உயிரைப் பறித்த ஓவர்டேக் தகராறு…. இப்படியும் நடக்குமா?

பிரேக் பிடிக்காமல் ஆக்சிலேட்டரை உச்சகட்டம் வரை திருகினால், எந்த வாகனமும் பறக்கும். இது அறிவில்லாத அந்த இயந்திரத்தின் சாதனை. வெறுமனே திருகும் நாம் காலரை தூக்கிவிட்டுக் கொள்வது வெட்டி பந்தா.

இப்படித்தான் ஒரு சாதாரண ஓவர்டேக் தகராறு,  திருச்சி அருகே ஒரு பஸ் டிரைவரின் உயிரை அநியாயமாகப் பறித்திருக்கிறது.

திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து திருவெறும்பூரை அடுத்த திருநெடுங்குளத்துக்கு அதி காலையில் KRM என்கிற தனியார் டவுன் பஸ் புறப்பட்டது. சுந்தர்ராஜ் என்பவர் ஓட்டினார்.

காந்தி மார்க்கெட் பகுதியைக் கடந்தபோது, வாழைத்தார் லாரி ஒன்று பஸ்சின் பின்னால் வந்தது.  பாலம் கட்டும் வேலை நடப்பதால், பஸ் சைடு கொடுக்காமல் சென்றிருக்கிறது. ஒரு ஸ்டாப்பில் பஸ் நின்றபோது லாரி ஓவர்டேக் செய்துள்ளது. அதற்குப் பிறகு, பஸ்சுக்கு லாரி வழிவிடவில்லையாம்.

ஒன்றரை கி.மீ. தூரத்துக்கு விடாமல் ஹாரன் அடித்துச் சென்ற பஸ் டிரைவர்,  காட்டூர் பஸ் ஸ்டாண்ட் அருகே ஓவர்டேக் செய்து லாரியை மறித்தபடி பஸ்சை நிறுத்தினார்.

‘பஸ்சுக்கு சைடு கொடுத்தால் என்ன. ஏன் இப்படி முரட்டுத்தனமா லாரி ஓட்டுற. நாங்கதான் நேரத்துக்கு பஸ்சை எடுக்கணும். வேகமாகப் போகிறோம். உனக்கு என்ன அவசரம்?’ என்று சுந்தர்ராஜ் கேட்டிருக்கிறார்.

‘அப்படித்தான் ஓட்டுவேன், குறுக்கே எவன் வந்தாலும் அடித்துப் போட்டுவிட்டுப் போய்க்கிட்டே இருப்பேன்’ என்று லாரி டிரைவர் முகமது காசிம் கூறியுள்ளார்.

இதைக் கேட்டதும் சுந்தர்ராஜ், கண்டக்டர், கிளீனர் ஆகியோர் பஸ்சில் இருந்து இறங்கினர். ‘முடிஞ்சா அடிச்சுப் போடு, பார்க்கலாம்’ என்று சொல்லியவாறே லாரியின் முன்பு நின்றார் சுந்தர்ராஜ்.

யாரும் எதிர்பாராத வகையில்- கண் இமைக்கும் நேரத்தில் லாரியை எடுத்த காசிம், சுந்தர்ராஜ் மீது லாரியை ஏற்றிவிட்டு அசுர வேகத்தில் பறந்தார். லாரி ஏறியதில் சுந்தர்ராஜ் துடிதுடித்து அதே இடத்தில் இறந்தார்.

வேகமாக லாரியில் சென்ற காசிமை, அடுத்த சுங்கச்சாவடியில் போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
லாரி ஏற்றிக் கொல்லப்பட்ட சுந்தர்ராஜுக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர்.

சுந்தர்ராஜ் பொறுமையாகத்தான் ஓட்டுவார். பயணிகள் இறங்கி, ஏறிய பிறகுதான் வண்டியை எடுப்பார் என்று தினமும் அந்த பஸ்சில் செல்லும் பயணிகள் கூறுகின்றனர்.

வாழ்க்கைப் பயணம் மலை அளவு என்றால், சாலைப் பயணம் வெறும் கடுகு அளவுதான்.

போட்டியும் மோதலும் முன்னேறும் வெறியும் வாழ்க்கையில்தான் இருக்கலாம். சாலையில் இவற்றை தவிர்த்தால், மதிப்புமிக்க உயிர்கள் அநாவசியமாக டயர்களுக்குப் பலியாவதை தடுக்கலாம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s