வேணாம் வேனாம்….

குடியரசு தினத்தையும் சுதந்திர தினத்தையும்
ஒரே நாள்ல வச்சிருக்கலாம்….
நமக்கும் குழப்பமில்லாமல் போயிருக்கும்.

ஆனால்….

லீவ் நாள்ல ஒண்ணு குறைஞ்சிடுமேன்னு
நினைக்கிறப்போ….. வேணாம் வேனாம்
அது இரண்டாகவே இருந்துட்டுப் போகட்டும்னு
அடிமனசு அலறுது.

Advertisements

யார் இடம் பெற்றால் பார்லிமெண்டை மதிப்பீங்க? பட்டியல் இருந்தாக் கொடுங்க!

கனிமொழி போன்றவர்கள் இடம்பெற்றுள்ள பாராளுமன்றத்தை இனிமேல் நான் மதிக்கமாட்டேன் என….

அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்த அர்விந்த் கெஜ்ரிவால்….. கோப்பப்பட்டுத் தனது வார்த்தைகளைக் கொட்டியிருக்கிறார்.

அவரது கோபத்தில் கொப்பளிக்கிற உணர்ச்சியின் வேகத்தை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

ஜனாதிபதி பதவியில் ராஜேந்திர பிரசாத், அப்துல் கலாம் போன்றோர், அமர்ந்து அழகு பார்த்தனர். ஆனால், அந்த ஜனாதிபதி பதவி தற்போது தனது மதிப்பை இழந்துவிட்டது.

அதேபோல, அம்பேத்கார், லால்பகதூர் சாஸ்திரி போன்றோர் இடம்பெற்ற பார்லிமென்டுக்கென ஒரு மரியாதை இருந்தது. ஆனால், ஊழல் குற்றச்சாட்டுக்களில் ஊறித்திளைத்துக் கிடக்கும் லாலு பிரசாத், முலாயம் சிங், கனிமொழி போன்றோர் இடம்பெற்றுள்ள பார்லிமென்ட் தனது மதிப்பை இழந்துவிட்டது.

இவர்களுக்கு- இவைகளுக்கு- எதற்காக நான் மரியாதை தரவேண்டும் என்கிற அவருடையை கேள்வி மிகவும் நியாயமானது.

ஆனால்- எனக்கு வருகிற சந்தேகமெல்லாம்……

இன்றைய அரசியல்வாதிகளில்- ஒரு புத்தனையோ, காந்தியையோ என்பதைவிட, இன்னொரு காமராசரையோ கக்கனையோ எங்குபோய்க் காண்பது?. எல்லோருமே ஏதேனும் ஒருவிதத்தில் குற்றம் புரிந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

ஒரு காலத்தில் அண்ணா கூறியதாக மக்கள் பேசிக்கொள்வதுண்டு- “பானுமதி ஒன்றும் படிதாண்டாப் பத்தினியும் அல்ல, நான் ஒன்றும் முற்றும் துறந்த முனிவனும் அல்ல!” என்று. அரசியல் சாக்கடையில் நெளியும் புழுக்களில் தகுதியை எங்கே போய்த் தேடுவது?

சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாக இருக்கவேண்டும். என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அதுபோலவே நாட்டின் முதல் குடிமகனாக வருபவரும், ஆளுமை செய்பவர்களும் இருக்கவேண்டும் என்று நாட்டு மக்கள் எதிர்பார்ப்பதில் தவறு ஒன்றும் இல்லைதான்.

இந்தியாவில் அப்படி யாரும் அரசியலில் இல்லையே என்பதல்லவா உண்மை. என்ன செய்வது?

நல்லவேளை…. மதிக்கமாட்டேன் என்பதோடு நிறுத்திக்கொண்டார்.

ஒருவேளை அவசரப்பட்டு…..

ஊழல் பெருச்சாளிகள் சோனியா, கருணாநிதி, ஜெயலலிதா போன்றோர் இருக்கும் இந்திய நாட்டிலேயே இருக்க மாட்டேன் என்று சொல்லியிருந்தால்???

பதில் தருவாரா ஸ்டாலின்?

தி.மு.க. நிர்வாகிகள் நியமனம் குறித்து, மாநில தி.மு.க. தலைமை அவ்வப்போது தனது வசதிக்கு ஏற்றாற்போல ஏதாவது வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடுவதும், பிறகு அதையே தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்காக உல்டா செய்து கேலிக்குரியதாக்குவதும்…. அடிக்கடி நடக்கிற வாடிக்கைதான்.

இப்போது மீண்டும் அதேபோல இன்னொரு கூத்து கரூர் மாவட்டத்தில் அரங்கேறியிருக்கிறது.

பொதுவாகவே- கரூர் மாவட்டத்தில் நிர்வாகிகள் நியமனம் என்பது வரையறுக்கப்ப்ட்ட விதிமுறைகளின்படி நடப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு வாடிக்கையாகவே எழுவதுண்டு.

கேட்டால்- கரூர் கணக்கே வேறு என்று கண்டகண்ட கதைகள் எல்லாம்- குமுறிக் கொட்டப்படுகிறது.

தி.மு.க. இளைஞர் அணிப்பொறுப்பில் இனிமேல் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு இடமே கிடையாது என்று-

இரண்டு 30-த் தொட்ட நிலையிலும் இளைஞரணியில் இன்னமும் ஒட்டிக்கொண்டிருக்கிற ஸ்டாலின், ஒவ்வொரு மேடையிலும் வாய்வலிக்கக் கூச்சலிட்டார்.

ஆனால்- உண்மையில் என்ன நடந்துகொண்டிருக்கிறது?

இதோ, 14-07-2012 தினமலரில் ஒரு செய்தி வந்திருக்கிறது…..

“கரூர் மாவட்டம் க.பரமத்தி ஒன்றியத் தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள சாலப்பாளையம் சுப்பிரமணி என்பவர் 35 வயதைக் கடந்தவர் என்று கட்சியினர் பொறுமுகின்றனர். எதற்கு இந்தச் சட்டம்? எதற்கு இந்த வீராப்பு? இருக்கிற கட்சிக்காரனையெல்லம் இளிச்சவாயன் ஆக்குவதற்கா?

அதுமட்டுமல்ல- கடந்த பல ஆண்டுகளாகவே பாண்டிச்சேரியில் வசித்துவரும் கூனம்பட்டியைச் சேர்ந்த சக்திவேல் என்பரின் மனைவி கலாவதிக்கு, திடீரென மாவட்ட மகளிர் தொண்டர் அணித் துணை அமைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

தி.மு.க. தலைமை அறிவிக்கும் கட்டுப்பாடுகள்- க.பரமத்தி ஒன்றியத்தில் மட்டும் காற்றில் பறக்கிறதே…. எப்படி?”

-இது தினமலர் செய்தி.

இந்தக் குற்றச்சாட்டுக்களை அப்படியே நான் ஸ்டாலின் அவர்களுடைய இணையதளத்திற்கும், மின்னஞ்சலுக்கும் அனுப்பி வைத்திருக்கிறேன்.

கூடவே இன்னும் சில குற்றச்சாட்டுக்களையும் குறிப்பிட்டு இணைத்து அனுப்பியிருக்கிறேன். (கட்சிக்கு சோதனை வந்த காலகட்டத்தில் எல்லாம் அடிபட்டு உதைபட்டுக் களத்தில் நின்ற கட்சித் தொண்டர்களின் மனக்குமுறல்கள் அது!)

அவற்றில் சில….

1. மிசா காலகட்டத்தில்- கட்சி பிழைக்குமோ சாகுமோ என்கிற அளவுக்குக் கடுமையான நெருக்கடி வந்த நேரத்தில்- சொந்தக் குடும்பத்தைக்கூட மறந்து கட்சிக்கும் கலைஞருக்கும் உறுதுணையாக இருந்து கட்சியைக் காப்பாற்றிய அந்தத் தியாக தீபங்களில் எத்தனை பேர் இன்றைக்குக் கட்சியில் மரியாதையாக இருக்கிறார்கள்?
மனம் வெதும்பியல்லவா கிடக்கிறார்கள்? ஏன்?

2. வைகோ பிரிந்தபோது- கரூர் மாவட்டத் தி.மு.க.வே கலகலத்துப் போய்விட்டது, கல்லறைக்குப் போய்விட்டது என்று கணித்தார்கள். கட்சியின் பெயரால் சுகத்தை அனுபவித்த அத்தனை பெரிய ஜாம்பவான்களும் அணிமாறிப்போனபோது….. களத்தில் நின்று கரூர் மாவட்டத் தி.மு.க.வைக் கைதூக்கி நிறுத்தியவர்களில் எத்தனை பேருடைய பட்டியல் தி.மு.க.வின் நினைவில் இருக்கிறது? களத்தில் நின்றவர்கள் இன்னமும் கரையேறாமல் நிற்பதற்கும்…. ஆனால் ஓடிப்போனவர்கள் மட்டும் திரும்பிவந்ததும் உடனே ஒய்யாரமாக உட்காரவைக்கப்பட்டதற்கும் காரணம் என்ன? சிந்தித்திருப்பாரா ஸ்டாலின்?

3. அப்படி வைகோ பிரிந்த நேரத்தில்- கரூர் மாவட்டத் தி.மு.க. அலுவலகம் யாருக்குச் சொந்தம் என்ற கலவரம் வெடித்ததும், எல்லாருமே ஓடிவிட்ட அந்த இக்கட்டான நிலையிலும் கூட- அப்போதைய மாவட்ட்ச்செயலாளர் தலைமையில் அலுவலக மீட்புப் போராட்டத்தில் குதித்து, மீண்டும் கழகம் 96-ல் ஆட்சிக்கு வந்து விடுவிக்கும்வரை- வழக்கில் சிக்கி நீதிமன்றத்திற்கு நடையாய் நடந்து மாவட்டக்கழக அலுவலகத்தை மீட்டெடுக்கப்போராடிய….. அந்த நால்வரின் முகவரி கூட வேண்டாம், பெயராவது கட்சியின் ஞாபகத்தில் இருக்கிறதா?

4. சத்துணவு அமைப்பாளர் பொறுப்பு முதல் சமத்துவபுரம் வீடு ஒதுக்கீடு வரை – கட்சிக்காரனாகவே இருந்தாலும் சரி, காசு கொடுத்தால்தான் போடுவேன் என்று கறாராக நின்று- கட்சியின் மானத்தைக் காற்றிலே பறக்கவிட்ட க.பரமத்தி ஒன்றியத்தின் கதை தெரியுமா உங்களுக்கு?

5. அப்படிப் போராட்டக் களத்தில் நின்ற தொண்டர்களையெல்லாம் வசதியாக மறந்துவிட்டு- ஒரு நாள் கூத்துக்கு மீசை எடுத்தவர்களுக்கெல்லாம் “சிறைசென்ற தியாகி சர்ட்டிஃபிகேட்” கொடுக்கப் போகிறீர்களாமே…. இதைக் கேட்டால் ஜெயலலிதாவிற்குக் கூட சிரிப்பு வராமல் என்ன செய்யும்?

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோலத்தான் இந்தக் கேள்விகள்.

கேள்விகள் எங்களிடம் நிறைய இருக்கிறது….. பதில் சொல்லத்தான் தகுதியான ஆளைக்காணோம்.

உங்களிடமிருந்தாவது பதில் வரும் என்கிற நப்பாசையில்தான் பதிவை அனுப்பியிருக்கிறோம்…. பார்ப்போம்!

எல்லாம் நம்மோட தலை எழுத்து!

நினைவிலிருந்து விலகிக் கிடக்கிற சில விஷயங்களை மீண்டும் நினைவிற்குக் கொண்டுவருகிற பொழுது……

அரசியல் கசக்கிறது. அரசியல்வாதிகள் மீது வெறுப்பு வருகிறது. இவ்வளவு கேவலமானவர்களா இவர்கள்? என்று எட்டி உதைக்கத் தோன்றுகிறது.

இந்த மண்ணில்தான்…..

உள்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்த கக்கன் என்ற மாமனிதர், பதவி விலகிய மறுகணம் சென்னை மாநகரப் பேருந்தில் வீடு திரும்பினார்……

அவர் நோய்வாய்ப் பட்டபோது, மதுரை ராஜாஜி மருத்துவ மனையில் கீழே பாயில் படுத்திருந்ததைப் பார்த்த எம்.ஜி.ஆர். பதறிப்போய் நல்ல வார்டுக்கு மாற்ற உத்தரவிட்டார்……

பிரதமர் பதவியிலிருந்து விலகியபோது, கோட்டையிலிருந்து வீடு செல்வதற்குக்கூடத் தனது அரசு வாகனத்தைத் தவிர்த்து டாக்சியில் சென்றார் ராஜாஜி…..

பதவி விலகியபிறகு, மும்பையில் தன்னால் சரியாக வாடகைகூடக் கொடுக்கமுடியாத சிறு அடுக்குமாடிக் குடியிருப்பில், தனது துணிகளைக் கூட தானே துவைத்து எளிய முறையில் வாழ்ந்தார் மொரார்ஜி…..

எளிமையான அரசியலுக்கு இலக்கணமாக வாழ்ந்து காட்டிய கர்மவீரர் காமராசர்…..

இவை எல்லாவற்றையும் நாம் எளிதாக மறந்துவிட்டு, ஓட்டுக்குத் துட்டு வாங்க ஆரம்பித்துவிட்டோம்.

இப்போது இன்னொரு செய்தி…..

நாட்டின் மிக உயர்ந்த பதவி வகிக்கும் ஜனாதிபதி பிரதிபா பாட்டீலுக்கு, மகாராஷ்டிர மாநிலம் புனேயில் ஒரு பங்களா கட்டப்பட்டு வருகிறதாம். அவர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றதும், அங்கு சென்று தங்க முடிவு செய்துள்ளாராம்.

இந்நிலையில், அவருக்கு விதிமுறைகளின்படி ஒதுக்கப்படவேண்டிய நிலத்தை விட, ஆறு மடங்கு அதிகமாக ராணுவ நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது.

புனே நகரில் காட்கி கன்டோன்மென்ட் பகுதியில், ஜனாதிபதி பிரதிபா பாட்டீலுக்கு, இரண்டு லட்சத்து 61 ஆயிரம் சதுரடி நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு, அவர் பங்களா கட்டி வருகிறார். அவருக்கு அரசு விதிமுறைகளின்படி, 4,500 சதுரடியில், அரசு பங்களாவோ அல்லது 2,000 சதுரடியில் அரசு வழங்கும் வாடகை வீடோதான் வழங்கப்படவேண்டும்.

ஆனால், அனுமதிக்கப்பட்டதை விட அதிகமாக, ஆறு மடங்கு அளவில் ராணுவ நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதற்கு, முன்னாள் ராணுவத்தினர் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் போதுமான நிலம் இல்லாத நிலையில், ஜனாதிபதிக்கு மட்டும் இப்படி அநியாயமாக நிலம் ஒதுக்குவதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

முதன் முதலாக ஒரு பெண் இந்தியாவின் மிக உயர்ந்த பதவியில் அமர்ந்து பதவியை அலங்கரிப்பார் என்று நினைத்தோம். ஆனால், இவர் மரபை மீறித் தனது பதவியை மிகவும் கேவலமாக நாறடித்துக் கொண்டு இருக்கிறார்.

உடை, புத்தகம் என இரண்டே இரண்டு சூட்கேசுகளுடன் ஜனாதிபதி மாளிகையை விட்டு வெளியேறிய அப்துல் கலாமுக்குப் பதிலாக….. இப்படிப்பட்ட ஒரு நில அபகரிப்பாளரைத் தேடிப்பிடித்து நாம் தேர்ந்தெடுத்திருக்கிறோம்.

தகுதி இல்லாதவர்களை எல்லாம் தலைமைப் பொறுப்பில் வைத்தால் இப்படித்தான் நடக்கும். தகுதி அற்றவர்கள் பதவியில் ஒட்டிக்கொள்ளும் போது அவர்கள் நேர்மையாக நடந்து கொள்வது இல்லை தங்களின் எஜமானர்களைத் திருப்தி படுத்துவதுதான் அவர்களின் முதல் வேலை.. அதைப் பூர்த்தி செய்த பின், தனக்கான கொள்ளையைத் தொடர்வார்கள். இது பிரதிபா விஷயத்தில் நன்கு பொருந்தும்.

நம்ம நாட்ல இந்த ஜனாதிபதிகளால ஏதாவது ஒரு மயிரளவாவது நன்மை இருக்கா??? தெரிஞ்சவங்க சொல்லுங்க?

நாட்டில் முதல் குடிமகன்னு சொல்றாங்க ஆனால், அவர்களால சுயமாக ஒரு அறிக்கை விடக்கூட யோக்கியதை இல்லை. வெறும் தஞ்சாவூர் தலையாட்டிப் பொம்மை மாதிரி ஆட்டிக்கிட்டு இருக்கிறதுக்கு எதுக்கு இந்தப் பதவி?

சும்மா ஊரு சுத்திப்பாக்க மட்டுமா இந்தப்பதவி? இந்தத் தடவை இந்தியாவிலிருந்து அதிகமான முறை வெளிநாடு சுற்றிப்பார்க்கப் போனவர்களில் இவங்கதான் முதலிடம்.

குடும்பம் குட்டியென நூறுபேர் புடை சூழ, பல நாடுகுளுக்கும் சென்று ஜாலியாக இவர் சுற்றிப்பார்க்க ஆன செலவு இதுவரை 220 கோடி……

எத்தனை கேள்விகள் கேட்டாலும், இந்த ரோஷம் கெட்ட ஜென்மங்கள் எந்தப் பதிலும் சொல்லாமல் பங்களா கட்டிக் கொண்டுதான் இருக்கும்……..

புதுசாக் குடி போகும்போது ஏதாவது சோறு கீறு போடுவாங்களான்னு நாமும் பார்த்துக்கொண்டுதானிருப்போம்…….

எல்லாம் நம்மோட தலை எழுத்து.

முலாயம் – சிங்? கிங்?

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலத்தின் தலையெழுத்தை மாற்றியெழுதி……

எல்லா அரசியல் ஜாம்பவான்களின் பார்வைகளையும் தன்பக்கம் திரும்பவைத்திருக்கிறார் முலாயம்சிங் யாதவ்.

மொத்தமுள்ள 402 இடங்களில் 224 இடங்களைக் கைப்பற்றிப் பிரம்மாண்டமாய் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது, அவருடைய சமாஜ்வாதி கட்சி.

இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டுப் பாடுபட்டிருந்தால்…… சிலை யானைகளைச் சாக்குப் போட்டு மூடியதுபோலவே, நிஜ யானைகளையும் கூடச் சாக்குப்போட்டு மூடியிருப்பார் போலவே தெரிகிறது.

இந்த வெற்றி- இன்றைய வெற்றியாக மட்டும் இருந்திருந்தால், இவ்வளவு பரபரப்பு இருந்திருக்காது.

எதிர்வரவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலிலும், பாராளுமன்றத் தேர்தலிலும்….. முலாயம்சிங் என்கிற பெயர் தவிர்க்கமுடியாத தனிப்பெரும் சக்தியாக உருவெடுத்துவிட்டது என்பது- கனவில் மிதந்து கொண்டிருந்த பலருக்கும் வயிற்றைக் கலக்குகிற விஷயம்தான்.

புதிய முதல்வராக, 73 வயதான முலாயம் சிங் தேர்வு செய்யப்படுவாரா அல்லது 38 வயதான அவரது மகன் அகிலேஷ் யாதவ் தேர்வு செய்யப்படுவாரா என்கிற கேள்விக்குக்கூட……வித்தியாசமான விடையைத்தான் தந்திருக்கிறார் முலாயம்.

மிகப்பெரிய உ.பி. மாநிலத்தின், மிகச்சிறிய இளம் முதல்வர் என்கிற பெருமையைத் தனது மகனுக்குத் தந்திருக்கிறார்.

39 வய்தில் முதல்வரான மாயாவதியின் சாதனையை, 38 வயதில் முதல்வராகி அகிலேஷ் முறியடித்திருக்கிறார்.

பெற்ற மகனுக்குப் பதவியை விட்டுக்கொடுப்பதைக் கூடப் பெருமையாகப் பேசக்கூடிய கேவலமான நிலைமைதான், இன்னும் இந்திய அரசியலில் நிலவுகிறது என்பது வெட்கப்படவேண்டிய விஷயம்தான்.

முலாயம் சிங்க் யாதவ், தனது மகன் தவிர மீதமுள்ள 222 பேரில் யாராவது ஒரு திறமையான வேறு ஒரு இளைஞரை நியமித்து இருந்தால்…… பாராட்டியிருக்கலாம்.

அப்படி யாருமே, எந்தக் கட்சியிலும் எந்தத் தலைவருக்கும் தெரிவதில்லை என்பதுதான் இங்கு ஜனநாயகமாக இருக்கிறது.

முலாயம் தனது மகனுக்கு முதல் மந்திரி பதவி வழங்கியதற்கு…… இரண்டு காரணங்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

ஒன்று- பிரதம வேட்பாளராகத் தன்னைக் களத்தில் நிறுத்திக்கொள்ள இது ஏதுவாக இருக்கும். இன்னொன்று- சி.பி.ஐ. கிடப்பில் போட்டிருக்கும் சொத்துக் குவிப்பு வழக்கு மீண்டும் உயிர் பெற்றால்?…. (ஜெயலலிதாவுக்குப் பன்னிர்செல்வம்…. லாலுவுக்கு ரப்ரிதேவி…. மாதிரி).

இதில் முலாயமுக்கு இன்னொரு வசதி என்னவென்றால்- இங்கு மாதிரி மனைவி துணைவி போட்டியோ, அண்ணன் தம்பி, தங்கை பிரச்சினையோ இல்லையென்பது. என்வே, மகனை உட்காரவைப்பது இவருக்கு எளிதாகிவிட்டது.

இதன்மூலம் முலாயம்சிங் படைக்க நினைக்கிற சாதனையே வேறு…..

ஒரே நேரத்தில் அப்பா பிரதமராகவும், மகன் ஒரு மாநிலத்தின் முதல்வராகவும் உள்ள சாதனை புரிய கனவு காணுகிறார்….. அது நடந்துவிடாது என்றும் உறுதிபடச் சொல்வதற்கில்லை. இந்தியாவில்- எதுவும் சாத்தியமே.

ஒரே ஒரு ஆறுதல்…..

மாயாவதி மேல் நடவடிக்கை எதுவும் இருக்காது, அவர் நிறுவிய சிலைகளும் பூங்காக்களும் மாற்றப்படாது, அவர் கட்டிய கட்டிடங்கள் எதுவும் மருத்துவமனையாக மாற்றப்படாது என்றெல்லாம் அகிலேஷ் அறிவித்திருப்பது……. ஒரு நல்ல ஆரம்பத்தின் அறிகுறி என்றே தோன்றுகிறது. அவர் ஒரு சிறந்த நிர்வாகியாக என்பதற்கான அடையாளமாகவும் படுகிறது.

காரணம்- கடந்த காலத்தை நோண்டிக் கொண்டிருப்பவனுக்கு, எதிர்காலம் நோக்கிப் பயணிக்க நேரம் இருக்காது என்பதுதான் உண்மை.

இந்தியாவின் சிறந்த மாநிலங்கள் வரிசையில்…… குஜராத், பீகாருக்கு அடுத்து உ.பி.யும் சேருவதற்கான வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது.

கரூர் மாவட்டத்துங்காரங்க….. காலரைத் தூக்கி விட்டுக்கலாம்!

அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஒவ்வொரு அமைச்சர்களும் ஒவ்வொருவிதமாக சர்க்கஸ் காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

அதில்- செந்தில் பாலாஜி கொஞ்சம் வித்தியாசமாகச் சிந்திந்திருக்கிறார்…..

கரூர் மாவட்டத்தில்- கபடி, கோகோ, வாலிபால், த்ரோ பால் போன்ற விளையாட்டுப் போட்டிகளை நடத்தினார். மாணவ மாணவிகளுக்கெனத் தனியாகவும், போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கெனத் தனியாகவும் போட்டிகள் நடந்தது.

அதில் வெற்றி பெற்றவர்களுக்கு வெற்றிக்கோப்பை மற்றும் தங்கக்காசுகள் வழங்கும் விழாவை அ.தி.மு.க. தலைமையகத்தில் ஏற்பாடு செய்து, அம்மா கையாலேயே பரிசும் கொடுக்கவைத்தார்.

(மண்சோறு சாப்பிட்டுக்கொண்டிருக்கும் மந்திரிகளுக்கு மத்தியில்….. இது பாராட்டப்பட வேண்டிய விஷயம்தான்)

அப்படிப் பரிசு வழங்குவதற்காக அம்மா கட்சி ஆபீசுக்கு வந்தபோதுதான்….. இந்தக் காலரைத் தூக்கிவிட்டுக்கொள்ளும் கௌரவம் கிடைத்தது.

அப்போது செந்தில்பாலாஜி நடந்துகொண்டவிதம், கட்சியினரை மட்டுமல்லாது….. நிருபர்களையும் கூட மலைத்து நிற்கவைத்துவிட்டது.

1. லிப்ட் ஏறி அரங்கிற்கு முதல்வர் வந்ததும், ஓடிப்போய் அவர் காலில் தொபுக்கடீர் என்று விழுந்தார் செ.பாலாஜி.

2. பிறகு பரிசுகள் வழங்க ஜெயா தயாரானதும், பூங்கொத்து கொடுத்து மறுபடியும் ஒரு தொபுக்கடீர்.

3. அதற்குப்பிறகு, பரிசு பெற்றவர்கள், முதல்வருடன் குரூப் போட்டோ எடுக்க வந்தபோது- மீண்டும் ஒரு தொபுக்கடீர்.

4. முதல்வர் தனது பேச்சில், “விளையாட்டுப் போட்டிகளை சிறப்பாக நடத்திய செந்தில் பாலாஜிக்குப் பாராட்டுக்கள்” என்று பேசியபோது- மீண்டும் ஒரு வேகமான தொபுக்கட்டிர்.

5. இறுதியாக விழாவை முடித்து முதல்வர் கிளம்பும்போது…. வரவேற்பதற்குப் போட்டமாதிரியே, வழியனுப்பவும் ஒரு தொபுக்கடீர்.

மொத்தம் ஐந்து தொபுக்கடீர்கள்- ஒரே நிகழ்ச்சியில்!

எந்த மாவட்டத்துக்குக் கிடைக்கும் இந்த வாய்ப்பு?

அடுத்து யாராவது இந்தச் சாதனையை முறியடிக்கும்வரை….

கட்டுரையின் தலைப்பைப் படியுங்க!

அடேங்கப்பா…. எத்தனை எத்தனை உண்மைகள்?

பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நேற்று 4-வது நாளாக நீதிபதி கேட்ட கேள்விகளுக்கு சசிகலா பதிலளித்தார்.

அதிலிருந்து சில கேள்விகளும், பதில்களும்…..

நீதிபதி: திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை தாலுகா, விலகபுரா கிராமத்தில் ரத்தினவேலு உட்பட 14 பேருக்கு சொந்தமான நிலத்தை வாங்கியது ஊணமையா?
சசிகலா: உண்மை.

நீதிபதி: ஈஞ்சம்பாக்கம் அடுத்த வெட்டுவாங்கேணி என்ற இடத்தில் ரங்கராஜ் என்பவருக்கு சொந்தமான நிலத்தை ரூ1.10 லட்சத்துக்கு வாங்கியது உண்மையா?
சசிகலா: உண்மை.

நீதிபதி: இந்திராணி ரங்கராஜுக்கு சொந்தமான நிலத்தை ரூ5.07 லட்சம் கொடுத்து வாங்கியது உண்மையா?
சசிகலா: உண்மைதான்.

நீதிபதி: லலிதா குமார் பண்டாரிக்கு சொந்தமான 1.9 ஏக்கர் நிலம் ரூ5.57 லட்சம் கொடுத்து வாங்கப்பட்டதா?
சசிகலா: நிலம் வாங்கியது உண்மை தான்.

நீதிபதி: சென்னையில் ஒரு வணிகக் கடையை ரூ8.25 லட்சம் கொடுத்து வாங்கியது உண்மையா?
சசிகலா: அந்த சொத்து 1994ல் வாங்கப்பட்டது.

நீதிபதி: ஜெயா பப்ளிகேஷன் நிறுவனத்துக்கு ரூ2,81,160 கொடுத்து கார் வாங்கியது உண்மையா?
சசிகலா: வாங்கியது உண்மை.

நீதிபதி: 18.7.1992 அன்று ரூ4.06,205 கொடுத்து வாகனம் வாங்கியது உண்மையா?
சசிகலா: உண்மை.

நீதிபதி: கடந்த 18.7.1992ல் உங்கள் பெயரில் கார் வாங்கியது உண்மையா?
சசிகலா: உண்மை.
.
நீதிபதி: 30.3.1996ல் 2 கார் நீங்கள் வாங்கியது உண்மையா?
சசிகலா: உண்மை. .

நீதிபதி: 6.12.1994ல் சசி என்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு கார் வாங்கியது உண்மையா?
சசிகலா: உண்மை.

நீதிபதி: 25.12.1994ல் வாகனம் வாங்கப்பட்டதா?
சசிகலா: உண்மை.

நீதிபதி: 19.1.1995ல் சசி என்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு மாருதி கார் வாங்கப்பட்டதா?
சசிகலா: உண்மை.

நீதிபதி: 18.11.1993ல் சசி என்டர்பிரைசஸ் நிறுவனத் துக்கு டெம்போ டிராவலர் வாங்கியது உண்மையா?
சசிகலா: உண்மை.

நீதிபதி: டெல்லியில் பதிவு செய்யப்பட்ட, குடியரசு தலைவர் பயன்படுத்திய பென்ஸ் காரை ஜெயா பப்ளிகேஷன் நிறுவனத்துக்கு வாங்கியது உண்மையா?
சசிகலா: உண்மை.

அடேங்கப்பா…. எத்தனை எத்தனை உண்மைகள்? ஒரு நாள் உண்மைகளிலேயே தலை சுத்துதடா சாமி…. ஸ்பெக்ட்ரம் பெரிசா? இது பெரிசா?