ஜிங்குன மணி….

‘ஜிங்குன மணி ஜிங்குன மணி
சிரிச்சுப்புட்டா நெஞ்சுல ஆணி…..!”

குடியரசு தின விழா மேடையில
குமுறி எடுக்கிறாங்க இங்க.

இந்தப் பாட்டுக்கு என்ன அர்த்தம் அங்கிள்னு
எதிர் வீட்டுப் பாப்பா கேட்குது.

என்னன்னு சொல்ல?

மேலே இருப்பவனே, மெய்ப்பொருளே….
மெல்லத் தமிழைக் காப்பாற்று!

L

வேணாம் வேனாம்….

குடியரசு தினத்தையும் சுதந்திர தினத்தையும்
ஒரே நாள்ல வச்சிருக்கலாம்….
நமக்கும் குழப்பமில்லாமல் போயிருக்கும்.

ஆனால்….

லீவ் நாள்ல ஒண்ணு குறைஞ்சிடுமேன்னு
நினைக்கிறப்போ….. வேணாம் வேனாம்
அது இரண்டாகவே இருந்துட்டுப் போகட்டும்னு
அடிமனசு அலறுது.

உள்ளங்கையில் அள்ளிவைத்த காதல்!

L

எண்ணிக்கொண்டிருக்கும் ரூபாய் நோட்டுக்களில்….
டவுன் பஸ்ஸின் சீட்டுக்குப் பின்புறங்களில்….
கழிவறையின் உட்புறச் சுவர்களில்….

‘ஐ லவ் யூ ‘ என்று யாரோ ஒரு பெண்ணுக்கு யாரோ ஒரு ஆண் கிறுக்கிய செய்தியைக் காண நேரிடுகிறது.

இந்த ஆதாம் ஏவாள்கள் யாராகவும் இருக்கலாம். ஆதி மனிதனில் ஆரம்பித்த அந்த சிலிர்ப்பு இன்று வரை அப்படியே ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு விதமாகத் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.

பார்வைக்கு மறு பார்வை எதிர் தரப்பில் பதிலாய்க் கிடைக்கிறபோது, மனதுக்குள் வானவில் தோன்றுகிறது. அவளது தலைமுடியொன்றைத் தனது விரல்களில் சுற்றி மோதிரம் எனப் பெருமைப்படுகிறான். அவளது பாதம்பட்ட மண்ணைக் கவனத்துடன் அள்ளித் தனது வழிபாட்டுக்குப் பாதுகாக்கிறான். இப்படிக் காதல் எல்லோரையும் தனது உள்ளங்கையில் அள்ளி வைத்துக் கொள்கிறது.

எதிர்த்தரப்பில் சம்மதம் கிடைக்காத போது எல்லாம் தொலைத்தவர்களாகச் சிதைந்து போகிறார்கள். நாட்கள் வலி கொண்டதாக நகருகின்றன. தன்னை உணர்த்தி விடவும், எதிர் மனதில் இடம் பிடித்து விடவும் என்னெனவோ வித்தைகள் அரங்கேறுகின்றன. போகிற இடங்களுக்கெல்லாம் போகிறார்கள். பார்க்கிற இடங்களிலெல்லாம் போய் நிற்கிறார்கள்.

பயமுறுத்தியோ, இரக்கத்தை உற்பத்தி செய்தோ, எப்படியாவது ஒரு பெண்ணை அடைய ஆண் வெறி பிடித்து நிற்கிறான். முடியாத நிலையில், தான் விரும்பிய பெண்ணின் மீது தாக்குதல் தொடுக்கவும், பலாத்காரம் செய்யவும் கூட சில சமயங்களில் துணிந்து விடுகிறான்.

காதலிக்கும்போது இருவரும் உள்ளங்களில் ஒன்றாய் ஏற்றி வைத்திருந்த அகல்விளக்கை அணைத்துவிட்டு, திருமணத்திற்குப் பிறகு ஆளுக்கொரு டார்ச்லைட்டைக் கையில் வைத்துக் கொள்கிறார்கள்.

இதையெல்லாம் தாண்டி…. ஒரு சில காதல், ஒரு சில காதலர்களே…. காலத்தையும் வாழ்க்கையையும் வென்றிருக்கிறார்கள்.

அவர்களுக்கு- நமது அட்வான்ஸ் காதலர் தின நல்வாழ்த்துக்கள்!

அண்ணல் காந்தியும்- அந்த 55 கோடியும்!

mg-1

காந்தியைக் கொன்றது யார்? நாதுராம் கோட்சே.

ஏழாம் வகுப்பு வரலாறில் படித்தது. அதுவும் கூட ஒரு மார்க் கேள்வியில் வரும் என்று ஆசிரியர் சொன்னதற்காக.

யார் இந்தக் கோட்சே? காந்தியைக் கொல்ல வேண்டும் என்று அதிகாரத் திமிரில் இருந்த பிரிட்டிஷ் அரசாங்கமே ஆசைப்படாத போது- கோட்சே மட்டும் எதற்காகக் கொல்லத் துணிந்தார்? அப்படியென்ன அவருக்குக் காந்தி மேல் கோபம்? தனியாளாகத்தான் முயற்சித்தாரா? கூட்டுச் சதியா? அப்படி என்னதான் நடந்தது அந்தக் காலகட்டத்தில்?

இதற்கெல்லாம் விடை சொல்கிறது- திரு.என்.சொக்கன் அவர்களின் மகாத்மா காந்தி கொலை வழக்கு என்கிற புத்தகம்.

காந்தி கொலைக்கு முக்கியக் காரணமாக இன்றும் பலர் சொல்வது “55 கோடி”. அதென்ன 55 கோடி?

இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் தனி நாடாகப் பிரிந்த பின்னர், புதிய நாட்டின் கட்டமைப்புக்கு என்று 75 கோடி தருவதாக ஒப்பந்தம் ஏற்பட்டது.. இதில் முதல் தவணையாக 20 கோடி பாகிஸ்தானுக்குத் தரப்பட்டுவிட்டது..

அப்போது காஷ்மீரை ஹரி சிங் என்ற அரசர் ஆண்டு வந்தார். காஷ்மீரில் வசிப்பவர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம் இனத்தவர். ஆனால் ஆள்பவரோ இந்து அரசர். எனவே இந்தியாவும், பாகிஸ்தானும் காஷ்மீரைச் சொந்தம் கொண்டாட ஆரம்பித்தன. பின் வழியாக வந்து தாக்குவதைக் கார்கிலுக்கு முன்பு அப்போதே பாகிஸ்தான் ஆரம்பித்திருக்கிறது.

அலறியடித்துக்கொண்டு இந்தியாவிடம் உதவி கேட்டிருக்கிறார் காஷ்மீர் அரசர். கிடைத்த வாய்ப்பை இந்தியாவும் நழுவ விடவில்லை.
இதற்கிடையில், பாகிஸ்தான் ஆட்சியாளர்களோ, எங்களுக்கும் தாக்குதலுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று இப்போது கூறுகிற பதிலையே அப்போதும் சொல்லிவிட்டு- எங்களுக்கு வரவேண்டிய மீதி 55 கோடியை அனுப்புங்கள் என்று இந்திய அரசிடம் கேட்டிருக்கிறார்கள்.

இவர்கள் இப்போதே இப்படியிருக்கிறார்கள், இன்னும் 55 கோடியையும் கொடுத்துவிட்டால் என்னவெல்லாம் செய்வார்களோ என்றெண்ணிய இந்திய அரசு அதை அப்படியே நிறுத்திவைத்தது.

போதாத காலம், இதே சமயத்தில்தான், இந்து முஸ்லிம் கலவரம் டெல்லியில் பற்றி எரிய ஆரம்பித்தது.. இரு மதத்தினரும் ஒற்றுமையாக இருக்க வேண்டி காந்தி ஜனவரி 13, 1948 காலை 11:55க்கு உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்.. பதறிப் போன இந்திய அரசு, தனது கேபினட் கூட்டத்தை காந்தி உண்ணாவிரதமிருந்த பிர்லா இல்லத்திலேயே கூட்டியது..

காந்தி நேரடியாகக் கேட்கவில்லை. என்றாலுல், அவரைத் திருப்திபடுத்தும் விதமாக, கேபினட் கூட்டம் செய்த முதல் முடிவு, பாகிஸ்தானுக்கு 55 கோடி கொடுத்துவிடலாம் என்பது.

இதுதான் தீவிர ஹிந்துத்துவாவான கோட்சேவை மிகுந்த கோபமடையச் செய்திருக்கிறது. காந்தி முஸ்லிம்களுக்கு ஆதரவாகத்தான் பேசுகிறார். ஹிந்துக்களை பற்றி அவருக்குக் கவலையில்லை. அவர் செத்தொழிந்தால்தான் இந்தியாவுக்கு நிம்மதி. அப்போதுதான் இந்தியா தன் வளர்ச்சியைப் பற்றி யோசிக்க முடியும். இனியும் பொறுத்துப் போக முடியாது என்று, ஜனவரி 20, 1948. ஐ காலண்டரில் வட்டமிட்டு நாள் குறித்தார்.

கொலைத் திட்டத்தை நிறைவேற்ற மொத்தம் ஏழு பேர்…..
நாராயண் ஆப்தே, நாதுராம் கோட்ஸே, விஷ்ணு கார்கரே, மதன்லால் பாஹ்வா, கோபால் கோட்ஸே (நாதுராம் கோட்ஸேவின் தம்பி), திகம்பர் பாட்ஜே, மற்றும் ஷங்கர் கிஸ்தைய்யா.

ஜனவரி 20, 1948 அன்று ஆப்தேவும், கோட்சேவும் பிர்லா இல்லத்துக்கு மற்றவர்களோடு சென்றார்களே தவிர, காந்தியைக் கொலை செய்ய நேரடியாக முயற்சிக்கவில்லை.

பிரார்த்தனை மைதானத்திற்குச் சற்றுத் தொலைவில் மதன்லால் ஒரு வெடிகுண்டை வெடிக்கவைப்பார். கூட்டம் சிதறி ஓடும். காவலர்கள் கவனம் சிதறும். இந்தச் சமயத்தில் திகம்பர் பாட்ஜே காந்தியை அருகிலிருந்த வீட்டு ஜன்னலில் இருந்து சுடவேண்டும். சரியாகப் போட்ட பிளானில் கடைசியில் சொதப்பியது திகம்பர் பாட்ஜே. குண்டு வெடித்தபின் அவர் காந்தியைச் சுடவில்லை. ஆப்தே – கோட்ஸே குழுவினருக்கு இது பேரிடி! போதாதற்கு மதன்லால் போலீஸிடம் மாட்டிக்கொண்டார்.

இந்தத் தோல்வியை ஆப்தே மற்றும் கோட்சேவால் தாங்க முடியவில்லை. இனி மற்றவர்களை நம்பிப் பிரயோசனமில்லை, நேரடியாக நாமே களத்தில் இறங்க வேண்டியதுதான் என்று முடிவெடுத்தார் கோட்சே.

விளைவு – ஜனவரி 30, 1948 !

இதில் கொடுமை என்னவென்றால்- ஜனவரி 20 லிருந்து 30 வரை வழக்கம்போலவே காவல்துறையின் நடவடிக்கை படு மெத்தனமாக இருந்திருக்கிறது. மதன்லாலைத் தவிர வேறு யாரும் கைது செய்யப்படவில்லை என்பதுதான்.

mg-2

மனிதா, கொஞ்சம் மாறக் கற்றுக்கொள் !

ele

யானைகளுக்குக் கற்பு உண்டா? என்பது குறித்து ஒரு சுவராசியமான செய்தியைப் படிக்க நேர்ந்தது. 

அது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுத்தது.

யானைகள் ஆயுசு முழுவதும் பரிசுத்தமாக இணைபிரியாமல் வாழக்கூடியவை. அதிகபட்சம் 50 அங்கத்தினர்களைக் கொண்ட குடும்பமாக, கடுமையான சட்டதிட்டங்களோடு, கூட்டு வாழக்கையில் காலம் தள்ளும் பழக்கம் கொண்டவை.

கற்பு விஷயத்தில் யானைகள் மிகவும் கண்டிப்பானவை. எதிர்பாராத காரணங்களால் விதவையாகிப் போன பெண் யானைகளுக்கு மட்டுமே, சில நேரங்களில் செக்ஸ் இடையூறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளுண்டு.

ஆனாலும், கைம்பெண் யானைகள் கணவனை இழந்தபிறகு- காலம் முழுவதும் சாகும் வரையிலும்- பிற யானைகளுடன் செக்ஸ் வைத்துக்கொள்ள விரும்புவதில்லை.

கொழுப்பெடுத்து அலையும் சில வாலிப யானைகள், விதவை யானைகளுக்கு சிக்னலை வீசிப்பார்க்க முயற்சிப்பதுண்டு. இந்த மேட்டர் வெளியே தெரிந்தால், கூட்டத்தில் இருக்கும் பெரிசுகள் ஒன்று சேர்ந்து கலாட்டா செய்து பஞ்சாயத்தைக் கூட்டி, குறும்பு செய்த யானையை தங்களது கூட்டத்திலிருந்து விலக்கி வைத்துவிடும்.

ஒருவேளை, அந்த காமுக வாலிப யானை அசகாய சூரனாக இருந்து முயற்சியில் வெற்றி பெற்று விட்டால்…. பிறகு பெரிய பிரளயம்தான்.
ஒட்டுமொத்தக் குடும்பமும் ஒன்று சேர்ந்து ஒரேயடியாகக் களத்தில் குதிக்கும். போர்க்கால அடிப்படியில் செயல்பட்டு, அந்தப் பொறுக்கி யானையைக் காட்டின் மறு எல்லைவரை துரத்திக் கொண்டுபோய் விட்டுவிட்டு வந்துதான் மறுவேலை.

மனிதா…. யானையைப் படி. ஒழுக்கம் கற்றுக்கொள்.