அறிவாலயத்துக்கு அப்துல்கலாம்…. மாவட்டச்செயலாளராக மகாத்மாகாந்தி ?

எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போதுதான் தன் அரசியல் வாழ்வின் மிகக் கடினமான காலகட்டத்தைத் தி.மு.க கடந்துகொண்டிருக்கிறது.

எரிமலை சூறாவளி எமர்ஜென்சி அடக்குமுறை என எதற்குமே துவண்டுவிடாமல் இரும்ப்புக் கோட்டையாக இருந்த கழகம்…. இப்போது இலவம் ப்ஞ்சாகக் காற்றிலே அல்லாடிக் கொண்டிருக்கிறது.

கட்சி ஆரம்பித்த காலத்திலிருந்து இதுநாள் வரை– எந்தச் சூழ்நிலையிலும் கரை போட்ட வேட்டி கட்டத் தயங்காத தொண்டர்கள்கூட,  இப்போது கட்டி நடப்பதற்குக் கூனிக் குறுகக்கூடிய அவலநிலை ஏற்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் தி.மு.க.,வின் படுதோல்விக்கு விலைவாசி உயர்வு, மின் வெட்டு என பலவிதமான காரணங்கள் கூறப்பட்டாலும், அதற்கு மேல் முக்கியக் காரணமாக இருப்பது, கட்சியின் முக்கிய தலைவர்கள், அமைச்சர் பொறுப்பில் இருந்தவர்கள், மாவட்டச் செயலாளர்கள் முதல் ஒன்றிய செயலாளர்கள் வரை போட்ட ஆட்டம், நடத்திய கூத்து, செய்த சட்ட விரோத செயல்பாடுகள், அடித்த கொள்ளை, அதிகார துஷ்பிரயோகம் ஆகியவைதான்.

அதனால்தான்…. மீண்டும் கட்சி உருப்பட வேண்டும், உயிர்த்தெழ வேண்டும் என்றால், குறுநில மன்னர்களைப் போல் பாவித்து, சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு, தி.மு.க.,வுக்கு அவப்பெயரை ஏற்படுத்திய மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், அமைச்சர்களாக இருந்தவர்கள் என முக்கியத் தலைவர்கள் ஓரங்கட்டப்பட வேண்டும். .

அவர்கள் மன்னர்களாக இருந்து மக்களுக்கு நல்லது செய்திருந்தால் எல்லோரும் வரவேற்றிருப்பர். ஆனால் அவர்கள், உண்மையான கட்சித் தொண்டர்களை அவமதித்தனர். தங்களது உறவினர்களையும், தங்களின் சட்டவிரோத செயல்களுக்கு புகலிடம் தேடி நெருங்கி வந்தவர்களையும் வளர்த்து விட்டனர். சில குறிப்பிட்ட அமைச்சர்கள், தங்கள் மாவட்டத்தில் கோடி ரூபாய்க்கு மேல் சொத்து வாங்குபவர்களிடம், “குறிப்பிட்ட தொகையை கொடுத்தால் மட்டுமே, பத்திரப்பதிவு செய்ய முடியும்’ என்று மிரட்டி வசூல் வேட்டையில் ஈடுபட்டனர். முக்கிய இடங்களில் உள்ள மதிப்புமிக்க சொத்துக்களையும், குறைந்த விலையில் தங்களுக்கு விற்கக் கோரி, சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களை மிரட்டினர். இதெல்லாம், தி.மு.க. வின் மீது மக்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

அரசு அலுவலகங்களில் புகுந்து, அனைத்துப் பணிகளிலும் தலையிட்டனர். எதிர்ப்பு தெரிவித்த அரசு அதிகாரிகளை மிரட்டி, அமைச்சர்கள் மூலம் இடம் மாற்றினர். பார்லிமென்ட் தேர்தலைப் போல, பணம் கொடுத்து மக்களை விலைக்கு வாங்கிவிட முடியும் என்று நினைத்தது தி.மு.க.செய்த மிகப்பெரிய தவறு. தற்போது, அ.தி.மு.க., கூட்டணி பெற்றுள்ள ஓட்டுக்கள் அனைத்தும், ஜெயலலிதாவுக்காக விழுந்த ஓட்டுக்கள் அல்ல… தி.மு.க.,வுக்கு எதிரான ஓட்டுக்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

கட்சிக் கொடி கட்டிக்கொண்டு ஒன்றிய செயலாளர் கார் ஊருக்குள்ளே வருகிறதே என்று ஓடிப்போய்ப் பார்த்தால்…… கட்சிக்காரனைப் புறந்தள்ளிவிட்டு, நிலபுரோக்கரைத் தேடிக்கொண்டிருப்பார். பிறகு எப்படி கட்சி உருப்படும்?

காலம் காலமாக கட்சிக்காரனாக இருந்தாலும், கட்சிக்காக ஜெயிலுக்குப் போயிருந்தாலும், கட்சிக்காக உயிரையே விட்டிருந்தாலும்– காசு வாங்கிக்கொண்டுதான் வேலை செய்து கொடுத்தான். காசு வாங்கிக்கொண்டுதான் வேலை போட்டுக் கொடுத்தான். அப்புறம் என்ன வெங்காயத்துக்குக் கட்சி?

கட்சி அமைப்பை மாற்றி அமைப்பதால் மட்டும் எல்லாம் மாறிவிடாது. கண்டிப்பாக மாவட்ட அளவிலான நிர்வாக அமைப்பில் மாற்றம் தேவை. குறுநில மன்னர்களின் கொட்டம் அடக்கப்பட வேண்டும். அத்ற்காக– அண்ணா அறிவாலயத்துக்குப் பொறுப்பாளராக அப்துல் கலாமையும், மாவட்டச் செயலாளர்களாக மகாத்மா காந்திகளையும் போட முடியாதுதான். கட்சியில் நீண்ட காலமாகக் கண்டு கொள்ளப்படாமல் இருக்கும் கடைசித்தொண்டனுக்கும் வாய்ப்பு அளிக்கலாமல்லவா?. பாராளுமன்றக்குழு, சட்டமன்றக்குழு, ஒன்றியக்குழு என்று மீண்டும் பழைய குத்துப்பார்ட்டிகளையே நியமித்து விடக்கூடாது.. .அதேசமயம், மாற்றம் என்கின்ற போர்வையில் பலிகொடுப்பதற்குப் புது ஆடுகளை தேடும் படலமாகவும் இது இருந்துவிடக்கூடாது.

சேலம்னா வீரபாண்டி ஆறுமுகம், வேலூர்னா துரைமுருகன், திருச்சினா நேரு, விழுப்புரம்னா பொன்முடி, திண்டுக்கல்னா ஐ.பெரியசாமி. இது இல்லாம பொங்கலூர் பழனிசாமி, கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன், வேலு, கருப்பசாமி பாண்டியன், பூங்கோதைன்னு எல்லாத்தையும் குத்தகைக்கு விட்டுட்டுக் கட்சி நடுத்துனா, கொடி பிடிச்சவனும் குழி பறிச்சவனும் எங்க போவான்? அதனால்தான், மெஜாரிட்டி ஆட்சி அமைத்த தி.மு.க மைனாரிட்டியானது. மைனாரிட்டியாக இருந்த திமுக எதிர்கட்சியாகக்கூட இல்லாமல் மூலையில் ஒடுங்கிவிட்டது. எப்படி காங்கிரஸ் கட்சி இந்த மாநிலத்தில் அழிந்து போனதோ அதே பாதையில் திமுகவும் சென்று கொண்டு இருக்கிறது என்பதை தலைமை உணர வேண்டும்.

தி.மு.க., தலைவர் கருணாநிதி, எதிர்கட்சித் தலைவராகக் கூடத் தன்னால் சட்டசபைக்குள் போகமுடியாத நிலைக்கு யார் காரணம் என்பதை அறியாதவரல்ல. அதற்குக் குறுநில மன்னர்கள் மட்டும் காரணமல்ல, தனது குடும்ப உறுப்பினர்களும் என்பதை உணரவேண்டும். உங்கள் தலைமையில் ஒரு அரசும், உங்கள் குடும்பத்தார் தலைமையில் இன்னொரு அரசும் நடந்ததை, நீங்கள் மீன்குஞ்சுக்குத் தீனி போடும்போதாவது நினைத்து வருத்தப்பட்டிருப்பீர்கள். இவை எல்லாவற்றையும் அடக்கியாக வேண்டும். இப்போது அந்த சக்தி உங்களுக்கு இருக்கிறதா தெரியவில்லை. இந்த மரணக்கிணறைத் தாண்ட இதைத்தவிர மாற்றுவழி ஏதும் தெரியவில்லை.

இதெல்லாம் முடியலேன்னா….   பேசாம குஷ்புவுக்கும், வடிவேலுக்கும் கொஞ்சநாளைக்குக் கட்சிய குத்தகைக்கு விட்டுடலாம்.