உடன்பிறப்பே என்று நீ அழைக்கிற பொழுதெல்லாம்….

பரபரப்பான எதிர்பார்ப்புகளைப் பஞ்சராக்கிவிட்டு– வாடிக்கையான வாசகங்களையே வேடிக்கையாகச் சொல்லி…. “புஸ்ஸ்ஸ்” ஆகிப்போய்விட்டது தி.மு.க. பொதுக்குழு.

எதற்காக இந்தப் பொதுக்குழு?

நடந்து முடிந்த தேர்தலில் வாங்கிய மரணஅடி- எதனால், யாரால், எப்படி ஏற்பட்டது என்று ஆராய்வதற்காகவா?
மாவட்டச்செயலாளர் பதவிகளைக் காலி செய்துவிட்டு மாற்றம் கொண்டுவருகிறோம் என்றார்களே அதற்காகவா?
ராஜா முதல் ராஜாத்தி வரை பின்னப்பட்டிருக்கிற ஸ்பெக்ட்ரம் வலையை பிய்த்து எறிவதற்கு என்ன வழி என்பதுபற்றிப் பேசுவதற்காகவா?
அல்லது எதிகாலத்திலாவது தி.மு.க. எழுந்துநிற்பதற்கான திட்டமிடல் குறித்துத் தீர்மானிக்கவா?

இவைகள் எதுவுமே இல்லாமல், இறந்துகிடக்கிற பூச்சியின்மீது மொய்க்கிற எறும்புகளைப்போலக் கூடிக் கலைந்திருக்கிறார்கள்.
எதிர்பார்த்தது மாற்றம், கிடைத்ததோ ஏமாற்றம்.

வழக்கம் போல… “புஸ்வாண” தீர்மானங்களுடன் பொதுக்குழுக் கூட்டத்தை நிறைவு செய்து இருக்கிறார்கள். இதற்குப்போய் இத்தனை “பில்ட் அப்” தேவைதானா? என்பதுதான் கேள்வி.

“இன்னமும் நான்தான் தலைவராக இருக்கிறேன்” என்பதைக்கூட ….. பொதுக்குழுவைக் கூட்டித்தான் புரியவைக்கமுடியும் என்கிற நிலைமைக்குக் கலைஞர் தள்ளப்பட்டு விட்டாரோ என்று கவலைப்படத் தோன்றுகிறது.

இதில் மிகப்பெரிய கொடுமை என்னவென்றால், இலங்கைப் பிரச்னை குறித்து இவர்கள் தீர்மானம் போட்டதுதான். அழிகிற பொழுதெல்லாம் ஆட்சியிலிருந்து ரசித்துவிட்டு…. வீதிக்குத் தூக்கி வீசப்பட்டபிறகு வேஷம் போட்டு என்ன பயன்? நல்ல வேளை…. நார்வே துப்பாக்கிசூட்டுக்குக் கண்டணம், தமிழ்க் கலாச்சாரத்தை மதிக்காமல் கவுன் அணிந்து வந்த ஹிலாரி கிளிண்டனுக்குக் கண்டனம், மறைந்திருந்து வாலியைக் கொன்ற இராமனுக்குக் கண்டனம் என்றெல்லாம் தமாஷ் பண்ணாமல் விட்டார்களே. அதுவரை உத்தமம்.

அடுத்ததாக– சி.பி.ஐ. மீது ஒரு சின்ன பாய்ச்சல் வேறு. சி.பி.ஐ. என்னவோ இவர்களின் குடும்பத்தினரோடு கொடுக்கல் வாங்கல் சண்டை போட்டுக்கொண்டோ…. அல்லது பாகம் பிரிக்கமுடியாமல் பங்காளி சண்டை போட்டுகொண்டோ, கனியை உள்ளே வைத்துவிட்டது மாதிரி மிரட்டல் பாணியில் ஒரு கண்டனத் தீர்மானம். அதுசரி… அவங்களுக்கும் பொழுது போகவேணாமா?

இவை எல்லாத்துக்கும் மேலாகக் கலைஞர் பேசியதுதான் செம காமெடி!

“தி.மு.க., என்ற எஃகுத் தூணை யாராலும் ஆட்டவோ, அசைக்கவோ முடியாது….” நீங்க சொன்னது நூத்துக்கு நூறு கரெக்ட்டுங்க தலைவரே. யாராலும் எப்படி ஆட்டவோ அசைக்கவோ முடியும்.? அதுக்குன்னுதான் நம்ம குடும்பமே இருக்கே….
அதுசரிங்க தலைவரே, நம்ம கட்சிய “எஃகுக் கோட்டை, எஃகுக் கோட்டை” ன்னுதானே எப்பவுமே சொல்லுவீங்க. இப்ப மட்டும் எப்படி ஏமாந்த மாதிரி “எஃகுத் தூணுன்னு” சொல்லிட்டீங்க? “கோட்டை எப்பத் தூணா மாறிச்சுன்னு?” எல்லாரும் கிண்டலாக் கேக்கறாங்க பாருங்க.

எதார்த்தமாப் பாத்தீங்கன்னா இன்னொரு விஷயத்தைப் புரிஞ்சுக்க முடியும். தோல்விக்கான காரணகளைப்பத்தி யாருமே அணுகுண்டு வீசலையான்னு அங்கலாய்ச்சுக்கறதுல கொஞ்சம்கூட அர்த்தமே இல்லை. மேடையில கலைஞருக்குப் பின்னாடி உக்காந்திருக்கிற மேடத்தைப் பாத்தீங்களா? காரணமானவங்களையே மகாராணி மாதிரி உக்கார வச்சுக்கிட்டுக் காரணத்தைப் பேசறதுன்னா?….. முடியுங்களா?

குடும்ப விவகாரம் கொலு மண்டபத்திற்கு வரும் விசித்திரத்தைப் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே மனோகரா படத்தில் காட்டியவர் கலைஞர். ஆனால் அது வேறு, இது வேறு. ராசாத்தி அம்மையார் என்ன பொதுக்குழு உறுப்பினரா? செயற்குழு உறுப்பினரா? அல்லது பொதுச்செயலாளரா? அவருக்கு மட்டும் என்ன அவ்வளவு முக்கியத்துவம் மேடையில்? கட்சி கட்சி என்று கட்சிக்காகவே குடும்பத்தை அழித்துக்கொண்ட கடைசித்தொண்டனின் மனைவியை (துணைவியைக் கூட அல்ல) இதேமாதிரி அரங்கிற்குள் அனுமதிப்பீர்களா தலைவரே?

திஹார் ஜெயிலுக்குப் போனவங்களைப்ப்த்தி தினமும் நெனச்சு நெனச்சு வேதனைப்படறீங்களே….. இதேமாதிரி, உங்களுக்காகத் தீக்குளிச்சுச் செத்துப்போனவங்களைப்ப்த்தி என்னைக்காவது நெனச்சு வேதனைப்பட்டு இருக்கீங்களா தலைவரே?…… கனிக்கு ஒரு நியாயம், கட்சித் தொண்டனுக்கு ஒரு நியாயமா? இதுதான் எங்களோட பணிவான கேள்வி.

இன்னும் விடை தெரியாத சில கேள்விகள் எங்களைத் தின்றுகொண்டுதான் இருக்கின்றன….

தி.மு.க.வை கனிமொழி கழகம், அழகிரி கழகம், ஸ்டாலின் கழகம், மாறன் கழகம் என்று பிரித்து, இன்று கனிமொழி கலகம், மாறன் கலகம், அழகிரி கலகம், ஸ்டாலின் கலகம் என்கின்ற நிலைக்கு ஆளாக்கியது ஏன்?

உடன்பிறப்பே என்று நீ அழைக்கிற பொழுதெல்லாம் உயிரை விடக்கூடத் தயங்காத ஒரிஜினல் தொண்டர்களை எல்லாம் ஓரங்கட்டி வைத்துவிட்டு…. உன் புகழ்பாடிகளை, அடிவருடிகளை மட்டும் அருகே வைத்துக்கொண்டு ஐந்தாண்டுகாலம் ஆட்சி செய்ய எப்படி உனக்கு மனசு வந்தது?

எப்படிப்பட்ட திராவிட இயக்கத் தலைவர்கள் எல்லாம் கொள்கை முழக்கமிட்ட மேடையில்… கேவலம், ஓட்டுக்காக வடிவேல் குஷ்பூ போன்ற வரலாறு தெரியாத கோமாளிகளை எல்லாம் உங்களுக்கு நிகராக அமர்த்தி வைத்து அழகுபார்த்தீர்களே…. மனசு உறுத்தவில்லையா?

நிவாகத் திறமைக்கு உங்களுக்கு நிகர் யாருமில்லை என்று பேசிய காலமெல்லாம் போய்….. இது போல ஒரு மோசமான நிர்வாகத்தை எவராலும் நடத்த முடியாது என்கிற அளவிற்கு மாணவர் முதல் தாய்மார் வரை, இளைஞர் முதல் முதியவர் வரை, தொழிலாளி முதல் முதலாளி வரை மண்ணள்ளித் தூற்றும் வகையிலே ஓரு மண்னாங்கட்டி அரசாங்கம் நடத்தியது நீங்கள்தானா?

இப்படி ஆயிரமாயிரம் கேள்விகள்…… கேட்க மனசு துடிக்கிறது. கேட்டு மட்டும் என்ன ஆகப்போகிறது?

கம்பீரத்தை இழந்து விட்ட்து கறுப்பு சிவப்பு என்று மட்டும்தான் கண்ணீருடன் சொல்லத் தோன்றுகிறது.