நாய் வாலும் நானும் ஒண்ணு….

சமீபகாலமாக, பெற்றொர் மாணவர் ஆசிரியர் என பெரும்பாலானவர்களின் காதுகளிலும் தானாகவே உள்ளே நுழைந்து வெளியே வந்து விழுந்து கொண்டிருக்கிற ஒரு வார்த்தை– சமச்சீர்கல்வி!

அசோகனிடமும் நம்பியாரிடமும் சிக்கிக்கொண்டு சரோஜாதேவி படுகிற அவஸ்தையைவிட , அதிகஅளவு அவஸ்தையைச் சமச்சீர்கல்வி பட்டுக்கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் கற்பழிக்கப்படுவத்ற்கு முன்பாகவே காப்பாற்றத் தாவிவருகிற எம்.ஜி.ஆர். மாதிரி– உயர்நீதிமன்ற உத்தரவும் வந்திருக்கிறது.

ஆட்சிக்கட்டில் ஏறியதிலிருந்து ஒவ்வொரு அடியையும் அளந்தும் கவனமாகவும் எடுத்துவைக்க முயற்சிக்கிற ஜெயலலிதா– இந்த விஷயத்தில் மட்டும் யாருடைய பேச்சைக்கேட்டு இப்படி சறுக்கி விழுந்து இடுப்பை ஒடித்துக்கொண்டார் என்று தெரியவில்லை.

ஆட்சி மாறிவிட்டது என்பதற்காக மட்டும் மாணவர்களின் எதிர்காலத்தின் மீது மண் அள்ளிப்போடும் போக்கு…… ஹிட்லரும் கூட நினைத்துப் பார்க்காத விஷயம். கொடுங்கோல் ஆட்சி முதல் மன்னராட்சி வரை யாராக இருந்தாலும், கல்வி முறைக்கென தனி மதிப்பு அளித்ததைத்தான் படித்திருக்கிறோம். இதுபோன்று கூத்து நடந்து கேள்விப்பட்டதில்லை.

கல்வி முறையில் குறைபாடுகள் இருப்பின், வரும் ஆண்டுகளில் அதனை மேம்படுத்தும் போக்குதான் இருக்க வேண்டுமே தவிர– கல்வியையே நிறுத்தி வைத்து மாணவர்களின் ஒவ்வொரு பொன்னான நாளையும் கெடுத்துக் குட்டிச்சுவராக்கி ரசிப்பது ஒரு நல்ல அரசுக்கு அழகல்ல. குழந்தைகளின் படிப்பில் கைவைத்து நடத்துகிற அரசியல்… மனித நாகரிகத்துக்கு அப்பாற்பட்டது.

பள்ளிக்கூடம் திறந்து இரண்டு மாதங்கள் ஆகியும்கூடப் பாடப் புத்தகங்கள் இல்லையென்றால்…. ஆசிரியர்கள்தான் எப்படிப் பாடம் நடத்துவார்கள்? என்ன பாடம் நடத்துவார்கள்? இன்னும் எத்தனை நாளைக்குத்தான் யோகா பற்றியும், பாம்பு பிடிப்பது பற்றியுமே சொல்லித்தருவார்கள்?

இந்தா அந்தான்னு ஜவ்வா இழுத்தடிச்சு கிட்டத்தட்டக் காலாண்டுத் தேர்வு நெருங்கும் சூழ்நிலையில் பச்சைக்கொடி காட்டி பைசல் ஆயிடுச்சேன்னு சந்தோஷப்பட்டா…. அடுத்த நிமிசமே இதை எதுத்து மேல் முறையீடு செய்யப்போறதாச் சொல்லிப் பெத்தவங்க வயித்துல நெருப்பை அள்ளிக் கொட்டிட்டாங்க.

ஒருவேளை — அரசுப் பள்ளிகள் ஆசிரியர்களே இல்லாமல் இயங்கும்பொழுது…. பாடப் புத்தகங்கள் இல்லாமல் இயங்குவது என்ன பெரிய விஷயமா என்றுகூட ஜெயலலிதா நினைத்திருக்கலாம். அல்லது– ஒன்றுமுதல் எட்டு வரை ஆல்பாஸ்,பெயிலில்லை என்பது மாதிரி, பத்து பதினொன்னு பனிரெண்டிலும் ஆல்பாஸ் பண்ணிவிட்டால் போகிறது என்றுகூட ஜெயா அம்மையார் திட்டதோடு இருக்கலாம். யார் கண்டது?

ஆனால் ஒரு விஷயத்தை அம்மையார் உணர்ந்துகொண்டால் நல்லது….

அ.தி.மு.க.அரசு சாதிப்பதற்கு எவ்வளவோ இருக்கிறது. இங்கு ரோடுகள் ஒழுங்காக இல்லை, மின்சார உற்பத்தி சரியாக இல்லை, விலைவாசி கட்டுக்குள் இல்லை, இப்படி எத்தனையோ இல்லைகள்… அதிலெல்லாம் கவனம் செலுத்தலாமே?

அதை விட்டுவிட்டு– கல்வியை வைத்துக் கண்ணாமூச்சி ஆட இது ஒன்றும் சின்னபசங்க விளையாட்டு அல்ல. இப்படியே ஐந்து வருடத்தில் பாதியைத் தேவையில்லாத விஷயங்களுக்குச் செலவிடுவதென நீங்கள் முடிவெடுத்துவிட்டால்…. மக்கள் ஏற்கனவே உங்களுக்குக் கொடுத்த அடியை மறுபடியும் கொடுக்க வழி செய்கிறீர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.

இந்த மாநிலம் அதிமுகவினருக்கும், திமுகவினருக்கும் மட்டும் சொந்தமானது அல்ல. உங்கள் இஷ்டத்திற்குக் கும்மியடித்துவிட்டுப் போவதற்கு. 1 கோடியே 20 லட்சம் பிஞ்சுக் குழந்தைகளின் இதயங்களைப் பிளந்து பார்க்கத் துடிக்கும் உங்களுக்கு இதயமே இல்லையா?

இதோடாவது நிறுத்திக் கொள்வீர்கள் என நினைத்தால், மீண்டும் மேல்முறையீடு செல்வதென நீங்கள் எடுத்த முடிவு… இன்னும் கூட உங்கள் ஆணவத்தின் அளவு குறையவில்லை என்பதன் அப்பட்டமான அடையாளம். உயர்நீதிமன்றத்தில் வாங்கிய அடியின் வலி குறைவதற்குள், உச்சநீதிமன்றமும் ஓங்கி அடித்திருக்கிறதே….. உங்களுக்குத் தேவைதானா இந்த அசிங்கம்?

இனி அடுத்து என்ன செய்யப்போகிறீர்கள்? ஐ.நா. சபைக்குப் போய் அப்பீலா? அல்லது இந்த “சமச்சீர்” என்கிற வார்த்தையே தப்பான கெட்ட வார்த்தை என்று கேஸ் போடப்போகிறீர்களா?

ஒகே பிள்ளைங்களா, இனிமேலாவது நீங்களெல்லாம் படிக்க உக்காருங்க….. அம்மா அவங்க பாட்டுக்கு என்னமோ செஞ்சுக்கிட்டு இருக்கட்டும் !