உள்ளங்கையில் அள்ளிவைத்த காதல்!

L

எண்ணிக்கொண்டிருக்கும் ரூபாய் நோட்டுக்களில்….
டவுன் பஸ்ஸின் சீட்டுக்குப் பின்புறங்களில்….
கழிவறையின் உட்புறச் சுவர்களில்….

‘ஐ லவ் யூ ‘ என்று யாரோ ஒரு பெண்ணுக்கு யாரோ ஒரு ஆண் கிறுக்கிய செய்தியைக் காண நேரிடுகிறது.

இந்த ஆதாம் ஏவாள்கள் யாராகவும் இருக்கலாம். ஆதி மனிதனில் ஆரம்பித்த அந்த சிலிர்ப்பு இன்று வரை அப்படியே ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு விதமாகத் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.

பார்வைக்கு மறு பார்வை எதிர் தரப்பில் பதிலாய்க் கிடைக்கிறபோது, மனதுக்குள் வானவில் தோன்றுகிறது. அவளது தலைமுடியொன்றைத் தனது விரல்களில் சுற்றி மோதிரம் எனப் பெருமைப்படுகிறான். அவளது பாதம்பட்ட மண்ணைக் கவனத்துடன் அள்ளித் தனது வழிபாட்டுக்குப் பாதுகாக்கிறான். இப்படிக் காதல் எல்லோரையும் தனது உள்ளங்கையில் அள்ளி வைத்துக் கொள்கிறது.

எதிர்த்தரப்பில் சம்மதம் கிடைக்காத போது எல்லாம் தொலைத்தவர்களாகச் சிதைந்து போகிறார்கள். நாட்கள் வலி கொண்டதாக நகருகின்றன. தன்னை உணர்த்தி விடவும், எதிர் மனதில் இடம் பிடித்து விடவும் என்னெனவோ வித்தைகள் அரங்கேறுகின்றன. போகிற இடங்களுக்கெல்லாம் போகிறார்கள். பார்க்கிற இடங்களிலெல்லாம் போய் நிற்கிறார்கள்.

பயமுறுத்தியோ, இரக்கத்தை உற்பத்தி செய்தோ, எப்படியாவது ஒரு பெண்ணை அடைய ஆண் வெறி பிடித்து நிற்கிறான். முடியாத நிலையில், தான் விரும்பிய பெண்ணின் மீது தாக்குதல் தொடுக்கவும், பலாத்காரம் செய்யவும் கூட சில சமயங்களில் துணிந்து விடுகிறான்.

காதலிக்கும்போது இருவரும் உள்ளங்களில் ஒன்றாய் ஏற்றி வைத்திருந்த அகல்விளக்கை அணைத்துவிட்டு, திருமணத்திற்குப் பிறகு ஆளுக்கொரு டார்ச்லைட்டைக் கையில் வைத்துக் கொள்கிறார்கள்.

இதையெல்லாம் தாண்டி…. ஒரு சில காதல், ஒரு சில காதலர்களே…. காலத்தையும் வாழ்க்கையையும் வென்றிருக்கிறார்கள்.

அவர்களுக்கு- நமது அட்வான்ஸ் காதலர் தின நல்வாழ்த்துக்கள்!

Advertisements

லவ்வர்ஸ் டே!

லவ்வர்ஸ் டே!

கொஞ்சம் லேட்டுதான்….

இருந்தாலும் மன்னிச்சிட்டுச் சிரிங்க…

அப்படியே அவங்களை வாழ்த்துங்க!

காதலென்ன கண்ணாமூச்சி ஆட்டமா?

தற்போதைய அவசர உலகில், திருமணமான மூன்றே மாதத்தில் மனக்கசப்பு ஏற்பட்டு, டைவர்ஸ் கேட்டு நீதிமன்றத்தின் நெடிய படிக்கட்டுகளை மிதிக்கும்  தம்பதியரின் எண்ணிக்கை,  நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

திருமணத்தின்போது- ஆண்களுக்கு,21 வயதும், பெண்களுக்கு 18 வயதும் நிரம்பியிருக்க வேண்டும் என அரசு அறிவுறுத்துகிறது. ஆனால், தற்போதைய அவசர உலகில்- இளம் திருமணம், காதல் திருமணம், ஓடிப்போதல், சவால் காதல், சினிமாத்தனம் போன்றவையே அதிகரித்துக் காணப்படுகிறது.

இதன் விளைவாக- பல்வேறு சிக்கல்களுக்கு உள்ளாக நேரிடுகிறது. சரியான புரிந்துணர்வு இல்லாததால், திருமணமான ஒரு சில மாதங்களிலேயே தம்பதிகளுக்கு இடையே மனக்கசப்பு உருவாகிறது.

காதலிக்கும்போது இனிக்கிற விஷயங்கள்…. வாழ்க்கையின் வலியை உணருகிற போதுதான் உருமாறுவது தெரிகிறது.

ஆணுக்கு நிகராகப் பெண்களும் தங்களை மனரீதியாகவும், தொழில் ரீதியாகவும் வளர்த்து வருவதால், திருமண முறிவைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. ஒருவனுக்கு ஒருத்தி என்ற இந்திய கலாச்சாரம் மாறி, வெளிநாட்டு மோகம் பரவ ஆரம்பித்துள்ளது.

கல்யாணத்துக்கு முன்பாகவே ஒன்றாகச் சுற்றுகிறார்கள். டேட்டிங், சினிமா, ஐஸ்கிரீம் பார் எனச் சென்று வந்தவர்களுகு….. கணவன் மனைவி ஆனபிறகு என்னென்ன சிக்கல்களையும் சிரமங்களையும் எதிர்கொள்ளவேண்டி வரும் என்பதெல்லாம் புரிவதில்லை.

ஆசை அறுபது நாள்… மோகம் முப்பது நாள்…. ஆகமொத்தம் தொண்ணூறு நாட்கள் முடியும்போது….. உரசல் ஆரம்பித்துவிடுகிறது.

மூன்று மாதங்களில் முடிந்து போகிறது அழகான இந்தத் திருமண பந்தம்.

காதலிக்கும்போது இனித்ததெல்லாம்….. கஷ்டப்பட ஆரம்பிக்கும்போது கசக்க ஆரம்பித்துவிடுகிறது.

இதையெல்லாம் தாண்டி…..

வாழ்ந்து காட்டுகிறவர்கள் எனக்குத் தெரிந்து ஒருசிலர் இருக்கிறார்கள். வாழ்ந்து காட்டுவோம் என்று சொல்கிற ஒருசிலரும் இருக்கிறார்கள்.

ஆண்டவன் எல்லா அருளும் அவர்களுக்குப் புரியவேண்டும் என்பதே எனது ஆசை!

அழகான காதல் கதை!

 

“Time” என்கிற கொரியன் படம் பார்த்தேன்…. அற்புதமான- அழகான படம்.

இனிமையான காதலின் இடையே ஆதிக்கம் நுழைந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்பதை உளவியல் ரீதியாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.

ஸீ ஹீயும் (See hee) ஜி ஹூவும் ( Ji hoo) காதலர்கள்…ஸீ ஹீக்கு தன் காதலன் ஜி மீது அளவு கடந்த காதல்… அவன் யாருடனும் பேசக்கூடாது, தன்னைத் தவிர யாரையும் நினைக்கக் கூடாது என அவன் மீது ஆதிக்கம் செலுத்துகிற ரகம்.

ரெஸ்டாரெண்டில் காத்திருக்கும் நேரத்தில் அங்கு வேலை செய்யும் பெண்ணிடம் ஜி பேசியதற்காக அவனோடு சண்டை போடுகிறாள்… ரெஸ்டாரெண்டிற்கு வெளியே கார் எடுக்க சிரமப்படும் இரு பெண்களுக்கு ஜி உதவி செய்ததற்காக, ஜி யிடமும், அந்தப் பெண்களிடமும் சண்டையிடுகிறாள் ஸி…

இரவில் தனித்திருக்கும் போது, அந்தப் பெண்களை நினைத்தபடி தன்னருகில் ஜி படுத்திருப்பதாக அவள் குற்றம் சாட்டுகிறாள்… மாறிக் கொண்டே இருக்கும் அவளது மனநிலையோடு மல்லுக்கட்ட முடியாமல் ஜி திணறுகிறான்…

சண்டைகள் தொடர்கின்றன… ஸீ யின் மனநிலை நாளுக்கு நாள் மோசமாகிறது… அவன் மீது தான் செலுத்துகிற ஆதிக்கத்தை அதிகப்படுத்துகிறாள்…

அதன் கொடூரம் தாங்க முடியாமல் அவளுக்குப் பதில் சொல்லும் ஜி யிடம், ‘”உனக்கு என்னை சலித்துப் போய்விட்டது” என்று சண்டையிடுகிறாள்….

மறுநாள் அவள் காணாமல் போய்விடுகிறாள்… ஜி அவளைத் தேடியலைகிறான்….. தொல்லை விட்டது என நிம்மதியாக இருக்கச் சொல்லி நண்பர்கள் அறிவுரை சொல்கிறார்கள்… ஆனால் ஜி யால் ஸீ யை மறக்க முடியவில்லை..

ஆறு மாதங்களுக்கு பிறகு திடீரென ஸீ திரும்பி வருகிறாள்.. ஜி க்கு தன் முகம் அலுத்து விட்டது என்பதால் பிளாஸ்டிக் சர்ஜரி செய்த திருத்தப்பட்ட முகத்துடன் வருகிறாள்… ஜி க்கு அவள் ஸீ எனத் தெரியாதவாறு அவனுடன் நெருங்கிப் பழகுகிறாள்… ஒரு குழந்தையிடம் அவனுக்கு வாழ்த்து அட்டை தந்து விடுகிறாள்… அதில் இருக்கும் கையெழுத்து ஸீ யுடையது என அவன் புலம்புவதை பார்த்து ரசிக்கிறாள்.. தன் மேல் அவனுக்கு இன்னும் காதல் இருப்பது அவளை மகிழ்ச்சிப்படுத்துகிறது….

“ஸீ வந்துட்டா நீ என்ன செய்வே?” என்கிற அவளது கேள்விக்கு, “அவ இனி வரமாட்டா” என சொல்கிறான் ஜி… அந்தப் பதில் அவளுக்கு எரிச்சலை வரவழைக்கிறது. ஆனாலும், அவனுக்கும் அவளிடம் ஏதோ ஈர்ப்பு வர இருவரும் நெருங்கிப் பழகுகிறார்கள்… ஆனால் நெருங்கிப் பழகும்போது அவள் பழைய குணத்தை மீண்டும் காண்பிக்கிறாள்… அவன்மீது ஆதிக்கம் செலுத்துகிறாள்… அன்பின் பெயரால் அழுத்தத் தொடங்குறாள்…

ஜீ க்கு அவள்தான் ஸீ எனத் தெரியவருகிறது…. இந்த முறை அவன் காணாமல் போய்விடுகிறான்..…

சில மாதங்களுக்கு பிறகு,, தன் முகத்தை மாற்றியபடி அவள் முன் வருகிறான்… ஆனால் அவளால் அவனோடு பேசவே முடியவில்லை…

தன் பழைய காதலனைத் தேடி பைத்தியம் பிடித்தவள் போல் அலைகிறாள்…. ஒருநாள் தெருவில் ஜி யைப் போல் நடை கொண்ட ஒருவனைப் பார்க்கிறாள்… அவனைப் பின் தொடர்கிறாள்… அவன் அவளுக்குப் போக்குக் காட்டியபடி ஓடிக்கொண்டே இருக்கிறான்…. அவளும் வேகமாகப் பின் தொடர்ந்து ஓடுகிறாள்…..

எதிர்பாராத விதமாக அவன் ஒரு விபத்தில் சிக்கி விடுகிறான்… ஸீ ஓடிவந்து அது ஜி தானா எனப் பார்க்கிறாள்… அடையாளம் காண முடியாத அளவிற்கு முகம் சிதைந்து போயிருக்கிறது.. அவள் அழுது புலம்புகிறாள்.. அது ஜி யா இல்லையா, என்பதை சொல்லாமலே படம் முடிந்து போகிறது….

அடுத்தவர் மீது ஆதிக்கம் செலுத்தும் அன்பு எத்தகைய மன நெருக்கடியில் இருவரையும் தள்ளும் என்பதை படம் அழகாகச் சொல்கிறது…

வாழ்க்கைப் பாதையில் எத்தனையோ பேரைச் சந்திக்கிறோம்.. சிலர் மட்டுமே நம்மை என்னவோ செய்கிறார்கள்… சிலரோடு மட்டுமே நமக்கு பேச முடிகிறது… சிலரை மட்டுமே நேசிக்க முடிகிறது… அந்த நேசத்தைப் பாதுகாக்க என்னவெல்லாம் செய்கிறோம்….

சுதந்திரமும், புரிதலுமே அந்த நேசத்தைத் தக்க வைக்கும் என்பதை அறியாத ஸீ போன்றவர்கள்…. தங்களையும் தொலைத்து, தன்னைச் சார்ந்தவர்களையும் தொலைத்து விடுகிறார்கள்…

ஒன்றிற்கு மற்றொன்றைப் பிடிப்பதில்லை எப்போதும்!

 

மனைவி மட்டும்தான் கணவனோட பேர தன்னோட பேருக்குப் பின்னால சேத்துக்கணுமா?

அதேமாதிரி…..

கணவனும் மனைவியோட பேரச் சேத்துகிட்டா என்ன கவுரவக் குறைச்சல் வந்துடப் போகுது?

*******************

மனிதக் கண்டு பிடிப்புகளில் அபத்தமானது ஜாதி மதங்கள்….. அற்புதமானது காதல்.

இதில் கொடுமை என்னவென்றால்…..

அதில் ஒன்றிற்கு மற்றொன்றைப் பிடிப்பதில்லை எப்போதும்!

*******************

சூரியன் உதிப்பதற்கும் மறைவதற்கும் நல்ல நேரம் பார்ப்பதில்லை.

ராகு காலம் பார்த்து பூமி சுற்றுவதை நிறுத்திக் கொள்வதில்லை.

காற்றும் கடல் அலையும் இரவு பகல் எதையும் பார்பதில்லை.

பறவைகளும் விலங்குளும் எந்த நட்சத்திரத்தில் பிறந்தன.

பாழாய்ப் போன மனித இனத்திடம் மட்டும் எப்படி வந்தது நாளும் கிழமைகளும்.

*******************

இதுக்குப் பயந்துக்கிட்டுத்தாண்டா….

இதுக்குப் பயந்துக்கிட்டுத்தாண்டா….

நாங்க இந்தப் பொண்ணுங்களை நம்பி-

காதலும் பண்ணறதில்லை….. 

கேர்ள் ஃபிரண்டும் வச்சுக்கிறதில்லை!