புத்திசாலிங்கதான்!..

பீகார் மாநிலத்தில்– 2007ம் ஆண்டில் நீர்ப் பாசனத்துறைச் செயலராக இருந்தவர் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிவ் சங்கர் வர்மா.

அந்த அதிகாரி மீது வந்து குவிந்த ஊழல் புகார்களின் காரணமாக, அவரது வீடு, அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறைப் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

சோதனையில், கணக்கில் வராத ரூ. 1.43 கோடி மதிப்பிலான அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களின் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. 9 கிலோ தங்கக் கட்டிகள், ரூபாய் 17 லட்சம் ரொக்கம், ரூ. 20 லட்சம் மதிப்பிலான பங்கு மார்க்கெட் முதலீட்டுப் பத்திரங்கள், ரூ. 81 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் ஆடம்பரப் பங்களாக்கள் இதில் அடங்கும். (அடேங்கப்பா… படிக்கும்போதே மூச்சு வாங்குது!).

இதையடுத்து, வருவாய்க்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக சிவ் சங்கர் வர்மா உள்ளிட்ட அவரது உறவினர்கள் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு பீகார் சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. கடந்த ஆண்டில் வர்மா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இந்நிலையில், 2009ல் பீகார் சிறப்பு நீதிமன்றங்கள் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி, ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளபோதே, குற்றம்சாட்டப்பட்டவர்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்ய அரசுக்கு அதிகாரம் அளிககப்பட்டது.

கடந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போதும், ‘ஊழல் அதிகாரிகளின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அரசு பள்ளிகளுக்கு ஒதுக்கப்படும்” என்று நிதிஷ்குமார் அறிவித்திருந்தார். அதே போல, தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வரானதும் நடவடிக்கை எடுக்கத் தொடங்கினார் நிதிஷ்குமார்.

முதல் நடவடிக்கையாக, பாட்னாவில் பெய்லி சாலையில் வர்மாவுக்குச் சொந்தமான மூன்று மாடி ஆடம்பர பங்களாவை அரசு பறிமுதல் செய்தது. தனது 3 மாடி கட்டிடத்தைப் பறிமுதல் செய்ததை எதிர்த்து வர்மா தாக்கல் செய்த மனுவும் ஐகோர்ட்டில் தள்ளுபடியானது. இதையடுத்து, இந்தக் கட்டிடத்தை மனித வளத்துறையிடம் அளித்து, அதைப் பள்ளிக்கட்டடமாக மாற்ற அரசு முடிவு செய்தது. இதற்கு, பீகார் அமைச்சரவை கடந்த 6ம் தேதி ஒப்புதல் அளித்தது.

இதையடுத்து, ருக்கன்புரா முசாரி என்கிற குடிசைப் பகுதியில் செயல்பட்டு வந்த ஆரம்பப் பள்ளிக்கூடம், பறிமுதல் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் ஆடம்பர பங்களாவுக்கு மாற்றப்பட்டது. இந்த பள்ளியில் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வளவு நாட்களாக குடிசைப் பகுதியில் இயங்கி வந்த பள்ளி, புதிய கட்டிடத்திற்கு மாறியதில் மாணவர்களும் ஆசிரியர்களும் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். பீகாரில் ஊழல் சொத்து பறிமுதல் செய்யப்பட்டு, பள்ளிக் கூடமாக மாறியது இதுவே முதல் முறை. இதே போல், இன்னும் 16 ஊழல் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவைகளும் விசாரணைக்குப் பிறகு இதேமாதிரி பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பின் தங்கிய மாநிலங்களில் ஒன்றான பீகாரில் இருந்து இந்த மாதிரியான மாற்றத்திற்குப் பிள்ளயார் சுழி போடப்பட்டிருப்பதை….. பார்த்து ரசிப்பதோடு நிற்காமல்,  தமிழ் நாட்டிலும் இதை அமுல்படுத்தினால்…… ஊருக்கொரு பள்ளி உருப்படியாகக் கிடைக்கும்.

ஓ…. அதனாலதான், நம்ம ஊர்ல ஊழல் செய்தவங்க எல்லாம், அவங்களே பள்ளிக்கூடமும் காலேஜும் கட்டி நடத்த ஆரம்பிச்சிட்டாங்களோ?

Advertisements

நமீதா எடுத்தது நல்ல மதிப்பெண்கள்தான்!…

குஜராத்திலிருந்து இரண்டு பேர்
வந்தார்கள்…..

அரைகுறை ஆடையுடன் வந்த
அவர்கள்…..

இந்தியா முழுவதையும்
ஆட்டம் காண வைத்துவிட்டார்கள்….

இருவரில் ஒருவர்….
மகாத்மா காந்தி!

இன்னொருவர்?……
நம்ம நடிகை நமீதா!

அந்த நமீதாவிடம்தான் இந்தப் பத்திரிகையாளப் புண்ணியவான்கள், அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதப் போராட்டம் குறித்துக் கருத்துக் கேட்டிருக்கிறார்கள். ஆனாலும் பரவாயில்லை….நமீதாவின் கருத்தும் கூட நன்றாகத்தான் இருக்கிறது.

“அன்னா ஹஸாரேவின் போராட்டம் வெறும் பரபரப்புச் செய்திக்குதான் இன்று உதவிக் கொண்டிருக்கிறது. இந்தப் போராட்டத்தால் எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை. மாற்றம் மக்களிடமிருந்துதான் வரவேண்டும்.

நாட்டில் இன்றைக்கு முக்கியப் பிரச்சினை தீவிரவாதம்தான். அதை ஒழிக்கத்தான் நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்று பாருங்கள்.

ஊழல் ஏதோ இன்று நேற்று வந்துவிடவில்லை. பல நூறு ஆண்டுகளாக இந்த நாட்டில் வேரூன்றிப் போன ஒன்று. அதை இந்த மாதிரி திடீர் போராட்டங்களால் ஒழித்துவிட முடியாது. இந்தப் போராட்டத்தை மக்களிடம் கொண்டு போக வேண்டும்.

ஹஸாரே அரசியலமைப்புடன் சண்டை போட்டுக் கொண்டிருப்பது தவறு. லஞ்சம் தரக்கூடாது என்ற உணர்வை முதலில் மக்களிடம் உண்டாக்க ஹஸாரே போன்றவர்கள் முயற்சிக்க வேண்டும். கொடுப்பதை நிறுத்தினால் வாங்குவதும் நின்று போகும். குறிப்பாக கார்ப்பரேட் நிறுவனங்கள், பெரிய மனிதர்கள் காரியம் சாதிக்க லஞ்சம் கொடுப்பதை நிறுத்தட்டும்.

நான் குஜராத் மாநிலத்தில் பிறந்தவள். காந்தி பிறந்த மண்ணில் பிறந்த எனக்கு காந்தீய போராட்டத்தின் அடிப்படை தெரியும். ஹஸாரேயின் போராட்டம் காந்தீய போராட்டமல்ல. உண்ணாவிரதம் இருப்பவர்கள் எல்லோருமே காந்தியாகிவிட முடியாது. காந்தியுடன் மக்கள் இருந்தார்கள். 100 சதவீத வெற்றி அவருக்குக் கிடைத்தது. ஹஸாரே போராட்டம் சிலரால் திட்டமிடப்பட்டதாக தெரிகிறது. இதற்கு 20 சதவீத பலன் கூட இருக்காது.

இப்போதுள்ள அரசியல் சட்டமும், தன்னிச்சையான அமைப்புகளுமே கூட லஞ்சம் வாங்குபவர்களை தண்டிக்கப் போதுமானது. சமீபத்தில் ஒரு நீதிபதி மீதே பாராளுமன்றம் நடவடிக்கை எடுத்திருப்பதை கவனிக்க வேண்டும்,” என்று கருத்துக் கூறியிருக்கிறார்.

ஹஸாரேவின் இந்தப் போராட்டத்தின் பின்னணியில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக கூறப்படுவது குறித்துக் கேட்டதற்கு, “இருக்கலாம். அரசியல் நோக்கம் இல்லாமல் இருந்தால்தான் ஆச்சர்யம். இந்தியா பரந்த நாடு. என்ன வேண்டுமானாலும் நடக்க வாய்ப்புள்ளது,” என்றிருக்கிறார் நமீதா.

இந்தப் போராட்டம் தெற்கு மாநிலங்களில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, “அது உண்மைதான். காரணம், இங்கே அதைவிட முக்கிய பிரச்சினைகள் இருப்பதாக மக்கள் கருதலாம். ஹஸாரே குறைந்தபட்சம் இந்த மாநில மக்களிடம் பிரச்சாரம் கூட செய்யவில்லையே. இதை அவருக்கும் அரசுக்குமான பிரச்சினையாகத்தான் ஹஸாரே பார்க்கிறார். இதில் மக்களுக்கு என்ன வேலை இருக்கிறது?” என்று தேர்ந்த அரசியல்வாதி மாதிரி தெளிவாகப் பதிலளித்திருக்கிறார் நமீதா.

சொன்னது யார் என்பதல்ல முக்கியம். சொல்லப்பட்ட கருத்துக்கள்தான் முக்கியம்.

அந்த வகையில்…. அரசியலில் அடியெடுத்து வைப்பதற்கான முதல் கட்டத் தேர்வில் நமீதா எடுத்திருக்கிற மதிப்பெண்கள் நல்ல மதிப்பெண்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

மொழிபெயர்க்கப் படாத மௌனங்கள்…

பாவப்பட்ட இந்தப் பாரத தேசத்தில்தான்…. என்னென்ன கூத்துக்கள் ஒவ்வொருநாளும்?

ஒருவேளை உணவுக்குக் கூட வழியில்லாமல் வயிற்றில் ஈரத்துணியைக் கட்டிக்கொண்டு, வாழும்போதே செத்துக்கொண்டிருக்கும் மக்கள் கோடிக்கணக்கில் இருக்கிற நம் நாட்டில்…. உண்ணாவிரதம் இருப்பதை ஒரு போராட்டமாகச் செய்கிறேன் என்று சொல்வதேகூட…. ஒருவகையில் அவர்களைக் காட்டிக் கிண்டல் செய்வது போலத்தான்.

அரசியல் தலைவர்களிலிருந்து அன்னா ஹசாரேக்கள் வரை, அவர்களில் யாராவது ஒருவர் ஒருவேளை உண்ணாவிரதம் இருந்தாலே… அதுதான் அன்றைய பத்திரிகைகளுக்கு உணவு. ஆனால்… கோடிக்கணக்கான குடிமக்கள் குவளைக் கஞ்சிக்குக்கூட வழியில்லாமல் கிடந்தால், அதைக் கண்டுகொள்ள ஆளில்லை.

உண்ணாவிரதம் இருப்பது ஒன்றைத்தவிர இவர்கள் வேறு எதைத்தான் உருப்படியாகச் செய்து கிழித்திருக்கிறார்கள் என்கிற வேதனை மட்டுமே மிஞ்சி நிற்கிறது.
ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கிறாராம் அன்னா ஹசாரே என்பதைத்தவிர…. வேறு எந்த விஷயங்களும் இங்கே வெளிச்சத்துக்குக் கொண்டுவரப்படவில்லை.

கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு சட்ட வரைவு நாடாளுமன்றப் பரணில் முடங்கிக் கிடக்கிறது. உயர் பதவியில் இருப்பவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் வந்தாலும், விசாரிக்கும் அதிகாரம் இருக்க வேண்டும் எனும் அறிமுகத்துடன் கொண்டுவரப்பட்ட லோக்பால் மசோதாதான் அது. கிட்டத்தட்ட 42 ஆண்டு காலமாக இந்த சட்டம் ஊறுகாய்ப் பானையில் ஊறிக்கிடக்கிறது.

அந்த லோக்பால் மசோதா ஜாடையிலேயே சிலபல உட்டாலக்கடி ஜிகினா வேலைகளைச் செய்து உருவாக்கப்பட்டதுதான் ஜன் லோக்பால் மசோதா. அந்த ம்சோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து சட்டமாக்க வேண்டும் என்பதுதான் அன்னா ஹசாரே வைத்திருக்கிற கோரிக்கைகளில் முதன்மையானது.

லோக்பால் என்பது ஊழலை மட்டுமே விசாரிக்கும் அதிகாரம் கொண்ட ஒரு தன்னாட்சி அமைப்பு. லோக்பால் மூலமாக அரசாங்க அதிகாரிகள், அமைச்சர் பெருமக்கள் என யார் ஊழல் செய்தாலும் விசாரணை செய்து தண்டனை வழங்க முடியும். ( இந்த அமைப்பு வந்துவிட்டால், மத்தியில் உள்ள பாதி அமைச்சர்கள் திகார் ஜெயிலில் இருந்துதான் கேபினட் கூட்டத்திற்கு வந்து கலந்துகொள்ள முடியும் என்றெல்லாம் கற்பனையை ஓவராகப் பொங்கவிட வேண்டாம்).

ஒரே நாளில், ஒரு சட்டத்தினால், ஒரு தனி மனிதனால் திடீரென இந்த சாபக்கேடான ஊழலை ஒழித்து விட முடியாது. இது படிப்படியாக செய்யப்பட வேண்டிய சமுதாய மாற்றம். அதற்கு ஒரு தொடக்கத்தை ஹசாரே செய்து இருக்கிறார். அது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான்.

ஆனால்?…..

ஏனிந்த அவசரம்? எதனால் இந்த வேகம்? எதற்கு இந்த உணர்ச்சிக் கொப்பளிப்பு? -என்பதுதான் கேள்வி.

ஹசாரேயின் நோக்கம் புனிதமானதுதான். ஆனால், அதற்கான போராட்டத்தை நடத்திச் செல்லும் பாதையும் வழிமுறையும் சரியானதாகத் தெரியவில்லை. முதலில் இப்போது உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களில் தனது கருத்தை ஆதரிக்கும் உறுப்பினர்களை ஒன்று சேர்க்க வேண்டும். அவர்களை வைத்துப் பாராளுமன்றத்தில் அரசு தாக்கல் செய்துள்ள மசோதாவில் உள்ள குறைபாடுகளைச் சுட்டிக் காட்டி திருத்தங்கள் கொண்டுவர வழிவகை செய்ய வேண்டும். அதற்கும் முடியவில்லை என்றால் தேசத்தில் உள்ள உண்மையான அதிகாரிகள், சமுதாயப் போராளிகள், அரசியல் தலைவர்களைக் கூட்டி விவாதிக்க வேண்டும். அதில் ஏற்படும் முடிவின்படி செயல்படுவதற்குள், தேசத்தின் மக்கள் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்பட்டு விடும். இன்றைய இளைஞர்களும் இத்ற்கு ஏதுவாகத் தங்களைத் தயார்படுத்திக்கொண்டு, அரசியல் விழிப்புணர்வு ஏற்பட ஒன்று கூடி உழைத்தால்…. முன்னாள் ஜனாதிபதி திரு.அப்துல் கலாம் போன்ற நல்லவர்களின் கனவுப்படி…..இந்தியா உருப்பட ஒரு வழி கிடைக்கும். அப்படி நியாயமான வழியில் செயல்படுவதை விட்டுவிட்டு, தெருவில் இறங்கிச் சிறுவர்கள் சண்டையிட்டுக்கொள்வது போலச் செயல்படுவது, ஹசாரே போன்ற முதிர்ந்த வயதுள்ளவர்களுக்கு பெருமை சேர்க்கக்கூடியதல்ல.

அதுவும் தீவிரவாதம், பொருளாதார நெருக்கடி, அண்டை நாட்டின் அச்சுறுத்தல் போன்ற இக்கட்டான இந்தச் சூழ்நிலையில்…. தீர்க்கப் படவேண்டிய சமுதாயச் சீர்கேடுகள் எவ்வளவோ இந்தியாவில் உள்ளன. அதில் ஊழலும் ஒன்று. ஆனால் அது ஒன்று மட்டுமே அல்ல என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்….

அரசு தாக்கல் செய்துள்ள மசோதாவில் என்ன சரத்துக்கள் இருக்கிறது என்பதே பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது. பாராளுமன்ற நிலைக்குழு அதை ஆராய வேண்டும். பார்லிமென்ட் நிலைக்குழு, பொதுமக்களிடம் கருத்துக் கேட்டுள்ளதை, நேரத்தை வீணடிக்கும் செயல் என ஹசாரே குழுவினர் விமர்சித்துள்ளனர், இது சரியல்ல. இதெற்கெல்லாம் கால அவகாசம் கொடுக்காமல்… எடுத்தேன் கவிழ்த்தேன் என்று உணர்ச்சி வசப்பட்டு, உலகநாடுகள் எல்லாம் இந்தியாவை ஒருமாதிரியாகப் பார்க்கிற இழிவான நிலைக்கு, இந்தப் போராட்டம் இழுத்துச் செல்வதாகத்தான் தெரிகிறது.

என்னமோ இப்போதுதான் இந்தியாவில் ஊழலே உருவான மாதிரியும், இதுவரையிலும் அப்படி ஒரு உணர்வே இல்லாத மாதிரியுமான ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்த முயல்கிறார்கள்.அது நல்லதல்ல.

சரி. ஹசாரே கூறுகிறபடியே ஜன் லோக்பால் மசோதா சட்டமாகி, அது தன் கடமையைச் செய்வதாகவே வைத்துக்கொள்வோம். அந்த மசோதா ஊழலை ஒழிக்கும் வீரியத்தை தன்னுள் கொண்டுள்ளதா? அதில் மட்டும் அப்படி என்ன மாயமந்திரம் செய்யப்பட்டிருக்கிறது?

நீதி மன்றம், தேர்தல் ஆணையம் போல் தன்னிச்சையான அமைப்பாக இருக்க வேண்டும்.அரசு உறுப்பினர்களுக்கு ஈடாக சமூக ஆர்வலர்களும் இடம்பெற்றிருக்க வேண்டும்
அதிகபட்சம் இரண்டாண்டுகளுக்குள் எடுத்துக்கொள்ளப்படும் வழக்குகளை முடிக்க வேண்டும். நடப்பிலிருக்கும் ஊழல் ஒழிப்பு அமைப்புகள் நடுவண் விழிப்புணர்வு ஆணையம், சிபிஐயின் ஊழல் ஒழிப்புப் பிரிவு போன்றவை ஒருங்கிணைக்கப்பட்டு லோக்பால் அமைப்பின் கீழ் இயங்குதல் வேண்டும். நீதிபதிகள் மற்றும் தூய்மையான நடத்தையுள்ள அரசு ஊழியர்களிலிருந்து இதன் உறுப்பினர்களை நியமிக்க வேண்டும். தகவல் தருபவர்களைக் காக்கவும், குற்றவாளிகளுக்குத் தண்டணை அளிக்கவும் முழு அதிகாரம் வேண்டும்….. போன்றவைகள்தான் ஜன் லோக்பால் மசோதாவின் முக்கியமான சில குறிப்புகள்.
இவைகள்தான் ஊழலை இந்தியாவிலிருந்தே இல்லாமல் ஆக்கப் போகும் மந்திரங்கள் என ஜபித்துக் கொண்டிருக்கிறார்கள் அவரும், அவருக்குப் பின்னால் இருப்பவர்களும்.

இந்த மசோதாவை நிறைவேற்றுவதன் மூலமாக மட்டும் ஊழலுக்கு எதிராக அதிகபட்சம் என்ன செய்துவிட முடியும் இந்த மசோதாவால்? விசாரிக்கும்… வழக்காடும்… தண்டனை வாங்கித்தர முயலும்….. இதை இப்போதிருக்கும் சட்டங்களாலேயே செய்துவிட முடியாதா என்ன?? இரண்டு ஆண்டுகளுக்குள் வழக்கை முடிக்கவேண்டும் என்பதற்கு என்ன வழிமுறை இருக்கிறது அந்த மசோதாவில்? அதிகபட்சம் ஊழலுக்கென்று தனிநீதிமன்றம் அமைப்பதைப் போன்றதுதான் இதுவும். அனைத்து அதிகாரத்தையும் கையில் வைத்துக்கொண்டு ஊழல் எனது பிறப்புரிமை என்று கூறும் அதிகாரவர்க்கத்தையும், அரசியல்வியாதிகளையும் தனி நீதிமன்றங்களைக் கொண்டு எதாவது செய்துவிட முடியும் என்பதைக் குழந்தைகள் கூட ஒப்புக்கொள்ளாது.

அன்னா ஹசாரேவின் ஐந்து நாள் உண்ணாவிரதமோ, லோக்பால் மசோதாவோ ஊழலை ஒழித்துவிடும் என்று யாரும் நம்பத் தயாராக இல்லை. இதோ… கல்லை எறிந்து விட்டோம், மாங்காய் விழவேண்டியதுதான் பாக்கி என்கிற கதைதான் இதுவும்.

எவ்வளவு கடுமையான சட்டத்தாலேயும் இந்தத் திருடர்களை ஏதாவது செய்துவிட முடியும் என்று தோன்றவில்லை.. இந்த ஜன லோக்போல் சட்டத்தை வைத்து இவர்களை அரெஸ்ட் பண்ணி உள்ளே வைத்துவிட்டால் மட்டும்…. அதனால் அவர்கள் உடனே மானபங்கபட்டுத் தற்கொலை பண்ணிக்குவாங்கன்னு நினைக்கிறிங்களா?! உள்ளே போயும் வசதியாக உக்காந்துக்கிட்டு என்ன சொல்லுவாங்க தெரியுமா? தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும்னுதான்…… இவர்கள் கொள்ளை அடித்த பணத்திலிருந்து ஒரு அனாப் பைசாகூடத் திரும்ப அரசு கஜானாவிற்கு திரும்பாது. இவர்களுக்குக் காந்தி வழி எல்லாம் சரிப்பட்டு வராது. பகத்சிங் வழி தான் சரி….

ஒரு காலத்தில் “மிஸ்டர் கிளின்” என்று அழைக்கப்பட்ட ஒருவரின் தலைமையில் நடைபெறும் இந்த ஆட்சிதான்…. 64 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் இதுவரையிலும் இல்லாத அளவிற்கு அதிக அளவில் ஊழல் நடைபெற்ற ஆட்சியாக விளங்கி வருவது மிகவும் துரதிஷ்டவசமானது. எப்பேர்பட்ட நேர்மையாளரையும் அரசியல் சாக்கடை பாழ்படுத்திவிடும் என்பதற்கு இதை விட வேறு சிறந்த உதாரணம் எதுவும் இருக்க முடியாது…..

ஊழல் வெறும் அரசியலில் மட்டும் இல்லை என்பதையும் நாம் உணர வேண்டும். எந்த ஒரு நகைக்கடையிலும் நகை வாங்கிய பிறகு அவர்கள் கேட்கும் முதல் கேள்வி- பில் வேணுமா, இல்லை பில் இல்லாமலா? பில் வேண்டும் என்றால் வரி செலுத்த வேண்டும். பட்டப் பகலில் வெட்ட வெளிச்சமாக இது நடக்கிறது. இதைக் கேட்க ஆளில்லை. நாமும் வரி இல்லாமல், பில் இல்லாமல் சந்தோஷமாகப் பொருட்களை வாங்கிக் கொண்டு வந்துவிடுகிறோம்.  பிராந்திக் கடைகளில் எத்தனை பேர் பில் போட்டு வாங்கிகுடிக்கிறார்கள்?  இந்தியா பாகிஸ்தான் கிரிகெட்டைப் பார்க்க பதினைந்தாயிரம் ரூபாய் டிக்கட்டை பத்துலட்ச ரூபாய் கொடுத்து வாங்கி ஒருவர் தனது தேசபக்தியை வெளிபடுத்தினாராம். இவைகள் மட்டும் ஊழல் இல்லாமல் வேறு என்னவாம்? அதனால் அரசியல்வாதிகள் மட்டுமல்ல…. மக்களில் பெரும்பலோனோரும் ஊழல்வாதிகளே.

அவ்வளவு ஏன்?…. அங்கே சுற்றி, இங்கே சுற்றிக் கடைசியில் ஹசாரே மீதே ஊழல் குற்றம் சுமத்தி வழக்கறிஞர் ஒருவர் டில்லி உயர் நீதி மன்றத்தில் வழக்கொன்றைப் பதிவு செய்துவிட்டார்.

1995-ம் ஆண்டில் ஊரக வளர்ச்சிக்காக ஹிந்த் ஸ்வராஜ் அறக்கட்டளை என்கிற அமைப்பை ஹசாரே அமைத்தார். அந்த அமைப்பின் நிதியிலிருந்து ரூ.2.2 லட்சத்தை எடுத்து தனது பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக ஹசாரே செலவு செய்திருக்கிறார் என்று சாவந்த் ஆணையம் தனது 116 பக்க அறிக்கையில் குற்றம் சாட்டியிருக்கிறது. ஹசாரேயின் மற்றொரு அமைப்பான பாபா சிக்ஷன் மண்டலி, 20 ஆண்டுகளாக வரவு செலவுக் கணக்கைத் தாக்கல் செய்யவில்லை என்றும் ஆணையம் குற்றம்சாட்டியிருக்கிறது.அவரது பிரஷ்டாசார் விரோதி ஜன ஆந்தோலன் (ஊழலுக்கு எதிரான மக்கள் இயக்கம்) என்கிற அமைப்பைப் பயன்படுத்தி பணப்பறிப்பு, ஊழல், சொத்து அபகரிப்பு போன்ற செயல்களில் அந்த அமைப்பைச் சேர்தவர்கள் ஈடுபட்டிருக்கின்றனர். இது தவிர நிர்வாகச் சீர்கேடு தொடங்கி, கட்டப்பஞ்சாயது வரை அவர் மீது பத்துக்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுக்கள் அந்த அறிக்கையில் உள்ளன. இவ்வளவு ஏன், அவர் மீதான ஒரு வழக்கைக் கடந்த 13-07-11 அன்றுதான் சமரசப்பேச்சு வார்த்தை மூலம் வாபஸ் பெறச்செய்திருக்கிறார்……

அன்னா ஹசாரே நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்துக்கு லட்சக்கணக்கில் முதலாளிகள் பணத்தைக் கொட்டிக் கொடுத்திருக்கிறார்களே, அது எப்படி? அன்னாவின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு மொத்தமாக வந்த நன்கொடை 82.88 லட்ச ரூபாய். இதில் பெரும் முதலாளிகளிடம் மட்டும் இருந்து கிடைத்தது 46.50 லட்ச ரூபாய்! விவரமாக சொல்வதானால், ஜிண்டால் அலுமினியம் கார்ப்பரேசன் ரூபாய்.25 லட்சம், சுரிந்தர்பால் சிங் ரூபாய் 10 லட்சம், ராம்கி ரூபாய் 5 லட்சம், குட் எர்த் டிரெஸ்ட் ஆஃப் எய்ச்சர் ரூபாய் 3 லட்சம், டுக்கால் ரூபாய் 3 லட்சம் மற்றும் ஹச்.டி.எஃப்.சி. வங்கி ரூபாய் 50 ஆயிரம் என்று வாரி வழங்கியிருக்கிறார்கள். இந்தப் பெரும் முதலாளிகள் அத்தனை பேருமே ரொம்ப நல்லவர்கள் என்று நாம் நம்புவோம்….

அவர் ராணுவத்தில் பணியாற்றியபோது, விமானக்குண்டு வீச்சில் அவரது சகாக்கள் இறந்துவிட்டதாகவும், இவர் மட்டும் தப்பித்ததாகவும் சொல்லியிருக்கிறார். ஆனால், அவர் குறிப்பிட்ட தினத்தன்று எந்த விமானத்தாக்குதல்களும் நடைபெறவேயில்லை என்று பல ஆங்கிலப் பத்திரிகைகளில் இராணுவத்தில் பணியாற்றியவர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். 1975 -ம் ஆண்டு இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றவர், அதே ஆண்டு ஹிந்த் ஸ்வராஜ் டிரஸ்ட் துவங்கி, அரசாங்கத்திடமிருந்து நிதியுதவியும் பெற்றிருக்கிறார். இதுவே விதிமுறைகளுக்குப் புறம்பானதுதான். அரசியல்வாதிகளின் தயவும் ஆதரவுமின்றி இதை அவரால் செய்திருக்க முடியாது…..

இப்படிப் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் அவ்ர்மீது பாய்கின்றன. அந்த விஷயத்திற்குள் எல்லாம் நான் போக விரும்பவில்லை. காரணம்… குற்றசாட்டுகளுக்கு எல்லாம் அப்பாற்பட்ட உத்தமபுத்திரன் ஒருவன் வந்துதான் போராட்டங்களுக்கெல்லாம் தலைமை தாங்க வேண்டுமென்றால்….. ஒருநாளும், ஒருஆளும் கிடைக்காது என்பதை நாம் உணராதவர்கள் அல்ல்.

அன்னா ஹ்சாரே…. அவசரப்படாமல் நிதானித்து, சிந்தித்துச் செயல்பட வேண்டும். தீபாவளிப் பட்டாசு மாதிரி திடீரென வந்தோமா வெடித்தோமா எனக் காணாமல் போய்விடக்கூடாது. அரசியல்வாதிகளோடு மோதுவதற்கு ஆண்டவனே யோசிக்கிற நாட்டில்…. அன்னா ஹசாரே துணிந்திருக்கிறார்.

அன்னா ஹசாரே இன்னொரு அரசியல் வாதியாகிவிடப் போகிறாரா? அல்லது, அரசியல்வாதிகள் ஹசாரேவிடம் அடங்கிவிடப் போகிறார்களா?

பொறுத்திருந்து பார்ப்போம்!..

அவித்த முட்டையை அடைகாத்து என்ன பயன்?

“தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார், அவர் இல்லாத இடமே இல்லை” என்று கடவுளைப்பற்றி நம்பிக்கை உள்ளவர்கள் சொல்வார்கள்.

கடவுள் இல்லாத இடத்தைக்கூடக் கண்டுபிடித்துவிடலாம் போல இருக்கிறது. ஆனால், காசுபணம் இல்லாமல் காரியம் ஆகிற இடத்தைக் கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதான காரியமாகத் தெரியவில்லை.

இநதப் பூமியில் கால்பதிக்க உதவுகிற பிரசவ ஆஸ்பத்திரியில் ஆரம்பித்து…. எல்லோருக்கும் டாட்டா காட்டிவிட்டுப் போகிற சுடுகாடு வரைக்கும், எந்த இடத்தில்தான் லஞ்சம் இல்லாமல் வேலை நடக்கிறது?

ஒண்னுக்குமே ஆகாத வேலைக்கும் காசுதான், உயிரே போகிற அவசர வேலையாக இருந்தாலும் காசுதான்…. கருணை வடிவே கடவுள் என்பதையெல்லாம் கொன்றுவிட்டு, காசேதான் கடவுளடா என்பதை அரசாங்கமே அங்கீகாரம் செய்துவிட்ட மாதிரிதான் எல்லா வேலைகளும் இங்கு நடக்கின்றன.

எல்லா அரசு அலுவலகங்களிலும் “லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் தண்டணைக்குரிய குற்றம்” என்கிற போர்டை வெட்கமில்லாமல் வெளியே மாட்டி வைத்திருக்கிறார்கள். ஊரறிந்த விபச்சாரி ஒருத்தி தனது வீட்டுக்கு முன்பாக “விபச்சாரம் தண்டணைக்குரிய குற்றம்” என்று அவளே போர்டைத் தொங்கவிட்டுக் கொண்டமாதிரிதான் இதுவும். இரண்டுக்கும் என்ன பெரிய வித்தியாசம்?

லஞ்சமே வாங்காத அதிகாரின்னு யாராவது ஒருத்தரையாவது ஈஸியா நம்மால அடையாளம் காட்டமுடியுதா? அதேமாதிரி, இதுவரை எதுக்குமே லஞ்சம் கொடுக்காத அல்லது லஞ்சமே கேட்கப்படாத பொதுமக்கள்னு யாராவது ஒருத்தரைப் பார்க்கமுடிகிறதா?

முன்பெல்லாம் இலைமறை காய்மறையாக இருந்தது லஞ்சம். வாங்குவதே தெரியாத அளவுக்குக் கமுக்கமாக வாங்கினார்கள். ஆனால் இப்போது?…. “இவ்வளவு கொடுத்தாத்தான் முடியும், இல்லேன்னா முடியாது…. எங்கே போய் ரிப்போர்ட் பண்ணனுமோ பண்ணிக்கோ” என்று மிரட்டியே வாங்குகிறார்கள்.

காலிப் பையோடு டூட்டிக்கு வருகிற கண்டக்டர், பணிநேரம் முடிந்து கணக்கு ஒப்படைக்கப் போகும்போது கணத்த பையோடு போகிற மாதிரி….. வீட்டிலிருந்து காலையில கிளம்பறப்போ வெறும் கையோட கிளம்பறது…. ஆனால், மாலையில வீட்டுக்குப் போகும்போது மட்டும் மடி கணமா இருக்கனும். பலபேருக்கு இதுதான் பாலிசியாவே இருக்ககிறது. தினமும்தான் சிக்குறாங்க. ஆனாலும்…. திருந்தின அடையாளம் கொஞ்சம் கூடத் தெரியலையே.

சம்பளம் வாங்குகிற மாதிரி, இப்படிக் “கிம்பளம்” வாங்குவதையும் பேசாமல் சட்டபூர்வமாக்கிவிடலாம். அப்படியே ஒவ்வொரு கையெழுத்துக்கும் எவ்வளவு ரேட்டு என்பதையும் போர்டில் எழுதிப் போட்டுவிட்டால் எல்லோருக்கும் சௌகரியமாகப் போய்விடும் அல்லவா?. பெரும்பாலான அரசு ஊழியர்கள் சம்பளத்தை விடக் கிம்பளத்தை நம்பித்தான் குடும்ப பட்ஜெட்டே போடுகிறார்கள்..

கீழ்மட்டத்தில் இருக்கிற கிளார்க்குகள் முதல், ஏ.சி. ரூமுக்குள் இருக்கிற அய்யாமார்கள் வரை…… எல்லோருமே இந்தப் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள்தான். இவர்கள்தான் இப்படியென்றால்…. இந்தக் கிறுக்குப்பிடித்த எம்.பி.க்களோ இதைவிட மோசமாக இருக்கிறார்கள். கேள்வி கேக்கறதுக்குக் கூடக் காசு வாங்கி மானம் கெட்ட கூத்தை வேறு எங்காவது கேள்விப்பட்டிருக்கிறோமா?

“லஞ்சம் வாங்குகிறவர்களைப் பிடித்து இழுத்து வந்து, தெரு விளக்குக் கம்பத்தில் கட்டிவைத்துத் தலைகீழாகத் தொங்கவிட வேண்டும்” என்று உச்சநீதிமன்றமே ஓங்கிக் குரல் கொடுத்தது. யார் அதைக் கண்டுகொண்டார்கள்?. நல்லவேளை, அப்படி ஒரு திட்டம் கொண்டுவந்திருந்தால்- அந்தக் கட்டி வைப்பதற்கான கயிற்றிலும் கூடப் பெரியதாகக் காசு பார்த்திருப்பார்கள்….

வேடிக்கையாக ஒரு கதை சொல்வார்கள். கடுமையான விரதத்திற்குப் பிறகு மூன்று பேர் கடவுளைச் சந்தித்தார்களாம். ஆளுக்கு ஒரு வரம் கேளுங்கள் தருகிறேன் என்றாராம் கடவுள். முதலாமவன் கேட்டான் “நான் தொட்டதெல்லாம் பொன்னாகவேண்டும்”. கடவுள் ஒப்புக்கொண்டார். இரண்டாவது ஆள் கேட்டான் ” நான் நினைத்தது எல்லாம் நடக்கவேண்டும்’. இதற்கும் கடவுள் ஒப்புக்கொண்டார். மூன்றாவது நபர் கேட்டார் “லஞ்சம் இல்லாத இந்தியாவை நான் பார்க்கவேண்டும்”. அதிர்ச்சியுற்ற கடவுள் அழ ஆரம்பித்துவிட்டாராம். “மன்னித்துவிடு, அதுவரை நானே உயிரோடு இருக்கமாட்டேன்”. வேடிக்கையான கதை அல்ல இது. வேதனையான கதை.

“எங்கள் பிளாக்கில்” அந்த வேதனையோடு எழுதியிருந்தார்கள்….. இதோ உங்களுக்காக.

வெளியே வந்து இன்ன குழந்தை என்று அறிவித்த தாதிக்கு முன்னூறு ரூபாய் முதல் லஞ்சம்.

பெயர் சேர்த்து பிறப்பு சான்றிதழ் பெற பிறப்புஇறப்பு அலுவலகத்தில் ஐநூறு அடுத்த லஞ்சம்.

நல்ல பள்ளியில் சேர்க்க நன்கொடை என்ற பெயரில் லஞ்சம்.

நல்ல மதிப்பெண் பெற விடைத்தாள் துரத்தி லஞ்சம்.

மதிப்பான கல்லூரியில் இடம் கிடைக்க மேனேஜ்மென்ட் என்ற பெயரிலொரு லஞ்சம்.

நல்ல வேலை கிடைக்க, நல்ல எதிர்காலம் கிடைக்க நாளும் கடவுளுக்கு லஞ்சம்.

வீடுகட்ட வில்லங்க சான்றிதழ் பெற கார்ப்பரேஷனுக்கு லஞ்சம்.

தொல்லை இல்லாமலிருக்க கவுன்சிலருக்கு லஞ்சம்.

வாட்டர் கனெக்ஷன், மின் கனெக்ஷன் எல்லாவற்றிலும் கலெக்ஷன் லஞ்சம்.

ரேஷன் கார்ட் வாங்க லஞ்சம்…. பாஸ்போர்ட் வாங்க லஞ்சம்.

பெண் பார்க்க ப்ரோக்கருக்கு லஞ்சம்..விரைந்து மணமுடிக்க ரெஜிஸ்டராருக்கு லஞ்சம்.

வெளியூர் சென்று வர விரைந்த பயணச் சீட்டுறுதிக்கு அரசாங்க அதிகாரபூர்வ தத்கால் லஞ்சம்.

வருமானவரி சரி செய்ய ஆடிட்டர் முதல் அதிகாரிகள் வரை லஞ்சம்.

வழக்கில் மாட்டினால் போலீஸ் ஸ்டேஷனில் லஞ்சம்.

ஹெல்மெட் போடாவிட்டால் ஐம்பது ரூபாய் லஞ்சம்.

ஆர்சி புக் இல்லாவிட்டால் ஐநூறு ரூபாய் லஞ்சம்.

வேண்டிய ஆளைப் பிடிக்க லஞ்சம்.

வேண்டாத ஆளை அடிக்க லஞ்சம்.

இறந்த பின்னும் சீக்கிரம் எரிக்க சுடுகாட்டில் லஞ்சம்.

இறப்பு சான்றிதழ் பெற லஞ்சம்.

லஞ்ச வழக்கில் சிக்கினால், அதிலிருந்து தப்பிக்க லஞ்சம்.

காய்கறிக்காரன் தரும் கறிவேப்பிலை லஞ்சம்.

அரசியல்வாதி தரும் இலவசம் லஞ்சம்.

வாக்களிக்க வாங்குவோம் லஞ்சம்.

லஞ்சத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டுமாம்! ஓங்கிக் குரல் எழுகிறது….

ஆஹா, ஒழித்து விடலாம்…..

 உறுதியாக ஒழித்து விடலாம்…..  அதனால் என்ன?

ஆனா, அதுக்கு என்ன சார் கமிஷன்???????

அதை முதலில் சொல்லுங்க…….

கொடுப்பது, வாங்குவது இரண்டும் குற்றமே!

லஞ்சம் வாங்கினால் குற்றம், கொடுத்தால் குற்றம் இல்லையா?

இரண்டுமே குற்றம்தான். லஞ்சம் கொடுப்பவர் லஞ்ச ஒழிப்புப் போலீசாரிடம் தகவல் தந்துவிட்டுக் கொடுக்கும்போது, அவர் புகார்தாரர் என்க்கருதப்படுகிறார்.எனவே லஞ்சம் வாங்குபவர் மட்டும் கைது செய்யப்படுகிறார்.

ஆனால் லஞ்சஒழிப்புத்துறையின் திடீர் அதிரடி நடவடிக்கையின்போது பிடிபட்டால்,வாங்குபவர் கொடுப்பவர் என இரண்டுபேருமே கைது செய்யப்படுவார்கள்.

இதில் இன்னோரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், ஒருவர் தனக்கு லஞ்சம் தர வருகிறார் என்று லஞ்சஒழிப்பு போலீசிடம் அரசு ஊழியர் முன்கூட்டியே தகவல் தந்தால், லஞ்சம் தர வருகிறவர் மட்டுமே கைது செய்யப்படுவார்.

“பூனையைத் தின்றது எலி !….”

“உலக ஊழல் ஒழிப்பு தினம்” என்று ஆண்டுக்கொரு முறை, ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவது என்பதே அவமானகரமான விஷயம்.கொலை, கொள்ளை ஒழிப்பு தினம்,விபசார ஒழிப்பு தினம், உண்மை பேசும் தினம் என்றெல்லாம்கூட ஏற்படுமோ என்று பயமாக இருக்கிறது.
ராஜா ராணி காலத்திலிருந்தே ஆட்சியாளர்களுக்கு நெருக்கமாக இருந்தவர்கள் அதிகப்படியான சலுகைகளை அனுபவிப்பது என்பது புதிய விஷயமல்ல.அதேபோல, ஆட்சியாளர்களில் பலர் குடிமக்களின் நலனைப் பற்றியே கவலைப்படாமல் சகல சௌபாக்கியங்களுடன் ராஜபோகமாக ஊதாரி வாழ்க்கை வாழ்ந்த சரித்திரம் உலகளாவிய ஒன்று.
ஆட்சியையும் அதிகாரத்தையும் ஒரு சிலர் பரம்பரை பாத்தியதை கொண்டாடி வருவதைப்பார்த்து மக்கள் கொதித்து எழுந்ததன் விளைவுதான் மன்னர் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதும்,மக்களாட்சி மலர்ந்ததும்.நியாயமாகப் பார்த்தால் மக்களாட்சியில் லஞ்சம், ஊழல், அதிகார துஷ்பிரயோகம், ஒரு சிலர் தனிச் சலுகைகள் பெறுவது போன்றவற்றுக்கே இடம் இருக்கலாகாது.
ஆட்சி முறை மாறியதே தவிர மன்னராட்சியின் தவறுகளும் குறைபாடுகளும் களையப்பட்டனவா என்று கேட்டால் உதட்டைப் பிதுக்க வேண்டி இருக்கிறது. பரம்பரை ஆட்சிக்குக்கூட மக்களாட்சியில் முற்றுப்புள்ளி வைக்க முடியாத நிலைமை.
பிகாரில் முதல்வர் நிதீஷ் குமார் பதவி ஏற்றதும் ஊழலுக்கு எதிராகக் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டார். லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாகப் பிடிபட்டு, கைது செய்யப்பட்ட 365 அரசு ஊழியர்களில் 300 பேருக்கும் அதிகமானவர்கள் கோடீஸ்வரர்கள் என்பது  விசாரணையில் தெரிய வந்தது.
கடந்த நான்கு ஆண்டுகளில், சுமார் 1000 அரசு உயர் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள்மீது வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. ஆனாலும் இவர்களில் ஒன்றிரண்டு கணக்கர்களும், கடைநிலை ஊழியர்களும் தவிர யாரும் பதவி நீக்கம் செய்யப்படவில்லை. வழக்குகள் தொடரப்பட்டு நடந்து கொண்டிருக்கின்றனவே தவிர தீர்ப்பு எழுதப்படவில்லை.  பிகாரில் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே உள்ள நிலைமை இதுதான்.
அரசியல் தலைவர்களின் ஊழலைக்கூடப் புரிந்து கொள்ளலாம். தேர்தலுக்குச் செலவு செய்த பணத்தை லஞ்சம் வாங்கி ஈடுகட்டி, அடுத்த தேர்தல்களுக்கான பணத்தைச் சேர்த்து வைக்க முயற்சிக்கிறார்கள் என்று சமாதானம் சொல்ல முடியும். கொள்ளை அடித்துக் கொள்ளவும், லஞ்சம் வாங்கிக் கொள்ளவும் மக்கள் அவர்களுக்கு வாக்களித்து அனுமதி வழங்கி இருக்கிறார்கள் என்று மனதைத் தேற்றிக் கொள்ளலாம்.
ஆனால், மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்​கும் அரசு அதி​கா​ரி​கள்,​​ மக்​க​ளி​டமே லஞ்​சம் வாங்​கு​வது எந்த விதத்​தில் நியா​யம்?​ வாங்​கும் சம்​ப​ளம் தங்​க​ளது தகு​திக்​கும் திற​மைக்​கும் ஏற்​ற​தாக இல்​லை​யென்​றால் ராஜி​நாமா செய்​து​விட்டு வேறு வேலை பார்த்​துக் கொள்​வ​து​தானே?​ மக்​க​ளாட்​சி​யில் மக்​க​ளுக்​காக உழைப்​ப​தற்​காக மக்​க​ளால் சம்​ப​ளம் கொடுத்து நிய​மிக்​கப்​பட்​டி​ருக்​கும் வேலைக்​கா​ரர்​கள்,​​ மக்​க​ளின் கோரிக்​கையை நிறை​வேற்ற மக்​க​ளி​டமே லஞ்​சம் வாங்​கு​வது தடுக்​கப்​பட்​டால் ஒழிய,​​ லஞ்​ச​மும் ஊழ​லும் அன்​றாட வாழ்க்​கை​யின் ​ அங்​க​மா​கத் தொடர்​வ​தைத் தடுக்க முடி​யாது.
——————————————————————————-
# சின்ன புள்ள தனமா இருக்கே. வோட்டுக்குப் பணம் கொடுக்கணும்னா லஞ்சம் வங்கிதான் ஆவணும்.வோட்டு போடுறதுக்கு பணம் வேணாமுன்னு மக்கள் முதலில் சொல்லட்டும்.
# அரசியல்வாதிங்க புள்ளையங்க அமெரிக்காவில் படிக்க வேணாமா?. அவங்க அங்க படிச்சாதானே இந்த நாட்ட முன்னேற்றமுடியும்.
# ஊழல் பெருச்சாளிகள் பெற்ற தாயை வாடகைக்கு விடுபவர்கள் போன்றவர்கள். ஊழல் செய்ய உடந்தையாய் இருப்பவர்கள் கூடவே தன் மகளையும் வாடகைக்கு விடுபவர்கள்!
# உழைத்து சம்பாதிப்பதை விட ஊழலில் சம்பாதிக்க சிறந்த நாடு இந்தியா. சிறந்த மாநிலம் தமிழ்நாடு. ஒரு டிரைவர், நடத்துனர் வேலைக்கு 2 லட்சம் ருபாய். ஒரு ஆசிரியரை இடமாற்றம் செய்ய 50,000 ருபாய். இப்படி எல்லா வேலைக்கும் லட்சத்துக்கு மேல் கொடுக்க வேண்டும்…..
#  ஏழை நாடு என்று உலக நாடுகள் நம்மை பார்த்து ஏளனம் செய்யும் பொது, ஊழல் செய்து எத்தனை மில்லியன் சம்பாதிக்கிறார்கள் என்று உலக கபோதிகளுக்கு நம் பெருமையை எடுத்து சொல்ல வேண்டும்.
(Thanks to Dinamani).​