இருபது வருடங்களுக்குள் இத்தனை இழப்புகளா?

அந்தக் காலம்தான் நன்றாக இருந்தது….. 

பேருந்துக்குள் கொணர்ந்து 
மாலைமுரசு விற்பார்கள். 

எந்த நிறுத்தத்தில் ஏறினாலும் 
அமர இடம் கிடைக்கும். 

மிதிவண்டி வைத்திருந்தோம். 
நான் பஞ்சர் ஒட்டப் பழகியிருந்தேன். 

எம்.ஜி.ஆர். உயிரோடு இருந்தார். 
கலைஞரின் அறிக்கைகளைத் தேடிப் படித்தார்கள். 

எல்லா வீடுகளிலும் 
முதல் மரியாதை பாடல் ஒலித்தது. 

வானொலி நாடகங்களை 
ரசித்துக் கேட்டோம். 

சாவி இதயம் பேசுகிறது 
பத்திரிகைகள் வந்தன. 

எல்லாருமே 
அரசுப் பள்ளிகளில் படித்தோம். 

சாலையில் 
எப்போதாவது ஒரு வண்டி போகும். 

மழை 
நின்று நிதானமாகப் பொழியும். 

சாராயக் கடைகள் இருந்தன 
இன்றைய கூட்டம் அக்கடைகளில் இருந்ததேயில்லை.

தமிழாசிரியர்கள் 
தந்நிகரற்று விளங்கினார்கள். 

வேலைக்குப் போகாதவன் 
எந்தக் குடும்பத்திற்கும் பாரமாயில்லை. 

எளிதில் மணப்பெண் கிடைத்தாள். 

வெஸ்ட் இண்டீசை வெல்லவே முடியாது. 

சந்தைக்குப் போக பத்து ரூபாய் போதும். 
முடிவெட்ட இரண்டு ரூபாய்தான். 

யுவதிகள் பாவாடை தாவணி உடுத்தினர். 
சிலிண்டர் மூடுதுணிபோல் 
யாரும் நைட்டி அணியவில்லை. 

ராமராஜனைக்கூட விரும்பி ரசித்தோம். 

சுவாசிக்கக் காற்று இருந்தது
குடி தண்ணீரை விலைக்கு வாங்கவில்லை.

தெருவில் சிறுமிகள் பல்லாங்குழி ஆடுவார்கள்.
நாங்கள் அவர்களை டபாய்த்துக் கொண்டே
நுங்கு வண்டி ஓட்டுவோம்…!

மயில் இறகுகள் குட்டி போட்டன புத்தகத்தில்.
ஐந்து ரூபாய் தொலைத்ததற்கு அடி வாங்கினேன். 

மூன்றாம் வகுப்பிலிருந்து மட்டுமே ஆங்கிலம்.
ஐந்தாம் வகுப்பு வரை அரைக்கால் டவுசர்.

கடந்து தொலைந்துப் போனவை-

நாட்கள் மட்டுமல்ல…. நம் சுகங்களும், நம்பிக்கைகளும்தான்!

ஆம்… 
அந்தக் காலம் நன்றாக இருந்தது !

நன்றி- கவிஞர். மகுடேசுவரன்.

Advertisements

எப்போதும் நீ எனக்குள்ளும் நான் உனக்குள்ளும்……

தொடு தூரத்தில் இருந்தாலும்
தொலைதூரத்தில் இருந்தாலும்….

எப்போதும் நீ எனக்குள்ளும் நான்
உனக்குள்ளும் தொலைந்தே
வாழ்கிறோம் ……

உன்னை மட்டும் நினைத்து கொண்டே
இருக்க வேண்டும் என்று தான்
என்னிடம் சண்டை ஈடுகிறாயோ
என்று தோன்றும் சில
அர்த்தமற்ற சண்டைகளால்
அன்று முழுதும் உன் நினைவு மட்டும்!!

சொல்லத் துணிந்து சொல்லை மறந்து……

என் 
எண்ணக் கதவை 
மெல்லத் திறந்து
என்னுள் புகுந்த
செல்லக் கவிதை
நீ தானே…

இதை
சொல்லத் துணிந்து

சொல்லை மறந்து
என்னுள் தவிப்பது
ஏன் தானோ…

உன் 
கள்ளச் சிரிப்பின்
கொள்ளையழகில்
என்னை மறந்தது
சுகந்தானே…

மனம்
அள்ள நினைத்து
உன்னுள் புகுந்து
உள்ளச் சிறையில்
வாழ்ந்தேனே…

பிளஸ் 2 படிப்பது அவ்வளவு பெரிய குத்தமாய்யா?

என் வீட்டு 32 இன்ச் கலர் டிவி
கேபிள் கனெக்சன் துண்டிக்கப்பட்டு
தூசியடைந்து காட்சியளிக்கிறது
சில மாதங்களாய்!

உறவினர் எவரது விஷேசங்களுக்கும்
ஓராண்டாய்ச் செல்வதில்லை
சென்றாலும்….
பத்து நிமிடங்களுக்கு மேல் இருப்பதில்லை
என்னைப் பெத்தவங்க!

நான் பயில்கின்ற வகுப்பைக் கேட்டவுடன்
சீரியசான முகத்தோடு ஏராளமான அறிவுரைகளை
வழங்கிச் செல்வது விருந்தாளிகளுக்கு
வழக்கமாகி விட்டது!

என்ன செய்யப் போகிறானோ என்று
எப்போதும் எல்லோரிடமும்
புலம்பியபடியே…..
இருக்கிறாள் அம்மா!

போர்மேகம் சூழ்ந்த நாட்டின்
எல்லைப் பகுதியாய்….
தேர்வு மேகம் சூழ்ந்தபடி
காட்சியளிக்கிறது என்வீடு!

நான் பிளஸ் 2 படிப்பது
அவ்வளவு பெரிய குத்தமாய்யா?

நன்றி:- எம்.ஸ்டாலின் சரவணன், கறம்பக்குடி.