பாலினை ஊற்ற ஊற்ற…..

 

சாப்பாட்டுக்கு உப்பைப் போன்றுதான்
சமுதாயத்துக்கு நடிகர்கள்…..
தேவையான அளவிற்கு பார்த்து ரசியுங்கள்
தேவதூதர்கள் போல தூக்கி வைக்காதீர்கள்……

இந்தக் கட் அவுட் உயர உயர……
உங்களது அறியாமை தாழ்கிறது என்று அர்த்தம்.
பாலினை ஊற்ற ஊற்ற…..
உங்களது பகுத்தறிவு வீழ்கிறது என்று அர்த்தம்.

குடித்துக் கூத்தடித்தவன் எல்லாம்
கும்பிடும் தெய்வம் என்றால்……
வெடித்து அழியட்டும் இந்த
வேதனைச் சமுதாயம்!

 

பாம்பு பால் குடிக்குமா?

பாம்புகளுக்கு காதுகள் கிடையாது.  பாம்பாட்டி மகுடியை அப்படியும் இப்படியும் அசைத்து ஆட்டும் போது பாம்பும் தன் பார்வையை மகுடி மீது செலுத்தி அதற்கேற்றவாறு அசைவதைத்தான் “மகுடியின் இசையில் தான் பாம்பு ஆடுகிறது” என்று தவறாகக் கூறுகிறார்கள்.

பாம்பு தன் அடி வயிற்றிலுள்ள செதில்கள் போன்ற அமைப்பு மூலம் தரையைப் பற்றி (மண்புழு போன்றே) முன்னுக்கு நகர்கிறது. மண்புழுவிற்கு முன் பக்கம் மட்டுமே அந்த அமைப்பு உள்ளது. ஆனால், பாம்புக்கோ கழுத்திலிருந்து வால் வரை செதில் அமைப்பு உண்டு. இதனால் தான் மிக வேகமாக நகர முடிகிறது.

பாம்புகளுக்கு அதிர்வுகளை உணரும் திறன் உண்டு. மனிதனோ, விலங்கோ, நெருங்கும் போது, நிலத்தில் ஏற்படும் அதிர்வலைகளைப் பாம்புகள் தங்கள் வயிற்றுப்புறச் செதில்கள் மூலம் உணர்ந்து அதற்கேற்றவாறு தன் திசையை மாற்றி எதிரிகளிடமிருந்து தப்பித்துக்கொள்ளும்.

பாம்புகளுக்கு நாக்கு பிளவுபட்டு கம்பிகள் போல் இருக்கும். எனவே, பாம்பு பாலையோ நீரையோ நக்கிக் குடித்திட முடியாது. கிண்ணத்தில் பாலை வைத்தால் பாம்பு உறிஞ்சிக் குடிக்கிறது என்று பக்தர்கள் கூறுகிறார்கள். இது மிகவும் அறியாமையாகும். பாம்புக்கு அதன் தலையின் நுனிப் பகுதியில் மூக்கு உள்ளது. அது நீர்மப் பொருளில் வாயை வைக்கும்போது முதலில் நுழைவது மூக்காகத்தான் இருக்கும். மூக்கை நீரிலோ, பாலிலோ நுழைத்தாலே பாம்பு மூச்சுத்திணறிச் செத்து விடும். இதை அறியாதோர்தான் பாம்பு பால் குடிக்கிறது என்று தவறாகச் சொல்லி வருகின்றனர்.

மேலும் முட்டையைக் கூட உடைத்து உறிஞ்சிக் குடிப்பதாகவும் பக்தர்கள் சரடு விடுகிறார்கள். பாம்பு இரையை (எலி, தவளை போன்றவற்றை) அப்படியே விழுங்குமேயன்றி மென்று சாப்பிடக் கூடிய அமைப்பு கிடையாது. எனவே முட்டையையும் பாம்பு விழுங்குகிறதேயன்றி உடைத்து உறிஞ்சிக் குடிக்காது.

பாம்புகள் அதன் இனத்திலேயே இணைந்து இனப்பெருக்கம் செய்கின்றன. ஆனால், நல்ல பாம்பும், சாரைப்பாம்பும் தான் இணைகின்றன என்ற தவறான கருத்தினைக் கூறி வருகிறார்கள். பறக்கக் கூடிய பறவைகள் எல்லாம் ஒரே இனத்தைச் சேர்ந்திருப்பதால் கோழி, கொக்குடன் இணையுமா? கழுகு, வவ்வாலுடன் இணையுமா? காக்கை குயிலுடன் இணை யுமா? குருவி, கரிச்சானோடு இணையுமா? வாத்து வான்கோழியுடன் இணையுமா? இவை எப்படிச் சாத்தியமில்லையோ அப்படித் தான் பாம்பின் சேர்க்கையும் ஆகும்.

நன்றி: உண்மை மாதமிருமுறை இதழ்.