எட்டுத் தடவை எட்டுப் போட்டுவிட்டேன். ஈஸியாகத்தான் இருந்தது.
சர்க்கஸ்காரன் மாதிரி, இருசக்கர வாகனத்தில் எப்படி எட்டுப் போடுவது என்று முதலில் பயமாகத்தான் இருந்தது. ஆனாலும், என்னுடன் படிக்கும் ஈஸ்வரி மல்லிகா இளவரசி எல்லாம் எட்டுப் போட்டிருக்கும்போது, என்னால் முடியுமா என்று நான் நினைப்பது எவ்வளவு கேவலம்?
டிரைவிங் லைசென்ஸ் எடுக்கப்போகிறேன் பேர்வழி என்று ஊரெல்லாம் டமாரம் அடித்துவிட்ட நிலையில், இனிமேல் பின்வாங்கவும் முடியாது. எப்பாடுபட்டாவது ஏதாவது ஒரு வழியில் எட்டுப்போடப் பழகித்தான் ஆகவேண்டும்.
அவனவன் ஐந்தாங்கிளாஸ் படிக்கும்போதே ஹேண்டில் பாரிலிருந்து ரெண்டு கையையும் விட்டுவிட்டு சைக்கிள் ஓட்டுகிறான்…. என்னுடைய தலையெழுத்து, எட்டாவது படிக்கும்போதுதான் நான் சைக்கிளை உருட்டித்தள்ளவே பழகினேன். இவ்வளவு லேட் பிக்கப்பில் என்னுடைய சைக்கிள் சரித்திரம் இருக்கும்போது…. பைக்கில் எட்டுப்போடச்சொன்னால் பயம் இருக்கத்தானே செய்யும்?
சரி ஆனது ஆகட்டும் என்று சண்முகா டிரைவிங் ஸ்கூலில் சேர்ந்து எல்.எல்.ஆரும் போட்டாகிவிட்டது. எல்.எல்.ஆர். போடுவதற்கு முன்பாக சின்னதாக ஏதோ டெஸ்ட்டெல்லாம் இருக்கும் என்றார்கள். நாம் என்ன சிங்கப்பூரிலா இருக்கிறோம்? இந்தியாவில்தானே இருக்கிறோம். எனவே டெஸ்டை எல்லாம் அவர்களே எழுதி டிக் அடித்துக்கொண்டாகள். இதேமாதிரி எட்டையும் அவர்களே போட்டுவிட்டால் நன்றாகத்தான் இருக்கும். யாருக்குத் தெரியும், அதற்கென தனி ரேட் எதுவும் வைத்திருக்கிறார்களோ என்னவோ?
ஒரு லொட லொட பைக்கில்தான் ஓட்டக் கற்றுக்கொடுத்தார்கள். “எல்லோரும் எட்டை மட்டும் நல்லாப் போடக் கத்துக்கிட்டாப்போதும். லைசென்ஸ் கைக்கு வந்த மாதிரி. அதனால வீட்டுக்குப்போனதும் தினமும் எல்லருமே நல்லா எட்டுப் போட்டுப் பழகுங்க” என்று முதலில் அவர்கள் சொன்னபோது எனக்கு ஒன்றும் புரியவில்லை.
எனக்குப் படிப்பு அவ்வளவாக நன்கு வராவிட்டாலும், கையெழுத்து மட்டும் அட்டகாசமாக இருக்கும். எனவே எட்டு மட்டும் அல்ல, எந்த நம்பராக இருந்தாலும் சூப்பராகப் போட என்னால் முடியும். எனவே எட்டுப்போடுவது எனக்கு ஒரு பிரச்சினையாக இருக்காது என்று கொண்டாட்டமாக இருந்தேன். அப்புறம்தான் தெரிகிறது… அவர்கள் சொன்ன எட்டு பைக்கில் போடுவது, நான் நினைத்த எட்டு பேப்பர் பேனாவில் போடுவது என்று. எதுவானால் என்ன? அந்த எட்டை அழகாகப்போடப் பழகினமாதிரி, இந்த எட்டையும் பழகிக்கொள்ள வேண்டியதுதான்….
ஆரம்பித்த முதல் நாளில் மட்டும்…. மூன்று முறை விழுந்து எழும்படி ஆகிவிட்டது. நான்காவது தடவையிலிருந்து நன்றாகப் பழகிவிட்டது. பழகியபிறகுதான் தெரிகிறது, எட்டுப்போடுவது என்ன பெரிய விஷயமா? இதைப்போடவா இவ்வளவு மிரண்டோம்? என்பது.
எட்டு என்ன, ஒன்பதே போடச்சொன்னாலும் போடத்தயார் என்கிற அளவிற்கு ரெடியாகிவிட்டேன். ஒருவழியாக எட்டுப் போடும் நாளும் வந்துவிட்டது. விநாயகருக்கும் நீலியாத்தாளுக்கும் வேண்டுதல் வைத்துவிட்டு, கம்பீரமாக எட்டுப்போடும் இடத்தில் ஆஜரானேன். அங்கும் ஒரு ஐம்பது அறுபது பேருக்கும் மேல் இருந்தார்கள. அடேங்கப்பா… தினமும் இத்தனை பேர் எட்டுப்போடுகிறார்களா? அப்புறம் ஆர்டிஓ ஆபீசுக்கு வருமானம் கொட்டாமல் என்ன செய்யும்?
கறுப்புக் கண்ணாடி சகிதமாக மிகவும் கணமான சரீரத்தோடு ஒரு மேடம் வந்தார்கள். அந்தம்மாதான் ஆர்டிஓ வாக இருக்குமோ? கூடவே ஓடி வந்தவர்கள் கொடுக்கிற மரியாதையைப் பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது. பாவம்… உட்காரக்கூட முடியாத அளவுக்கு ஒத்துழைக்க மறுக்கிற குண்டடடடடடடான உடம்பு. அந்தம்மாவை எட்டுப்போடச் சொன்னால் எப்படி இருக்கும் என்று நினைத்துப்பார்த்தேன். சிரிப்பை அடக்க முடியவில்லை.
ஏழெட்டுப்பேர் எட்டுப்போட்டதுக்குப் பிறகு என்னுடைய முறை வந்தது. என்ன கருமமோ தெரியவில்லை…. அதுவரைக்கும் எனக்குள் இல்லாதிருந்த பயமும் படபடப்பும் அப்போதெனப் பார்த்து வந்து எனது நெஞ்சுக்குள் அப்பிக்கொண்டது.
பாதி எட்டைத் தாண்டுபோதே பரப்பிக்கொண்டு விழுந்தேன். மீண்டும் எழுந்து மீண்டும் விழுந்தேனே தவிர, எட்டுப் போட்டபாடில்லை. ஏனிந்தக் கோளாறு என்பதும் புரியவில்லை. கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்திட்டு அப்புறமாப் போடுப்பா என்று மேடம் சொன்னார்கள்.
எல்லோரும் போட்டபிறகு மீண்டும் என்னைப் போடச்சொன்னார்கள். இன்னும் என்னுடைய பதட்டம் குறையவில்லை. “இல்லை மேடம். என்னால் எட்டுப் போடமுடியும் என்று தோன்றவில்லை. வேண்டுமென்றால் ஸ்டார்ட் பண்ணி ஓட்டிக்காட்டட்டுமா?” என்று அப்பாவியாய்க் கேட்டேன். மேடத்தோடு சேர்ந்து எல்லோரும் சிரித்தார்கள். எனக்குக் கோபம் தலைக்கேற ஆரம்பித்தது.
“எதுக்கு மேடம் எட்டுப் போடச்சொல்றீங்க? ஒண்ணு ரெண்டு மூணுன்னு உங்க இஷ்டத்துக்குப் போடச்சொன்னா போடமுடியுமா? எட்டுப் போட்டுட்டா பெரிய எக்ஸ்பீரியன்ஸ்னு அர்த்தமா? எட்டுப்போட்டு லைசென்ஸ் வாங்கின எவனுமே ஆக்ஸிடெண்ட் பண்றதில்லையா? எனக்கு லைசென்ஸ் வேணும். எங்க வேணும்னாலும் ஓட்டிக்காட்டறேன. சிங்காரத்தோப்புக்குள்ளேயே சின்னப் பிரச்சினைகூட இல்லாம ஓட்டிக்காட்டறேன் வாங்க…எட்டுப் போட்டாத்தான் லைசென்ஸ்ன்னு ஏதாவது ரூல் இருக்கா என்ன? கரூர்லயெல்லாம் எட்டுப் போடச்சொல்றதில்லையே?”
“அப்படின்னா அங்கயே போய் வாங்கிக்க வேண்டியதுதானே?”
“இதை நான் இப்படியே விடமாட்டேன். கேக்க ஆளில்லேன்னு நினைச்சீங்களா? மேல வரைக்கும் கொண்டுபோவேன்”.
“எட்டுப் போடச்சொன்னா நீ என்ன ஏழரையப் போட்டுக்கிட்டு இருக்கே?” -டிரைவிங்க் ஸ்கூல்காரர் என்னைத் தனியாகத் தள்ளிக்கொண்டு வந்துவிட்டார். பிறகு என்ன நடந்ததோ, என்ன பேசினார்களோ தெரியாது.
“இன்னொரு ஐனூறு ரூபாய் அதிகமாகச் செலவு ஆகும் பரவாயில்லையா?”
“எட்டுப் போடறதுக்கு இது எவ்வளவோ பரவாயில்லை… வாங்கிக்கோங்க”.
“இதை யாருகிட்டேயும் உளறிக் கொட்டிக்கிட்டு இருக்காதே” என்று அட்வைஸ் பண்ணிவிட்டு, சாயங்காலமே என்னுடைய பெயரில் ஒரு லைசென்ஸைக் கொண்டுவந்து கொடுத்துவிட்டார். அடேங்கப்பா… எட்டு படுத்திய பாடு…. எட்டு எனக்கும் கொஞ்சம் ராசியில்லாத நம்பர்தான்!