மாதா-பிதா-கொலை-தெய்வம்!

சென்னை பாரிமுனையில் 167 ஆண்டுகளாக நடந்துவரும் பாரம்பரியம் மிக்க பள்ளி- புனித மேரி ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி.

இப்பள்ளியில் அறிவியல் ஆசிரியையாகவும்..ஹிந்தி ஆசிரியையாகவும் கடந்த ஏழு ஆண்டுகளாகப் பணியாற்றி வருபவர் உமா மகேஸ்வரி.

இவர் இன்று காலை ஒன்பதாம் வகுப்பிற்கு ஹிந்தி பாடம் எடுத்து முடித்துவிட்டு, மூன்றாம் பாட வேளை துவக்குவதற்காகப் பத்தாம் வகுப்பு அறைக்குச் சென்றார்..

அப்போது, அவரைப் பின்தொடர்ந்து சென்ற ஒன்பதாம் வகுப்பு மாணவன் முகமது இர்பான் என்பவன் திடீரெனக் கத்தியுடன் அவர் மீது பாய்ந்து சரமாரியாகக் குத்தினான். முதலில், கழுத்து பகுதியில் வெட்டியதும் ரத்தம் பீறிட்டு வெளியேறியது. இதில், ஆசிரியையின் கழுத்து நரம்புகள் வெட்டுப்பட்டன. அடுத்து, முகம், வயிறு மற்றும் இடுப்பு என, மொத்தம் ஏழு இடங்களில் குத்தினான்.

ஆசிரியையின் அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடிவந்த மற்ற மாணவர்கள், சக மாணவன், கையில் கத்தியுடனும், ஆசிரியை ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து கிடப்பதையும் பார்த்துப் பதட்டமடைந்து, பள்ளி முதல்வருக்குத் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த பள்ளி முதல்வர், மற்ற ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் உதவியுடன் உமாமகேஸ்வரியை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

ஆனாலும்…..அங்கு சிகிச்சை பலனின்றி ஆசிரியை உமாமகேஸ்வரி அநியாயமாக உயிரிழந்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், கையில் கத்தியுடன் நின்ற மாணவனைக் கைது செய்தனர்.

அவன் தனது வாக்குமூலத்தில், ‘தன்னைப் பற்றி பெற்றோரிடம் குறை கூறியதாலும், பெற்றோரை அழைத்து வரும்படி தொந்தரவு செய்ததாலும், மதிப்பெண் குறைத்துப் போட்டதாலும் டீச்சரைக் குத்திக் கொன்றதாகச்’ சொல்லியுள்ளான்.

மேலும் அந்த மாணவன் போலீசாரிடம் கூறியதாவது….

“பள்ளிக்கு அடிக்கடி லீவு போட்டதால், ஆசிரியை பிளாக் மார்க் ரிப்போர்ட் எழுதினார். இதனால், ஆசிரியை மீது கோபம் அதிகமாகிக் கொலை செய்யும் முடிவுக்கு வந்து விட்டேன். ஆனால், எப்படிக் கொலை செய்வது எனத் தெரியாமல் இருந்தபோது, “அக்னி பாத்’ என்ற இந்திப் படத்தை பார்த்து, கொலை செய்வதைத் தெரிந்து கொண்டேன். இதற்காகக் கடையில் 10 ரூபாய் கொடுத்து கத்தியை வாங்கினேன். அதைப் பேப்பரில் மறைத்து பள்ளிக்கு எடுத்துச் சென்றேன். சந்தர்ப்பம் கிடைத்ததும், ஆசிரிரியையின் கழுத்து, கை, வயிற்றுப் பகுதியில் வெட்டினேன்”.

ஒரு ஆசிரியைக்கே இந்த நிலை என்றால்….. நம் மாணவர் சமுதாயம் எங்கே போகிறது? என்ற வலியும் வருத்தமும்தான் மிஞ்சி நிற்கிறது.

எங்கோ அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் இதுபோன்று நடைபெறுவதை செய்தியாகப் பார்த்துக் கொண்டிருந்த நமக்கு…… இப்படி ஒரு சம்பவம் நமது ஊரிலேயே நடந்துவிட்டது என்பது ஜீரணிக்க முடியாத செய்திதான்.

உலகுக்கே நாகரிகம், பண்பாடு, கலாச்சாரம் என்று எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்துப் பெருமையுற்ற தமிழ்மண்…… அந்த விலையில்லாத் தமிழ்மகளின் ரத்தசிதறலுக்கு வெட்கித் தலைகுனிந்து கிடக்கிறது.

தாயைப்போன்ற ஒரு நல்ல ஆசிரியரை….. கதறக் கதறக் கொலை செய்தவனை மன்னிக்கவே மன்னிக்காது இந்த மண்.

மாதா, பிதா, குரு, தெய்வம்….. என்று வரிசைப் படுத்தி, தெய்வத்தைக் கூட ஆசிரியருக்கு அப்புறமாகத்தான் வரிசையில் வைத்தார்கள் ஆதிமுன்னோர்.

எழுத்தறிவித்தவனே இறைவன் ஆவான் என்று இளம் பிராயத்திலேயே மனதில் பதிய வைத்தார்கள்.

உயிராக்கித் தருவது பெற்றோர்…. உருவாக்கித் தருவது ஆசிரியர் என்பதால்தான்….. இரண்டாவது பெற்றோர் என்கிற ஸ்தானத்தில் அவர்கள் வைக்கப்பட்டார்கள்.

அன்னச் சத்திரம் ஆயிரம் எழுப்புவதைக் காட்டிலும், ஏழை ஒருவனுக்கு எழுத்துச் சொல்லிக்கொடுப்பதே புண்ணியம் கோடி பெறும் என்று பாரதி தெரியாமலா சொன்னான்?

அறிவு கற்பிக்கும் ஆசிரியருக்கே இந்தக் கதி என்றால்….. இது போன்ற கொடுமைகள் நடப்பதை இனிமேலும் அனுமதிக்கக் கூடாது.

ஆசிரியர்கள், மாணவர்களைக் கண்டிப்பத்தை நிறுத்த அரசாங்கம் சட்டத்தில் சில மடத்தனமான மாற்றங்களைக் கொண்டுவந்தது. ஆனால், ஆசிரியர்களின் பாதுகாப்பிற்கு அரசாங்கம் எத்தகைய சட்டங்களை வகுத்துள்ளது? என்பது பெரிய கேள்வி.

இன்நேரம் இதேபோல, ஆசிரியர் ஒருவர் அடித்து மாணவன்/மாணவி மரணம் அடைந்து இருந்தால்…… இந்நேரம் தமிழகம் முழுவதும் பெற்றோர்களும்/மனித உரிமைச் சங்கங்களும் கொந்தளித்து இருக்காதா?

மாணவர்களைக் கண்டிக்கக் கூடாது, பெற்றோரிடம் மாணவனின் நிலையை எடுத்துச் சொல்லக் கூடாது, பள்ளியின் ஆண்டு தேர்ச்சி விகிதமும் குறையக் கூடாது…… உருப்பட்டாப்லதான்.

ஆசிரியர் வேலையும் கூட இங்கு உயிருக்கு உலை வைக்கும் வேலைதான் என்பதை அந்த மாணவன் உணர்த்தி விட்டான்….. இனி எந்த ஆசிரியருக்காவது மாணவனை நல்வழிப்படுத்தும் எண்ணம் வருமா? அல்லது ஆசிரியரின் வீட்டில்தான் அதை அனுமதிப்பார்களா?

இதன் பிறகு ஆசிரியர்கள் எப்படித் தைரியமாக மாணவர்களைக் கேள்வி கேட்க முடியும்? மாணவன் தவறே செய்தாலும், இந்தச் சம்பவம்தான் நினைவுக்கு வரும். ஒரு பொறுப்புள்ள சமுதாயத்தை உருவாக்கப் பாடுபடும் ஆசிரியர்களுக்கு இந்த நிலைமை என்றால்… நாம் அனைவரும் இத்ற்காக வெட்கப்படவேண்டும்..

முன்பெல்லாம் நாங்கள் படிக்கும்போது தவறு செய்தால், ஆசிரியர் கடுமையான தண்டனை கொடுப்பார். பெற்றோரும் அதை ஆதரிப்பார்கள். ஆனால், இப்ப என்னடான்னா…. லேசா குட்டினாலே, ஐயோ என் பிள்ளைய அடிச்சிட்டாங்களே என்று கூப்பாடு போடுகிறார்கள் பெற்றவர்கள். குற்றம் என்கிறது அரசாங்கச் சட்டம். மாணவசமுதாயம் விளங்கின மாதிரிதான்….

கண்டித்து வகுப்பு எடுத்த காலம் போய், மாணவர்களிடமும், பெற்றோரிடமும் கை கட்டி, வாய் பொத்தி வேலை பார்க்க வேண்டிய கேவலமான நிலைக்கு ஆசிரியர் சமுதாயம் தள்ளப்பட்டு இருக்கிறது.

முன்பெல்லாம், ஒரு மாணவனின் மதிப்பெண் குறைந்தால்- ஆசிரியர் மாணவரையும், பெற்றோரையும் அழைத்து விளக்கம் சொல்வார். ஆனால், தற்போது ஆசிரியர்கள், நிர்வாகத்திற்கும், பெற்றோருக்கும் விளக்கம் சொல்ல வேண்டியது இருக்கிறது. தலைகீழ் தர்பார் நடக்கிறது.

பள்ளிகளில் எப்போது மாணவர்களை அடிக்கக்கூடாது, திட்டக்கூடாது, எட்டாம் வகுப்பு வரை கட்டாயமாக பாஸ் மார்க் கொடுத்து விட வேண்டும்…… என்றெல்லாம் அரசாங்கம் எப்போது சட்டம் கொண்டு வந்ததோ, அப்போதிருந்தே மாணவர்கள் ஒழுக்கம் இல்லாதவர்களாக மாற ஆரம்பித்து விட்டார்கள்

உலகமயம் என்பது….. வியாபாரத்தை மட்டும் இங்கு உலக மயமாக்கவில்லை….. வன்முறை, ஆபாசம் என அனைத்தையுமே இங்கு உலகமயமாக்கியிருக்கிறது.

உயிரைக் காக்கும் மருத்துவரை கத்தியால் குத்திக் கொலை செய்கிறார்கள், ஒழுக்கத்தைப் போதிக்கும் ஆசிரியரைக் கத்தியால் குத்திக் கொலை செய்கிறார்கள், என்ன நடக்கிறது நமது நாட்டில்? அகிம்சை வழியில் போராடிச் சுதந்திரம் பெற்ற நாட்டில், ஏன் இந்த வன்முறைக் கலாச்சாரம்?

ஆரம்பகாலத்தில் பள்ளிகளில் பாடங்களுடன் சேர்த்து, நீதிபோதனை வகுப்புகள், தையல் வகுப்புகள், நெசவு வகுப்புகள், விவசாய வகுப்புகள், மற்றும் விளையாட்டு வகுப்புகள் என்று சொல்லிக்கொடுத்தார்கள். மாணவன் கல்வி கற்பதோடு, சமுதாய ஒழுக்கநெறிகளையும் தன்னுடைய சமுதாயத்தையும் கற்றான்.

ஆனால் இன்று?…. கல்வி என்றாலே அது ஒரு வேலையைக் குறிக்கோளாக கொண்டதாக மட்டும் மாற்றப்பட்டு விட்டது. கல்விக் கடையை திறந்து வைத்திருக்கும் சமூக சுரண்டல்காரர்கள் இவற்றைக் கற்றுக் கொடுப்பதில்லை. காசுக்கு அலையும் அரசாங்கமும் இவற்றைக் கண்டுகொள்வதில்லை.

எங்கே போய்க்கொண்டிருக்கிறது நமது தேசம்?.. பொறுப்பற்ற பெற்றோர்., எதையுமே கண்டுகொள்ளாத சொரணையற்ற சமுகம்., யார் எக்கேடு கெட்டால் என்ன, சமுதாயம் உருப்படாமல் போனாலென்ன…. எங்களுக்குக் காசே பிரதானமென்று நடக்கும் கல்விக்கூடங்கள், சாராயம் விற்பது மட்டுமே தனது தொழில் என்று சதா நேரமும் அதே சிந்தனையில் கிடக்கும் அரசாங்கம்…… தேசத்தைப்ற்றி சிறிதும் அக்கறையற்ற, வெட்கங்கெட்ட சுயநல அரசியல்வாதிகள்…..

இதில் அவன் மட்டுமா குற்றவாளி? இத்தனை பேரும்தான் உண்மையான குற்றவாளிகள். இதில் யாரைத் தண்டித்து, திருத்தி, வளரும் இளைய தலைமுறையைக் காக்கப்போகிறோம்?

சில நாட்கள் மட்டும் இந்த விஷயத்தைப் பரபரப்பாக பேசிவிட்டு….. அடுத்த சம்பவம் நடந்தவுடன் அங்கு தாவிவிடாமல்……

கல்விச் சீர்திருத்தம் கட்டயம் கொண்டுவரப்பட வேண்டும். கல்வி மட்டும் போதாது…. கண்டிப்பு, ஒழுக்கம், பண்பாடு, கைத்தொழில் என அனைத்து விஷயங்களும் கலந்து தரப்படவேண்டும்.

ஆசிரியர்களுக்கு உண்டான மரியாதையும், உரிமையும், பாதுக்காப்பும் உறுதிப் படுத்தப்பட வேண்டும்.

அதுவரையிலும்……

ஆசிரியர்களின் கையையும் வாயையும் சட்டத்தால் கட்டிப்போட்டு, இப்படி நெஞ்சில் குத்த வைத்துக் கல்வியின் தரத்தை அதல பாதாளத்தில் தள்ளி விட்ட நமது அரசியல்வாதிகளின் மகத்தான பணி…… தொடரட்டும். சமுதாயம் சீரழியட்டும்!

Leave a comment