காந்தி கணக்கில் எழுதிக்கோ !…

கண்னீர் இல்லாத வாழ்க்கை கூட சிலருக்கு அமைந்துவிடுகிறது. ஆனால், கடன் இல்லாத வாழ்க்கை எல்லோருக்கும் அமையுமா என்பது சந்தேகம்தான்.

எங்கள் ஊரிலுள்ள பெரும்பாலான பெட்டிக்கடைகளில் “கடன் அன்பை முறிக்கும்” என்று எழுதிப் போட்டிருப்பார்கள். கணேஷ் பீடி ஒரு கட்டு வாங்கிகொண்டு, அதையும் காந்தி கணக்கில எழுதிக்கோ என்று சொல்லிவிட்டு நடையைக் கட்டுகிறவர்கள் அதைப் படித்துப் பார்த்திருப்பார்களா என்பதே சந்தேகம்தான்.

“கடன் அன்பை முறிக்கும்” என்பது நமக்கு மட்டும்தான் பொருந்தும், நாட்டுக்குப் பொருந்தாது போல. நாம்தான் கடன் வாங்குவதற்குப் பயப்படுகிறோம், பதறுகிறோம்.

அவசரத்திற்கு ஒரு பத்தாயிரம் ரூபாயைக் கைமாத்தாக வாங்கிவிட்டு, அதை திருப்பிக் கட்டுவதற்குள் படாதபாடு படவேண்டி இருக்கிறது. கடன்காரன் கண்ணில் படுகிற பொழுதெல்லாம் ஏதாவது கதை சொல்லிச் சமாளிக்க வேண்டியிருக்கிறது. பைனான்ஸ் கம்பெனியில் வாங்கிய கடனுக்கு மாதாமாதம் வட்டி கட்டுவதற்குள் விழி பிதுங்கி வெளியே வந்துவிடுகிறது. இதுகூடக் கூத்தடிக்கவோ கும்மாளம் போடவோ வாங்குகிற கடன் அல்ல, குடும்பத் தேவைக்காக வாங்குவதுதான்.

ஆனால்– நம்ம நாடு இந்தியா அப்படியா இருக்கிறது?

யாரெல்லாம் கடன் தருவார்களோ, அவர்கள் அத்தனை பேரிடமும் கைநீட்டிக் கடன் வாங்குவதற்குத் தயக்கமே காட்டாத நாடு. காலடியில் கிடக்கிற இலங்கையிடம் கூடக் கைநீட்ட வெட்கப்படாத நாடு.

இப்படி வாங்கி வாங்கியே இந்தியாவின் கடன்சுமை இன்றைக்கு 35 லட்சம் கோடியை நெருங்கிவிட்டது. வருஷத்துக்கு 3 லட்சம் கோடியை வஞ்சகமில்லாமல் கடனாக வாங்கிகொண்டு இருக்கிறது இந்தியா. இத்ன் விளைவு– பெருமை மிக்க ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் தலையிலும் சராசரியாக 30 ஆயிரம் ரூபாய் கடன்சுமை விழுந்திருக்கிறது.

“எனக்குக் கடன் என்றாலே பிடிக்காது. நான் கடன் வாங்குறதும் இல்லை… கொடுக்கிறதும் இல்லை” என்று வைராக்கியமாகச் சொல்கிற சிலரும் இருக்கிறார்கள். நீங்கள் வாங்காவிட்டால் என்ன? உங்களுக்கும் சேர்த்துதான் நாங்கள் வாங்குகிறோமே என்று அரசாங்கம் செய்கிறது. இந்தியன் என்றாலே இன்னொரு பொருள் கடன்பட்டவன் என்பதுதான். “கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்” என்று சின்ன வயதில் படித்தது. நல்ல வேளையாக இந்திய வேந்தர்களுக்கு அது இல்லாமல் போனது.

இந்தக் கன்றாவியெல்லாம் சகிக்காமதானோ என்னவோ, “இந்தியாவுக்குக் கூப்பிட்டாலும் நான் வரமாட்டேன்….இந்தியாவுல நான் பொறந்ததே ஒரு ஆக்சிடெண்டுன்னு” நோபல் பரிசு வாங்குன வேங்கட ராமகிருஷ்ணன் சொல்லி இருக்காரு. அதுசரி… அவரே சொல்லிட்டாருன்னு நாங்க திருந்திடுவமா என்ன?

இதுபற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போது என்னுடைய நண்பர் ஒருவர் பழைய சம்பவம் ஒன்றை நினைவுபடுத்தினார்.

“இந்தக் கடனை அடைக்கிறதுக்காக திருச்சியிலிருந்து ஒருத்தர் 5,000 ரூபாயை பிரதமருக்கு அனுப்பி வச்சாரு தெரியுமா?”

“மூட்டை தூக்கும் தொழிலாளியா இருக்கிற முத்துராமலிங்கம்தானே?”

“ஆமாம். இந்தியா பட்ட கடனை அடைக்கிறதுக்கு என்னாலே முடிஞ்சது 5,000 ரூபாய்தான்னு சிறுகச் சிறுகச் சேமித்த பணத்தை பிரதமருக்கு அனுப்பி வச்சிட்டார்.”

“பிரதமர் என்ன செய்தார் அந்தப் பணத்தை?’

“கடனை அடைக்கறதுக்கு அனுப்பிய பனத்தை, பிரதமர் நிவாரண நிதிக்கணக்கில் சேர்த்திட்டார்.”

“கோட்டையில இருக்கிறவங்க எல்லாம் கொள்ளையடிச்சுக்கிட்டு இருக்கிறபோது, மூட்டை தூக்கறவருக்கு வந்த இந்த உணர்வைப் பாராட்டறதா, இல்லை ஏமாளித்தனம்னு சொல்றதா தெரியலை?”

“இதுக்கு முன்னாடியே இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கு. பெங்களூர்லேயிருந்து இதே மாதிரிதான் ஒருத்தர் 25,000 ரூபாய் அனுப்பி வச்சார்”

“அதையும் நிவாரண நிதியில்தான் சேத்தாங்களா?”

“இல்லை.. அவரு கொஞ்சம் புத்திசாலித்தனமா ஒரு வேலை செஞ்சுட்டார். பணத்தை பிரதமருக்கு அனுப்பாம, ஜனாதிபதி பேருக்கு மணியார்டர் பண்ணிட்டார்.”

“மணியார்டரை ஜனாதிபதி வாங்கிக்கிட்டாரா?”

“வெறும் மணியார்டர் மட்டும்னா பரவாயில்லை. அதுல அவரு எழுதி அனுப்பியிருந்த வாசகம்தான் அட்டகாசம்.”

“அப்படி என்னதான் எழுதியிருந்தாராம்?”

“இன்று வரை இந்தியா பட்ட கடனுக்காக என்னுடைய பங்குத்தொகை ரூ.25,000 ஐ இத்துடன் அனுப்பியுள்ளேன். இனிமேற்கொண்டு இந்தியா வாங்கும் கடனுக்கும் எனக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என்பதையும் இத்ன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று எழுதியிருந்தார்.

“ஜனாதிபதி என்ன செஞ்சாராம்?”

“சட்டத்துல அதுக்கு இடமில்லேன்னு ஜனாதிபதி மணியார்டரைத் திருப்பி அனுப்பிச்சிட்டார்.”

சரியான சவுக்கடி. இப்படியெல்லாம் செய்தால் மட்டும் மரத்துப் போன இந்த அரசியல்வாதிகளுக்கு உறைக்கவா போகிறது?