காற்றில் பரவும் கதைகள் …

உள்ளே நுழையும்போதே வத்சலா இப்படிக் கேட்பாள் என்று எதிர்பார்க்கவில்லை.

“வந்துருச்சா?” என்றாள்.

“என்ன?” என்றேன்.

“அந்த எழவுதான்…”

“வரும்… ஆனா, வராது” என்றபடி சிரித்துக்கொண்டே நைட்டிக்கு மாறினேன்.

வத்சலா சிரிக்கவில்லை.

“சிந்துக்கா கேட்டுட்டே இருக்காடி” என்றாள். அவள் குரலில் ஒரு கீறல் தென்பட்டது.

“ஏன்… நாப்கின் வாங்கிக் கொடுக்கப் போறாளாமா?” என்றேன்.

வத்சலா முகத்தைத் தூக்கிவைத்துக் கொண்டாள்.

“உனக்குப் புரியல. நீ ஏன் இன்னும் இந்த மாசம் உக்காரலனு கேட்டுட்டே இருக்கா!”

“மாசமா இருக்கேன்னு சொல்லிடு” என்றபடி சப்பாத்தியை ஹாட் பேக்கில் இருந்து எடுத்தேன். அவள் என்னையே பார்த்தாள். வேக வேகமாகத் துணிகளை மடிக்க ஆரம்பித்தாள் வத்சலா.

“என்னப்பத்தி அப்படி என்ன கவலை உங்க அக்காவுக்கு?” என்றேன்.

“இல்லடி. ஹவுஸ் ஓனர் அவங்கள நம்பித்தான் வீட்டைக் கொடுத்து இருக்காங்களாம், அதான்…”

“அவளை வேற வீடு பாத்துக்கச் சொல்லு. இல்லன்னா, நான் போயிடுறேன். சப்ஜி இவ்ளோதான் செஞ்சியா?”

“ரொம்ப முக்கியம் போ. இஞ்சியை அரைச்சி சப்ஜி வைக்கேன். அப்பவாச்சும் உனக்கு வரட்டும்”.

“கொஞ்சம் எள்ளும் சேர்த்துக்க’ என்றேன். அவள் தலையில் அடித்துக்கொண்டு, துணிகளை சூட்கேஸில் அடைத்தாள்.

அவளும் நானும் சென்னையில் வேலைக்கு வந்த பிறகு, கம்பெனியில் பழக்கமாகி சேர்ந்து கொண்டவள் சிந்துக்கா.

சிந்துக்காவின் சித்தப்பா வீட்டுக்கு நாங்கள் பிறகு குடிபெயர்ந்துவிட்டோம். கறி மீன் சாப்பிடக் கூடாது போன்ற கண்டிப்புகள் இல்லாத வீடு என்பதால், எனக்கும் பிடித்துப் போயிற்று.

ஆனாலும், மீனில் இல்லாத பிரச்னை என் மாதவிலக்கில் வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நான் கணக்கெடுக்காத அதை அவள் துல்லியமாகக் கணக்கெடுத்து வைத்திருந்தாள்.

தட்டைக் கழுவிவிட்டு பக்கத்துக் கட்டிலில் படுத்திருந்த வத்சலாவுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பிவைத்தேன். “எனக்கு வந்துவிட்டால், ரஜினி படம் மாதிரி சிந்து போஸ்டர் அடிச்சு ஆபீஸ்ல ஒட்டுவாளா?”

வத்சலா முதுகு குலுங்கச் சிரித்தாள். வத்சலாவும் தூங்கவில்லை என்று நினைக்கிறேன். லேசாகப் புரண்டு படுத்தாள்.

அடுத்த நாள் குளித்துவிட்டு வந்ததும், “பப்பாளி உஷா” என்றாள் என்னிடம். “வந்துடும்” என்றாள் கொஞ்ச நேரம் கழித்து. எரிச்சலாக இருந்தது.

“போன ஜென்மத்துல அக்காதான் மகப்பேறு மருத்துவராம்” என்றேன்.

அவள் முகத்தில் கோபம் வெளிப்படையாகத் தெரிந்தது. “மாசா மாசம் வரலன்னா எப்படிப் பயப்படுறோம்? உனக்குக் கிண்டலா இருக்கா?” என்றாள்.

“அது என்ன கள்ளனா? உங்களுக்கு என்ன தான் பிரச்னைக்கா?” என்றேன்.

“உனக்குப் பசங்க பழக்கம் வேற இருக்கே?”

“எப்ப, என்ன பண்ணணும்னு எனக்குத் தெரியும். ஒண்ணும் தெரியாத புள்ள மாதிரி உங்களாட்டம் நடிக்க எனக்குத் தெரியாது” என்றேன்.

சிந்துக்காவின் முகம் மிளகாப்பழம் நசிந்தது மாதிரி வித்தியாசமான வண்ணத்தில் சிவந்தது. அலுவலகம் வந்ததும் வத்சலா என்னைத் தனியாகக் கூப்பிட்டு, “சிந்துக்கா இனி ஹாஸ்டல் போறாங்களாம்” என்றாள்.

“சரி… வத்சு. இன்னிக்கு ராத்திரி நான் வர லேட்டாகும்” என்றேன்.

சரியாக ஒரு வாரத்தில் சிந்து ஹாஸ்டல் பார்த்துப் போனாள். எனக்கு மாதவிலக்கு சரியாக வராததன் ஹார்மோன் காரணம், அவளை வெகுவாகப் பாதித்ததுபோல் இருந்தது. அலுவலகத்திலும் முன்புபோல என்னிடம் பேசுவதைத் தவிர்த்தாள். மத்தியான நேரங்களில் கூட வனஜாவுடன் சாப்பிட்டாள்.

மூன்றாவது நாளே வனஜா என்னிடம் வந்து, “உங்களுக்கு பாய் ஃப்ரெண்ட்ஸ் ஜாஸ்தியாமே?” என்றாள். வாயில் கெட்ட வார்த்தை வந்து விழுந்தது. கெட்ட வார்த்தை பேசும் பெண்ணாக என்னைக் கொண்டுபோய் மேனேஜரிடம் வனஜா பற்றவைத்தாள்.

மறு நாள் மேனேஜர் என்னைக் கூப்பிட்டு, “ஆபீஸ்ல கெட்ட வார்த்தைகள்ல பேசக் கூடாது” என்றார்.

“கூட வேலை பாக்குறவங்க, யார் யார்கூட ரூம் போடுறாங்கன்னு பேசினா, திரும்பக் கெட்ட வார்த்தைதான் என்னால பேச முடியும்” என்றேன்.

அவர் ஒரு நொடி அதிர்ந்து, “டோன்ட் ரிப்பீட் திஸ்” என்றார் சத்தம் இல்லாமல்.

“தேவை இல்லாம, இனிமே யூஸ் பண்ண மாட்டேன்” என்றபடி வெளியே வந்தேன்.

“உனக்கு வலிக்கவே இல்லையாடி?” என்றாள் வத்சலா.

“உனக்குத் தெரியாதுடி. நீ கிருஷ்ணனோட ரூம் போட்டு இருந்தனு வனஜா பேசியிருக்கா, சிந்துக்காகிட்ட” என்றாள்.

கிட்டத்தட்ட இவர்களோடு பேசாமல் இருப்பதே உசிதம் என்று தோன்றிற்று. நான் தனி வீடு எடுத்துப் போகலாம் என்று யோசித்தபோது, வத்சலாவும் வருவதாகச் சொன்னாள்.

வீடு கிடைப்பது அவ்வளவு சாதாரணமாக இல்லை. பெரும்பாடுபட்டு ஒரு ஃப்ளாட்டை 10 ஆயிரம் ரூபாய்க்குப் பிடித்துக் குடி போனோம்.

வாசலில் பூஞ்செடி வைத்தோம். பாலு மகேந்திரா பட வீடு மாதிரி மெல்லிய வெளிச்சத்தை ஜன்னல் திரையோடி வரவிட்டோம். அலுவலகத்தில் என்ன நடந்ததோ, வனஜா சொன்னபடி எல்லாம் மேனேஜர் கேட்டார். அவர் மார்க்கெட்டிங் ஃபீல்டில் இருந்து அட்மினிஸ்ட்ரேஷனுக்கு வந்ததால், எல்லாவற்றையும் மார்க்கெட் பண்ணுவதுபோலவே அணுகினார். நிம்மதியாக வேலை பார்க்க முடியவில்லை என்று தோன்றின நேரம், தேவை இல்லாமல் கூப்பிட்டுத் திட்டினார்.

“உனக்குத் தெரியுமாடி. அந்த ஆளுக்கு இப்படிலாம் சொல்லிக் கொடுக்கிறது ஒன்றக் கண்ணிதான்” என்றாள் வத்சலா. வனஜாவை ஒன்றரைக் கண்ணி என்று கூப்பிடுவதில் எனக்குப் பிரச்னைகள் இருப்பினும், கோபம் காரணமாக வத்சலா சொல்வதை நான் தடுக்கவில்லை.

எனக்கு ஒரு அக்கா இருந்தாள். கல்யாணமாகி அவள் கணவனுக்குப் பணம் காய்ச்சி மரமாக இருந்தாள். பிள்ளை பெற்று, சமைத்துப்போட்டாள். அலுவலகத்தில் மற்ற ஆண்களோடு பேசாமல் இருந்து கற்பைப் பாதுகாத்தாள்.

ஆனாலும் தினமும், “அவனோட படுத்தியா? இவனோட படுத்தியா” போன்ற கேள்விகளைக் கேட்ட புருஷனோடு படுத்துக்கொண்டாள். அவன் சுமத்திய பாலியல் குற்றச்சாட்டுகள் விவாகரத்து தாட்களில் ஜொலித்தபோதும், குழந்தைகளை அவளிடம் இருந்து பறித்துக்கொண்டபோதும், பாலிடால் குடித்து செத்துப்போனாள்.

கனம் நீதிபதி அவர்களே, என்று நான் ஒரு கடிதம் எழுதினேன். அது ஒரு பத்திரிகையில் கதையாக வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒரு பெண், “அந்தக் குழந்தைகள் அவனுக்குப் பிறந்தது அல்ல என்று சொல்லியிருக்க வேண்டும்” என்று வாசகர் கடிதம் எழுதினார்.

அக்காவின் மரணம் ஏற்படுத்திய வலியைக் காட்டிலும், அந்தப் பெண் அளவுக்குக்கூட அக்கா போராடத் துணியாதது வலியைக் கொடுத்தது.

வெறும் மார்பும் பெண் அவயம் தாண்டியும் வாழ்வு இருப்பதை யார்,எப்போது புரிந்துகொள்ளப்போகிறார்கள்? வத்சலா புரிந்துகொள்வாளா? எனக்குத் தூரம் வரவில்லை என்று கவலைப்படும் சிந்துவுக்கு இது புரியுமா?

அன்று இரவு எனக்கு ஒரு கனவு வந்தது. மீனாட்சி அம்மன்போல் மும்முலைகளோடு உலவிய பெண்களோடான ஒரு தேசம். பெண்ணை சமமாகப் பார்க்கும் ஆண்கள் கண்டதும் இரு முலைகள் ஆகுது. காலையில் எழுந்ததும் வத்சலாவிடம் சொன்னதும் உவ்வே என்றாள். நேற்று தொலைக்காட்சியில் கதாநாயகியின் உடலைத் துளைத்த ஒரு காட்சியை அவள் லஜ்ஜை இன்றிப் பார்த்ததை நினைவுபடுத்தினேன்.

“அது வேற… இது வேற” என்றாள்.

அடுத்த வாரம் வனஜாவுக்கு நிச்சயமானதாகவும், மாப்பிள்ளையை மேனேஜரே தேர்ந்தெடுத்ததாகவும் சொன்னார்கள். தொடர்ந்து, நீண்ட நாட்களாகக் குழந்தை இல்லாமல் இருந்த மேனேஜரின் மனைவி ட்ரீட்மென்ட் மூலமாகக் குழந்தை உண்டாகி இருப்பதாகவும் சொன்னார்கள்.

கேட்பவர்கள் இருக்கும் வரை, சொல்லப்படும் கதைகள் உலவும் என்றே தோன்றிற்று.

அதற்குப் பிறகு நடந்த விஷயம்தான் சுவாரஸ்யமானது.

மத்தியான நேரங்களில், சாப்பிட்டுவிட்டு வத்சுவை ஏதாவது பாடச் சொல்லிக் கேட்பேன். அன்று வத்சு, “ஒரு கணம் ஒரு யுகமாக” பாடலைப் பாடிக்கொண்டு இருந்தாள். ஜானகிவிட்ட இடத்தில் இருந்து, இளையராஜா அதைத் தொடர்ந்து பாடுவது எனக்கு உயிரை உலுக்கும். புளிய மரத்தை உலுக்கினால் புளியம் பூ உதிர்வதுபோல், என்னுள் ஏதோ சிதறிப்போகும். நான் கண் மூடி, அதைக் கேட்டுக்கொண்டு இருந்தேன். வானமும் பூந்தென்றலும் வாழ்த்துதே.

“இங்க என்ன பாட்டுக் கச்சேரியா நடக்குது?’ – கண் விழித்தால் மேனேஜர். வேறு எதுவுமே பேசாமல் ரூமுக்குப் போய் மெமோ கொடுத்தார்.

“அன்ரூலி பிஹேவியர்” என்று போட்டு, இரண்டு நாட்கள் வத்சுவை சஸ்பெண்ட் செய்து, எனக்கு “ஏன் கண்ணை மூடித் தூங்கினாய்?’ என்று விளக்கம் கேட்டு.

“என்னடி இது?” என்றாள் வத்சு கண் கலங்கி. நான் மேனேஜர் ரூம் கதவைத் தட்டி, அவர் கம் இன் சொல்லும் முன் அவர் முன் நின்றேன்.

“ஒரு சாதாரண விஷயத்தை இவ்ளோ பெரிசாக்கினீங்கன்னா…” என்று தொடர்வதற்குள். “ஐ நீட் நோ எக்ஸ்ப்ளனேஷன்ஸ்…’ என்றார்.

“எக்ஸ்ப்ளனேஷன் இல்லை சார்… ரெஸிக்னேஷன். வத்சுவும் நானும் உங்களூடைய சிறுபிள்ளைத்தனமான நடவடிக்கையால், ராஜினாமா பண்றோம். பட், ஒரு விஷயம் சார்…” என்றேன்.

“என்ன?” என்றார் கறாராக.

“வீட்டுக்குப் போய் யூ டியூப்ல அந்தப் பாட்டைக் கேளுங்க. யூ வில் லைக் இட்” என்றேன்.

அவர் முகம் வெளுத்துப் போய்க் கத்தினார். “உன் கிண்டலை அடுத்த கம்பெனில காட்டித் தொலை…’

சட்டென்று அவர் சட்டையைக் கொத்தாகப் பிடித்து மூக்கில் தாக்கினேன். “மரியாதை கொடுத்துப் பேசுடா” என்றேன்.

‘ஹெல்ப், ஹெல்ப்” என்று அலறினார்.

வனஜா ஆபீஸ் பையனுடன் ஓடி வந்து அவரைப் பிடித்துக்கொண்டாள். அந்த நிமிடம் ஏன் அவ்வளவு அகோரமாக நடந்துகொண்டேன் என்று இந்த நிமிடம் வரை எனக்குப் புரியவில்லை. நான் வன்முறைக்கு எதிரானவள் என்று எப்படிப் பிரகடனப்படுத்த? என்ற கவலை ஏற்பட்டது.

வத்சு அதிர்ச்சியாகவே பார்த்தாள். அவளைக் கலந்து பேசாமலே நான் அவளுக்காக முடிவு எடுத்தது குறித்து, இன்று வரை அவளிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.

இரண்டே வாரங்களில், வேறு ஒரு கம்பெனியில் சேர்ந்தோம். இந்த மேனேஜர் மிகவும் நல்லவராக அமைந்தது எங்களுக்குப் பெரும் நிம்மதியாக இருந்தது. இந்த சந்தோஷமான சூழலில், நானும் வத்சுவும் பழைய ஆபீஸ் பற்றியும், அங்கு உள்ள நல்லவர்கள்பற்றியும் பேச மறந்தோம். இடையில்கூட புது அலுவலகக் காசாளரிடம் ஒரு முறை வத்சு பழைய ஆபீஸ் கலாட்டாக்களைப் பேசிக்கொண்டு இருந்தாள். நான் அதைக் கேட்க விரும்பவில்லை என்றாலும், என் கனவுகளில் பழைய மேனேஜர் அலைந்தபடியே இருந்தார்.

அவருக்கு மிகவும் ஆகிருதியான உருவம். எனவே, அவரும் வனஜாவும் லிஃப்ட்டை உபயோகிக்க மாட்டார்கள். ஒருநாள், அவர் படி ஏறிக்கொண்டு இருக்கையில், பாதிக்கு மேல் படிக்கட்டுகள் மறைந்து லிஃப்ட் தோன்றியதில் இருவரும் மருள்கிறார்கள். அந்த நேரத்தில் லிஃப்ட் கதவு திறந்து, சிந்துக்கா அவர்களை உள்ளே அழைத்தாள். அவர்கள் ஏனோ அவளுக்குப் பதில் சொல்லாமல் திரும்ப கீழே இறங்கி நடந்தார்கள்.

இந்தக் கனவை நான் வத்சுவிடம் சொன்னதும், அவள் விழுந்து விழுந்து சிரித்தாள். நாங்களும் ஒரு வகையில் வதந்தி பரப்பும் மன நிலையில்தான் இருக்கிறோமோ என்று தோன்றிற்று.

இனி, அவர்களைப்பற்றி ஏதும் பேசக் கூடாது என சத்தியம் செய்துகொண்டோம். அன்று மாலையே வத்சு தயங்கித் தயங்கி சொன்னாள்., “அந்தப் பழைய மேனேஜரோட மனைவிக்கு போன வாரம் வளைகாப்புலாம் நடந்திருக்குடி. நேத்து ஏதோ சிக்கலாகி குழந்தை இறந்துடுச்சாம்.”

தூக்கி வாரிப் போட்டது எனக்கு. வயிற்றுக்குள் குழந்தை இறக்க… அந்தப் பெண் மன உளைச்சலோடு குழந்தையை வெளியேற்றும் காட்சி மனசுக்குள் தவித்தது.

வத்சு ஏதோ சொல்ல வந்தாள். “அவன் பண்ணின பாவம்” என்று மட்டும் அவள் சொல்லிவிடக் கூடாது என்று கண்களை இறுக மூடிக்கொண்டேன்!

நன்றி – எழுத்தாளர் தமயந்தி மற்றும் விகடன்.

Advertisements

2 comments on “காற்றில் பரவும் கதைகள் …

  1. பின்ன என்ன சார்?
    அரசியல்வாதிகள் கதையவே தினமும் போடாம…..
    ஆபீஸ் பொண்ணுங்களோட கதையையும் ஒரு நாளைக்குப் போட்டாப் போகுதுன்னு போட்டதுதான்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s