“ஜோக்கர் இல்லாமல் ரம்மி எப்படி ஆடறது?”

அரசியல் மேடையில் ஆளாளுக்கு நாடகத்தை அரங்கேற்ற ஆரம்பித்துவிட்டார்கள்.

தோற்றுப்போன கட்சியின் தொண்டர்கள் கூட்டம் துவண்டு போய்விடாமல் இருப்பதற்காக, அவ்வப்போது இப்படி வேஷம் கட்டுவது தவிர வேறு வழியில்லைதான். ஆனால், இந்தத் தடவை எல்லோருமே கொஞ்சம் ஓவர்.

“எதிர் வரும் உள்ளாட்சித் தேர்தல் உட்பட, இனி வரும் எல்லாத் தேர்தல்களிலும் பா.ம.க. தலைமையில் மாற்று அணி அமைத்துப் போட்டியிடுவோம்; திராவிடக் கட்சிகளுக்கு இனி இதில் இடமில்லை” என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியிருக்கிறார்.

சிரிப்பதற்காகச் சொன்னாரா? சீரியசாகச் சொன்னாரா?… என்பது தெரியவில்லை.

திடீரென இந்தத் திராவிடக் கட்சிகள் மீது ஏன் இப்படிக் கோபம்?
தேர்தல் முடிவுகள் ஒருவேளை மாறியிருந்து, பா.ம.க. இருந்த கூட்டணி வெற்றி பெற்றிருந்தால்…. இதுமாதிரியான முடிவை இப்போது அவர்கள் எடுத்திருக்க வாய்ப்பில்லை. அப்படி இருக்கும்போது இந்த வாக்குமூலத்தை எந்தக் கணக்கில் எடுத்துக் கொள்வது என்பது புரியவில்லை.

“காடு ஆறுமாசம் நாடு ஆறுமாசம்னு” சொல்ற மாதிரி, “வேட்டி ஆறுமாசம் சேலை ஆறுமாசம்னு” மாறிமாறிக் கூட்டணி போட்டுக் கொஞ்சிக்குலவிக் கிடந்தபோதெல்லாம் வராத ஞானோதயம்….. இப்போது மட்டும் எப்படி?

“‘வேட்டியக்கூட உருவிட்டாங்க, நல்லவேளை….. கோவணத்தை உருவரதுக்குள்ள ஓடி வந்துட்டேன்” என்று பதறியபடி கூட்டணிக் கூடாரத்துக்குள்ளிருந்து ஓடிவந்த போதெல்லாம் வராத ஞானோதயம்…… இப்போது மட்டும் எப்படி?

தி.மு.க. கூட்டணியில் முதல் ஆளாகச்சேர்ந்து முப்பது தொகுதிகளைப் பெற்றுப் போட்டியிட்ட பா.ம.க.வுக்கு, மூன்று தொகுதிகள் மட்டுமே கிடைத்திருக்கிறது. ஒருவேளை அதனால் வந்த ஞானோதயமாக இருக்கலாமோ?

இதுவாவது பரவாயில்லை. விடுதலைச் சிறுத்தைகள் திருமாவளவன் போட்ட போடுதான் இன்னும் மிரளவைக்கிறது.
“தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய கட்சிகளுடன் கூட்டணி சேராமல், மாற்று அணியை உருவாக்க வேண்டும் என்பது எங்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய யோசனை” என்று சொல்லியிருக்கிறார்.
10 மாதம் காத்திருத்தல் என்றால்கூட அதில் ஒரு அர்த்தம் இருக்கும். ஆனால், இப்படிப்பட்ட அருமையான யோசனையை அமுல்படுத்த எதற்காக 10 ஆண்டுகள் காத்திருந்தார் என்பதுதான் புரியவில்லை.

எதிர்பாராத ஒரு அதிபயங்கரமான தோல்வியைச் சந்திக்கும்பொழுது, அரசியல்வாதிகள் என்ன பாடு படுவார்கள் என்பதைச் சொல்லாமலே புரிந்துகொள்ளமுடிகிறது.

இவைகளையெல்லாம் தாண்டி– எனக்கு பா.ம.க.விடம் மிகவும் பிடித்த விஷயம்— அதன் கூட்டணிக் கோட்பாடுதான்.
அந்தக் கட்சி ஆரம்பித்த காலத்திலிருந்து இன்றுவரை— எந்த எந்தத் தேர்தலில், எப்ப எப்போ, யார் யாரோட கூட்டணிவசசுப் போட்டியிட்டுதுன்னு அவங்களாலேயே சொல்லமுடியாத அளவுக்கு….. அதோட கூட்டணி லிஸ்ட் மாறிமாறி வரும். அது தவறல்ல. அரசியலுக்கு அதுதான் சரியானதும்கூட.
கடந்த இரண்டு தேர்தல்களில் மட்டும்தான் அதன் கணக்குத் தப்பாகிவிட்டது. அதுவரையிலும் வெற்றி வாய்ப்புகளை சரியாகவே கணக்கிட்டு அறுவடை செய்திருக்கிறது.

கூட்டணி குறித்து பா.ம.க.வைக் குறை கூறுகிறவர்கள், ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டும். இதுபோல மட்டும் கூட்டணி மாறாமல் பா.ம.க. செயல்பட்டிருக்குமானால்…. இன்னொரு ம.தி.மு.க. வாகவே இதுவும் இருந்திருக்கும்.

அரசியல் என்பது ஒன்றும் புத்தர்களின் புகலிடமல்ல. அது என்ன என்பது சமீபத்திய நிகழ்வுகளிலேயே தெளிவாகப் புரிந்திருக்கும். அந்தச் சாக்கடையில் போய் நின்றுகொண்டு கூட்டணி தர்மம் பற்றிப்பேசுவது அறிவுபூர்வமானதல்ல.

இந்நிலையில், மருத்துவர் ராமதாசு அய்யாவும் சிறுத்தை திருமாவளவனும் எடுத்திருக்கிற முடிவு– பாராட்டுக்குரிய ஒன்றுதான். ஆனால், எத்தனை நாட்களுக்கு இதில் இவர்கள் உறுதியாக இருப்பார்கள் என்பதுதான் கேள்விக்குறி.

“மார்கழி மாசம் மாடு, நாய் எல்லாம் ஒரு மார்க்கமாகவே இருக்கும்…….  மார்கழிக்கு அப்புறம் நார்மல் ஆகிடும்”  என்கிற கதையாக இதுவும் ஆகிவிடக்கூடாது.