இலவசங்களின் மூலதனம் எங்களது எதிர்காலமா?

சட்டசபையில் நடந்த மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தின்போது, முதல்வர் ஜெயலலிதாவும் காங்கிரஸ் உறுப்பினர் பிரின்ஸும் பேசியதைக் கேட்கும்பொது… கொஞ்சம் சிரிப்பும் கொஞ்சம் கோபமும்தான் வந்தது.

மாணவர்களுக்கு லேப்-டாப் வழங்குவதற்காக 912 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு நிதி உதவி வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் எவ்வளவோ கேட்டுப் பார்த்தும் இதுவரை ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. கேட்டதைக் கொடுப்பது இந்த அரசு. ஆனால், கேட்டாலும் கொடுக்காதது மத்திய அரசு என ஜெயலலிதா பேசியிருக்கிறார்.

உடனே பிரின்ஸ் ஜெயாவுக்குப் பதில் சொல்வதாக நினைத்துக்கொண்டு, “கேளுங்கள் தரப்படும் என்பதற்கு ஏற்ப, மத்திய அரசிடம் கேட்டால் கிடைக்கும். மத்திய அரசிடம் பேசி, நிதிஉதவி வழங்க ஏற்பாடு செய்கிறேன்” என்று ஒரே போடாகப் போடுகிறார்.

முதல்வரும் விடாமல், “எவ்வளவோ கேட்டுப் பார்த்தும், கிடைக்காததால்தான் இதைக் கூறுகிறேன். திட்டத்தைப் பாராட்டும் உறுப்பினர், இதற்கு நிதிஉதவியையும் பெற்றுத் தரவேண்டும்” என்கிறார்.

“எவ்வளவு நிதி வேண்டும், கூறுங்கள்” என மீண்டும் ஜெயாவைப் பார்த்து பிரின்ஸ் கேட்கிறார்.

ஜெயாவும் அசராமல், “சமீபத்தில்தான் 4,000 கோடி ரூபாய் அளவிற்கு புதிதாக வரிவிதிக்க வேண்டியதாகிவிட்டது.. மத்திய அரசிடம் நாங்கள் இரண்டரை லட்சம் கோடி ரூபாய் கேட்டோம். இதில் 10,000 கோடி ரூபாய் வழங்கியிருந்தால் கூட நாங்கள் அந்த வரிகளைப் போடத் தேவையிருந்திருக்காது” என்று பதில் தருகிறார்.

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால்…. இரண்டு பேரும் சேர்ந்துகொண்டு நம்மை எவ்வளவு ஏமாளிகளாக்குகிறார்கள் என்பது புரியும்.

ஜெயலலிதா மத்திய அரசிடம் கேட்ட நிதி இரண்டரை லட்சம் கோடி….அதாவது இந்தியாவின் ஒரு ஆண்டின் பட்ஜெட்டில் இருபது சதவிதம்….இந்தியாவில் 28 மாநிலம் மற்றும் 7 யூனியன் பிரதேசம் உள்ளது….ஒரு மாநிலத்திர்க்கே 20 சதவிதம் கொடுப்பது சாத்தியமா என்பதை ஜெயலிதாதான் சொல்ல வேண்டும்…. இது வரை அதிகபட்சமாக ஆந்திராவுக்குத்தான் 45000௦௦௦ கோடி நிதி வழங்கப்பட்டு உள்ளது….மேலும் மாநில நிதிஒதுக்கீடு, அந்தந்த மாநில வருவாய் மற்றும் மத்திய அரசுக்குக் கிடைக்கும் வரிஎன்பதன் அடிப்படையிலே திட்டக் கமிஷன் முடிவு செய்யும்….இது எல்லாம் தெரிந்துதான் இரண்டரை லடசம் நிதி கேட்கப் பட்டதா என்று தெரியவில்லை….

எப்படியும் கொடுக்க மாட்டாங்கன்னு நல்லாத் தெரிஞ்சுதானே கேட்டீங்க.. அப்புறமென்ன பிசுனாரித்தனமா ரெண்டரை லட்சம் கோடி..? இருக்கிறதெல்லாத்தையும் எங்கிட்டயே குடுங்கடான்னு கேட்டிருக்கலாமே! அட.. போடுற பழியை நல்லாப் பெரிசாத்தான் போடுறது… என்ன குறைஞ்சிடப்போகுது?

அதுமட்டுமல்ல. தன்னையும் அறியாமல்…..இலவசத்துக்காக 4000 கோடி வரி ஏற்றப்பட்டு உள்ளது என்று ஒப்புதல் வாக்குமுலம் வேறு கொடுக்கிறார். அதாவது மக்களிடம் வரியாகப் பிடுங்கி, பிறகு அதை இலவசமாகத் திருப்பித் தருவோம் என்கிறார். இந்தப் புதிய வரிவிதிப்பால் ஏற்படும் விலைவாசி உயர்வுக்கு யார் பொறுப்பு என்பதையும் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

அதைவிடப் பெரிய கூத்து…. காங்கிரஸ் உறுப்பினர்– தான் ஒரு எம்.எல்.ஏ. என்பதையே மறந்துவிட்டு, என்னமோ தான்தான் திட்டக்கமிஷன் தலைவர் என்கிற நினைப்பில் எவ்வளவு வேண்டும் சொல்லுங்கள், ஏற்பாடு செய்கிறேன் என்கிறார்…

நீங்களாகவே இலவசங்களை அறிவித்துவிட்டு, மத்திய அரசு உதவி செய்யவில்லை என்று சொல்வது மிகவும் தவறு. இது என்ன மக்கள் நலத்திட்டமா அல்லது வறுமை ஒழிப்புத் திட்டமா? இலவசங்களை அறிவிக்கும்போதே மத்திய அரசின் நிதி உதவியுடன் வழங்கப்படும் என்று சொல்லி இருந்தீர்கள் என்றால், இப்போது நீங்கள் கூறுவதில் ஒரு அர்த்தம் இருக்கும். என்னமோ சசிகலாவின் பையில் இருந்து எடுத்துக் கொடுப்பதைப்போல அறிவித்துவிட்டு, இப்பவந்து மத்திய அரசைக் குற்றம் சொல்லுவதை எப்படி ஏற்றுக்கொள்ளுவது?

எதற்கெடுத்தாலும் மத்திய அரசைக் குறை சொல்வது என்பது, மாநிலஅரசின் இயலாமையைத்தான் காண்பிப்பதாக அமையும்.. காங்கிரசின் எதிர்க்கட்சிகள் மற்றும் கூட்டணிக் கட்சிகள் ஆட்சி செய்யும் குஜராத், பீகாரில் எல்லாம் இந்த மாதிரியான புகார்களை மட்டுமே சொல்லிக்கொண்டிருக்காமல், எவ்வளவு சிறப்பாக ஆட்சி நடத்துகிறார்கள் என்பதைக் கவனியுங்கள். தனியார் முதலீடுகளும் அங்குதான் போகிறது….

விழிகளை உருட்டி, விரல்களை நீட்டிப் பேசுகிற வீரவசனங்கள் மட்டும் வெற்றியைத் தேடித்தந்துவிடாது.

நல்லாட்சி தரவேண்டும் என்று நீங்கள் மட்டும் துடிப்பது தெரிகிறது. ஆனால்…. அமைச்சரவை அப்படி நினைக்கிறதா எனத் தெரியவில்லை.

எல்லா இடங்களிலும் உங்கள் பார்வை இருக்கட்டும்.

Advertisements

One comment on “இலவசங்களின் மூலதனம் எங்களது எதிர்காலமா?

  1. உங்கள் தலைப்பை அவாள் கூட்டம் கேட்டால், உடனே அவர்களை நாட்டைவிட்டு ஜாதிப்பிரஷ்டம் செய்யாத குறையாக ‘தலித் எதிரி’ என்று லேபிள் குத்துகிறார்களே, கலைஞரோ ஜெயாவோ இன்ன பிறரோ வேறு என்னதான் செய்ய இயலும்? யாருமே மோடிபோல், நிதிஷ்குமார் போல் நல்லாட்சி செய்தால் நன்றாக இருக்கும்; அதைச் சொன்னால் கூட, நல்லாட்சி செய்யாதவனை விட்டுவிட்டு ‘இவன் ஆர்.எஸ்.எஸ். அபிமானி, பிஜேபி அபிமானி’ என்று காவிவேஷம் போட்டுவிடுகிறார்கள். தற்போதைய இந்திய அரசியல் சூழ்னிலையில் யாருமே காமராசராகவும் முடியாது, வள்ளலாராகவும் முடியாது, சாமானியன் இதையெல்லாம் கண்டு வாளாவிருப்பதுதான் ஒரே வழி!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s