பரமக்குடி….. உயிரைக்குடி!

இந்தக் கட்டுரையின் உள்ளே நுழையும் முன்னதாக ஒரு சின்னக் கதை.
கட்டுரைக்கும் கதைக்கும் பொருந்திவருமா எனத் தெரியவில்லை….

தீவிரவாதிகள் இரண்டுபேர் ஒரு பாருக்குள் அமர்ந்தபடி சரக்கு அடித்துக்கொண்டே தங்களது அடுத்த தாக்குதலைப் பற்றி டிஸ்கஸ் செய்துகொண்டிருந்தார்கள்.
பார் சப்ளையர் கேட்டான்- “எதைப்பற்றி நீண்ட நேரமாக விவாதிக்கிறீர்கள்?”
ஒரு தீவிரவாதி சொன்னான்- “நாங்கள் எங்களது அடுத்த தாக்குதலில் 12,000 பொதுமக்களையும் ஒரு கழுதையையும் கொல்லப் போவது பற்றித் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறோம்”.
பார் சப்ளையர் அதிர்ச்சியுடன் கேட்டான்- “அது ஏன் ஒரு கழுதையை?”
தீவிரவாதி சிரித்துக்கொண்டே இன்னொரு தீவிரவாதியிடம் சொன்னான்– “நான் அப்போதே சொன்னேன் அல்லவா? 12,000 பொதுமக்களுடைய சாவைப்பற்றி இந்தியாவில் யாரும் கவலைப்பட மாட்டார்கள் என்று!”

இப்போது நாட்டு நடப்புக்குப் போகலாம்…. வாருங்கள்.

பரமக்குடி — பார்ட் 1…. முதல் கோணம்!

பரமக்குடி…. பலரது உயிரைக் குடித்துப் பயங்கரக் குடியாகி இருக்கிறது.

ஆதி திராவிடர் சமுதாயத்தவரில் பள்ளர் என்ற பிரிவினைச் சேர்ந்தவர்கள், தியாகி இமானுவேல் நினைவைப் போற்றும் வகையில் அவரது நினைவு நாளில் விழா எடுப்பது அண்மையில் சில ஆண்டுகளாக பரமக்குடி – இராமநாதபுரம் மாவட்டப் பகுதிகளிலும், தென் மாவட்டங்களில் சில பகுதிகளிலும் நடக்கும் ஆண்டு வழமை என்பது தமிழக அரசின் காவல்துறை அறியாததல்ல.

அதில் ஏதும் அசம்பாவிதங்களோ, கலவரங்களோ நிகழ்ந்து விடக்கூடாது என்பதில் மிகுந்த அக்கறையோடு முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய மகத்தான பொறுப்பு தமிழக அரசின் உள்துறைக்கும் – காவல்துறைக்கும் உண்டு.

அப்படியிருக்கையில் கடந்த 11-ஆம் தேதி அன்று பரமக்குடியில் துப்பாக்கிக் சூடு நடைபெற்று அதில் தாழ்த்தப்பட்ட சமுதாய இளைஞர்கள் – ஒரு பாலிடெக்னிக் மாணவர் உள்பட பலர் பலியானார்கள் என்ற செய்தி… கேட்கிற எல்லோரையும் கிறுகிறுக்க வைக்கிற கொடுமையான செய்தியாகும்.

தமிழக முன்னேற்றக் கட்சியின் தலைவரான ஜான் பாண்டியன் மரியாதை செலுத்தச் செல்லும்போது, தூத்துக்குடி அருகில் வல்லநாட்டில் கைது செய்யப்பட்டார் என்பதை அறிந்த ஆத்திரமுற்ற இளைஞர்கள் ஆவேசங் கொண்டு வன்முறைகளில் ஈடுபட்டனர் என்று தெரிய வருகிறது.

எதிர் விளைவுகளைப் பற்றிக் காவல்துறை எப்படி சிந்திக்காமல் இருந்தது என்று தெரியவில்லை.

அவரைக் கைது செய்வதாலும், அந்த மரியாதை செலுத்துவதைத் தடுப்பதாலும் என்னென்ன மாதிரியான எதிர் விளைவுகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்பதை உளவுத் துறையினர் முன்கூட்டியே ஆய்வு செய்து முதல் அமைச்சருக்கு விளக்கியிருக்க வேண் டாமா?

கைதுக்கு அப்படி என்ன அவசியம் என்பது இன்னும் புரியாத புதிராகவே இருக்கிறது.

சரி, கைது செய்தாகி விட்டது. கூட்டம் ஆர்ப்பரிக்கிறது. அப்போதும்கூட, துப்பாக்கிச் சூடு நடத்துவதற்குமுன் எடுக்கப்பட வேண்டிய முறையான நடவடிக்கைகள் ஏன் எடுக்கப்படவில்லை?

ஆத்திரமூட்டப்பட்ட இளைஞர்களின் செயல்களைத் தடுக்க முயற்சிக்கும் பொருட்டுக் கண்ணீர்ப் புகை, தடியடி போன்ற குறைந்தபட்ச தடுப்புமுறைகளாவது கையாளப் பட்டிருக்க வேண்டாமா?

அப்படியே நிலைமைக் கட்டுக் கடங்காது எல்லை மீறிப்போய்விட்டது, காவல் துறையினரும் தாக்கப்பட்டு, பேருந்துகளும் எரிக்கப்படுகின்ற சூழ்நிலை என்கிற போது…. துப்பாக்கிச்சூடு நடத்த முடிவு செய்தவர்கள், முதலில் கூட்டத்தைக் கலைக்க வானத்தை நோக்கிச் சுட்டு, பயமுறுத்தி கலைந்து ஓடும்படிச் செய்திருக்க வேண்டாமா?

அப்படிச் செய்திருந்தால் அந்த 7 உயிர்கள் பலியாகி இருக்காதல்லவா?. வாழ வேண்டிய இளைஞர்களின் வாழ்வும் இப்படி முடிந்திருக்காது. 75 பேர் காயம் அடைந்து சிகிச்சை பெறும் நிலையும் உருவாகியிருக்காது.

மிகப் பெரும் அளவில் வன்முறைக் களமாகக் காட்சியளிக்கும் ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் கூடக் கலகக் கும்பலைக் கலைக்க, பச்சை நிறத் தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கும் முறையை நடைமுறைப்படுத்தி இருக்கிறார்கள்.

டில்லியிலும் இதேபோலத்தான் எப்போதும் தண்ணீரரைப் பீய்ச்சி அடித்துக் கூட்டத்தைக் கலைத்து உயிர்ச்சேதம், பொருட்சேதத்தைத் தவிர்க்கும் முறையைக் கையாளுகிறார்கள். இங்குமட்டும் இதைப்பற்றி யோசிக்க, நடை முறைப்படுத்த ஏன் தயங்குகிறார்கள் என்பது தெரியவில்லை?

அடக்குமுறை, சிறைவாசங்கள் என்பதெல்லாம் அதிகமான எதிர் விளைவுகளைத்தான் ஏற்படுத்தும் என்பதை ஆட்சியாளர்கள் முதலில் உணரவேண்டும். எந்த முடிவானாலும் எடுப்பதற்கு முன்பு ஆட்சியாளர்கள் நிதானமாக யோசித்து, அதன் பின் விளைவுகளை ஆராய்ந்து முடிவெடுத்தால்…

இப்படிப்பட்ட உயிர்ப்பலிகளுக்கு இடமில்லாமல் போகும்!

 

பரமக்குடி — பார்ட் 2…..மூன்றாம் கோணம்!

பரமக்குடியில் ஏற்பட்ட கலவரம்….. திடீரென ஏற்பட்ட கலவரம் என்று கூறப்பட்டாலும், அது திடீரென ஏற்பட்டதல்ல– ஏற்கனவே திட்டமிடடபடி ஏற்பட்டதுதான் என்றும் பரவலாகச் செய்திகள் கசிகின்றன.

தென் மாவட்டங்களின் சில பகுதிகளில், வன்முறை அடித்தளம் கொண்ட சில ஜாதிக் கட்சிகளின் செல்வாக்கு சமீபத்தில் சரிந்து வருவதைத் தடுத்து தூக்கி நிறுத்தும் முயற்சிதான், இந்தக் கலவரத்தின் அடித்தளம் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.

அதை எப்படி அரங்கேற்றலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கையில், இமானுவேல் சேகரன் நினைவு தினம் வசதியாக வந்து அமைந்திருக்கிறது. அன்றைய தினத்தை அழகாக உபயோகப் படுத்திக் கொண்டுவிட்டர்கள்.

துரதிர்ஷ்டவசமாக, இமானுவேல் நினைவுநாள் நெருங்கும் நேரத்தில்– பள்ளிக்கூட மாணவர் ஒருவர் கொலை செய்யப்பட்டுவிட, காவல்துறைக்குத் தலைவலி ஆரம்பம் ஆனது. மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சிலவும் எடுக்கப்பட்டன.

அப்படி எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஒன்றுதான்…. வெளி மாவட்டங்களில் இருந்து முக்கிய பிரமுகர்களோ, ஜாதிக்கட்சி தலைவர்களோ யாரும் இமானுவேல் சேகரன் நினைவு தினம் முடியும்வரை பரமக்குடிக்குள் வரக்கூடாது என்று காவல்துறையால் விதிக்கப்பட்ட தடை.

தடை இருப்பது தெரிந்தும், தூத்துக்குடியில் இருந்து பரமக்குடிக்கு வர முயன்ற தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன், காவல்துறையால் வல்லநாடு அருகே தடுத்து நிறுத்தப்பட்டார். போலிஸ் தடுத்தும் கேளாமல் பரமக்குடிக்குச் செல்வேன் என்று அவர் பிடிவாதம் காட்டியதில், கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட தகவல், காலை 10 மணியிலிருந்தே அவரது வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்த கூட்டத்துக்குச் சூடேற்றும் விதத்தில் உணர்ச்சிகரமாக கூறப்பட்டது.

முதலில் பரமக்குடி ஐந்துமுனை ரோட்டில் திரண்டவர்கள், ரோட்டை மறித்து மறியல் செய்யத் தொடங்கினார்கள். மறியல் செய்யும் ஆட்களிடையே, வன்முறைக்குத் தயாராக வந்திருந்த ஆட்களும் சுலபமாகக் கலந்து கொண்டார்கள்.

ஒரு கட்டத்தில் அங்கிருந்த மொத்தக் கூட்டமும் உணர்ச்சி வசப்பட்ட நிலைக்கு கொண்டுவரப்பட்டது. இதற்குள் ஐந்துமுனை ரோடு கடந்து, அருகில் உள்ள சந்து ஒன்றில் மதுபான விநியோகமும் நடந்தது. காவல்துறையினர் மிக சொற்ப அளவிலேயே இருந்ததால், யாரும் யாரையும் தடுக்கவில்லை.

கோஷங்கள் வலுக்கத் தொடங்கி, கூட்டம் ஓரளவுக்கு கட்டுக்கடங்காத நிலைக்குப் போகத் தொடங்கவே, அண்ணா நகர் துணை கமிஷனர் செந்தில்வேலன் ஸ்பாட்டுக்கு வந்திறங்கினார். சாலை மறியலைக் கைவிடுமாறு கூறி, பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்கினார்.

அவரது சமாதானப் பேச்சுக்கள் எடுபடவில்லை. ஆளாளுக்குக் கூச்சல் போடத் தொடங்கினார்கள். கூட்டத்துக்குள் ஊடுருவியிருந்த ஆட்கள்வேறு உசுப்பேற்றிக் கொண்டிருந்தார்கள்.

கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் காவல்துறையினரைச் சுற்றி வளைக்கத் தொடங்கியது. அதில் இருந்த ஒருவர், செந்தில்வேலனின் சட்டையைப் பிடித்து இழுத்தார். பதிலுக்கு, செந்தில்வேலன் கையை ஓங்கினார்.

இதற்காகவே காத்திருந்ததுபோல காரியங்கள் நடக்கத் தொடங்கின. சடசடவென்று போலீசார் மீது கற்கள் வந்து விழத் தொடங்கின.

அதுவரை ஐந்துமுனை ரோட்டில் கும்பலாக நின்றிருந்த ஆட்கள் எல்லாத் திசையிலும் சிதறி ஓடத்தொடங்கினர். வேடிக்கை பார்க்க நின்ற கூட்டமும் சிதறி ஓடியது. கூட்டத்தில் சிக்கிய பரமக்குடி டி.எஸ்.பி. கணேசனைக் குறிவைத்த சிலர், நேருக்கு நேராகவே அவரைப் பிடித்து கீழே தள்ளிவிட்டனர்.

தரையில் விழுந்த அவர் உடனடியாக எழ முடியாத நிலையில் இருக்க, அவரது தலையின் மீது, பெரிய கல் ஒன்றைப் போட்டு விட்டு, அருகில் நின்றிருந்த போலிஸாரின் கைகளில் சிக்காமல் தப்பி ஓடினர் சிலர். தலையில் காயமடைந்த டி.எஸ்.பி. கணேசனை, அங்கிருந்து சிரமப்பட்டு வெளியே கொண்டுவந்து பரமக்குடி மருத்துவமனையில் சேர்ப்பதற்குள் படாத பாடு பட்டுவிட்டனர் மற்ற போலிஸ்காரர்கள்.

இதற்குள் சம்பவம் நடந்த இடத்தில் கல்வீச்சு உக்கிரமடையத் தொடங்கியது. ராமநாதபுரம் டி.ஐ.ஜி. சந்தீப் மிட்டல் மீதும் குறிவைத்துக் கற்கள் வீசப்பட்டன. காயமடைந்த அவர், நினைவிழந்து வீழ்ந்தார். செந்தில்வேலன் உட்பட ஏராளமான போலீசார் காயமடைந்தனர்.

கலவரம் பெரிதாகிக் கொண்டே போனது. தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வஜ்ரா வாகனத்தைக கொண்டு வந்தனர் போலிஸார். கூச்சலிட்டபடியே அந்த வாகனத்துக்கு தீ வைத்தனர் சிலர். அது பற்றி எரியத் தொடங்கியது. அதைப் பார்த்து உற்சாகமடைந்த சிலர், சற்றுத் தொலைவில் நிறுத்தப்பட்டிருந்த தீயணைப்பு வண்டியையும் எரித்தனர்.

கலவரம், அங்கிருந்து பரமக்குடி டவுனின் மற்றைய பகுதிகளுக்கும் பரவத் தொடங்கியது. பரமக்குடியே ஸ்தம்பித்துப் போனது. பரமக்குடியில், ஆங்காங்கே அரசு டவுன் பஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டன. பரமக்குடிக்கு வெளியேயும் கலவரம் தொடர்ந்தது.

முதுகுளத்தூரில் கடையடைப்பு நடந்தது. பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கமுதியில் இருந்து அருப்புக்கோட்டை தவிர, பிற ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. ரயில்வே சிக்னல்கள் உடைக்கப்பட்டன. சிக்னல்கள் இயங்காததால், ரயில்கள் ஓடுவதும் நிறுத்தப்பட்டது.

பரமக்குடிக் கலவரத்தின் பலி எண்ணிக்கை பத்திரிகைகளுக்குச் செய்தியானது……

அரசியல் கட்சிகள் எல்லாம் சரம்சரமாக அறிக்கை விடுகின்றன. நேரம் கிடைத்த அரசியல் தலைவர்கள், நேரில் சென்று ஆறுதல் தெரிவிக்கின்றனர். தமிழக அரசு, இறந்தவர்களுக்கு நஷ்டஈடு வழங்குகிறது.

ஆனால், கலவரத்தின் பின்னணி பற்றி யாரும் இதுவரை வாய் திறக்கவில்லை, திறக்கவும் மாட்டார்கள்…..

கேட்டால்… “சென்சிட்டிவ்வான ஏரியாப்பா” என்று சிம்பிளாகச் சொல்லிவிடுவார்கள்.

நடக்கட்டும் அரசியல் !.

Advertisements

4 comments on “பரமக்குடி….. உயிரைக்குடி!

  1. கடைசியாக சொல்லிய வார்த்தை அரசியல்.. அரசியல் என்ற நல்ல வார்த்தையை சாக்கடையாக மாற்றி கொண்டிருக்கிறார்கள் ஆட்சி செய்து கொண்டிருப்பவர்கள்..

  2. ‘அதை’ மட்டும் விற்கத் துணிந்தால் அது விபச்சாரம்.
    “எதையும்” விற்கத் துணிந்தால் அது…. அரசியல் விபச்….

  3. ‘அதை’ மட்டும் விற்கத் துணிந்தால் அது விபச்சாரம். “எதையும்” விற்கத் துணிந்தால் அது…. அரசியல் விபச்….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s