந்தி உண்ணாவிரதமிருந்த பிர்லா இல்லத்திலேயே கூட்டியது..

காந்தி நேரடியாகக் கேட்கவில்லை. என்றாலுல், அவரைத் திருப்திபடுத்தும் விதமாக, கேபினட் கூட்டம் செய்த முதல் முடிவு, பாகிஸ்தானுக்கு 55 கோடி கொடுத்துவிடலாம் என்பது.

இதுதான் தீவிர ஹிந்துத்துவாவான கோட்சேவை மிகுந்த கோபமடையச் செய்திருக்கிறது. காந்தி முஸ்லிம்களுக்கு ஆதரவாகத்தான் பேசுகிறார். ஹிந்துக்களை பற்றி அவருக்குக் கவலையில்லை. அவர் செத்தொழிந்தால்தான் இந்தியாவுக்கு நிம்மதி. அப்போதுதான் இந்தியா தன் வளர்ச்சியைப் பற்றி யோசிக்க முடியும். இனியும் பொறுத்துப் போக முடியாது என்று, ஜனவரி 20, 1948. ஐ காலண்டரில் வட்டமிட்டு நாள் குறித்தார்.

கொலைத் திட்டத்தை நிறைவேற்ற மொத்தம் ஏழு பேர்…..
நாராயண் ஆப்தே, நாதுராம் கோட்ஸே, விஷ்ணு கார்கரே, மதன்லால் பாஹ்வா, கோபால் கோட்ஸே (நாதுராம் கோட்ஸேவின் தம்பி), திகம்பர் பாட்ஜே, மற்றும் ஷங்கர் கிஸ்தைய்யா.

ஜனவரி 20, 1948 அன்று ஆப்தேவும், கோட்சேவும் பிர்லா இல்லத்துக்கு மற்றவர்களோடு சென்றார்களே தவிர, காந்தியைக் கொலை செய்ய நேரடியாக முயற்சிக்கவில்லை.

பிரார்த்தனை மைதானத்திற்குச் சற்றுத் தொலைவில் மதன்லால் ஒரு வெடிகுண்டை வெடிக்கவைப்பார். கூட்டம் சிதறி ஓடும். காவலர்கள் கவனம் சிதறும். இந்தச் சமயத்தில் திகம்பர் பாட்ஜே காந்தியை அருகிலிருந்த வீட்டு ஜன்னலில் இருந்து சுடவேண்டும். சரியாகப் போட்ட பிளானில் கடைசியில் சொதப்பியது திகம்பர் பாட்ஜே. குண்டு வெடித்தபின் அவர் காந்தியைச் சுடவில்லை. ஆப்தே – கோட்ஸே குழுவினருக்கு இது பேரிடி! போதாதற்கு மதன்லால் போலீஸிடம் மாட்டிக்கொண்டார்.

இந்தத் தோல்வியை ஆப்தே மற்றும் கோட்சேவால் தாங்க முடியவில்லை. இனி மற்றவர்களை நம்பிப் பிரயோசனமில்லை, நேரடியாக நாமே களத்தில் இறங்க வேண்டியதுதான் என்று முடிவெடுத்தார் கோட்சே.

விளைவு – ஜனவரி 30, 1948 !

இதில் கொடுமை என்னவென்றால்- ஜனவரி 20 லிருந்து 30 வரை வழக்கம்போலவே காவல்துறையின் நடவடிக்கை படு மெத்தனமாக இருந்திருக்கிறது. மதன்லாலைத் தவிர வேறு யாரும் கைது செய்யப்படவில்லை என்பதுதான்.

mg-2

உங்க ஸ்கார்ப்பியோ கார் எங்க நிக்குது…!

 

பெண்: நீங்க தம் அடிப்பீங்களா?

ஆண்: ஆமா!

பெண்: ஒரு நாளைக்கு எத்தனை பாக்கெட்?

ஆண்: ஒரு மூணு பாக்கெட் அடிப்பேன்…

பெண்: ஒரு பாக்கெட் விலை நாற்பது ரூபாய்ன்னு வைச்சுக்கிட்டா ஒரு நாளைக்கு நூற்றி இருபது ரூபா! சரியா?

ஆண்: சரிதான்…

பெண்: எத்தனை வருஷமா தம் அடிக்குறீங்க?

ஆண்: ஒரு இருபது வருஷமா அடிக்குறேன்.

பெண்: ஒரு வருஷத்துக்கு சுமார் 44ஆயிரம்ன்னா! இருபது வருஷத்துக்கு சுமார் ஒன்பது லட்சரூபாய் ஆகுது சரியா?

ஆண்: சரிதான்…

பெண்: இந்த பணம் இருந்தா நீங்க ஒரு ஸ்கார்ப்பியோ கார் வாங்கி இருக்கலாம்….

ஆண்:ம்ம்ம்ம்ம்….. நீங்க தம் அடிப்பீங்களா?

பெண்: ச்சே ச்சே நோ நோ…!

ஆண்: உங்க ஸ்கார்ப்பியோ கார் எங்க நிக்குது…!

பெண்: …………….???????

அங்கேயும் இந்தக் கூத்தை ஆரம்பிச்சுட்டீங்களா?

 

எது எதுக்குத்தான் விளம்பரம்னு ஒரு விவஸ்தை இல்லாம போயிடுச்சே….

காலம் இப்படியுமா மாறணும்?

இந்திய ராணுவத்தில் இளைஞர்கள் சேர்வதை ஊக்கப்படுத்தும் வகையில் ஒரு விளம்பரம்…..

அதில் போஸ் கொடுப்பது யார் தெரியுமா?

சாதனை புரிந்த ராணுவ வீரர்கள் என்று நீங்கள் நினைத்தால்- அது மடத்தனம்.

கலங்கடிக்கும் பாலிவுட் நடிகைகள் போஸ் கொடுக்கும் விளம்பரம் அது.

வெளியிட்டது யார் தெரியுமா?.

நமது ராணுவத்துக்கு ஆள் தேர்வு செய்யும் மையம் ஷில்லாங்கில் உள்ளது. அந்த மையத்தின் சார்பில்தான் இந்த விளம்பரம்.

பாலிவுட் நடிகைகள் குல் பனாக், பிரியங்கா சோப்ரா, சுஷ்மிதா சென், செலினா ஜெட்லி உள்ளிட்ட நடிகைகளின் படங்களுடன்….

அழகான மற்றும் வெற்றிகரமான பெண் குழந்தைகள் வேண்டுமா?  இந்திய ராணுவத்தில் சேருங்கள் என்ற வாசகத்துடன் விளம்பரம் வெளியாகியிருந்தது.

அடக் கடவுளே…. அங்கேயும் இந்தக் கூத்தை ஆரம்பிச்சுட்டீங்களா?