“ஸ்பெக்ட்ரம் – விழுந்தது இன்னொரு விக்கெட்”

“ஸ்பெக்ட்ரம்” விவகாரத்தில் மீண்டும் ஒரு விக்கெட் விழுந்திருக்கிறது.

இந்திய அரசியல் வரலாற்றில் முதல் முறையாக ஒரே கட்சியை சேர்ந்த இரண்டு மத்திய அமைச்சர்கள், ஒரே ஊழல் வழக்கிற்காகப் பதவி விலகிச் சாதனை
படைத்திருக்கிறார்கள். அதிலும் தயாநிதிமாறன்- குடும்பத்தகராறுக்காக ஒரு முறையும், ஊழல் குற்றச்சாட்டுக்காக ஒரு முறையும் என இரு முறை பதவி விலகி எக்ஸ்ட்ரா சாதனை புரிந்திருக்கிறார்.

முதல் முறையாக நாடாளுமன்ற எம்.பி-யானபோதே, மத்திய அரசின் கேபினெட் அமைச்சராகி… அதுவும் முக்கியத்துவம் வாய்ந்த தகவல் தொழில்நுட்பம், தொலை தொடர்புத்துறை போன்ற பொறுப்புகளைப் பெற்றுப் பேர் வாங்கியவர் தயாநிதிமாறன். அவரது அப்போதைய வேகமும் சுறுசுறுப்பும் செயல்பாடுகளும் அனைவரையும் வியக்கவைத்து அவர் மேல் ஓர் ஈர்ப்பை ஏற்படுத்தின. ஆனால் இப்போது 2ஜி ஸ்பெக்ட்ரம் என்கிற சாக்கடையில் இவருமா குளித்து விளையாடினார் என்பதை நினைக்கிறபோது, மனசுக்குள் கம்பளி பூச்சி ஊர்வது போல ஓர் உணர்வு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.

என்னதான் நடந்தது? இவர்களெல்லாம் ஏன் இப்படிச் செய்தார்கள்? இவர்களுக்கு என்ன இல்லாமல் கிடக்கிறது? ஊரு உலகம் பூரா வளைச்சுப் போட்டு மட்டும் இவர்கள் என்னத்தைத் தலையில கட்டிட்டுப் போகப் போகிறார்கள்?

சாவத்ற்கு முன்பாக அலெக்சாண்டர் சொன்னாராம் “நான் இறந்த பிறகு என்னுடைய இரண்டு கைகளையும் சவப்பெட்டிக்கு வெளியே தெரியும்படியாக அடக்கம் செய்யுங்கள். ஏனெனில்- உலகம் முழுதும் ஜெயித்த நான், போகும்பொழுது , ஒரு பிடி மண்ணைக் கூட எடுத்துச் செல்லவில்லை என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்!.”

இந்தக் கருமத்தை எல்லாம் செய்யத்தானா- அடம்பிடித்து இதே துறைதான் வேண்டும் என்று நீராராடியாவிடம் விடாப்பிடியாய்ப் போராடிப் பெற்றீர்கள்? பெற்றுவிட்டு இன்றைக்கு.பேரன்…மகள்..மனைவி..துணைவி..ம்ந்திரி….என்று அத்தனை பேரும் ஒருவர் பின் ஒருவராக திகாருக்கு நடையைக் கட்டுகிறார்கள்.


இவர்கள் பதவியில் இருக்கும் போது– பவிசான பயணம், பாதுகாப்பு, காரு பங்களான்னு…. மக்களின் பணம் வீணாப்போவுது. பதவிபோய் கோர்ட்டுக்கு வந்த பின்பு விசாரணை, வாய்தா, சிறையில் சொகுசு என்றபெயரில் ம்றுபடியும் மக்கள் பணம் வீண்.. மொத்தத்தில் தண்டனை மக்களுக்குத்தானே தவிர, ஊழல் செய்தவர்களுக்கு அல்ல.

சிலர் சொல்லுகிறார்கள் படித்தவர்கள் அரசியலுக்குவரவேண்டும் என்று. கனிமொழி, தயாநிதி, ராசா, மன்மோகன் சிங், சிதம்பரம்….. இந்தக் கேசுகளெல்லாம் படிச்சதுகதானே? இதைத்தவிர என்னத்தைக் கிழித்துவிட்டார்கள்? சமூக அக்கறை உள்ள நல்லவர்கள் மட்டும் அரசியலுக்கு வந்தால் கொஞ்சம் உருப்படும்.

முத்லமைச்சராக இருந்தும்கூட– கடைசி காலத்தில் ரெண்டு கதர் வேட்டியும், கைச்செலவுக்கென கொஞ்சம் பணமும் வைத்திருந்த பெருந்தலைவர் காமராஜர்….. அமைச்சராகப் பதவிவகித்தும்கூட– நோய்வாய்ப்பட்ட கடைசி காலத்தில் கவர்மெண்ட்டு ஆஸ்பத்திரியில் படுத்துக்கிடந்த கக்கன்….. “தமிழ்நாடு” பெயர் மாற்றக்கோரி சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்த தியாகி சங்கரலிங்கனார்…. நினைத்தாலே இனிக்கிறது.

என்ன காலக்கொடுமை? அரசியல்வாதிகள் எப்படி இருந்திருக்க வேண்டும் என்பதற்குக் காங்கிரசுக் காரர்களையும்… எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு தி.மு.க. காரர்களையும் உதாரணம் காட்டும் அளவுக்குத் தி.மு.க. போய்விட்டதே என்பதை உணர வேண்டியவர்கள் உணர்ந்தால் சரி.

“பணம் மனிதனைத் தின்னுடும்னு” ரஜினி சொன்னப்ப அதுக்குப் பொருள் தெரியலே. ஆனா இப்பப் புரியுது!