சுத்தத்தையும் சுகாதாரத்தையும் முதல்ல பாருங்க….. சோறு போடறதைப் பிறகு பாக்கலாம்!

மாண்புமிகு சென்னை மாநகர மேயர் அவர்கள் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்……

வறுமையில் பசியால் வாடும் ஏழை, எளிய மக்களின் சுகாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையிலும், சலுகை விலையில் தரமான உணவு வழங்கும் வகையிலும், சென்னையில் 1,000 இடங்களில் சிற்றுண்டி உணவகங்கள் ஏற்படுத்தத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

அந்த உணவகங்கள் அனைத்தும் முதல்வரின் பெயரில்தான் செயல்படுமாம்.

நல்ல விஷயம்தான்….. தப்பு சொல்றதுக்கில்லே. வெற்றிபெற வாழ்த்துக்கள்!

வயிற்றுக்குச் சோறிட வேண்டும் இங்கு வாழும் மனிதர்க்கெல்லாம் என்பதையும், தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜெகத்தினையே அழித்திடுவோம் என்பதையும்…. சின்ன வயதிலிருந்தே படித்து வளர்ந்திருக்கிறோம்.

அதே சமயம்- அன்ன சத்திரங்கள் ஆயிரம் கட்டுவதைக் காட்டிலும் ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்தான், அதைவிடப் புண்ணியம் கோடிபெறும் என்பதையும் படித்திருக்கிறோம்.

இப்போதைக்கு எது முக்கியம் என்பதுதான் இங்கு முக்கியம்……

ஏற்கனவே சிவில் சப்ளைஸ் நிறுவனத்தால் ஆரம்பிக்கப்பட்ட ஹோட்டல் கொஞ்ச நாட்களிலேயே நடத்தமுடியாமல் போய்விட்டது என்பதும், கூட்டுறவு நிறுவனங்களினால் நடத்தப்படும் சில கேன்டீன்கள் தள்ளாடுகின்றன என்பதும்….. தாங்கள் அறியாததல்ல.

உங்களது அறிவிப்பில் ஒரு விஷயம்தான் புரியவில்லை…. அதற்கு எதற்கு முதல்வரின் பெயரை வைக்கிறீர்கள்?

அவர் ஏதாவது கட்சி நிதியிலிருந்து பணம் கொடுத்து இந்தத் திட்டத்திற்கு உதவுகிறாரா? இப்படி எல்லாம் கேவலம் செய்துதானே போன ஆட்சிகூடக் கெட்டபெயர் வாங்கியது…. நீங்களும் ஒன்றும் அதற்குச் சளைத்தவர்கள் இல்லை போலத் தெரிகிறதே?

ஏதாவது மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்தால், ஒரு அரசாங்கம் மக்கள் கட்டும் வரி பணத்திலிருந்து தான் அதைச் செய்கிறது என்ற உணர்வை எல்லா மக்களுக்கும் வரவழையுங்கள்.

ஏதோ கட்சிதான் இத்தகைய நல்லதையெல்லாம் செய்கிறது என்கிற ஒரு மாயையான உணர்வைக் ஏற்படுத்தாதீர்கள்.

பொதுவாகத் தமிழ்நாடு அரசு என்ற பெயரில் திறப்பது அழகாகவும் பெருமையாகவும் இருக்காதா?. அய்யா இருக்கும்போது அனைத்தும் கலைஞர் மயம், இப்போ அம்மா மயம்…. இதுவே மக்களை ஒரு அடிமைகளாகச் சித்தரிப்பதுபோல் தெரியவில்லையா?

அது வரி கட்டும் மக்களுக்கு எரிச்சலைத்தான் ஏற்படுத்தும். நீங்களாவது ஒரு நல்ல மாற்றத்தை நிலைநிறுத்துங்கள்.

கணக்கு வழக்கு இல்லாமல் பணத்தை வாரியிறைத்துக் கல்விப் பணியாற்றும் நீங்களே கூட…. மனிதநேய அறக்கட்டளை என்றுதானே பெயர் வைத்திருக்கிறீர்கள்?

சைதை துரை என்கிற பெயர் சென்னை மேயருக்கு அறிவிக்கப்பட்டவுடனே மக்கள் எவ்வளவு சந்தோசப்பட்டார்கள்? அதனால்தானே அவ்வளவு விதியாசத்தில் வெற்றி பெற்றிபெறமுடிந்தது?

உங்களுக்குப் போடப்பட்ட ஒவ்வொரு வாக்குகளும், எவ்வளவு கனவுகளைச் சுமந்துவந்து விழுந்த வாக்குகள் என்பது நீங்கள் அறியாததல்ல.

உங்களிடம் மக்கள் உடனடியாக எதிபார்ப்பது இந்த ஜெ.ஜெ. ஓட்டலை அல்ல….. சுகாதரமான, உலகத்தரம் வாய்ந்த சென்னையை…… உங்களால் அது முடியும்!

இப்போதைய சென்னை மாநகருக்கு முழுமுதல் தேவை….. உணவகங்கள் அல்ல.

குடிநீர் வசதி, சுத்தமான சுகாதாரம், கழிவுநீர் மற்றும் குப்பைகளை ஒழுங்காக அகற்றுதல், மழைகாலங்களில் தப்பித்துக் கரைசேருமளவிற்கு உருப்படியான சாலைவசதி, சரியான கல்விவசதி என….. இப்படி எவ்வளவோ இருக்கின்றன.

சாலைகளின் தரம் சகிக்கவில்லை….. மெட்ரோ ரயில் வேலை நடப்பது சரிதான். ஆனால், அந்த வேலைகள் நடக்காத சாலைகள் மட்டும் என்ன லட்சணத்தில் இருக்கின்றனவாம்?

ஆற்காடு சாலையைப் பார்த்தால் மெட்ரோ சிட்டியில் இருப்பது போலவா இருக்கிறது? படுத்துக்கிடக்கிற ஒரு பஞ்சாயத்துத் தலைவரின் குக்கிராமத்தில் இருப்பது போலத்தான் இருக்கிறது.

குப்பைகளை அள்ள யாரும் குறிப்பிட்ட நேரங்களில் வருவதில்லை. அதேபோல, குப்பைகளை அள்ளும் பெரிய பெரிய நாற்றமெடுக்கும் வாகனங்களும், காலையில் வாகன நெரிசல் அதிகம் இருக்கும் நேரத்தில்தான் துர்நாற்றம் பரப்பியபடி உலா வருகின்றன.

மக்களும் அவற்றிற்க்குப் பழகி விட்டார்களோ என்று சந்தேகம் வருகிறது. ஏன் இத்தகைய குப்பை வாகனங்கள் அதிகாலையிலேயே குப்பைகளை அள்ளி மக்களின் அன்றாடப் பணிகள் ஆரம்பிக்கும் முன்னரே சாலைகளை தூய்மையாக வைத்து விடலாமே?

மக்களும் சுகாதாரத்தையும் தூமையான சுற்றுப்புறத்தையும் அனுபவிக்க விடலாமே? ஏன் அவ்வாறு செய்வதில்லை.?

பொதுக் கழிப்பிடத்தில் ஒண்ணுக்கு, ரெண்டுக்குப் போக அநியாயமாகக் காசு வாங்குகிறார்களே…. அதைத் தடுத்து நிறுத்துங்கள். அதைச் சுத்தமாக வைத்திருக்க அறிவுறுத்துங்கள். கோடி புண்ணியமாகப் போகும்.

தற்போது நமது முதல்வரின் பிறந்தநாளை ஒட்டிப் பல இடங்களில் ப்ளெக்ஸ் பேனர்கள்….. (எல்லாக் கட்சிக்காரர்களும்தான்). ஆர்வக் கோளாறில் சாலை டிராபிக் சிக்னல் முன்புறமும்கூட சில இடங்களில் அதை மறைத்து வைத்து விட்டார்கள்.

ஆளும் கட்சி ஆயிற்றே…. அதனால், போக்குவரத்துப் போலீசாரும் அதைப் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை அல்லது ஒன்று செய்ய முடியவில்லை. இதையெல்லாம் பொதுமக்களா சொல்லித் தரவேண்டும்?.

தங்களது பொற்காலத்தில் இந்தக் கொடுமைக்கும் ஒரு நல்ல முடிவுகட்டினால், மக்கள் உங்களைக் கையெடுத்துக் கும்பிடுவார்கள்.

உங்களால் முடியும்…. அரசு செய்ய முடியாத விஷயங்களைக் கூட, அலட்டிக்கொள்ளாமல் செய்து முடித்துவிடுகிற ஆற்றல்மிகுந்த உங்கள்மீது….

வாக்களித்தவர்கள் மட்டுமல்ல, வாக்களிக்கத் தவறியவர்களும் கூட நம்பிக்கைவைத்துக் காத்திருக்கிறார்கள்.

முதலில் இலை போட்டு உட்கார இடம் கொடுங்கள்…. அப்புறமாகச் சாதம் பரிமாறுவது பற்றி யோசிக்கலாம்!

Advertisements

2 comments on “சுத்தத்தையும் சுகாதாரத்தையும் முதல்ல பாருங்க….. சோறு போடறதைப் பிறகு பாக்கலாம்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s