அவள் அப்படிச் சொன்னது எனக்கு சரியாகப் படவில்லை!

அவள் பணக்காரப் பத்தினியாகவுமில்லை….

சீமாட்டியாய் இருந்து
பரத்தையாகவுமில்லை….
 
மண் தின்ற உடம்பை
மனிதர்கள் தின்னட்டுமே!
என்று அவள் அப்படிச்
சொன்னது எனக்கு
சரியாகப்படவில்லை
 
அவள் சொல்லும் மனிதர்கள்-
அவளை
மனுசியாகவே பார்க்கவில்லை….
போகப் பொருளாகத்தானே பார்த்தார்கள்.
அவள்
அப்படிச் சொன்னது
எனக்கு சரியாகப்படவில்லை……..
 
தன் தொழில் தர்ம்ம் காக்க-
மனிதர்களை மண்ணைவிட
மேலானவர்களாக ஒப்பிடுகிறாளே!
 
பல உடலோடு படுத்து
அந்த உடல்தரும் வேக்காட்டைப் பெற்று-
நோய் வாய்ப்பட்டு இறக்கும்போது…
அந்த மேலான மனிதர்களா தாங்குகிறார்கள்?
மண்தானே தாங்குகிறது.
 
மண் தின்ற உடம்பை
மனிதன் தின்னட்டுமே
என்று அவள் அப்படிச்
சொன்னது எனக்குச்
சரியாகப்படவில்லை.
நன்றி – வலிப்போக்கன்.
color
படுத்து எழுந்து 
பசிதீர்த்துக் கொண்டவன் –
பறைசாற்றுகிறான் உன்னை …..

மிதமாய் சொல்லும்போது 
விபச்சாரி.

 
நாகரிக மொழிகளில் 
விலைமாது, பரத்தை.
 
வசைபாடும்போது 
தேவடியாள்.
வசதிகேற்றாற்போல் வைத்துக்கொண்டான் 
வார்த்தையிலும்..படுக்கையிலும்..
நன்றி- படைப்பாளி.
Advertisements

ஆப்பிளா? மாணவிகளா?

 

சென்னையில் –

பழைய மகாபலிபுரம் சாலைகளில் உள்ள கல்லூரிகள் ஹிந்துஸ்தானில் ஆரம்பித்து எஸ்.எஸ்.என் வரை…. ஏகப்பட்ட கல்லூரிகள் உள்ளன.

இங்குள்ள  கல்லூரிகளில் பயிலும் சில இளம் பெண்களை,  பணத்தாசை காண்பித்துப் பாலியியல் தொழிலில் சிலர் ஈடுபடுத்துகின்றனர்.  

அவர்களே அந்தப் பெண்களுக்கான கல்லூரிக் கட்டணம்,  கைச்செலவுக்கான பணம்,  செல்போன் உட்பட இன்னபிற வசதிகளையும் செய்து கொடுக்கின்றனர்.

“ப்ரெஷ் ஆப்பிள்” எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த பிஸினஸ்,  எவ்வளவு பேரின் எதிர்கால வாழ்க்கையைச் சீரழித்துக்கொண்டிருக்கிறது  என்பது கொடுமையான விஷயம்.

சென்னை மட்டுமல்லாது….

மதுரை மற்றும் திருச்சி என எல்லா இடங்களிலும், மாணவிகளை வைத்து இதே மாதிரியான கொடுமை அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது. 

இந்த ஆப்பிள்கள் – விரைவில் அழுகிப் போவதற்கு முன்பாகவே…. ஏதாவது செய்தால்தான் உண்டு.

இங்கு இது பதியப்படுவதற்குக் காரணம்….  இது ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்டு என்பதற்காகத்தான்.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் மீது அடிக்கடி கவனம் செலுத்தினால்….  இதுபோன்ற பிரச்னைகளில் அவர்கள் ஈடுபடாமல் தடுக்க உதவும் என்ற எண்ணத்தில்தான்.

இது மட்டும் பெண்கள் உலகமா?

 

பாலியல் பலாத்காரம்
எங்கு நடந்தாலும்….
வரிக்கு வரி வார்த்தைக்கு வார்த்தை
விவாதிக்கப்பட்டு, அலசப்படுகிறது
அந்தப் பெண்களின் ஒழுக்கமும்
குடும்பமும்….

குற்றம் செய்தவர்கள்
உத்தமர்களா என்ன?

பாலியல் தொழிலாளி ஒருத்தி
ஒரு இரவில் பிடிபட்ட நாளில்……
ஒரு பெரும் குற்றவாளியின்
முகமாக சித்தரிக்கபடுகிறது!

படுத்து எழுந்தவன் சாமியின்
தூதனா என்ன?

கணவனைப் பிரிந்தவளோ,
காதலில் விழுந்தவளோ…..
மனங்கெட்டவளாகவே
வாழ்த்தப்படுகிறாள்!

நெருக்கித் தள்ளியவன்
நல்லவனா என்ன?

நாடு வீதியோ நடுக் கூடமோ
பெண்ணின் உடல் மீதான
வன்கொடுமைக்குக் காரணம்
அவள் நடத்தையும் உடையுமே…..

கொடுமை செய்த கனவான்கள்
தேவ தூதர்களா என்ன?

ஒரு தலைப் பட்சமாய் காதலித்து
எங்கோ ஒருவன் அதிசயமாய் உயிர் துறந்தால்….
அது ஏதோ ஒரு திமிர் பிடித்த
பெண்ணினால் மட்டுமே.

காதல் வன்முறை செய்தவன்
தியாக தீபமா என்ன?

ஏதோ ஒரு சூழலில் நிகழும்
எந்தப் பெண்ணின் மரணமும் –
அவள் கற்பின் மீதான சந்தேகத்தில் மட்டுமே
தன் முதல் விசாரணையைத் துவங்குகிறது!
ஒரு முறை இறந்தவள்
பல முறை கொல்லப்படுகிறாள்
இவர்களால்…

எல்லா குற்றங்களும்
இங்கே பெண்களால்
மட்டுமே!

ஆண்கள் அனைவரும்
அவ்வளவு அப்பாவிகளா என்ன?

மானாட மயிலாட…ரெக்கார்ட் டான்ஸ்?

ரெக்கார்டு டான்ஸ் தெரியுமா ரெக்கார்டு டான்ஸ்…
கோயில் திருவிழாக்களில்…அரை இருள் சூழ்ந்த போதை நெடியடிக்கும் இரண்டாம் தர ஹோட்டல்களில்….
இந்த மாதிரியான‌ பெண்களை நீங்கள் பார்த்திருக்கக்கூடும்.
மிதமிஞ்சிய ஒப்பனைகளுடனும் கிளர்ச்சி ஊட்டுவதற்கென்ற அணியப்பட்ட உடைகளுடனும் இவர்கள் ஆடும் நடனத்தை, கேபரே டான்ஸ், டிஸ்கோ டான்ஸ், ரெக்கார்ட் டான்ஸ், ஆடலும் பாடலும் என பல பெயர்களில் அழைத்து ரசிக்கிறோம்.
நேரடியக ரெக்கார்ட் டான்ஸ் பார்க்க வாய்ப்பில்லாதவர்கள், முடியாதவர்கள் மானாட மயிலாட, ராணி ஆறு ராஜா யாரு போன்ற நடன நிகழ்ச்சிகள் மூலம். அந்த சுகத்தைப்பார்த்து ரசிக்கலாம்.
ஒரு காலத்தில் இப்படிப்பட்ட டான்ஸ்களைப் பார்க்கவேண்டும் என்றால், முக்காடு போட்டு முகத்தை மறைத்துக்கொண்டு பயந்து பயந்து பார்க்கவேண்டும். இப்போது நிலைமை அப்படியில்லை. கோயில் திருவிழா உட்பட எங்கும் எதிலும் இது இல்லாமல் எதுவும் இல்லை.
எனக்கு இன்னும் நன்றாக ஞாபகம் இருக்கிறது. நான் டிரவுசர் போட்ட சிறுவனாக விளையாடிக்கொண்டிருக்கும்பொழுது, எங்கள் ஊர் சத்திரத்தில் ரெக்கார்ட் டான்ஸ் நடந்தது. டான்ஸ் பார்க்கவேண்டும் என்கிற ஆர்வத்தில் படுதாவுக்குள் தலையை நுழைத்துப் பார்த்தபிறகுதான் தெரிந்தது..ஓஹோ…இது “அந்த வகையான‌” டான்ஸ் என்பது.
அத்ற்குப்பிறகு இப்போதெல்லாம் அது சர்வசாதாரண விஷயமாகிவிட்டது.ஒரே ஒரு மாற்றம்,ரெக்கார்ட் டான்ஸ் என்பது ஆடலும் பாடலும் என பெயர் மாறிவிட்டது.
எங்க ஏரியாவின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இது கொஞ்சம் பிரபலம். ஒருமுறை நான் எனது நண்பர்களுடன் ஊருக்குச்சென்றிருந்தபொழுது இதைப்பார்க்க நேர்ந்தது.
அது என்ன ரெக்கார்ட் டான்ஸ்?
வாத்தியங்கள் உயிர் பெற்று எழுந்தவுடன் முத்ல் பாடலாக ஒரு சாமி பாட்டு வந்தது. மாரியாத்தா பாட்டு அல்லது ஒரு விநாயகர் துதி என ஏதோ ஒரு பாட்டுக்குக் கும்பலாக வந்து ஆடிவிட்டுப்போனார்கள்.
அடுத்து…சிகப்பு கலந்த‌ பச்சை கலர் ஜிகினா உடை அணிந்து ஒருத்தி வந்து ஒரு டப்பாங்குத்து சினிமாப் பாட்டுக்கு ஜோடியாக ஆடிவிட்டுப்போனாள்.
சிறிது நேர‌ இடைவெளியில் அடுத்த பாட்டுத் துவங்கியவுடன் வேறொருத்தி வந்து ஃபுல் கவர் செய்த டிரஸ்ஸோடு இடுப்பைக்கூடக் காட்டாமல் இழுத்துப் போர்த்திக்கொண்டு ஆடிவிட்டுப் போனாள்.
சே…இது ஒரு ஆட்டமா இடுப்பக்கூடக் காட்டாம? என‌அருகில் இருப்பவரிடம் விசாரித்தால், கொஞ்சம் பொறுங்கள்,நேரம் போகப்போக எல்லா ஆட்டமும் இருக்கிறது என முகம் மலரப் பதில்வந்தது.
எல்லோருக்கும் காதெல்லாம் ஜிவ் என்று ஆகி,கண்ணெல்லாம் கிர் என்று மாறி மேற்படி ஆட்டத்தை காண அடுத்து வரும் யுவதி யாரோ என வழிமேல் விழி வைத்து காத்திருந்தோம்.
அதற்குப்பிறகும் ஒரு நான்கு ஐந்து பாட்டுக்கு வேறு வேறு பேர் வந்து ஆடிவிட்டு போனார்கள், ஒன்றும்
பிரயோஜன‌மில்லை.
என்னய்யா கூத்து நடத்துறீங்க என எல்லோருமே சவுண்டு கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
அத்ற்குப்பிறகு எல்லா விளக்குகளையும் போட்டுவிட்டு மைக் பிடித்த ஒருவர் பெண்கள் எல்லோரும் வீட்டுக்குப்போகவும் என பகிரங்கமாகவே அறிவிப்புசெய்தார்.
தலையில் ஒரு கர்சிப் கட்டி எங்களை மூடிக்கொன்டு நாங்கள் பழைய இடத்திலேயே விளக்கு அணைத்தவுடன் போய் அமர்ந்து கொண்டோம். ஆட்டம் தொடங்கியவுடன் முதலில் வந்தவள் தன் மேல்பாகம் முழுவதையும் ஒரு நான்கு செகண்டுக்கு சந்தேகத்திற்கு இடமில்லாமல் காட்டிசென்றாள்.
ஒரே ஆரவாரம்,கை தட்டல்கள்…
அடுத்த வந்தவள் கொஞ்சம் கொஞ்சமாக எல்லாம் கழற்றி முழுவதும் மேலாடையை துறந்து ஆட அந்த இடத்தில் ஜிவென்று சூடு ஏற ஆரம்பித்தது.
இந்த இடத்தின் “ஹைலைட்” அவள் ஆடிய கொஞ்ச நேர நிர்வாண நடனம் அல்ல. அவள் ஆடிய பொழுது ஒரு நூறு ருபாய் தாளை வைத்துகொண்டு சில ஊர் பெரியமனிதர்கள் அவளை  அழைத்ததும், பின்புஅவள் ஜாக்கெட்டிலும் பாவாடையிலும் அந்தப் பண‌த்தைக் குத்துவதற்கு பட்டபாடும்தான்.
சமயங்களில் பாதுகாப்பு வளையமாக கருவேல விஷ முட்களை மேடையைச்சுற்றிப்
போட்டுவைத்திருப்பார்கள். மேடைக்குப் பாதுகாப்பு… பெண்களுக்கு? அவள் மானத்துக்கு? காற்றில் தாவணி விலகினால் கூட தன்னையும்மீறிப் பதறிப்போகிற பண்பாட்டு வளர்ப்புமுறை..சிதறிப்போக என்ன காரணம்?

குடும்பத்தில் பணப்பிரச்னை,வறுமை, கணவன் அல்லது காதலனால்
ஏமாற்றப்படுதல், சினிமா கனவு இதில் ஏதாவது ஒன்றில் பாதிக்கப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள் இந்த‌ ஆடும் பெண்கள். இவர்களின் இந்த நிலைமைக்கு யார் காரணம் என துப்பறிந்தால் ஒட்டுமொத்த சமூகத்தின் மீதும் குற்றம் சொல்ல வேண்டியதிருக்கும்.
இவர்கள்…ஏழைகள் என்பதால் ரெக்கார்ட் டான்ஸ்காரிகள். ஆனால் கலை என்ற பெயரில் சினிமாவில் பெண்களை ஏகத்துக்கும் அவுத்துக் காட்டுகின்றார்களே..அவர்கள் மட்டும் நடிகைகள். என்ன வித்தியாசமோ? வேறுபாடோ?

பாலியல் தொழிலை அங்கீகரிக்கலாமா?

பாலியல் தொழிலை அங்கீகரிக்கலாமா, கூடாதா என்று சர்ச்சை நடக்கிறது. சிறுமிகள் கடத்தப்பட்டு இந்த தொழிலில் தள்ளப்படுவதை தடுக்க கடுமையான சட்டம் தேவை என்று ஒரு சேவை நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. அதை விசாரித்த உச்சநீதி மன்றம், சட்டங்கள் மூலம் எந்த நாடும் பாலியல் தொழிலை ஒழிக்க முடியாத நிலையில், சட்டபூர்வமாக அதனை அங்கீகரித்தால் அதிலுள்ள பெண்களுக்கு மரியாதை, பாதுகாப்பு, மருத்துவ பயன்கள் கிடைக்குமே என்று கேட்டனர்.

இந்தியாவில் 30 லட்சம் பெண்கள் பாலியல் தொழில் செய்வதாக அரசு ஆய்வு சொல்கிறது. ஒரு கோடிக்கு மேல் என்று மற்றொரு கணக்கு தெரிவிக்கிறது. பல லட்சம் சிறுமிகளும் இதில் அடங்குவர். சொந்த ஊரில் இருந்து ஏமாற்றி கடத்தி வரப்பட்டவர்கள். பாலியல் தொழிலின் அஸ்திவாரம் வறுமை. ஆண்டு தோறும் அந்த பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பது வறுமையின் வளர்ச்சிக்கு சான்று.

விபசார அழகிகள் கைது என்று சில பத்திரிகைகள் ரசனையோடு வெளியிடும் செய்திகள் அடிக்கடி வந்தாலும், நமது நாட்டில் பாலியல் தொழில் சட்ட விரோதமானது அல்ல என்பது பலருக்கு தெரியாத உண்மை. இந்த செய்திகளை வாசிப்பவர்களுக்கு, ‘ஆசை காட்டி அழைத்தாராம் என்ற வாசகம் பரிச்சயமானது. அதாவது, பொது இடத்தில் ஒருவரை பாலியல் உறவுக்கு அழைப்பதுதான் சட்டப்படி குற்றம். அதற்கென விடுதி நடத்துவதும், ஆள் பிடிக்க புரோக்கர் (இதற்கும் ஒரு நல்ல சொல்லை வீணாக்கிவிட்டனர்) வைப்பதும் குற்றங்கள். ஆக, ஏதோ ஒரு சட்டத்தை மீறாமல் தொழில் செய்ய முடியாது. இருந்தும் கொல்கத்தாவில் சோனாகச்சி, மும்பையில் காமாத்திபுர, டெல்லியில் ஜி.பி.ரோடு என்று ஊருக்கு ஊர் சில பகுதிகள் பாலியல் தொழிலிடங்களாக சுறுசுறுப்புடன் இயங்குகின்றன. சோனாகச்சி பெண்களுக்கு சமீபத்தில்தான் எல்..சி. காப்பீடு வழங்கப்பட்டது. உடலை விற்பது சிறந்த வர்த்தகமல்ல என்றாலும், வேறேதும் இல்லாதவர்களை பழிப்பதில் அர்த்தமில்லை. போலீஸ் பயம், சமூக அவமானம், தொல்லைகளில் இருந்து அவர்களுக்கு விடுதலை தேவை. அப்படியானால் ஒழிக்க முடியாத லஞ்சம், திருட்டு, கொலைகளையும் அங்கீகரிக்கலாமா என்று ஒரு கூட்டம் கேட்கிறது. இவர்களுக்கு இந்த நாட்டில் என்றும் பஞ்சமில்லை.