நித்யானந்தா சாமியார் + நடிகை ரஞ்சிதாவின் வித்தைகள் நிரம்பிய படுக்கையறைக் காட்சிகள் டெலிவிஷனில் ஒளிபரப்பாகிப் பரபரப்பு ஏற்படுத்தியது போய்……
இப்போது, நித்யானந்தா ரஞ்சிதா சர்ச்சையை மையமாக வைத்துக் கன்னடத்தில் எடுக்கப்பட்ட சத்யானந்தா என்கிற படம் சர்ச்சையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது.
நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பா.ஜ.க பிரமுகர் என்று பன்முகம் கொண்ட மதன் பட்டேல், கன்னடத்தில் இந்தப் புதிய படத்தைத் தயாரித்திருக்கிறார்.
இந்நிலையில், எனது சொந்த வாழ்க்கையை மையமாக வைத்துப் படம் எடுக்கக் கூடாது என்று வலியுறுத்தி, கன்னடத்தில் படத்தைத் தயாரிக்கும் மதன் பட்டேலுக்கும், ரவி சேத்தனுக்கும் வக்கீல் கிருஷ்ணகுமார் பகவதி மூலம் நித்தியானந்தா நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.
சூட்டிங் எல்லாம் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் பிஸியாக இருக்கும் நேரத்தில், இந்தப் படத்தை வெளியிடக் கூடாது என்றும், இது தனது பெயரையும் புகழையும் சீர் குலைக்கும் நோக்கத்தோடு எடுக்கப்பட்ட படம் என்றும், கர்நாடக கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்திருக்கிறார்.
மேலும், மதன் பட்டேல் மீது மூன்று கோடி ரூபாய்க்கு மான நஷ்ட வழக்கும் போடப்பட்டுள்ளது.
இதுபற்றி மதன் பட்டேல் அளித்துள்ள பேட்டியில்……
“இந்தப் படம் என்ன மாதிரியான படம் என்பதையே தெரிந்து கொள்ளாமல், உத்தேசமாக என் மீது வழக்குப் போடுவது எந்தளவுக்கு சரி என்று தெரியவில்லை.
நானும் கடவுள் பக்தன்தான். மாநில பா.ஜ.க வில் முக்கியப் பொறுப்பிலும் இருக்கிறேன். இந்து மதத்தை இழிவு படுத்தவேண்டும் என்று நினைப்பவனல்ல நான். ஆனால், கடவுளின் பெயரால் மக்களை ஏமாற்றும் சாமியார்களையும், ஜோதிடர்களையும் என் படத்தில் காட்டி மக்களை எச்சரிக்கை செய்ய வேண்டியது என்னுடைய கடமை என்று கருதுகிறேன். (சபாஷ் பட்டேல் சார்….வாழ்த்துக்கள்!)
அதைத்தான் சத்யானந்தாவில் செய்திருக்கிறேன். இதை வெளியிடக் கூடாது என்று சொல்வதற்கு எந்த உரிமையும் நித்தியானந்தாவுக்கு இல்லை. இந்த வழக்கை நானும் சட்டப்படி சந்திப்பேன்” என்று கூறியுள்ளார்.
தான் இப்படியொரு படத்தை எடுக்கத் துணிந்ததற்கு ஒரு மிகப்பெரிய காரணம் பின்புலத்தில் இருக்கிறது என்றும் கூறியிருக்கும் பட்டேல், அந்தக் காரணத்தையும் சுவராசியமாக விளக்குகிறார்….
“ஒருமுறை தனது புது வீட்டுக் கிரஹபிரவேசத்திற்கு சில முக்கியமான சாமியார்களை அழைத்திருந்தாராம். அப்போது அங்கு வந்திருந்த சாமியார்களிடம் தனது மகள்களை ஆசிர்வாதம் வாங்கச் சொன்னாராம். அவர்களோ யார் ஆசிர்வாதமும் வேண்டாம்,. நித்தியானந்தா விவகாரத்திற்குப் பிறகு எந்தக் காவிச் சாமியாரைப் பார்த்தாலும் எங்களுக்குத் தப்பாகவே தெரிகிறது என்றார்களாம்” (சரியான சவுக்கடி….. அப்பாவிற்குப் பிள்ளைகள் தப்பாமல் பிறந்திருக்கின்றன!)
இந்து மதமே இந்த மாதிரி சாமியார்களால் கறைபட்டு விட்டதே என்று கவலைப்பட்ட மதன் பட்டேல், இப்படி ஒரு படத்தை உடனே எடுக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டதாகவும், அதற்கு அடிப்படை அவரது மகள்களின் ஆசீர்வாத மறுப்பே என்றும் பெங்களூருவில் பேசிக் கொள்கிறார்கள்.
இந்தப் படத்துக்கு ஆந்திரா, கர்நாடகாவில் பலத்த எதிர்பார்ப்பு உள்ளது. நித்யானந்தாவின் ஆசிரம நடவடிக்கைகள் அனைத்தும் இப்படத்தின் மூலம் அம்பலமாகும் என்று பேசுகின்றனர். படத்தைத் தமிழிலும் டப்பிங் செய்து வெளியிட ஏற்பாடுகள் நடந்து வருவதாகத் தெரிகிறது.. (நம்மாளுங்க மட்டும் விடுவாங்களா என்ன?).
அப்பிடின்னா…… சின்னதிரையில பாத்து ரசிச்ச அந்தக் கூத்தையெல்லாம், மறுபடியும் பெரிய திரையில பாக்கலாம்னு சொல்லுங்க!


