நாம் மரியாதை கொடுக்கவேண்டும் என்று நினைக்கிற அளவுக்கு….

ராஜீவ் கொலையில் மூன்று பேருக்கும் தூக்குத் தண்டனை அளித்தது அரசியல் சட்டப்பட்டி தவறானது.. ..

அந்த அமர்வில் நான் இருந்தது துரதிருஷ்டவசமானது… …

22 வருடங்களாக சிறையில் இருக்கும் மூவரையும் தூக்கிலிட்டால், அது இரண்டு முறை தண்டனை கொடுத்ததற்கு சமம்…… –

–ராஜீவ் கொலையில் மூவருக்கும் தீர்ப்பளித்த நீதிபதி கே.டி.தாமஸ்,  இப்படி மனம் நொந்து  சொல்லியிருக்கிறார்.

எனது எழுத்துக்களில்- எப்போதுமே இந்தக் கோபம் ஒளிந்திருப்பதை நீங்கள் உணர்ந்திருக்கலாம்.

இந்த நீதி, நீதிமன்றம், நீதிபதிகள், அவர்கள் வழங்குகிற தீர்ப்புகள்…..  இவைகளுக்கு அடிப்படையாக இங்கு புழங்கப்பட்டுக் கொண்டிருக்கிற சட்டப் புத்தகங்கள்….

இவை எவற்றுக்குமே நாம் மரியாதை கொடுக்கவேண்டும் என்று நினைக்கிற அளவுக்கு- அவைகள் இருந்ததில்லை.

இதைத்தான் நான் ” நீதிதேவன் மயக்கம்” என்று தொடராகவே எழுதினேன்.

நீதிமன்றங்களுக்கும்- வழக்கறிஞர் உடைகளைப் போலவே- கருப்பு நிறம் என்று அடித்துவிட்டால்….

கணக்கு நேராகிவிடும்.  

“தப்பு செய்யுங்கள், தண்டணை இல்லை….. வழிகாட்டும் நீதித்துறை!”

நீதித்துறையின் கண்ணியத்திற்கு மீண்டும் ஒரு களங்கம் நேர்ந்திருக்கிறது.

அவர்களை அடையாளப்படுத்திக் காட்டுகிற கோட்டும் கவுனும்– கறை படிந்து கறை படிந்தே கறுப்பு நிறமாக மாறியதோ என்று நினைக்கத் தோன்றுகிற அளவுக்கு… நிகழ்வுகள் கசப்பானவைகளாக இருக்கின்றன.

அரசியல்வாதிகள் மீதும் அருவெறுப்பு வந்துவிட்ட நிலையில், நாட்டு மக்களின் நம்பிக்கைக்கு உரிய ஒரே இடமாக மிச்சமிருப்பது நான்காம் தூண் எனப்படும் நீதிமன்றம் மட்டுமே.

ஆனால்…. குற்றச்சாட்டுக்களைத் தங்கள் மீது அள்ளிக் குவித்துக் கொள்வதில், அரசியல்வாதிகளுக்குப் போட்டியாக அடுத்த இடத்தில் ஓடிவந்து கொண்டிருக்கிற ஒருசில நீதிபதிகளைப் பார்க்கிற பொழுது…. கடைசி நம்பிக்கையும் காணாமல் போய்விடும்போல் இருக்கிறது.

தற்பொழுது…. கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி சௌமித்ரா சென் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

எதற்காக ராஜினாமா செய்திருக்கிறார்? வயது ஆகிவிட்டது என்பதற்காகவா? அல்லது தனது பணிக்காலத்தில் நீதித்துறைக்குத் தேவையான அளவுக்குத் திறம்படப் பணியாற்றிவிட்டோம் என்கிற திருப்தி காரணமாகவா? என்ன காரணம்?

கடுமையான நிதிமோசடிக் குற்றச்சாட்டில் கண்டணத் தீர்மானம்வரை வந்து, பாராளுமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டு… “என்மீதான கண்டணத் தீர்மானம் நிறைவேற்றப் பட்டால் நான் கூரை மீது ஏறி நின்றுகொண்டு சத்தம் போட்டுக் கத்துவதைத்தவிர வேறு வழியில்லை” என்று கத்திவிட்டு வந்து….. இனித் தப்பிக்கவே முடியாது என்கிற நிலையில் ராஜினாமா செய்திருக்கிறார்.

இந்த அப்பாவியின் வாதங்களை மாநிலங்களவை ஏற்கவில்லை என்பதையும், ஏற்கெனவே தலைமை நீதிபதி நியமித்த குழு இவர் மீதான குற்றங்கள் உண்மை என்று உறுதிப்படுத்தியதையும் நீதிபதி சௌமித்ரா சென் மிகவும் சௌகரியமாக மறைக்க முயல்கிறார்.

அவரது பதவி விலகல் நீதித்துறைக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கண்டனத் தீர்மானம் கொண்டுவரப்பட்டுத் தண்டிக்கப்பட்ட முதல் நீதிபதி என்கிற அவப்பெயரை உருவாக்காமல், அவராகவே பதவி விலகியது நல்லதுதான் என்கிறார்கள். ஆனால் இது நியாயமானதுதானா?

குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்துவிடுவதால் மட்டும் அவர் புனிதராகி விடுகிறாரா? ஓர் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருக்கிறவரைத் தண்டனைக்கு உட்படுத்தாமல் வெகு எளிதாகப் பதவி விலகிச் செல்ல சட்டமும் நீதித்துறையும் எப்படி அனுமதிக்கிறது? இந்தியாவில் மட்டும் நீதிபதிகளுக்கு என்று ஏதாவது தனிச்சட்டம் இருக்கிறதா?

1993-ம் ஆண்டு நீதியரசர் வி.இராமசாமிக்கு எதிராகவும் இதேமாதிரிதான் பாராளுமன்றத்தில் ஒரு கண்டணத் தீர்மானம் (முறைகேடுகளுக்கான குற்றச்சாட்டின் கீழ்) கொண்டு வரப்பட்டு அவர் ஆஜரானார். ஆனால், ஓட்டெடுப்பில் காங்கிரஸ் எம்.பி.க்கள் கலந்து கொள்ளாததால் அவ்ர் மீதான கண்டணத் தீர்மானத்தை நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது. இதன் மூலமாக அவ்ர் தண்டணையிலிருந்து தப்பிக்க வழி ஏற்படுத்தப்பட்டது.

இதேபோன்றுதான், நில அபகரிப்பு மற்றும் பல முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு ஆளான நீதிபதி தினகரன், சிக்கிம் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி பதவியிலிருந்து விலகிக்கொண்டார். அவர் விலகிக்கொண்டதும் அவர் குற்றமற்றவராகிவிட்டார்!

முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்தவர் கே.ஜி பாலகிருஷ்ணன். அவர் தனது பதவியை முறைகேடாகப் பயன்படுத்தித் தனது மருமகனுக்காக கேரள மாநிலத்தில் நிறைய சொத்துகள் சேர்த்துக் கொடுத்துள்ளார் என்று புகார் எழுந்தது. அதை விசாரிக்கத் தோண்டியபோது…. அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுக்கு அவர் ஆளானார். நீதித்துறையே ஆட்டம் கண்டது.

அதேபோல….. தமிழக நீதிபதி ஒருவர் தான் பிறந்தது 1947 அல்ல, 1950 என்று கூறிப் பதவியில் நீடிக்க எடுத்த முயற்சி சுப்ரீம் கோர்ட்டால் முறியடிக்கப் பட்டிருக்கிறது. தான் பிறந்ததும் தனது தந்தை எழுதிய ஜாதகம் என்று ஒரு நோட்புக்கை ஆதாரமாகச் சமர்ப்பித்து இருந்தார் நீதிபதி. (சர்டிபிகேட் எல்லாம் என்ன ஆச்சு சார்?) நோட்புக்கை அச்சிட்ட திருச்சிக் கம்பெனியின் முகவரி அதில் இருந்தது. முகவரியின் கீழே பின்கோடு நம்பரும் இருந்தது. இந்தியாவில் பின்கோடு அமலுக்கு வந்ததே 1972ல். அதன் பிறகு அச்சிட்ட நோட்டில் எப்படி 1947ல் ஜாதகம் எழுதியிருக்க முடியும் என்று கேட்டு நீதிபதியின் அப்பீலை டிஸ்மிஸ் செய்தது சுப்ரீம் கோர்ட். இப்படியும் சில நீதிபதிகள்!

ஒரு அரசு ஊழியர் என்ன வேண்டுமானாலும் தவறு செய்து கொள்ளட்டும். கலையில்லை. ஆனால்,  மாட்டிக் கொள்ளும் பட்சத்தில், அவர் தண்டணையிலிருந்து தப்பிப்பதற்கு…. தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டால் மட்டும் போதும், அவர் மீது மேல்நடவடிக்கை எதுவும் தேவையில்லை என்று வழிகாட்டுகிறதா நீதித்துறை?

ஊருக்கெல்லாம் நியாயம் சொல்லும் நீதித்துறை தனக்கு மட்டும் வேறு நியாயத்தைக் கடைப்பிடிப்பது என்ன நியாயம்? நீதி வழங்குபவர்கள் அல்லவா நேர்மைக்கும் நியாயத்துக்கும் வழிகாட்டிகளாக இருக்க வேண்டும்! நீதிபதிகளே குற்றவாளிகளாக இருக்கும்போது, அவர்களுக்கு யார் தண்டனை வழங்குவது?

அரசியல் சட்டத்தின் மூலம் நீதிபதிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிற அதிகாரம், அந்தஸ்து எல்லாமே கடவுளுக்கு நிகரானது. ஆனால், அதற்கு ஏற்றாற்போல எத்தனை நீதிபதிகள் இங்கு நடந்துகொள்கிறார்கள்? சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர்களாக எத்தனை நீதிபதிகள் இங்கு இருக்கிறார்கள்?

காசு வாங்கிகொண்டு ஜனாதிபதிக்கே கைது வாரண்ட் பிறப்பித்த நீதிபதியின் கூத்து, இன்னும் நிழலாடிக்கொண்டுதானே இருக்கிறது…. மறக்கமுடியுமா?

நீதித்துறையில் புரையோடிப் போயிருக்கிற ஊழலைப்பற்றி உச்சநீதிமன்றமே வெளிப்படையாக வேதனைப்படவில்லையா? வழங்கப்பட்ட தீர்ப்புகளல்ல, வாங்கப்பட்ட தீர்ப்புகள் என்று எத்தனை விமர்சனங்கள் நெருப்புத் துண்டுகளாக நீதிதுறையின் மீது விழுந்திருக்கின்றன?

சுதந்திரம் அடைந்து 64 ஆண்டுகள் கடந்தபிறகும்கூட….. பல்லாயிரம் கோடி ரூபாய்களை ஆண்டுதோறும் சம்பளமாக விழுங்கும் நிர்வாக இயந்திரமும், நீதித்துறையும் மாற வேண்டும் அல்லது மாற்றப்பட வேண்டும்