இந்தியாவில் கேரளாவா? இலங்கையில் கேரளாவா?

முல்லைப் பெரியாறு விவகாரத்தில், எல்லை மாவட்டமான தேனியில் கடந்த ஒரு வார காலமாகத் தீப்பற்றி எரிகிறது.

வைகோ.வின் உண்ணாவிரதத்திற்குப் பிறகு இயல்பு வாழ்க்கை திரும்பிவிடும் என்று போலீசார் எதிர்பார்த்தனர். ஆனால், அவர்களின் நினைப்பைப் பொய்யாக்கும் வகையில், விவசாயிகளும்,பொதுமக்களும் ஊர்வலமாகப் புறப்பட்டுக் கூடலூர் வழியாகக் குமுளிக்குச் செல்லப் போவதாக அறிவித்தனர்.

புறப்பட்ட போது 3,000 பேராக இருந்த கூட்டம், கூடலூரை நெருங்கும் போது 15 ஆயிரத்தைத் தொட்டது. போதிய போலீசார் இல்லாததாலும், தடியடி நடத்தக் கூடாது என்ற வாய்மொழி உத்தரவாலும், போலீசாரால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

இப்படியே நிலைமை நீடித்தால்….. இதற்கு என்னதான் முடிவு?

மத்திய அரசும் மௌன விரதத்தில் இருக்கிறது. நமது தலைவர்களோ கடிதம் எழுதியே காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

நாமோ…. இலங்கையில் அடித்தாலும் சரி, பெங்களூருவில் அடித்தாலும் சரி….. இரண்டுபட்டுக் கிடப்பதையே வழக்கமாக்கிக் கொண்டுவிட்டோம்.

ஏதோ….. இப்போதுதான் இந்த மலையாளத்து மம்முட்டியான்கள் விஷயத்தில், உருப்படியாக ஒன்று சேர்ந்து நிற்கிறோம்.

நாட்டில் எழும் பொதுப் பிரச்னைகளை, இனிமேல் பொது மக்களேதான் தீர்த்துக்கொள்ள முடியும் என்கிற நிலை எழுந்துள்ளது.

தொட்டெதுக்கெல்லாம் இந்திய ஒற்றுமை, தேசப்பற்று, பாரதப் பண்பாடு, பயங்கரவாதம், என்று கூப்பாடு போடுவதிலும், நியாயம் பேசிக்கொண்டிருப்பதிலும் அர்த்தமில்லை.

தமிழக இளைஞர் காங்கிரசின் தலைவர் யுவராஜும், பா.ஜ.க தலைவர் பொன்.இராதாகிருஷ்ணனும் முல்லைப் பெரியாறு விவகாரத்தில், தமிழகத்தின் உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது என்று அறிக்கை விட்டிருக்கிறார்கள்.

தற்போது இந்த உரிமையை தட்டிப்பறித்தது யார்? பாக்கிஸ்தானா, இல்லை ஐ.எஸ்.ஐயா, இல்லை வங்கதேச அகதிகளா அல்லது சீனத்துச் சதியா? இவர்களுடைய கேரளத்துப் பங்காளிகள்தானே! இவர்கள் வேறு யாரிடமிருந்து உரிமையை வாங்கித் தரப்போகிறார்கள்?

தி.மு.க. தலைவர் கருணாநிதியோ, “முல்லைப் பெரியாறு, காவிரி, இலங்கைத் தமிழர் போன்ற பிரச்னைகளில்…… மத்திய அரசு நமது கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்க வில்லையே என வருந்தி, தீவிரமான நடவடிக்கை எடுத்தால், வேறு விதமான விளைவுகள் ஏற்படும் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது” என்று தத்துவம் உதிர்த்திருக்கிறார்.

வேறுவிதமான விளைவுகள் என்றால்?….அமைச்சர் பதவி காலி, மகளுக்கு மீண்டும் சிக்கல், மாநிலத்திலும் மரியாதை இன்மை, கட்சியினருக்கு வருவாய் இழப்பு போன்ற விளைவுகளா?

எத்தன நாட்களுக்குத்தான் இவர்களுடைய நாடகங்களை எல்லாம் நாம் ஜீரணித்துக் கொள்வது?

2006 ம் ஆண்டே சுப்ரீம் கோர்ட் மத்திய நீர் ஆணையத்துடன் கலந்தாலோசித்து ஒரு தீர்ப்புக் கூறியது. அதன்படி, தமிழகம் அணையின் உயரத்தை உயர்த்தலாம் என்று தீர்ப்புக்கூறி உள்ளது. இதைப்பற்றி ஒரு தமிழக அரசியல்வாதியாவது இதுவரை மூச்சுவிட்டார்களா? இவர்களின் யோக்கியதை இதுதான்.

நைல் நதி என்று ஒரு நதி இருக்கிறது….. வட ஆப்ரிக்காவிலிருந்து 10 நாடுகளைக் கடந்துதான் அந்த நதி செல்கிறது.

சூடான், சவுத் சூடான், புருண்டி, ரிவாண்டா, காங்கோ, தன்சானியா, கென்யா, எதியோபியா, உகண்டா, எகிப்து என எல்லா நாடுகளிலும் பயணிக்கிறது. நாடு விட்டு நாடு கடந்து செல்கிறது. பத்து நாட்டு மக்கள் பயன்படுத்துகின்றார்கள்………இதுவரை அங்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை.

ஆனால், இங்கு?…… இந்தியாவிற்குள்தானே கேரளா மாநிலமும், கர்நாடக மாநிலமும் இருக்கிறது. அவர்கள்தானே நமக்குத் தண்ணீர் விட மறுக்கின்றனர். அப்புறம் எப்படி ஒற்றுமை நிலவும்? இந்தியா உருப்படும்?

நீ இந்தியன் என்றால், நானும் இந்தியன்…… நீ மலையாளம் என்றால், நான் தமிழன்…… ஆனால், தண்ணீர் பொதுச் சொத்து….. எங்களுக்கு உரிமையான தண்ணீரை நீ தர மறுத்தால்…. உன்னுடைய கதவுகள் அனைத்தும் அடைக்கப்படும். பட்டினிக்கு நீ பலியாகி விடுவாய்….. நினைவில் கொள்.

நதிகளை, அணைகளை…… தேசியமயமாக்க வக்கில்லாத அரசாங்கங்கள் இருக்கும்வரை…… தீவிரவாதம் பரவுவதை யாராலும் தடுக்க முடியாது.

நோய் முற்றிக்கொண்டிருக்கிறது,…. இனி நீண்டகால மருந்து உதவாது, அறுவை சிகிச்சையே பலன்தரும் என்ற நிலையை….. நாம் அல்ல, நோய்க்கிருமி ஏற்படுத்தி உள்ளது.

நோயாளிகள் புரிந்து கொண்டால் நல்லது!

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s