கல்லை வீசும் முன் கவனித்து வீசுங்கள்…..

இராஜிவ்காந்தி….

இப்போது மௌன சாமியார்களாக இருக்கிற மண்ணாங்கட்டித் தலைவர்களைவிட, அப்போதிருந்த இராஜிவ்காந்தி திறமையானவர்தான் என்ப்தில் இருவேறு கருத்துக்களுக்கு இடமில்லை. அப்படிப்பட்ட தலைவர்தான்…..

1991 மே 21ம் தேதி, ஸ்ரீபெரும்புதூரில் விடுதலைப் புலிகள் நடத்திய மனிதவெடிகுண்டுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார்.

அவரது படுகொலை கொடூரமானதா?….. அல்லது அவரால் இலங்கைக்கு அனுப்பப்பட்ட இந்திய அமைதிப் படை, 12000 அப்பாவித் தமிழர்களின் உயிரையும், 6000 தமிழ்ப் பெண்களின் கற்பையும் சூறையாடிக் கொண்டாட்டம் போட்டதே….. அது கொடூரமானதா? என்கிற விவாதங்கள் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

அந்தக் கதையின் அடுத்த கட்டம் இப்போது ஆரம்பித்திருக்கிறது.

இராஜிவ்காந்தியின் கொலைவழக்கில் குற்றவாளிகளாகத் தீர்மானிக்கப்பட்டவர்கள் — ஆயுள் தண்டணைக் காலத்தை விட அதிகமாக, ஏறத்தாழ 20 வருடங்களைச் சிறைச்சாலையில் கழித்துவிட்ட நிலையில்…. இறப்புக்கு நாள்குறிக்க பிரதிபாபட்டில் என்கிற பெருமாட்டி பேனாவை எடுத்திருக்கிறார்.

எப்போதோ கொடுக்கப்பட்ட தீர்ப்புக்கு இப்போதுதான் வர்ணம் பூச ஆரம்பித்திருக்கிறார்கள். உச்சநீதிமன்றத்தின் உறுதிப்படுத்தப்பட்ட தீர்ப்பு 1999ம் ஆண்டு மே 11ம் தேதியே உச்சரிக்கப்பட்டு, இவ்வளவு நாட்களாக, மாதங்களாக, வருடங்களாக….. கிணற்றில் போட்ட கல்லாகக் கவனிப்பாரின்றிக் கிடந்தது.

ஒரு கருணை மனுவைப் பரிசீலித்து உருப்படியான ஒரு முடிவை எடுப்பதற்கு– மூன்று ஜனாதிபதிகள், ஒரு உள்துறை அமைச்சகம், 11 ஆண்டுகள்…. என இவ்வளவும் தேவைப்பட்டிருக்கிறது. விவரங்கெட்டவர்கள் என்பதைத்தவிர வேறு என்ன சொல்லி இவர்களை அழைப்பது? அடேங்கப்பா… நமது நாட்டில் நீதிமன்றத் தீர்ப்புக்குத்தான் எவ்வளவு பெரிய மரியாதை? மத்தியஅரசே இப்படி நீதிமன்றத் தீர்ப்புகளைக் கேலிசெய்தால்…. பிறகு மற்றவர்கள் எப்படி மதிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியும்?

இப்போது மரணதண்டனை என்பதே மனித குலத்திற்கு எதிரானது என்கிற கருத்து உலகெங்கும் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான நாடுகளில் மரணதண்டனை என்பதே முற்றிலும் நீக்கப்பட்டுவிட்ட நிலையில், ஐக்கியநாடுகள் சபையும் பலமுறை தனது தீர்மானங்களின் மூலமாக மரணதண்டனையை சட்ட ஏடுகளிலிருந்து நீக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது. 1945-ல் ஐக்கியநாடுகள் சபை துவக்கப்பட்டபோது ஏழு நாடுகள்தான் மரணதண்டனை இல்லாத நாடுகளாக இருந்தன. ஆனால் இப்போது ஐக்கிய நாடுகள் சபையில் 192 நாடுகள் உள்ளன. அதில் 142 நாடுகளில் மரணதண்டனை நீக்கப்பட்டுவிட்டது.

கண்ணுக்குக் கண் என்பதையும்..பல்லுக்குப் பல் எனபதையும்…. காட்டுமிராண்டித்தனம் என்கின்றோம். ஆனால், அதையே நமது நீதிமன்றங்கள் செய்கிறபோது சட்டம் என்கிறோம். சட்டப்புத்தகங்களை மட்டுமே படித்துத் தீர்ப்புகள் வழங்குவதைத்தவிர்த்து, சட்டத்திற்கும் மேலான மனித நாகரீகத்தையும் நீதி மன்றங்கள் ஆராயவேண்டும்.

இதுவும் ஒருவகையில் கொலைதான்–“அரசுக் கொலை”.

உணர்ச்சி வசப்படுதல் மனிதஇயுல்பு, மனிதத்தவறு. அப்படி உணர்ச்சி வசப்பட்டோர் செய்துவிட்ட ஒரு தவறுக்கு, நீதிஅரசர்கள் முன்கூட்டியே மரணதேதியை நிர்ணயிக்கும்போது, அதுவே ஒருவகையில் மனிதத்தவற்றில் பெரும்தவறாகிப் போய்விடக்கூடிய வாய்ப்பு இங்கு அதிகமாகவே இருக்கிறது என்பதைப் பல வழக்குகளில் பார்த்திருக்கிறோம்.

இங்கு எத்தனை தீர்ப்புகள் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கின்றன? எத்தனை நீதிபதிகள் அவர்களுடைய தவறுகளுக்காகப் பதவியிலிருந்து தூக்கி வீசப்பட்டிருக்கிறார்கள்? துலாக்கோல் சாயாமல்தான் இங்கு நீதி வழங்கப்படுகிறதா? மேல்முறையீடு மேல்முறையீடு என்று போகிறபொழுது ஒவ்வொரு நீதிமன்றமும் ஒவ்வொரு தீர்ப்பை இஷ்டப்படி வழங்குகிறதே? எந்தத் தீர்ப்பைச் சரியென ஏற்பது? தவறான தீர்ப்புக்களால் இங்கு எத்தனை பேர் தண்டனைக்கு உள்ளாகியிருக்கிறார்கள் தெரியுமா? இதுவரை அவர்களுக்கு என்ன இழப்பீட்டை இந்த நீதிமன்றங்கள் வழங்கியிருக்கின்றன?

இப்படியெல்லாம் கேள்விகளை எழுப்புவதால்…. அவர்கள் மூவரையும் நான் ஆதரிக்கிறேன் என்று அர்த்தமல்ல. அரசும் நீதிமன்றமும் தவறாமல் கடைப்பிடித்துவருகிற அலட்சியத்தைச் சுட்டிக்காட்டவேண்டும் என்பத்ற்காகத்தான். 91-ல் நடந்த சம்பவத்துக்கு நீதிமன்றத் தீர்வு 99-ல்! அரசுத் தீர்வு 2011-ல்! எப்படி விமர்சிக்காமல் இருக்க முடியும்?

இதுவரை சுதந்திர இந்தியாவில் மட்டும் தூக்கிலிடப்பட்டவர்களின் எண்ணிக்கை 4500-க்கு மேல் இருக்கும் என்று மனித உரிமை அமைப்புகள் கணக்கிட்டிருக்கின்றன. தமிழகத்தில் இதுவரை 292 குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டுள்ளனர். பாவம்…இதில் எத்தனை அப்பாவிகள் பலிகடா ஆக்கப்பட்டார்களோ? ( இந்தியாவில் கடைசி மரணதண்டனை 2004-ம் வருடம் மேற்குவங்கத்தில் ஒரு சிறுமியை கற்பழித்துக் கொன்ற குற்றத்திற்காக தனஞ்சய சாட்டர்ஜி என்பவனுக்குக் கொல்கத்தா சிறையில் நிறைவேற்றப்பட்டது ).

“நூறு குற்றவாளிகள் தப்பினாலும் பரவாயில்லை, ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டு விடக்கூடாது” என்பது சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடு. ஆனால்….

எதற்காக என்பதே தெரியாமல், சதி என்றால் என்வென்றே அறியாமல், மளிகைக் கடையில் சாதாரணமாகக் கிடைக்கும் வெறும் 8 வோல்ட் பேட்டரி செல்லை சிவராசனுக்கு வாங்கிக்கொடுத்ததற்காகப் பேரறிவாளனுக்குத் தூக்குதண்டனை. எவ்வளவு ஓட்டை உடைசலான வழக்கு இது?

வாழப்பாடி ராமமூர்த்தி, ஜெயந்தி நடராஜன், மரகதம் சந்திரசேகர், மூப்பனார் போன்றவர்கள்…. எல்லா சமயத்திலுமே ராஜீவுடன் இருந்தவர்கள் குண்டு வெடிக்கும்போது மட்டும் எப்படி ராஜீவ் தனிமைப்படுத்தப்பட்டார்? அன்றைய குண்டு வெடிப்பில் இறந்த ஒரே காங்கிரஸ்காரர் ராஜீவ் மட்டுமே. மற்ற எல்லோருமே பாதுகாப்பிற்காக வந்த காவல்துறையினர்தான். அது எப்படி?

பல்லாயிரக்கணக்கான அப்பாவிகளைக் கொடூரமாகக் கொலைசெய்யக் காரணமான போர்க்குற்றவாளிகள் பக்கத்து நாட்டில் ஜனாதிபதி என்றும் பாதுகாப்பு செயலர் என்றும் கோலோச்சிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு என்ன தண்டணை?

அந்த ராஜபக்சேவுக்கு ராடார் மற்றும் ஆயுதங்கள் கொடுத்து லட்சம் தமிழர்களைக் கொன்று குவிக்க உதவிய சோனியா & கோ வுக்கு என்ன தண்டனை?

இறுதியாக இரண்டு விஷயங்கள்….

ஒன்று– ராஜீவைப் பழி வாங்குவதற்கு நியாயமான காரணங்கள் நிறையவே புலிகளிடம் இருந்திருக்கலாம். ஆனால், அதைச் செயல்படுத்தும் இடமாகத் தமிழகத்தைத் தேர்ந்தெடுத்தது மிகப்பெரிய தவறு.

இரண்டு– இந்தக் கருணை மனுவின்மீதான மிகத்தாமதமான முடிவேகூட…. மரணதண்டணைத் தீர்ப்பில் மாற்றம் வருவதற்கான ஒரு வாய்ப்பாகவும் மாறுவதற்கு சட்டத்தில் இடமிருக்கிறது.