“பிராந்திக் கடையும்… பிராத்தல் செண்டரும்”

ஒரு குடிமகனின் அடிப்படை உரிமைகளை அவனுக்கு ஒழுங்காகக் கிடைக்கச்செய்வதுதான்– சிறந்த அரசாங்கத்தின் நல்ல செயல்பாட்டுக்கு அடையாளம்.

ஆனால், இங்கு அரசாங்கங்கள் அப்படி இருப்பதில்லை.

கள்ளையும் சாராயத்தையும் விற்பதற்குக் கவர்ன்மெண்ட் ஆசைப்பட்டதால்….. கல்வியை விற்பதற்கான உரிமையை– தனியாருக்குத் தாரை வார்த்துக் கொடுக்க வேண்டியதாகிவிட்டது.

பள்ளிக்கூடங்கள் எப்படி இருந்தாலும் பரவாயில்லை. ஒழுகினாலும் சரி, உடைந்தே விழுந்தாலும் சரி, மரத்தடியில் நடந்தாலும் சரி, மழையில் நனைந்தாலும் சரி, அதுபற்றிக் கவலையில்லை. “பார்கள்” மட்டும் நல்லபடியாகப் பராமரிக்கப்பட வேண்டும். குடிமகன்கள் மேல்தான் அரசாங்கத்துக்கு என்ன ஒரு அக்கறை?

அதற்காக- அரசாங்கத்தை மட்டும் குறைகூறிப் பயனில்லை.

1983-ம் ஆண்டு வெறும் 183 கோடியாக இருந்த “டாஸ்மாக்” விற்பனை, இன்றைக்கு ஏறத்தாழ 15 ஆயிரம் கோடியைத் தாண்டிக்கொண்டு இருக்கிறது. அந்த அளவிற்கு மக்கள் அமோகமாகக் குடித்துக் குடித்து ஆதரவு தருகிறார்கள். அந்த வருமானத்தை நம்பித்தான் அரசாங்கமே குடும்பம் நடத்துகிறது. அதை வைத்துத்தான் எல்லா இலவசங்களையும் சமாளித்தாக வேண்டிய கட்டாயம் வேறு.

ஆனால், ஏறிக்கொண்டிருக்கிற கடன் சுமை ஒருபுறம் அழுத்த, இலவசச் செலவினம் இன்னொருபுறம் அழுத்த…. எத்தனை நாட்களுக்குத்தான் இந்த வருமானம் தாக்குப்பிடிக்கும்?

“நாட்டு மக்கள் எக்கேடு கெட்டால் என்ன? நமக்குத்தேவை கல்லாப்பெட்டி நிரம்பி வழியனும்” என்பதுதான் அரசாங்கத்தின் பிடிமானம் என்றால்…. “பிராந்திக்கடை” மட்டும் அல்ல…. பேசாமல் “பிராத்தல் செண்டரையும்” அரசாங்கமே நடத்த ஆரம்பித்து விடலாமே…..

அப்புறம் என்ன? வருமானத்திலும் நம்மை அடிச்சுக்க இந்தியாவிலேயே ஆளிருக்காது. வாக்களித்த மக்களுக்கும் கேட்டதெல்லாம் இலவசமாக வாங்கித்தரலாம். யாராவது கேள்வி கேட்டாலும், “பம்பாயில் இல்லையா? கல்கத்தாவில் இல்லையா?” என்று பதிலும் சொல்லி சமாளித்துவிடலாம். அதற்காக மக்கள் யாரும் வருத்தப்பட்டுக் கொள்ளப் போவதுமில்லை.

எங்கள் இளைஞர்களுக்கோ– கிரிக்கெட் டிக்கெட் வாங்க கியூவில் நிற்பதற்கும், புதுப்படங்கள் ரிலீஸ் ஆகும்போது பூஜை போடுவதற்கும், குஷ்புவுக்குக் கோயில் கட்டவும் . திரிஷாவுக்குப் போஸ்டர் ஒட்டவுமே நேரம் போதுமானதாக இல்லை. அவ்வப்போது அரசியல் காமெடிகளில் வேறு கலந்துகொள்ள வேண்டும்….

இப்படி எல்லோருமே திசைமாறிப் பயணிக்கிற நிலையில், ‘இலவசம்’ என்பது அனைவரையும் வசப்படுத்துகிற ஒரு மாயவலையாக மாறுவது தவிர்க்க இயலாததாகி விடுகிறது. ‘கைவசம் நிறைய இலவசம்’ என்கிற மனநிலையில், எதற்காகவும் எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விடுகிறது. ‘பொம்பளை சப்ளை’ என்கிற ஒன்றைத்தவிர, கிட்டத்தட்ட எல்லாமே இலவச வட்டத்துக்குள் வந்துவிடும் போலிருக்கிறது.

கல்வியை இலவசமாகத் தரமுடியாத அரசாங்கம், கரண்டை ஒழுங்காகத் தரமுடியாத அரசாங்கம், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரமுடியாத அரசாங்கம், ஏழைமக்களின் நலன்காக்க எந்தத் திட்டங்களையும் வழங்கமுடியாத அரசாங்கம்….. பிராந்திக் கடையும் பிராத்தல் செண்டரும் நடத்துவதில் எந்தத் தப்பும் இருப்பதாகத் தெரியவில்லை. அதையாவது ஒழுங்காகச் செய்தால் சரிதான்.

கல்வி வியாபாரத்தைத் தனியார் செய்யட்டும்…. கட்டில் வியாபாரத்தைக் கவர்ன்மெண்ட் செய்யட்டும்.

2 comments on ““பிராந்திக் கடையும்… பிராத்தல் செண்டரும்”

Leave a comment