” ஃபாரின் போன செலவா? யூரின் போன செலவா?”


“யோவ் கணக்கு…. கெடு முடியறதுக்குள்ளே தேர்தல் செலவு கணக்கை ஒப்படைச்சிருங்கய்யா. ஏமாந்த தனமா இருந்து எம்.எல்.ஏ. பதவியப் புடுங்கிடப்போறான்.”

“ஆடிட்டர் கேட்ட அத்தனை விபரங்களூம் கொடுத்தாச்சு. இன்னைக்கு ரெடி பண்ணிடுவாருங்கய்யா.”

“மொத்தமா எவ்வளவுய்யா செலவாயிருக்கு?”

“அதெல்லாம் 12 ஐத் தாண்டிருச்சுங்கய்யா…”

“அதுதான் ஓட்டுக்குக் காசு வேணும்னு உரிமையோட கேக்கறானுவளே…. அப்புறம் 12 ஐத் தாண்டாம என்ன பண்ணும்?”

இதையெல்லாம் அங்கு உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருந்த எனக்குத் தலை சுற்றியதுதான் மிச்சம். 12 ஐத் தாண்டியாச்சு என்று அவர்கள் குறிப்பிடும் 12 என்பது- லட்சமா? கோடியா? இவர்களுக்கு மட்டும் பணம் என்ன மரத்திலிருந்தா காய்க்கிறது?

“அப்ப எல்லாம் எலகஷன் பண்னறதுன்னா, ஒரு நேர்மை இருந்துச்சு. ஓட்டுக்குக் காசு கிடையாது. ஆனா இப்போ? காசைக் கண்ணுல காட்டலேன்னா, கட்சிக்காரனே கொடியைக் கையிலே எடுக்க மாட்டேங்கிறான், அப்புறம் எப்படி பப்ளிக் ஓட்டுப்போடுவான்? இனிமேல் நிக்கறதுன்னா 12 கோடியே பத்தாது போல.”

எனக்கு வேர்த்து விறுவிறுத்தது. 12 கோடி செலவு செய்து எம்.எல்.ஏ. ஆகி…. பதவிக் காலத்துல பத்து மடங்காவது சேர்த்துச் சம்பாதிக்கலேன்னா என்ன பிரயோஜனம்? காசு வாங்கிக்கிட்டு ஓட்டுப்போட்டா, கான்டிராக்டுக்கு எம்.எல்.ஏ. கமிஷன் வாங்கறப்போ மூடிக்கிட்டுக் கம்முனுதான் வேடிக்கை பாக்கனும்.

செலவு பண்ணறது 12 கோடி. ஆனா தேர்தல் கமிஷனுக்குக் கணக்குக் காட்டறது வெறும் 3 அல்லது 4 லட்சம். தேர்தல் கமிஷன் விதிப்படி ஒரு சட்டமன்ற வேட்பாளர் ஒரு தொகுதிக்கு 16 லட்சம் வரை செலவு பண்ணலாமாம். இது தேர்தல் கமிஷனுக்கே ரொம்ப வேடிக்கையாத் தெரியலையா? பல்லுக் குச்சி வாங்கிக் கொடுக்கறதுக்கே 16 லட்சம் பத்தாதாம். இத வச்சுக்கிட்டு எங்க போயித் தேர்தல நடத்தறது? எம்.எல்.ஏ. ஆகறது? பஞ்சாயத்துத் தேர்தலுக்கு வைக்கிற லிமிட்டக் கொண்டுபோயிப் பாராளுமன்றத் தேர்தலுக்கு வச்சுக்கிட்டு? அப்புறம் பொய்க் கணக்கைத் தாக்கல் செய்யாமல் என்ன செய்வார்கள்?

ந்மது பெருந்தலைகள் தாக்கல் செய்திருக்கிற செலவுகணக்குகளைக் கொஞ்சம் சிரிக்காமல் பாருங்கள்.

ஸ்ரீரங்கத்தில் நின்ற முதல்வர் ஜெயலலிதா வெறும் 9..5 லட்சம் மட்டும் செலவு செய்துள்ளாராம்.

திருவாரூரில் நின்ற முன்னாள் முதல்வர் கருணாநிதி ரூ 4,47,615 ம்ட்டுமே செலவு செய்துள்ளாராம்.

கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட மு.க.ஸ்டாலின் வெறும் ரூ 3.32 லட்சம் மட்டுமே செலவு செய்துள்ளாராம். அவர் பொதுக்கூட்டங்களுக்காக ரூ 66,700-ம் கட்அவுட்டுகள், பேனர்கள், அலங்கார வளைவுகளுக்காக ரூ.980-ம் செலவு செய்துள்ளார். வெறும் 980-ரூபாயில் எப்படீங்கய்யா கட்அவுட்டுகள், பேனர்கள், அலங்கார வளைவுகள் வைக்க முடிந்தது? கொஞ்சம் எங்களுக்கும் சொல்லித் தாங்களேன் அந்த மந்திரத்தை.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் ரூ 7.97 லட்சமும், மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்த தங்கபாலு, ரூ 4.04 லட்சமும் செலவு செய்துள்ளார்களாம்.

நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரசாரத்தின்போது ரூ.5.48 லட்சம் செலவு செய்ததாகக் கணக்குக் காட்டியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், 7 லட்சத்து 60 ஆயிரத்து 967 ரூபாயும், அதே தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க., வேட்பாளர் விஜயலட்சுமி பழனிசாமி, 3.49 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளதாக தேர்தல் செலவு கணக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எந்த ஒரு வேட்பாளருமே தேர்தல் ஆணையம் அனுமதித்த அதிகபட்சத் தொகையைச் செலவழிக்கவில்லை என்பதுதான் வியக்கத்தக்க செய்தி. இந்தத் தேர்தல் ஆணையம் என்பதுகூட ஒரு சம்பிரதாயத்திற்காக மட்டுமே இருக்கிறதோ என்கிற சந்தேகம் வருகிரது. அப்பட்டமான பொய்க் கணக்கைத் தருகிறார்கள்….. இவையெல்லாம் அண்டப் புளுகு, “கோல்மால்’ கணக்கு என்று தெரிந்தும் அதை அப்படியே வாங்கி வைத்துகொள்ள ஒரு ஆணையமா? ” ஃபாரின் போய்ட்டு வந்த செலவக் காட்டுடான்னு சொன்னா…. யூரின் போய்ட்டு வந்த செலவக் காட்டுறானுவளே…”

( ஓட்டுக்கு ஐநூறு ஆயிரம்னு கொடுத்தீங்களே…. அதெல்லாம் எந்தக் கணக்குல வருமுங்க சார்? )

அதுசரி… ஆண்டவனாலேயே அடக்கமுடியாத அரசியல்வாதிகளை, ஆணையம் மட்டும் கட்டுப்படுத்திவிடும் என எதிபார்ப்பது நமது தறுதான்.