அழகான காதல் கதை!

 

“Time” என்கிற கொரியன் படம் பார்த்தேன்…. அற்புதமான- அழகான படம்.

இனிமையான காதலின் இடையே ஆதிக்கம் நுழைந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்பதை உளவியல் ரீதியாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.

ஸீ ஹீயும் (See hee) ஜி ஹூவும் ( Ji hoo) காதலர்கள்…ஸீ ஹீக்கு தன் காதலன் ஜி மீது அளவு கடந்த காதல்… அவன் யாருடனும் பேசக்கூடாது, தன்னைத் தவிர யாரையும் நினைக்கக் கூடாது என அவன் மீது ஆதிக்கம் செலுத்துகிற ரகம்.

ரெஸ்டாரெண்டில் காத்திருக்கும் நேரத்தில் அங்கு வேலை செய்யும் பெண்ணிடம் ஜி பேசியதற்காக அவனோடு சண்டை போடுகிறாள்… ரெஸ்டாரெண்டிற்கு வெளியே கார் எடுக்க சிரமப்படும் இரு பெண்களுக்கு ஜி உதவி செய்ததற்காக, ஜி யிடமும், அந்தப் பெண்களிடமும் சண்டையிடுகிறாள் ஸி…

இரவில் தனித்திருக்கும் போது, அந்தப் பெண்களை நினைத்தபடி தன்னருகில் ஜி படுத்திருப்பதாக அவள் குற்றம் சாட்டுகிறாள்… மாறிக் கொண்டே இருக்கும் அவளது மனநிலையோடு மல்லுக்கட்ட முடியாமல் ஜி திணறுகிறான்…

சண்டைகள் தொடர்கின்றன… ஸீ யின் மனநிலை நாளுக்கு நாள் மோசமாகிறது… அவன் மீது தான் செலுத்துகிற ஆதிக்கத்தை அதிகப்படுத்துகிறாள்…

அதன் கொடூரம் தாங்க முடியாமல் அவளுக்குப் பதில் சொல்லும் ஜி யிடம், ‘”உனக்கு என்னை சலித்துப் போய்விட்டது” என்று சண்டையிடுகிறாள்….

மறுநாள் அவள் காணாமல் போய்விடுகிறாள்… ஜி அவளைத் தேடியலைகிறான்….. தொல்லை விட்டது என நிம்மதியாக இருக்கச் சொல்லி நண்பர்கள் அறிவுரை சொல்கிறார்கள்… ஆனால் ஜி யால் ஸீ யை மறக்க முடியவில்லை..

ஆறு மாதங்களுக்கு பிறகு திடீரென ஸீ திரும்பி வருகிறாள்.. ஜி க்கு தன் முகம் அலுத்து விட்டது என்பதால் பிளாஸ்டிக் சர்ஜரி செய்த திருத்தப்பட்ட முகத்துடன் வருகிறாள்… ஜி க்கு அவள் ஸீ எனத் தெரியாதவாறு அவனுடன் நெருங்கிப் பழகுகிறாள்… ஒரு குழந்தையிடம் அவனுக்கு வாழ்த்து அட்டை தந்து விடுகிறாள்… அதில் இருக்கும் கையெழுத்து ஸீ யுடையது என அவன் புலம்புவதை பார்த்து ரசிக்கிறாள்.. தன் மேல் அவனுக்கு இன்னும் காதல் இருப்பது அவளை மகிழ்ச்சிப்படுத்துகிறது….

“ஸீ வந்துட்டா நீ என்ன செய்வே?” என்கிற அவளது கேள்விக்கு, “அவ இனி வரமாட்டா” என சொல்கிறான் ஜி… அந்தப் பதில் அவளுக்கு எரிச்சலை வரவழைக்கிறது. ஆனாலும், அவனுக்கும் அவளிடம் ஏதோ ஈர்ப்பு வர இருவரும் நெருங்கிப் பழகுகிறார்கள்… ஆனால் நெருங்கிப் பழகும்போது அவள் பழைய குணத்தை மீண்டும் காண்பிக்கிறாள்… அவன்மீது ஆதிக்கம் செலுத்துகிறாள்… அன்பின் பெயரால் அழுத்தத் தொடங்குறாள்…

ஜீ க்கு அவள்தான் ஸீ எனத் தெரியவருகிறது…. இந்த முறை அவன் காணாமல் போய்விடுகிறான்..…

சில மாதங்களுக்கு பிறகு,, தன் முகத்தை மாற்றியபடி அவள் முன் வருகிறான்… ஆனால் அவளால் அவனோடு பேசவே முடியவில்லை…

தன் பழைய காதலனைத் தேடி பைத்தியம் பிடித்தவள் போல் அலைகிறாள்…. ஒருநாள் தெருவில் ஜி யைப் போல் நடை கொண்ட ஒருவனைப் பார்க்கிறாள்… அவனைப் பின் தொடர்கிறாள்… அவன் அவளுக்குப் போக்குக் காட்டியபடி ஓடிக்கொண்டே இருக்கிறான்…. அவளும் வேகமாகப் பின் தொடர்ந்து ஓடுகிறாள்…..

எதிர்பாராத விதமாக அவன் ஒரு விபத்தில் சிக்கி விடுகிறான்… ஸீ ஓடிவந்து அது ஜி தானா எனப் பார்க்கிறாள்… அடையாளம் காண முடியாத அளவிற்கு முகம் சிதைந்து போயிருக்கிறது.. அவள் அழுது புலம்புகிறாள்.. அது ஜி யா இல்லையா, என்பதை சொல்லாமலே படம் முடிந்து போகிறது….

அடுத்தவர் மீது ஆதிக்கம் செலுத்தும் அன்பு எத்தகைய மன நெருக்கடியில் இருவரையும் தள்ளும் என்பதை படம் அழகாகச் சொல்கிறது…

வாழ்க்கைப் பாதையில் எத்தனையோ பேரைச் சந்திக்கிறோம்.. சிலர் மட்டுமே நம்மை என்னவோ செய்கிறார்கள்… சிலரோடு மட்டுமே நமக்கு பேச முடிகிறது… சிலரை மட்டுமே நேசிக்க முடிகிறது… அந்த நேசத்தைப் பாதுகாக்க என்னவெல்லாம் செய்கிறோம்….

சுதந்திரமும், புரிதலுமே அந்த நேசத்தைத் தக்க வைக்கும் என்பதை அறியாத ஸீ போன்றவர்கள்…. தங்களையும் தொலைத்து, தன்னைச் சார்ந்தவர்களையும் தொலைத்து விடுகிறார்கள்…

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s