“எங்களுடன் இருந்ததை விட, மாணவர்களாகிய உங்களுடன்தான், என் தாய் அதிக நேரம் செலவிட்டுள்ளார். இனிமேலாவது ஆசிரியர்களை உணர்ந்து நேசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்!”……
உயிரிழந்த ஆசிரியை உமாமகேஸ்வரியின் மூத்தமகள் சங்கீதாவின் உருக்கமான வேண்டுகோள் இது. கேட்கும்போதே நெஞ்சைப் பிழிகிறது.
“எந்தப் பிரச்னை ஆனாலும், அதை எதிர்த்து நிற்க வேண்டும். மரணம் என்பது, அனைவருக்கும் வரக்கூடிய ஒன்றுதான். ஆனால், என் தாயின் மரணம், தான் விரும்பி நேசித்த ஆசிரியர் பணியாலேயே நேர்ந்துள்ளது.
அடிக்கிற கை தான் அணைக்கும் என்பார்கள். அதுபோல, ஆசிரியர்கள் அடிக்க மட்டும் செய்ய மாட்டார்கள்; அணைக்கவும் செய்வார்கள் என்பதை நீங்கள் உணரவேண்டும்.
என் தாய், வாரத்தில் ஒரு நாள் மட்டும்தான் எங்களுடன் இருந்தார். மற்றபடி, மீதி ஆறு நாட்களும் கல்வி போதித்துக் கொண்டு உங்களுடன்தான் இருந்தார். சொந்த மகள்களுடன் இருந்ததைவிட, சொந்த மகன்களாக, மகள்களாக நினைத்து, உங்களுடன் இருந்ததே அதிகம்.
மாணவர்கள், ஆசிரியர்களை நேசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். ஆசிரியர்கள், என்றைக்குமே கெட்டதைக் கற்றுத் தர மாட்டார்கள். நல்லதே போதிக்கும் ஆசிரியர்களுக்கு, மரியாதை தர மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்”.
சங்கீதா….. நீ ஒரு நல்ல ஆசிரியையின் மகள் என்பதை நிருபித்து விட்டாயம்மா!
மரித்துப் போன ஆசிரியை உமாவின் மகள், இந்தச் சூழ்நிலையிலும் கூட இவ்வாறு உருக்கமாக பேசுவது என்பது….. திடீரென வந்ததாக இருக்கமுடியாது.
இந்தக் குழந்தையை அவர்கள் எப்படியெல்லாம் பண்பாட்டோடு வளர்த்திருக்கிறார்கள் என்பதின் உதாரணம்தான் இது. அந்த ஆசிரியையின் இழப்பு….. குடும்பத்திற்கு மட்டும் அல்ல, பள்ளிக்கும், சமுதாயத்திற்குமே பெரிய இழப்பு!
பள்ள நிர்வாகத்தின் சார்பில் பேசிய முதல்வர் சிவி மாத்யூ….
“எங்களது பள்ளி, ஒரு நல்ல, திறமையான ஆசிரியரை இழந்து விட்டது. அவரின் மறைவு, ஈடுசெய்ய முடியாத இழப்பு. அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கு, எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். பள்ளி நிர்வாகத்தின் சார்பில், ஆசிரியை உமா மகேஸ்வரியின் மகள்கள் சங்கீதா மற்றும் ஜனனி ஆகியோரது பெயரில், ஐந்து லட்சம் ரூபாய், வங்கியில் டெபாசிட் செய்யப்படும். அவர்களின் மேல்படிப்பு செலவு அனைத்தையும் பள்ளி நிர்வாகமே ஏற்றுக் கொள்ளும்”.
-என்று அறிவித்திருக்கிறார். பொன் வைத்துப் பார்க்கிற இடத்தில் பூ வைத்துப் பார்க்கவாவது முயற்சிக்கும் இப்படிப்பட்ட நல்ல உள்ள்ங்கள்தான் இப்போதைக்கு ஆறுதல்.
நல்லதொரு தாயை இழந்து தவிக்கும் பிள்ளைகள் சங்கீதா, ஜனணிக்கு….. அவர்களது மனக் குறைகள் அகற்றி இறைவன் உடன் இருந்து நல்வழி காட்டட்டும் என்று மனமுருகப் பிரார்த்திப்போம்!
இந்நிலையில்…..
காதையும் வாயையும் பொத்திக்கொண்டிருக்கும் கல்வித்துறைக்கும், கவர்மெண்டுக்கும்…… இனிமேலாவது நல்ல புத்தி வர வேண்டுமென்றும் வேண்டிக்கொள்வோம்!








