தனித்து நிற்கத் திராணி இருக்கா?- வில் ஆரம்பித்து……
கேப்டனும் தளபதியும் ஆகாசத்தில் அச்சாரம் போட்டுவிட்டார்கள்- என்று கதை கட்டி….
பொது வேட்பாளர் பற்றி மற்றவர்கள் யோசித்தால், நாங்களும் பரிசீலிக்கத் தயார்- என கலைஞர் ஒரு ஸ்டண்ட் அடிக்க…..
ஆறிப்போன காப்பித் தண்ணியைக் கையில் வைத்தவாறே குடிமகன்கள் குழம்பிக் கிடக்க……
சவ்வாக இழுக்காமல் சடக்கென எல்லோருமே வேட்பாளர்களை அறிவித்துவிட்டார்கள்.
எதிக்கட்சிகளால் ஒரு பொதுவான வேட்பாளரைத்தான் நிறுத்தமுடியவில்லை….. பெயரளவிலாவது “குமார்” என்ற பொதுவான வேட்பாளர் இருக்கட்டுமே என்று….
ஜவஹர் சூரியக்குமார், முத்துக்குமார், சதன் திருமலைக்குமார் என மூன்று குமார்களை அறிவித்திருக்கிறார்கள்.
ஒரு டாக்டர், ஒரு வக்கில், இரண்டு இஞ்சினிய்ர்கள் என- எல்லாம் கலந்த கலவையாகக் கிடக்கிறது சங்கரன்கோவில்.
எளிமையான எம்.எல்.ஏ.வாக இருந்து மறைந்த கருப்புசாமி தொகுதி…. இன்று எதிர்மறையாக மாறிக் கிடக்கிறது.
இடைதேர்தல் என்றாலே ஆளுங்கட்சிதான் வெற்றிபெறும் என்பதை எழுதப்படாத விதியாக்கிவிட்டார்கள் இங்குள்ள அரசியல்வாதிகள்.
இந்நிலையில்- பஸ், பால், மின்சாரம் என….. ஆளும்கட்சி மீதான எதிர்ப்பு வாக்குகளும் கூட…. எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மையால் சிதறிப் போகும் வாய்ப்புகளே இப்போது தென்படுகிறது.
போதாக்குறைக்கு, ஒட்டுமொத்த அமைச்சரவையும் சங்கரன்கோவிலே கதியெனெக் கிடக்கிறது.
இந்தச் சூழ்நிலையில், விஜயகாந்த் எடுத்த முடிவு- என்னைப் பொருத்தவரை சரியெனப் படவில்லை. தவறு செய்துவிட்டார் என்றே கருதுகிறேன்.
ஒருவேளை, அவர் வெளியிலிருந்து வைகோவிற்கு ஆதரவு கொடுத்திருந்தால்….. தி.மு.க., அ.தி.மு.க.விற்கு எதிரான மக்களின் மனநிலையும் தெரிந்திருக்கும்….. தானும் ஒரு கண்டத்திலிருந்து தப்பிக்க வாய்ப்புக் கிடைத்திருக்கும்.
ஜெயலலிதா தவறுதலாகச் சவால் விட்டுவிட்டர்களா? அல்லது விஜயகாந்த் தவறுதலாகப் புரிந்துகொண்டாரா?….. தெரியவில்லை.
“தனித்துப் போட்டியிடத் திராணி இருக்கா?” என்பதுதானே சவால். “தனித்துப் போட்டியிட்டு வெற்றிபெறத் திராணி இருக்கா?” என்பதல்லவே.
எனவே- இந்த சவாலைப் பொருத்தவரை, இப்போதைக்கு விஜயகாந்தே வெற்றி பெற்றிருக்கிறார் என்று கொள்ளலாம்.
தமிழக அரசியல்வாதிகளை வைத்து, எந்த முடிவையும் நாம் இறுதியென நினைத்துவிடமுடியாது.
இன்னும் நாட்கள் இருக்கின்றன….. எது வேண்டுமானாலும் மாறலாம். பொறுத்திருப்போம்!




ரொம்ப சரிங்க !
மிக்க நன்றி தனபாலன் சார்!