பெட்டிக்கடை மூடினா என்ன…. பிராந்திக் கடை திறந்திருக்கும்ல?

“பெட்டிக்கடை மூடியிருந்தாப் பரவாயில்லை, பிராந்திக்கடை திறந்திருக்கும்ல….”- என்று ஆதங்கப்பட்டவர்கள்தான் இன்றைக்கு அதிகம்.

அந்நிய முதலீட்டைச் சில்லறை வணிகத்தில் அனுமதிப்பது குறித்து அவர்களுக்கு அவ்வளவாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே இன்றைய கடையடைப்பைப் பற்றியும் அவர்களுக்குக் கவலையில்லை.

அவ்வளவு ஏன்?…. நமக்கே ஒன்றும் உருப்படியாக விளங்கவில்லை.

சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பது என்று மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

ஒற்றை பிராண்ட் வணிகத்தில் 100% அந்நிய முதலீடு இருக்கலாம். பல பிராண்டுகளை விற்பனை செய்யும்போது 51% வரை அந்நிய முதலீடு இருக்கலாம். இதுதான் சாராம்சம்.

உலக அளவில் செயல்படும் சில்லரை வர்த்தக ஜாம்பவான்களை இப்படி அனுமதிப்பது இந்தியாவுக்கு நல்லதல்ல என்று எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.

காங்கிரஸ் கட்சியினருக்கோ என்ன நடக்கிறது என்பதே தெரிவதில்லை, சோனியாவுக்கு ஓகே என்றால் அவர்களுக்கும் ஓகே தான்.

இப்படித்தான் வியாபாரம் பண்ணறேன்னு வந்த ஒரு கும்பலை உள்ளே விட்டோம்….. முன்னூறு வருஷம் நம்மை ஆண்டு அடிமையாக்கிப் படாதபாடு படுத்தினான். அவனை வெளியே தள்ளி அப்பாடான்னு மூச்சு விடறதுக்குள்ள, குடிச்ச பாலு வெளிய வந்துருச்சு.

இப்ப வேற ஒரு கும்பல்….. வேற ஒரு தந்திரம்….. ஆனாலும் அடிப்படை அதே வணிகம்தான்.

ராணுவத்தைக் கொண்டு ஒரு நாட்டை ஆக்கிரமிப்புச் செய்வதெல்லாம் பழைய காலத்து ஸ்டைல். அதற்கு மாறாக, தங்களது நாட்டு வியாபாரிகளைக் கொண்டு இன்னொரு நாட்டை லபக் செய்வதுதான் இப்போதைய லேட்டஸ்ட் ஸ்டைல்.

இதைக்கூட புரிஞ்சிக்காம இருந்தா….. நம்மை விட மடச் சாம்பிரானிகள் இந்த பூமியில் யாரும் இருக்க முடியாது…….

ஒருவகையில் பார்த்தால்…. அந்நியப் பொருளாதார ஆக்கிரமிப்புதான் இந்தச் செயல். இதனை ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது.

அந்நிய முதலீடுக்கு அனுமதி என்பது, இன்னொரு முறை மீண்டும் எங்களை அடிமைப்படுத்துங்கள் என்று சிவப்பு கம்பளம் விரித்து அழைப்பதே தவிர வேறில்லை.

குளிர் பானத் துறையில்- வெளிநாட்டுப் பானங்களின் வரவால் காணாமல் போன நம் நாட்டுக் குளிர் பானங்களின் பெயர்களாவது நினைவில் இருக்கிறதா?

தமிழகத்தில் காளிமார்க், வின்சென்ட், மாப்பிள்ளை விநாயகர் இன்னபிற நிறுவனங்கள் பிரபலமாயிருந்தன. ப்ரூட்டி, ரசனா போன்றவை பழரசச் சந்தையில் ஆதிக்கம் செலுத்தின. ஆனால், பெப்சி – கோக் வருகைக்குபிறகு இந்நிலைமை அடியோடு மாறியது.

பெட்டிக் கடைப் பெயர்ப் பலகைகள், பிரம்மாண்டமான விளம்பரப் பலகைகள், தொலைக்காட்சி விளம்பரங்கள் எங்கும் எதிலும் பெப்சி – கோக் மயம். பெப்சியின் மூடிகளைச் சேகரித்துப் பரிசுப் பொருள் வாங்க அலையும் மேட்டுக்குடிச் சிறுவர்களுக்கு அது ஓய்வு நேரத் தொழிலாகிவிட்டது.

அதுமட்டுமல்ல….. இப்போது குடிநீர் என்றாலே மினரல் வாட்டர் என்றாக்கி விட்டார்கள். அதைக்கூட இந்த அமெரிக்க சோடாக் கம்பெனிகள் விட்டு வைக்கவில்லை.

கோக் – கின்லே, பெப்சி – அக்வாபினா எனும் குடிநீர் பாட்டில்களை அறிமுகப்படுத்தி, அதை மட்டுமே விற்குமாறு தமது விற்பனையாளர்களை மாற்றி வருகின்றனர். தற்போது குடிசைத் தொழில்போல நடந்துவரும் இத்தண்ணீர் வியாபாரமும் அவர்களால் வெகு விரைவில் ஒழிக்கப்படும்.

வெள்ளைக்காரனை வெளியேத்த “வெள்ளையனே வெளியேறுன்னு” காந்தி போராடினார். அவர் சார்ந்த அதே கட்சிதான் இன்று வெள்ளையனை உள்ளே கொண்டுவரப் போராடுகிறது….. காலக்கொடுமையடா சாமி.

-இது ஒரு தரப்பினரின் வாதம்.

டப்பாப் படிப்பு படிக்கிறதுன்னாக் கூட வெளிநாடு போய்ப் படிக்கிறதையே பெருமையா நினைக்கிறீங்க. அதுமட்டும் பரவாயில்லையா?

வெள்ளைக்காரன் தயாரிக்கிற கால்கேட் பேஸ்ட், சோனி டிவி, நோக்கியா செல்போன், பாண்ட்ஸ் பவுடர்னு….. விக்கிற கடையாத் தேடிப்போயி வாங்கறீங்களே…. அப்போ மட்டும் இனிக்குதா?

பெப்ஸி, கோக்…. இதுவெல்லாம் கூட வெளிநாட்டுகாரனோடதுதான். ஆசை ஆசையா அதை வாங்கிக் குடிக்கிறீங்க….. அதை எல்லாம் நீங்க விற்றுப் பணம் பண்ணும் போது தெரியல….. ஆனா, இப்ப அவன் உள்ள வந்து கடை வச்சா மட்டும் வலிக்குது…..

நம்ம ஊரு லக்ஷ்மி மிட்டல் மட்டும் லண்டன்ல போய் பிசினஸ் பண்ணலாம். ஆனா, அவன் மட்டும் இங்கே வரக்கூடாது.

ஹூண்டாயில வேலை வேணும், ஆனா, அவன் இங்க வரக் கூடாது? என்ன சார் கொடுமை இது?

மஞ்சள் பொடியில் செங்கல் தூள், அரிசியில் கல், காப்பித் தூளில் மாட்டுச்சாணி…… இப்படியே எத்தனை நாளக்குத்தான் நாங்களும் இருப்பது?

போட்டி இருந்தால்தான் தரம் பலரகம் கிடைக்கும்…. . உலகக் காய்கறிகளும், பொருட்களும் என இங்கு வாங்குவோரின் கைகளில், சமையல் கூடங்களில் இருக்கட்டுமே.

மல்லிகா கடையில கத்திரிக்காய் நல்லா இல்லேன்னா, சுந்தரி கடையில போய் வாங்குவோம்ல….., அதே மாதிரிதானே அன்னியன் கடையும். நல்லா இருந்தா வாங்கு. இல்லேன்னா அடுத்த கடைக்கு நடையைக் கட்டவேண்டியதுதானே.

வங்கிகளில் அந்நிய நிறுவனங்கள் முதலீடு செய்தபோது கூடத்தான் கடுமையாக எதிர்க்கப்பட்டது. ஆனால், இன்றைக்கு அதுபற்றி யாருமே பேசுவதில்லையே. இன்று ஐ.சி.ஐ.சி.ஐ., எச்.டி.எஃப்.சி., எச்.எஸ்.பி.சி, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் போன்ற வங்கிகள் இல்லையா?

சும்மா.அந்நிய நாட்டு நிறுவனம் ஒன்று வந்து எளிதாக இந்தியாவைச் சுருட்டித் தனது சுருக்குப் பைக்குள் போட்டுக்கொண்டு போய்விடமுடியாது. கிழக்கிந்தியக் கம்பெனியுடன் இதனை ஒப்பிட்டுப் பேசுவவது மிகவும் அபத்தமானது.

-இது இன்னொரு தரப்பினரின் வாதம்.

இரண்டுக்குமே தலையாட்டத்தான் நமக்குத் தோன்றுகிறது. அப்படியானால், எதுதான் சரி?

பத்ரி சேஷாத்ரி சார் ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார். காசா பணமா? அதற்கும் தலையாட்டி விடுவோம்…

இங்கு ஏன் அந்நியமுதலீடு தேவை என்று முதலில் பார்ப்போம்.

இந்தியாவில், கடைகளின் வளர்ச்சி விகிதம் போதாது. கிராமம் முதல் நகரம் வரையிலான வளரும் இந்திய மக்களின் பொருள் பசிக்குத் தீனி போடக் கடைகள் போதாது.

அவற்றை உருவாக்க, வேண்டிய அளவு முதலீடுகள் செய்யப்படவில்லை.

அதேபோல, சப்ளை செயின் என்று சொல்லப்படும் லாஜிஸ்டிக்ஸ் இந்தியாவில் படு மோசம். பொருள்களைக் கொள்முதல் செய்வதில் நிறையப் பின்தங்கியுள்ளோம்.

அதற்குத் தேவையான முதலீடுகளைச் செய்யாமலேயே நிறுவனங்கள் ஜல்லி அடிக்கின்றன.

அந்நிய முதலீடு நிகழும்போது இவையெல்லாம் கட்டாயம் கைகூடும். அப்போது உள்ளூர் நிறுவனங்களும் அவற்றைப் பயன்படுத்திப் பயன்பெறுவார்கள்.

அந்நிய நிறுவனங்கள் வந்தால் அதன் காரணமாக வேலைகள் அதிகரிக்கவே செய்யும். குறையப் போவதில்லை. விவசாயிகள் எந்த விதத்தில் பாதிக்கப்படுவார்கள்?

வெள்ளைக்காரப் பெரு முதலாளி, சிறு விவசாயியின் விளைச்சலைக் காசு தராமல் பிடுங்கிக்கொண்டு போய்விடுவான் என்ற பிம்பம் உங்கள் கண்களுக்குத் தெரிகிறதா?

அதே சமயம்….

அந்நிய முதலீடு வரும்போது அத்துடன் ஓரிரு பிரச்னைகளும் சேர்ந்து வரத்தான் செய்யும். அவை என்னென்ன என்பதை, கண்களை விரியத் திறந்துவைத்துக்கொண்டு, எதிர்கொள்ளவேண்டும். இல்லாவிட்டால்?…..அம்பேல்தான்.

உதாரணமாக, இந்தியப் பொருளாதாரம் அந்நிய முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்பச் செயல்படவில்லை என்றால், கிடைத்த விலைக்கு அவர்கள் தங்களது பங்குகளை விற்றுவிட்டு, கிடைத்த ரூபாயை டாலர்களாக மாற்றி எடுத்துக்கொண்டு ஓடிப் போய்விடுவார்கள்.

அப்போது ரூபாயின் மதிப்பு கீழே இறங்கும். 

சமீபத்தில் கூட ரூபாயின் மதிப்பு சடசடவெனக் கீழே இறங்கியதற்கு ஒரு காரணம், ஐரோப்பிய நாடுகள் பற்றிய பயத்தில் இருக்கும் பல அந்நிய முதலீட்டு நிறுவனங்கள், இந்தியாவில் தாம் வைத்திருந்த பங்குகளை விற்றுவிட்டு, அந்தப் பணத்தை டாலர்களாக மாற்றியதுதான்….

அவரு சொல்றது விளங்குதுங்களா?…….

அப்பப்பா….. பொருளாதாரம் என்பது, இரண்டாம் தாரத்தைவிட மோசமாக அல்லவா இருக்கிறது?

என்ன பணமோ? என்ன பணவீக்கமோ? நமக்கெதுக்கு இந்த வம்பெல்லாம்? 

பக்கத்து வீட்டுக்காரனோட வீடு பெரியது. அவன் வரிசையா பென்சு கார நிறுத்தியும் வைப்பான் ….. கவுத்தியும் வைப்பான் ….
நம்ம வீடோ ஓலைக்குடிசை. மூடிக்கிட்டு வச்சிருக்குற சைக்கிளத் தொடைச்சு ஒட்டுனாப் போதும்!

Advertisements

2 comments on “பெட்டிக்கடை மூடினா என்ன…. பிராந்திக் கடை திறந்திருக்கும்ல?

  1. இப்படி தான் நானும் எழுதினேன்… என்னை ஒருத்தர் காய்ச்சு காய்ச்சு நு காய்ச்சு எடுத்திட்டார்… நெட்ல கிடைக்காத பொருளாதாரமா அப்படின்னு? நான் நெட்ல தேடி பார்க்கிறேன்.. எல்லோரும் இதே போல் ஒன்னு குழப்புறாங்க.. இல்லைனா ரொம்ப குழப்புறாங்க… நீங்களும் எந்த கருத்தும் சொல்லாமல் சென்றது வருத்தமளிக்கிறது… இருந்தாலும் உங்களுக்கு தெரிய வரும் பட்சத்தில் இதை குறித்து விளக்கமாக எழுதுவீர்கள் என்று நம்புகிறேன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s