உள்ளங்கையில் அள்ளிவைத்த காதல்!

L

எண்ணிக்கொண்டிருக்கும் ரூபாய் நோட்டுக்களில்….
டவுன் பஸ்ஸின் சீட்டுக்குப் பின்புறங்களில்….
கழிவறையின் உட்புறச் சுவர்களில்….

‘ஐ லவ் யூ ‘ என்று யாரோ ஒரு பெண்ணுக்கு யாரோ ஒரு ஆண் கிறுக்கிய செய்தியைக் காண நேரிடுகிறது.

இந்த ஆதாம் ஏவாள்கள் யாராகவும் இருக்கலாம். ஆதி மனிதனில் ஆரம்பித்த அந்த சிலிர்ப்பு இன்று வரை அப்படியே ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு விதமாகத் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.

பார்வைக்கு மறு பார்வை எதிர் தரப்பில் பதிலாய்க் கிடைக்கிறபோது, மனதுக்குள் வானவில் தோன்றுகிறது. அவளது தலைமுடியொன்றைத் தனது விரல்களில் சுற்றி மோதிரம் எனப் பெருமைப்படுகிறான். அவளது பாதம்பட்ட மண்ணைக் கவனத்துடன் அள்ளித் தனது வழிபாட்டுக்குப் பாதுகாக்கிறான். இப்படிக் காதல் எல்லோரையும் தனது உள்ளங்கையில் அள்ளி வைத்துக் கொள்கிறது.

எதிர்த்தரப்பில் சம்மதம் கிடைக்காத போது எல்லாம் தொலைத்தவர்களாகச் சிதைந்து போகிறார்கள். நாட்கள் வலி கொண்டதாக நகருகின்றன. தன்னை உணர்த்தி விடவும், எதிர் மனதில் இடம் பிடித்து விடவும் என்னெனவோ வித்தைகள் அரங்கேறுகின்றன. போகிற இடங்களுக்கெல்லாம் போகிறார்கள். பார்க்கிற இடங்களிலெல்லாம் போய் நிற்கிறார்கள்.

பயமுறுத்தியோ, இரக்கத்தை உற்பத்தி செய்தோ, எப்படியாவது ஒரு பெண்ணை அடைய ஆண் வெறி பிடித்து நிற்கிறான். முடியாத நிலையில், தான் விரும்பிய பெண்ணின் மீது தாக்குதல் தொடுக்கவும், பலாத்காரம் செய்யவும் கூட சில சமயங்களில் துணிந்து விடுகிறான்.

காதலிக்கும்போது இருவரும் உள்ளங்களில் ஒன்றாய் ஏற்றி வைத்திருந்த அகல்விளக்கை அணைத்துவிட்டு, திருமணத்திற்குப் பிறகு ஆளுக்கொரு டார்ச்லைட்டைக் கையில் வைத்துக் கொள்கிறார்கள்.

இதையெல்லாம் தாண்டி…. ஒரு சில காதல், ஒரு சில காதலர்களே…. காலத்தையும் வாழ்க்கையையும் வென்றிருக்கிறார்கள்.

அவர்களுக்கு- நமது அட்வான்ஸ் காதலர் தின நல்வாழ்த்துக்கள்!