கண்ணாடிப் பெட்டிக்குள் கடவுளின் தீர்ப்பு?.. நல்லாக் கிளப்பறாங்கய்யா பீதியை!

திருப்பூர் மாவட்டம், காங்கேயம், சிவன்மலையில் பழமை வாய்ந்த சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது.

சிவ வாக்கிய சித்தர் வழிபட்ட தலம் இது என்று பேர் பெற்று விளங்குகிறது.

உலகில் எந்த முருகன் கோவிலுக்கும் இல்லாத ஒரு சிறப்பு, இந்தக் கோவிலுக்கு மட்டும் உண்டு.

இந்தக் கோவிலின் நுழைவு வாயிலில், “ஆண்டவன் உத்தரவு’ என்கிற கண்ணாடி பெட்டி ஒன்று உள்ளது.

பக்தர்களின் கனவில் தோன்றும் சுப்பிரமணியக் கடவுள், ஏதேனும் ஒரு பொருளைப் பெட்டியில் வைக்குமாறு உத்தரவிடுவாராம்.

அந்தப் பொருளுடன் வரும் பக்தர், கோவில் நிர்வாகத்திடம் தனக்கு வந்த கனவைப் பற்றிக் கூறுவார். அவர் கூறுவது உண்மைதானா என்பதை அறிய, மூலவர் சன்னதியில் பூ போட்டு உத்தரவு கேட்கப்படும்.

சுவாமியின் உத்தரவு கிடைத்தால், பக்தர் கொண்டு வந்த பொருள், “ஆண்டவர் உத்தரவு’ பெட்டியில் வைக்கப்படும். தினந்தோறும் சுவாமிக்குப் பூசை நடக்கும் போது, இந்தப் பொருளுக்கும் சேர்த்துப் பூசை நடத்தப்படும்.

அடுத்த பக்தரின் கனவில் வந்து வேறு பொருள் வைக்கும்படி சுமாமி சொல்லும்வரைக்கும், ஏற்கனவே வைக்கப்பட்ட பொருள் பெட்டியில் இருக்கும். இந்தப் பழக்கம் நீண்ட காலமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.

அப்படி ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் வைக்கப்படும் பொருளுக்கு….. கடுமையான விலை உயர்வு ஏற்பட்டுக் கிராக்கியோ, அல்லது அழிவோ ஏற்படும் என்பது ஐதீகம்.

சென்ற ஆண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி, பவானி தாலுகா நஞ்சகவுண்டன்பாளையத்தை சேர்ந்த கிருஷ்ணன் கனவில் நாட்டுச் சர்க்கரையும், 50 ரூபாயும் பெட்டியில் வைக்குமாறு உத்தரவு வந்தது.

நாட்டுச் சர்க்கரை விலை 50 ரூபாய் வரை அதனால்தான் உயர்ந்ததாம். கள்ள நோட்டுப் புழக்கமும் அதனால்தான் அதிகரித்ததாம்.

பிறகு,. டிசம்பர் 13-ம் தேதி பெருந்துறையைச் சேர்ந்த சுப்பிரமணியன் கனவில் ஆற்றுநீரை வைக்குமாறு உத்தரவு வந்ததாம்.

அப்படி ஆற்றுநீர் வைக்கப்பட்ட மறுநாளே, “முல்லைப் பெரியாறு அணையை இடித்து விட்டுப் புது அணை கட்டுவோம்’ என கேரள அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது. இரு மாநிலங்களுக்கும் கடும் பிரச்னை எழுந்து, முடிவு காண முடியாத நிலையில் உள்ளது.

டிசம்பர் 26-ம் தேதி, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள பழவேற்காடு ஏரியில் படகு கவிழ்ந்து, 23 பேர் தண்ணீர் முழ்கி பலியாகினர்.

டிசம்பர் 30-ம் தேதி, வங்கக்கடலில் உருவான “தானே’ புயலால் பலர் பலியாகினர்.

ஜனவரி 8-ம் தேதி, ஈரோடு வண்டிப்பாளையம் காவிரியாற்று வெள்ளத்துக்கு எட்டுப் பேர் பலியாகினர். அதேபோல, ஈரோடு மாவட்டம், மயிலம்பாடி கிராமத்தில் ஏரியில் குளித்த மூன்று சிறுவர்கள் பலியாகினர்.

இதற்கு முன்பும் இது போலவே 2004 ஜனவரி 28-ம் தேதி, தாராபுரம் தளவாய்பட்டிணத்தை சேர்ந்த அப்பாவுநாயுடு என்ற பக்தரின் கனவில் தண்ணீர் வைக்க உத்தரவு வந்து, ஆண்டவன் உத்தரவுப் பெட்டியில் சொம்பில் தண்ணீர் வைக்கப்பட்டது.

அந்த ஆண்டில்தான் சுனாமி வந்து, தமிழகத்தில் பல ஆயிரம் பேர் பலியாகினர்.

2009 மே 12-ம் தேதி, காங்கேயம் அருகே படியூர் கோவிந்தசாமி கனவில் மண் வைக்கக் கூறி உத்தரவு வந்தது. அப்போது நிலத்தின் மதிப்பு கடுமையாக உயர்ந்தது.

இதுபோலவே மதுரை ஆண்டாள் புரத்தைச் சேர்ந்த ராஜராம் என்பவர் “தன் கனவில் தோன்றிய சிவன்மலை முருகப்பெருமான், ஆற்று மணல் வைத்துப் பூஜை நடத்துமாறு உத்தரவு கொடுத்துள்ளார்” என்று கூறினார். கோவில் வழக்கப்படி, திருக்கோவில் நிர்வாகத்தினர் மூலஸ்தானத்தில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, பூ உத்தரவு கேட்டனர். சுவாமியின் உத்தரவு கிடைத்ததால், ஜனவரி 13-ம் தேதி முதல் ஆற்று மணலை சிறிய மூட்டையாக கட்டி வைத்து தினமும் பூசை நடத்தினர். அப்போதுதான், வீடு கட்டுவதற்கு மணல் பற்றாக்குறை ஏற்பட்டு, விலை பல மடங்கு அதிகரித்ததாம்.

இக்கோவிலில் துப்பாக்கியை வைத்து பூஜித்தபோதுதான் கார்கில் யுத்தம் துவங்கி அது வெற்றியில் முடிந்ததாம்.

இதுகுறித்து, சிவன்மலைக் கோவில் ராஜாமணி குருக்கள் கூறுவதைக் கேளுங்கள்…..

“எனக்குத் தெரிந்து, 2001-ல் தென்னங்கன்று வைக்கப்பட்டபோது, தென்னை மரங்கள் ஈரியோபைட் நோயால் அழிந்தன.

2003-ல் அம்மன் கை வைக்கப்பட்டபோது, நாட்டில் கும்பாபிஷேகமும், பக்தி மார்க்கமும் அதிகமானது.

2010-ல் மஞ்சள்பொடி வைக்கப்பட்டபோது, வரலாறு காணாத வகையில் மஞ்சள் விலை 16 ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்தது.

நாட்டில் நடக்கப்போகும் நன்மை, தீமைகளை முன்கூட்டியே சிவன் ஆண்டவன் எச்சரிக்கிறார் என்பதே இதன் பொருள்.”

இனி அடுத்ததாக எதை வைக்கச் சொல்லி யார் கனவில் வரப் போகிறாரோ தெரியவில்லை.

அடுத்ததாக அந்தப் பெட்டியில நம்ப ஊழல் அரசியல்வாதிகளின் உருவப் பொம்மைகளை வைக்கச்சொல்லி உத்தரவு வந்தாப் பரவாயில்ல …..

முத்துகுமரா….. கண் திறப்பாயா?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s