புலம்பலாமா இப்படி ஒரு பொறுப்புள்ள அமைச்சர்?

போலீஸ் ஐ.ஜி.யிடம் ஒருத்தர் புகார் கொடுத்தாராம்……

“ஐயா, ரௌடி ரங்கனோட தொல்லை தாங்கமுடியல. உடனடியா எனக்குப் பாதுகாப்பு வேணும்”.

அதுக்கு ஐ.ஜி. சொன்னாராம்…..

“அட ஏய்யா நீ வேற? அவனோட அராஜகத்தைத் தாங்கமுடியாமதான், நானே எனக்குப் பந்தோபஸ்து கேட்டு மேலே எழுதியிருக்கேன்”

பாவம்- ஐ.ஜி. நிலைமையை விட, நம்ம நிலைமை எவ்வளவோ பரவாயில்லைன்னு ஆசுவாசப் படுத்திக்கிட்டாராம் புகார் கொடுத்தவர்.

அப்படித்தான் கேலிக்கூத்தான ஒரு சம்பவம்…… நாகை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குடும்ப நல அறுவை சிகிச்சை கருத்தரங்கில் அரங்கேறியது.

கருத்தரங்கில் பேசிய வேதாரண்யம் எம்.எல்.ஏ. காமராஜ்…..

“வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் பொதுமான டாக்டர்கள் இல்லை. ஜெனரேட்டர் இருந்தும், இயக்குவதற்கு ஆட்கள் இல்லை. அப்படியே ஆள் போட்டு இயக்கலாம் என்றாலும், மண்ணெண்ணை இல்லை. எக்ஸ்ரே எடுக்க டாக்டரில்லை. பிரசவம் பார்க்க டாக்டரில்லை….” என்று இல்லைகளாகவே அடுக்கிக்கொண்டு போனார்.

அதற்குப் பதிலளிக்கும் வகையில் அடுத்து மைக் பிடித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபாலின் பேச்சுதான் ஹைலைட்……

“எம்.எல்.ஏ. பேசும்போது வேதாரண்யம் ஆஸ்பத்திரி பற்றிச் சொன்னார். இதுவாவது பரவாயில்லை. ஆனால், நாகை மாவட்டத் தலைமை ஆஸ்பத்திரியில், அனைத்து வசதிகளும் இருந்தும் கூடப் பராமரிப்பு இல்லாமல் முடங்கிக் கிடக்கிறது.

சமீபத்தில் நான் சென்னையில் இருந்தபோது, எனக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசிய நபர்…. “பிரசவ அவஸ்தையில் துடிக்கும் என் மனைவியோடு நாகை ஆஸ்பத்திரியில் நிற்கிறேன். ஆனால், இங்கெல்லாம் பிரசவம் பார்க்க முடியாது என்று டாக்டர் விரட்டுகிறார். நீங்கள் கொஞ்சம் போன் போட்டுச் சொல்லுங்கள்” என்றார்.

உடனே நான் ஆஸ்பத்திரிக் கண்காணிப்பாளர் காதருக்குப் போன் செய்தேன். ஆனால், என் போனைக்கூட அவர் எடுக்கவில்லை. பிறகு, மாவட்ட மருத்துவ இணை இயக்குநருக்குப் போன் செய்தேன். அவர் போனை எடுத்துப் பேசிவிட்டு, பிரசவம் பார்க்க டாக்டரை ஏற்பாடு செய்கிறேன் என்றார்.

ஆனால், கடைசிவரை நான் கூறிய நபருக்குப் பிரசவம் பார்க்க ஆளில்லாமல், தனியார் ஆஸ்பத்திக்குத்தான் தள்ளிவிட்டனர். இதை நான் யாரிடம் போய் சொல்வது?”

–என்று புலம்பியிருக்கிறார் ஒரு பொறுப்புள்ள, அதிகாரமுள்ள அமைச்சர்.

இப்படிப் புலம்பித்தள்ளுவதற்கென ஒரு அமைச்சர் நமக்குத் தேவையா? அதற்கெனவா இவ்வளவு சம்பளம்? கிம்பளம்? சலுகைகள்?

நமது முதல்வர் பார்வைக்கு இதெல்லாம் போனதோ இல்லையோ தெரியவில்லை.

போயிருந்தால், நடவடிக்கை உடனே எடுத்திருக்க வேண்டும். தொடர்புடைய அத்தனை அதிகாரிகளையும் துவம்சம் செய்திருக்க வேண்டும்.

அல்லது- இதெல்லாம் கூட முதல்வர் கவனத்திற்குச் போவதில்லை என்றால்….

இப்படிப்பட்ட முதல்வர் இருக்கிற நாட்டில், அப்படிப்பட்ட அதிகாரிகள் இருப்பதும் தப்பில்லை!