நீங்கள் இல்லாவிட்டாலும், ஆட்டம் நிற்காது!

 

கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி என்று கதையில்தான் கேள்விப்பட்டிருக்கிறோம்……

ஆனால், நம்முடைய தமிழக அமைச்சர் பெருமக்களைப் பார்க்கும்போதுதான்- அதன் உண்மை அர்த்தத்தை உணர்ந்து கொள்ளமுடிகிறது.

மாலைமுரசு வரும்போது இருக்கிற மந்திரி பதவி, மறுநாள் காலையில் தினத்தந்தி வரும்போது இருக்குமா இருக்காதா என்கிற பயத்திலேயே, எத்தனை நாளைக்குத்தான் தூங்காமல் கொள்ளாமல் மப்பிலேயே கிடப்பது?

போயஸ் தோட்டத்தின் அதிகார மையத்தில் மாற்றம் ஏற்பட்ட பிறகு, எந்த மந்திரியின் தலை எப்போது உருளுமோ என்பது மட்டுமே…. தானே புயலைவிடப் பெரிய தலைப்புச் செய்தியாக இருந்தது.

இருந்தும் அனுபவிக்க இயலாத கொடுமை என்பது இப்படித்தான் இருக்கும் போல.

சிவப்பு விளக்கு வண்டியில் போனால் மட்டும் போதுமா? அமைச்சர் வண்டியில் போகும்போதுகூட ஆம்புலன்ஸ் வண்டியில் போவது மாதிரியே கனவு வந்தால் எப்படித்தான் நிம்மதியாக இருப்பது?

இப்படியே தினம் தினம் செத்துப் பிழைத்துக் கொண்டிருக்கும் அமைச்சர்களால் எப்படித் திறமையான ஒரு நிர்வாகத்தைத் தந்துவிடமுடியும்?

இடுப்பு ஒடியக் கூனிக் குறுகிக் கும்பிடு போடுவது மட்டும்தான் ஒரு அமைச்சருக்கான தகுதியா? என்கிற கேள்விக்கு…… இதுவரையிலும் அமைச்சர்களிடமிருந்தும் பதிலில்லை, முதல்வரிடமிருந்தும் பதிலில்லை.

இதையெல்லாம் தாண்டி இன்னொரு அமைச்சரோ, ஜெயலலிதா இருக்குமிடத்தில் செருப்பு கூடப் போடமாட்டேன் என்று வெறும் காலோடு கொஞ்ச நாள் பவனிவந்தார். பிறகு சில நாட்களில்- செருப்புக் காணாமல் போனமாதிரியே, அவரும் காணாமல் போய்விட்டார்.

போகிற போக்கைப் பார்த்தால் எந்த ஒரு எம்.எல்.ஏ.-வும் அமைச்சர் பதவிக்கு ஆசைப்படமாட்டார்கள் போல் தெரிகிறது.

அமைச்சர் பதவி கிடைத்தாலும் கூட…… “பதவி வேணாம் மேடம். மீதி நாலே கால் வருஷத்தையும் இப்படியே ஒட்டிடறோம், தொகுதியில மரியாதையாவது மிஞ்சும்” என்று கூறிவிடுவார்கள் போல் உள்ளது

இதிலும் கூட சில நேரங்களில், அமைச்சரவையை அம்மா மாற்றுகிற வேகத்தைப் பார்த்தால்….. போகிற போக்கில் தி.மு.க. எம்.எல்.ஏ யாருக்காவது அமைச்சர் பதவி ஒதுக்கபட்டாலும் கூட ஆச்சரியப் படுவதற்கில்லை.

அமைச்சர் பதவிக்கு ஆளாய்ப் பறக்கிற நிலைமையை மாற்றி, அந்தப் பதவி என்றாலே அலறவைக்கிற ஒரு சூழ்நிலையை- ஜெயாவைத் தவிர வேறு யாராலும் செய்துவிட முடியாது.

கொலுவிலே அமர்ந்திருக்கும் பொம்மைகள் கூட கொஞ்சமாவது தலையை ஆட்டுமோ என்னவோ? அமைச்சர்கள் கதி அதைவிடவும் மோசம்.

எந்தத் துறையாக இருந்தாலும் அந்தத் துறையைப் பற்றிய புதிய அறிவிப்பு வரும்போது, முதல்வர் ஆணை என்றுதான் வருகிறதே தவிர. இதுகளைப் பற்றி எதுவுமே வருவதில்லை.

நல்ல சிந்தனையாளர்கள், வேகமாகச் செயல்படும் எண்ணம் உள்ளவர்கள், மாற்றம் கொண்டு வரும் அளவுக்குத் திறமை படைத்தவர்கள் என….. இன்று அதிமுக அமைச்சரவையில் யாருமே இருப்பதாகத் தெரியவில்லை.

எல்லா மந்திரிகளுமே ஆஹா ஓஹோ என்று இல்லாவிட்டாலும் பரவாயில்லை, ஒரு நான்கைந்து மந்திரிகளாவது நச்சென்று இருக்க வேண்டாமா?

பதவி ஏற்று இத்தனை மாதங்கள் ஆகியும் கூட….. இன்னமும் ஒழுங்காக ஒரு அமைச்சரவையைக் கூட அமைக்க முடியவில்லையே? அப்புறம் எப்படி நிர்வாகத்தைத் தூக்கி நிறுத்துவது?

நிதி அமைச்சராக இருக்கிற ஓ.பன்னீர் செல்வம், கட்சியைப் பொறுத்தவரை விசுவாசியாக இருக்கலாம். தனிப்பட்ட முறையில் நல்ல மனிதராக இருக்கலாம். ஆனால், நிதி அமைச்சர் என்பதற்குக் கொஞ்சமாவது பொருத்தமானவர்தானா? இவர் எப்படி அதிகாரிகளிடம் வேலை வாங்க முடியும்? நிதியைப் பெருக்க முடியும்? முதலீடுகளை அதிகப்படுத்த முடியும்.

அதேபோல, செங்கோட்டையனும் கட்சியில் சீனியர்தான். ஆனால், அவருக்கும் ஐ.டி.க்கும் ரொம்ப தூரம். அவர் ஐ.டி துறையில் என்ன சாதிக்க முடியும்?

கலைஞரின் ஆட்சியில் மின் வெட்டுத் தீர்க்கப்படவில்லை என்று ஆற்காட்டாரைப் பற்றிப் பேசிப் பிரச்சாரம் செய்துதானே அ.தி.மு.க. ஆட்சியைப் பிடித்தது. ஆனால், இந்த ஆட்சியின் மின்துறை அமைச்சர் இதுவரையிலும் எடுத்த நடவடிக்கைகள் என்ன? ஜீரோதானே!

குத்தாட்டம் என்றாலும், ரிக்கார்டு டான்ஸ் என்றாலும், காபரே என்றாலும்…. கிட்டத்தட்ட எல்லாமே ஆட்டத்தில் ஒன்றுதான். துணியின் அளவு மட்டும்தான் மாறும் அல்லது ஏறும்.

அதுபோலத்தான்….. அரசியலைப் பொறுத்தவரை, எல்லாருடைய ஆட்டமும் ஒரே மாதிரியான ஆட்டம்தான்…… பெயர்தான் வேறு வேறு!

இறுதிவரை உட்கார்ந்து ரசிப்பதோ, அல்லது எழுந்து வீட்டுக்கு நடையைக் கட்டுவதோ…… உங்களது விருப்பத்தைப் பொறுத்தது.

நீங்கள் இல்லாவிட்டாலும், ஆட்டம் நிற்காது!

Advertisements

3 comments on “நீங்கள் இல்லாவிட்டாலும், ஆட்டம் நிற்காது!

  1. வருகை புரிந்ததோடு, கருத்துப் பதிவும் செய்து எனது எழுத்துக்களுக்குக் கௌரவம் சேர்த்த…..

    பாபு உட்பட இருவருக்கும் எனது இதயமார்ந்த நன்றி!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s